Thursday, February 25, 2010

நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -11

Visit BlogAdda.com to discover Indian blogs
கீழ் அஹோபில திருக்கோயில்கள்
(யோகாநந்த நரசிம்மர் ஆலயம்)

ப்ரஹலாதனுக்கு யோகநெறி கற்பித்த
யோகானந்த நரசிம்மர்


பார்கவ நரசிம்மரை திவ்யமாக சேவித்து முடித்தபின் சத்ரவட நரசிம்மரை தரிசிக்க சென்றோம், ஆனால் சன்னதி அடைக்கப்பட்டிருந்தது ஆகவே மதிய உணவிற்காக யோகானந்த நரசிம்மர் ஆலயத்திற்கு அருகில் உள்ள அன்னதானக் கூடத்திற்கு செல்லலாம் என்று சுவாமிகள் கூறினார். கீழ் அஹோபிலத்தில் அன்னதாதா அவதூதர் நாகி ரெட்டி அன்னையா என்பவர் இந்த 24 மணி நேர அன்னதான கூடத்தை ஆரம்பித்தார். வரும் யாத்திரிகளிடமிருந்து அவர் இரண்டு தம்படிகள் வாங்குவாராம் அதில் ஒன்றை அவர்களிடமே திருப்பித் தந்து விடுவாராம். அவருக்கு பின் அவர்கள் சந்ததியினரும் அதே சேவையை செய்து வருகின்றனர். அங்கு 24 மணி நேரமும் அன்னம் கிடைக்கும். நாங்களும் அங்கு சென்று உணவு உண்டோம். அப்போது மழை ஆரம்பித்து விட்டதால் அருகில் கட்டியுள்ள அன்ன தாதா கோவிலுக்கு சென்று தங்கினோம். பக்கத்திற்கு 30 படிகள் வீதம் 60 வருடங்களை குறிக்கும் வண்ணம் மொத்தம் 60 படிகள் உள்ளன. இருபக்கமும் சப்த மாதாக்கள், நவகிரகங்கள், விநாயகர், முருகர், கருடன், அனுமன், தசாவதாரம், அஷ்ட லக்ஷ்மிகள் என பல் வேறு தெய்வ உருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நடு நாயமாக அவதூதர் சன்னதி யோக முத்திரையுடன் நின்ற கோலத்தில் கண்களை மூடி, திருவடிகளில் சங்கு சக்ர ரேகைகளுடன் காட்சி தருகின்றார் அன்னதாதா அவதூதர், சுற்றிலும் அனைத்து பிரம்மாண்டமும் அடக்கம் என்று உணர்த்தும் வகையில் அனைத்து தெய்வ உருவங்களும் உள்ளன. சாயி பாபா கோயில் போல 24 மணி நேரமும் அக்னி எரிந்து கொண்டு இருக்கின்றது. கீழே நவக்கிரகங்கள் துளசி மாடங்கள் போல அமைத்திருந்தது புதுமையாக இருந்தது. மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. அங்கேயே அமர்ந்து ஸ்ரீ நரசிம்மரின் மாப்பெரும் கருணையை நினைந்து எப்போது மழை குறையும் நம் பயணத்தை தொடரலாம் என்று காத்திருந்தோம். காலையில் இருந்து ஓடிக்கொண்டே இருந்ததால் இது ஒரு நல்ல ஓய்வாக அமைந்தது.



அன்னதாதா ஆலயத்தில் காத்திருந்தோம்

மழை நின்ற பின் யோகானந்த நரசிம்மரை சேவிக்க சென்றோம். யோக கோலத்தில் ஆதிசேஷன் மேல் கால்களை ஊன்றி யோக பட்டையுடன் மேல் கரத்தில் சங்கு சக்கரம் ஏந்தி கண்களை மூடிய நிலையில் தெற்கு முக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றார் யோகானந்த நரசிம்மர் ஸ்ரீப்ரகலாதாழ்வானை. தன் திருமேனியிலேயே கொண்டு பிரகலாதனுக்கு யோக நெறி கற்பித்தவர் இவர் என்பது ஐதீகம். புதிதாக ஒரு நர்சிம்மர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சனி பகவான் வழிபட்ட இவரை வழிபட சனியின் தொல்லை குறையும்.இவரை


வரத்தால் வலிநினைந்து மாதவநின்பாதம்

சிரத்தால் வணங்கானாமென்றே – உரத்தினால்

ஈரரியாய் நேர் வலியோனாய விரணியனை

ஓரரியாய் நீ யிடந்த தூண்


என்று பொய்கையாழ்வார் பாசுரம் சேவித்து வணங்கினோம், அருகிலேயே அவதூதர் ஸ்தாபித்த யோகனந்த நரசிம்மர் ஆலயமும் உள்ளது. அங்கு அன்னதானத்திற்கு நன்கொடை கொடுப்பவர்கள் கொடுத்தார்கள். இப்போதும் அவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை குங்கும பிரசாதத்துடன் திருப்பி அளித்தனர். அதை வீட்டில் வைத்திருந்தால் என்றும் அன்னத்திற்கு பஞ்சம் ஏற்படாது என்பது பக்தர்கள் நம்பிக்கை.


மேல் அஹோபிலம் சென்றால் செல்பேசி செல்லாது என்று

கீழ் அஹோபிலத்திலேயே பேசும் அன்பர்


( அன்ன தாதா கோவிலின் அடிவாரம்)

(நவகிரகங்கள் துளசி மாட வடிவில் அமைந்துள்ளது கூர்ந்து கவனித்தால் தெரியும் )


யோகானந்த நரசிம்மரின் தரிசனத்திற்க்குப்பின் நீலன் அவர்களின் மூன்றாவது பாசுரம் சேவிப்போமா?


ஏய்ந்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன்

வாய்ந்த ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம்

ஓய்ந்தமாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்

தேய்ந்த வேயு மல்லதில்லாச் சிங்கவேள் குன்றமே. (3)


பொருள்: வடிவுக்குத் தக்க பெருத்தவாயையும் வாள்போன்ற பற்களையும் ஒப்பற்ற மிடுக்கையும் உடைய நரசிம்ம கோலத்தில் வந்து அசுரராஜன் ஹிரண்யனுடைய வளர்ந்த சரீரத்தை கூரிய நகங்களாலே பிளந்த சர்வேஸ்வரனுடைய இடமாவது, காய்ந்த நிலத்தில் சஞ்சரிப்பதாலே ஒய்ந்து கிடக்கின்ற மிருகங்களும், உடைந்த சிறு குன்றுகளும் அதன் மேல் தானே உண்டான நெருப்பால் கொள்ளிக் கட்டை ஆகிக் கிடக்கின்ற மூங்கில்களையும் தவிர வேறு ஒன்றுமில்லாத சிங்கவேள் குன்றமாகும்.


அடுத்து சத்ர வட நரசிம்மர் தரிசனம் காண்போம்.......


Labels: , ,

3 Comments:

Blogger Rajewh said...

அன்னதாதா அவதூதர் நாகி ரெட்டி அன்னையா என்பவர் இந்த 24 மணி நேர அன்னதான கூடத்தை ஆரம்பித்தார். வரும் யாத்திரிகளிடமிருந்து அவர் இரண்டு தம்படிகள் வாங்குவாராம் அதில் ஒன்றை அவர்களிடமே திருப்பித் தந்து விடுவாராம்:))

What வருபவர்களிடம் இரண்டு கம்படிகள் வாங்குவாரா! திருப்பி கொடுப்பாரா!

இரண்டாவது முறை படிக்கும் போதுதான் தெரிந்தது தம்படிகள் என்று
Actually I don’t know தம்படிகள் என்றால் என்ன

March 2, 2010 at 12:06 AM  
Blogger S.Muruganandam said...

//What வருபவர்களிடம் இரண்டு கம்படிகள் வாங்குவாரா! திருப்பி கொடுப்பாரா!//

நல்ல நகச்சுவை உணர்வு ஐயா.

March 2, 2010 at 9:32 PM  
Blogger S.Muruganandam said...

தம்படிகள் என்பது அந்த காலத்து (British time) நாணயம் ஒரு பைசா என்று நிணைக்கிறேன்.

March 2, 2010 at 9:34 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home