நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -10
(பார்கவ நரசிம்மர் ஆலயம்)
பார்கவ நரசிம்மர்
நவநரசிம்மர்களுள் முதல் நரசிம்மராக பார்கவ நரச்சிம்மரின் தரிசனம் காண சென்றோம். இக்கோவில் கீழ் அஹோபிலத்திலே தான் அமைந்துள்ளது. ப்ரஹலாத நரசிம்மர் ஆலயத்திலிருந்து சுமார் மூன்று கி. மீ தூரத்தில் அமைந்துள்ளது இக்கோவில் ஆனால் முறையான பாதை இல்லை இக்கோவிலை சென்றடைய, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று சொல்வார்களே அது போல கரடு முரடான பாதைதான். நாங்கள் சென்ற வேன் அங்கு செல்ல முடியாது என்பதால் அங்குள்ள ஜீப்கள் இரண்டு மற்றும் ஒரு ஆட்டோவில் ஏறிக் கொண்டு புறப்பட்டோம் சிறிது தூரத்திற்கு பாதை சரியாக இருந்தது அதற்கப்புறம் அது காட்டிவழிதான் மரங்களின் வழியே வண்டிகளை ஓட்டிநர்கள் எவ்வாறு ஒட்டிச் சென்றனர் என்றே விளங்கவில்லை இரதம் போல ( ஆம் இடி தாங்கி ) இல்லாத இரதம் போல வண்டிகள் சென்றன எலும்புகள் குலுங்கின. ஆகஸ்ட் மாதம் நாங்கள் சென்றிருந்தோம், மழை வேறு பெய்து பாதை முழுவதும் செம்மண் சகதியாக இருந்தது, ஓரிடத்தில் தண்ணீர் அதிகமாகி ஆட்டோ சிக்கிக் கொண்டது அனைவரும் கீழே இறங்கி ஆட்டோவை தள்ளி மேலே கொண்டு வந்தோம். இந்தப் பாதையிலும் அவர்கள் வண்டிகளை மிக வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றதால் ஓரிடத்தில் சக்கரம் வழுக்கி ஆட்டோ குடை சாய்ந்தது.
அதில் இருந்தவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் அது அந்த நரசிம்மரின் அருள்தான். இறுதியாக அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதி வந்தவுடன் வண்டிகள் நின்றன. சுமார் அரை கி.மீ நடந்து செல்ல வேண்டி வந்தது. வண்டுகளின் ரீங்காரம், கட்டெறும்புகளின் அணி வகுப்பு, பறவைகளின் கீச் கீச் ஒலிகளை இரசித்துக் கொண்டே திருக்கோவிலை அடைந்தோம்.
கோவில் சிறிய குன்றின் மேலே உள்ளது. சுமார் 132 படிகள் ஏறிச் செல்ல வேண்டும் பார்கவ நரசிம்மரை தரிசிக்க. அடிவாரத்தில் அக்ஷய தீர்த்தம் என்னும் புஷ்கரணி அமைந்துள்ளது. நீர் நிறைந்து, தாமரை, ஆம்பல் மலர்கள் நிறைந்து இரம்மியமாக காட்சி தந்தது புஷ்கரணி. கொக்குகள் அதன் நீரில் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தன, பெருமாள் அருமையான காட்டுப்பகுதியைத்தான் இருப்பிடமாக கொண்டுள்ளார் என்று நினைத்துக் கொண்டே ஜாக்கிரதையாக கால்களை அலம்பிக்கொண்டு மலையேறினோம். மலை ஏறும் போது அப்படியே திருநீர் மலை போலவே இத்திருதலம் உள்ளது போல ஒரு உணர்வு தோன்றியது. நீர்வண்ணப் பெருமாளையும் மனதில் நினைத்துக் கொண்டோம். ஒரு பிரகாரத்துடன் கூடிய மலைக்கோவிலில் சேவை சாதிக்கின்றார் பார்க்கவ முனிவர் தவம் செய்ததின் பலனாக சேவை சாதித்த பெருமாள்.
பார்கவ நரசிம்மர் சன்னதிப் படிகள்
திருநீர் மலையை நினைவுபடுத்துகின்றன
முனிவர் வேண்டிக்கொண்டதற்கிணங்க தசாவதாரங்களையும் திருமால் காட்டியருளியதாக ஐதீகம். இரணியனை மடியில் போட்டுக்கொண்டு அவன் வயிற்றைக் கிழிக்கும் உக்ர நரசிம்மர் கோலத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள். மேற் கரங்களில் சங்கு சக்கரம். வலக்காலை கீழே தொங்கவிட்டு இடக்காலை மடக்கி அதில் இரணியணை தாங்கி இருக்கிறார் பெருமாள். அருகிலேயே கை கூப்பி பிரகலாதன் நிற்கின்றான் பெருமாளின் கருணையை வியந்தபடி. தோரணத்தில் தசாவதார சிற்பங்களும் உள்ளன. இரணியனின் வலது கரத்தில் வாளை காணலாம் என்று கூறினார்கள். நாங்கள் சென்ற போது சன்னதி மூடியிருந்தது வெளியே நின்று சந்து வழியாகவே தரிசனம் செய்தோம் மோக்ஷம் அளிக்க வல்ல பெருமாளை.
கூடாவிரணியனைக் கூருகிரால் மார்பிடந்த
ஓடா வடலரியை உம்பரார் கோமானை
தோடார் நறுந்துழாய் மார்வனை ஆர்வத்தால்
பாடாதார் பாட்டொன்றும் பாட்டல்ல கேட்டாமே
என்று திருமங்கை மன்னன் பாடிய பெருமாளை திருமகளார் தனிக்கேள்வனை, சுடராழி, புரிசங்கம் அங்கை கொண்டானை, அயர்வருமமரர்கள் அதிபதியை, பூவில் நான்முகனை படைத்த பூமன்னு பொருது மார்பனை, தேனும், பாலும், நெய்யும், கன்னலும், அமுதுமானானை, சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகலமார்வம் கீண்ட ந்ருஸிம்ஹனை மனதார வழிபட்டோம்.
எல்லா நரசிம்மர் சன்னதிகளும் புதுப்பிக்கப்பட்டு எழிலாக விளங்குகின்றன. தற்போதைய ஜீயர் சுவாமிகள் இதற்கான முயற்சிகளை எடுத்து பெரும் தொண்டார்ரியிருக்கின்றார். பட்டாச்சாரியர்களை நாம் முன்னரே சொல்லி அழைத்துச் சென்றால்தான் கற்பூர ஹாரத்தியுடன் சேவை கிடைக்கும். பார்கவ முனிவர் மட்டுமல்ல வசிஷ்டர் முதலிய முனிவர்களும் இவரை வழிபட்டு பிரம்மரிஷி பட்டம் பெற்றுள்ளனர். நவக்கிரகங்களில் சூரியன் வழிபட்ட மூர்த்தி இவர். மலைப்படி ஏறும் போதும் இறங்கும் போதும் குரங்குகள் தொல்லை உண்டு கவனமாக பிரசாதங்களை எடுத்து செல்லவும். திரும்பி வரும் போது அவ்வளவு சிரமம் இருக்கவில்லை எங்கெங்கு தண்ணீர் தேங்கியுள்ளது என்பது தெரிந்ததால் ஓட்டுனர் கவனமாக கொண்டு வந்து ப்ரஹலாத வரதர் கோவில் அருகில் கொண்டு வந்து சேர்த்தார்.
முனிவர்களுக்கு அருள் புரிந்து தசாவதார கோலம் காட்டிய பார்கவ நரசிம்மரை சேவித்தோம் இனி ஆலிநாடனின் இரண்டாவது பாசுரம் அநுபவிப்போமா?
அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிடம்
மலைத்த செல்சாத் தெறிந்த பூசல் வன்துடிவாய் கடுப்பச்
சிலைக்கை வேடர் தெழிப்பறாத சிங்கவேள் குன்றமே. (2)
பொருள்: (சீற்றத்தினால்) அலைகின்ற நாக்கைக் கொண்த பெரிய வாயையும், பெரிய ஒளி பொருந்திய கூரிய பற்களையும், ஒப்பற்ற மிடுக்கையும் உடைய சிம்மமாய் தோன்றி, கொலை செய்வதையே வழக்கமாகக் கொண்ட கையை உடையவனான அசுரன் ஹிரண்யனுடைய மார்பை பிளந்த வஜ்ர நகங்களையுடைய சர்வேஸ்வர்ன் நித்ய வாசம் செய்யும் இடமாவது, (வேடர்களால்) தாக்கப்பட்ட தீர்த்த யாத்திரை செல்பவர்களின் கூட்டமானது போட்ட சண்டையில் உடுக்கை சப்திக்கவும் வில்லை கையிலே தாங்கிய வேடருடைய ஆரவாரம் எப்போதும் மாறாத சிங்கவேள் குன்றமாகும்.
Labels: அக்ஷய புஷ்கரணி, கீழ் அஹோபிலம், பார்கவ நரசிம்மர்
4 Comments:
மேலே உள்ள முதல் படம்,, பார்கவ நரசிம்மர் திருக்கோவில் மூலஸ்தான படமா?
நீர் நிறைந்து, தாமரை, ஆம்பல் மலர்கள் நிறைந்து இரம்மியமாக காட்சி தந்தது புஷ்கரணி:)))
பறவைகளின் கீச் கீச் ஒலிகளை இரசித்துக் கொண்டே திருக்கோவிலை அடைந்தோம். :))
Thanks
----
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி உள்,
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்!
கீசு கீசு என்று எங்கும்,ஆனைச் சாத்தன் கலந்து,
பேசின பேச்சரவம் கேட்டிலையோ?
என்ற ஆண்டாள் பாடல்கள் நினைவுக்கு வருகிறது
//பார்கவ நரசிம்மர் திருக்கோவில் மூலஸ்தான படமா?//
ஆம் கூகிலாண்டவர் உபயம்.
//ஆண்டாள் பாடல்கள் நினைவுக்கு வருகிறது//
மிக்க நன்றி
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home