Thursday, February 18, 2010

நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -8

Visit BlogAdda.com to discover Indian blogs
அஹோபில யாத்திரை ஆரம்பம்

இதுவரை அஹோபில ஷேத்திரத்தின் மகிமைகளையும், நரசிம்ம அவதாரத்தின் மேன்மையையும், கருடனின் தவத்தையும் பற்றி கண்டோம் இனி இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த அஹோபிலம் புறப்படலாமா?

அஹோபிலம் ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் நந்தியால் என்னும் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அஹோபிலம் சென்னையிலிருந்து சுமார் 426 கி. மீ தூரத்தில் அமைந்துள்ளது. திருப்பதியிலிருந்து 276 கி, மீ, நந்தியாலிருந்து சுமார் 80 கி. மீ தூரத்தில் அமைந்துள்ளது. மற்ற முக்கிய இடங்களிலிருந்து தூரம்

திருப்பதி – 276 கி. மீ

ஸ்ரீசைலம் – 236 கி. மீ

மந்திராலயம் – 245 கி. மீ


கடப்பா – 112 கி. மீ


நந்தியால் – 80 கி. மீ


அல்லகட்டா – 24 கி. மீ



கிழக்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் நந்தியால் ஆலயம்

நந்தியாலில் உள்ள சிவன் கோவில் உள் கோபுரம்

சிவபெருமான் விமானம்

சென்னையிலிருந்து செல்லும் போது திருத்தணி, ரேணிகுண்டா, கடப்பா, நந்தியால், அல்லகட்டா வழியாக நாம் கீழ் அஹோபிலத்தை அடையலாம். மொத்தம் மூன்று நாட்களாவது வேண்டும் நவநரசிம்மர்களையும் சாந்த நரசிம்மரையும் தரிசனம் செய்ய . அது மட்டுமல்லாது சிறிது மலையேறவும் வேண்டும், அதற்கு மேல் அஹோபிலத்தில் தங்க வேண்டும். இன்றைய முக்கியப் பொருளான செல்பேசி கூட உங்களை மேல் அஹோபிலத்தில் உங்களுக்கு தொந்தரவு கொடுக்காது. இயற்கையுடன் இயைந்து நீர் வீழ்ச்சிகளில் நீராடி, மலையேறி, பெருமாளை தரிசனம் செய்து, எப்போதும் அவருடைய திருவடிகளையே சிந்தித்து கொண்டு இருக்க வேண்டுமென்றால் இந்த யாத்திரை அனைவருக்கும் மிகவும் உகந்தது. திருக்கோவில்கள் அனைத்தும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளதால் முறையான ஒரு வழி காட்டி மிகவும் அவசியம். மேலும் பட்டாச்சாரியர்களிடம் முதலிலேயே சொல்லி வைக்க வேண்டும் பெருமாளை முழுதுமாக சேவிக்க.

அதிகாலையில் மூலிகை நீரில் அற்புதமான குளியல்

அடியேனுக்கு இந்த யாத்திரை செய்ய கிடைத்ததும் அவர் அருளால்தான் என் நண்பர் ஒருவர் அஹோபில யாத்திரை செல்லப் போகிறோம் நீங்கள் வருகிறீர்களா? என்று கேட்டார், அடியேனும் வெளியூர் செல்கிறேன் வந்து சொல்கின்றேன் என்று கூறினேன். திரும்பி வந்தி கேட்ட போது வேன் நிறைந்து விட்டது இடம் இல்லை என்று கூறினார். ஆயினும் நான் எப்படியும் வருகின்றேன் என்றவுடன் அவரும் அவர்களது நண்பர்களும் நின்று கொண்டு எனக்கு உட்கார இடம் கொடுத்தார்கள் அதற்காக அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த திருமலை சுவாமிகள் அவர்கள் இந்த யாத்திரையை வழிகாட்டியாக இருந்து நடத்தி கொடுத்தார். அவர் 106 திவ்ய தேசங்களையும் பல முறை தரிசனம் செய்தவர். வருடத்தில் ஒரு முறை திருமலைக்கு பாத யாத்திரைக்கு ஒரு குழுவினரை அழைத்து சென்று வருகிறார். அவர் பலமுறை அஹோபிலம் சென்று வந்தவர் என்பதால் உணவு, தங்குமிடத்திற்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. எங்களுடன் வந்த குடும்பத்தினரும் எல்லோருக்கும் முன்னர் கிளம்பி வந்து யாத்திரை சரியாக நடக்க மிகவும் ஒத்துழைப்பு நல்கினர்.


ஆலயமெங்கும் அற்புத மரங்கள்



முதல் நாள் இரவு சென்னை மடிப்பாத்தில் இருந்து வேன் புறப்பட்டது, அடியேனும் மற்ற நண்பர்களும் சாலையோர விநாயகர் கோவிலின் அருகில் காத்திருந்து வேனில் ஏறிக்கொண்டு நரசிம்மர் தரிசனம் காணப் புறப்பட்டோம். அடியேன் அதிகப்படியாக சென்றதால் எப்படியோ அனுசரித்து கொண்டுதான் பயணம் செய்ய வேண்டி வந்தது, ஆந்திர மாநிலம் செல்ல வேண்டுமென்பதால் பூந்தமல்லியில் அனுமதி அட்டை போட்டுக்கொண்டு திருவள்ளூர், திருத்தணி வழியாக திருப்பதியை அடைந்தோம். போக்குவரத்து சோதனைச் சாவடியில் சோதனை நடைபெற்றது. அதுவரை விழித்திருந்த அனைவரும் அப்படியே உறங்கிவிட்டோம். காலை விடிந்த போது நந்தியாலை நெருங்கிக் கொண்டிருந்தோம். மஹாநந்திக்கு 15 கி. மீ முன்னர் ஜோதிர்லிங்க ஸ்தலமான ஸ்ரீசைலத்திற்கு பாதை பிரிந்து செல்கிறது. நந்தியாலில் சுவாமிகள் எங்களை மஹா நந்தீஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்து சென்றார். அஹோபிலம் செல்லும் பக்தர்கள் வெளியிலிருந்தே பல் விளக்க, குளிக்க ஏதுவாக குளத்திலிருந்து குழாய் மூலம் தண்ணீர் வசதி செய்திருந்தது அற்புதம். இக்கோவிலில் அருமையான இரண்டு குளங்கள் உள்ளன கிழக்கு தொடர்ச்சி மலையிலிருந்து ஓடி வரும் அருமையான மூலிகை கலந்த நீரில் குளித்து சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து காலை சிற்றுண்டி உண்டு. மஹா நந்தியையும் தரிசனம் செய்து கொண்டு பின் கீழ் அஹோபிலத்திற்கு புறப்பட்டோம்.

சுமார் 11:30 மணியளவில் கீழ் அஹோபிலத்தை அடைந்தோம். முதலில் கீழ் அஹோபிலத்தில் சாந்த நரசிம்மரை சேவித்து விடலாம் என்று திருமலை சுவாமிகள் கூறியதால் முதலில் கீழ் அஹோபிலம் திருத்தலம் சென்றோம்.

உடன் யாத்திரை மேற்கொண்ட அன்பர்கள்

முன்னரே சொன்னது போல் அஹோபிலம் இரு தளமாக அமைந்துள்ளது. கீழ் அஹோபிலத்தின் மையத்தில் சாந்த நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. சிறப்பு வாய்ந்த அஹோபில மடம் கீழ் அஹோபிலத்தில்தான் உள்ளது. இங்கும் யாத்ரீகள் தங்குவதற்கு மடங்கள் உள்ளன, பெரிய தங்கும் ஹோட்டல்கள் இன்னும் வரவில்லை, சிறு உணவகங்கள் மட்டுமே உள்ளன. கீழ் அஹோபிலத்திற்கும் மேல் அஹோபிலத்திற்கும் இதையே சுமார் 8 கி. மீ தூரம் தான் எனவே கீழ் அஹோபிலத்திலும் தங்கிக் கொள்ளலாம் . இங்கே திருப்பதி தேவஸ்தானத்தின் சத்திரம் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன. எங்களுக்காக சுவாமிகள் மேல் அஹோபிலத்தில் தங்க மடம் ஏற்பாடு செய்திருந்தார். இனி முதலில் கீழ் அஹோபில பிரகலாத வரதர் ஆலயம் மற்றும் மற்ற திருக்கோவில்களையும் வலம் வருவோமா? சற்று அடுத்த பதிவு வரை காத்திருங்கள் அன்பர்களே.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home