Sunday, February 21, 2010

நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -9

Visit BlogAdda.com to discover Indian blogs

கீழ் அஹோபில திருக்கோயில்கள்


ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம்
அபய ஹஸ்தாங்கித கருணா மூர்த்தே
ஸர்வ வியாபிதம் லோக ரக்ஷகாம்
பாப விமோசன துரித நிவாரணம்
லக்ஷ்மி கடாக்ஷ ஸர்வாபீஷ்டம்
அநேகம் தேஹி லக்ஷ்மி ந்ருஸிம்ஹா


என்றபடி ப்ரஹாலதனுக்கு அனுக்கிரகம் செய்த ப்ரஹலாத வரதனாய், ஹ்ரண்யனைக் கொன்ற உகரம் தணிந்த சாந்த நரசிம்மராய், பெரிய பிராட்டியார் மஹா லக்ஷ்மித் தாயாரை தன் இடது தொடையில் தாங்கிய லக்ஷ்மி நரசிம்மயார் பெருமாள் சேவை சாதிக்கும் திருக்கோவில் அமைந்துள்ளது. ஏழு நிலை ராஜகோபுரத்துடனும் மூன்று பிரகாரங்களுடன், அற்புதமான சிற்பங்கள் நிறைந்த மண்டபங்கள், உயர்ந்த மதில்களுடன் விளங்குகின்றது திருக்கோவில். கோவிலின் முன்னே ஒரு நெடிதுயர்ந்த 85 அடி ஜெயஸ்தம்பம் (வெற்றித் தூண்) உள்ளது.இந்தத் தூணை 30 அடி ஆழம் தோண்டி நிறுவியுள்ளார்களாம். இத்தூணின் முன்னர் நின்று நாம் வேண்டும் வேண்டுதல்கள் நிரைவேறுகின்றன. முஸ்லிம்கள் ஏழாவது ஜீயர் காலத்தில் இக்கோவிலை ஆக்கிரமித்துக் கொண்ட போது, விஜய நகரத்தை ஆண்ட ரங்கதேவராயர் அவர்களுடன் போரிட்டு ஆலயத்தை மீட்டுக் கொடுத்தார் அதன் நினைவாக இத்தூண் எழுப்பப்பட்டது.


பிரகலாத வரதர் திருக்கோவில் இராஜ கோபுரம்


பெருமாள் தானாக தோன்றிய ஸ்வயம்வ்யஹ்த ஷேத்திரம் இத்தலம். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் கருட கம்பம் என்னும் கொடி மரத்தை காணலாம். அடுத்து ரங்க மண்டபத்தை காணலாம். 16ம் நூற்றாண்டின் அற்புத தூண்கள், நரசிம்மரின் பல்வேறு விதத் தோற்றங்களோடு இசைக்கலைஞர்களும், நாட்டிய மங்கைகளும் வெவ்வேறுவிதமான நாட்டியக் கோலங்களில் காட்சி அளிக்கும் சிற்பங்கள் நிறைந்த ரங்க மண்டபம் காணலாம். இன்னொரு கல்யாண மண்டபமும் உள்ளது இம்மண்டபத்தில் பெருமாள் கல்யாணக் கோலத்தில் எழுந்தருளுவாராம். திருப்பதியிலிருந்து வெங்கடாஜலபதி இங்கு எழுந்தருளி பத்மாவதித் தாயாரின் கல்யாணத்திற்கு முன் நரசிம்மரிடம் ஆசி பெற்று சென்றாராம். வெங்கடாசலபதிக்கு தனி சன்னதியும் உள்ளது. மூலவர் சாந்த நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் சுகாசனத்தில் சங்கு சக்ரதாரியாய், வலக்கரம் அபய ஹஸ்தமாகவும், இடது கரம் இடது தொடையில் அமர்ந்திருக்கும் மஹாலக்ஷ்மித் தாயாரை அனைத்த கோலமாகவும் புன்னகையுடன் சேவை சாதிக்கின்றார். பிரகலாதன் வேண்ட உக்ரம் விடுத்து சாந்த நரசிம்மராய் அமர்ந்த பெருமாள். இவர் கருடனுக்கும், அஹோபில மட முதல் ஜீயர் அழகிய சிங்கருக்கும் பிரத்யக்ஷம். உற்சவர்கள் உபய நாசியார்களுடன் விஷ்ணு ரூப ப்ரஹலாத வரதர். ந்ருஸிம்ஹ ரூபத்தில் லக்ஷ்மி நரசிம்மர் என்று இரு கோலத்தில் சேவை சாதித்து அருளுகின்றனர்.


பிரகலாத வரதர் லக்ஷ்மி தாயார் விமானங்கள்


இவரை மாரிமலை முழஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கும் கோளரி மாதவனை, அரிமுகன் அச்சுதனை, இருளரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத் துத்தியணி பணமாயிரங்களார்ந்த அரவரசப் பெருஞ்சோதி அனந்தனென்னும் அணிவிளங்குமுயர் வெள்ளையணை மேவிய சாந்த ந்ருஸிம்ஹரை, ப்ருஹலாத வரதரை, லக்ஷ்மி நரசிம்மரை, சக்கரவர்த்தி திருமகனை கண்களில் நீர் வழிய சேவிக்கின்றோம்.அகலகில்லேன் இறையுமென்று பெருமாள் வலமார்பில் உறைகின்ற மஹாலக்ஷ்மி தாயாருக்கு இடப்புறத்தில் தனி சன்னதி. தாயார் திருநாமம் அமிர்தவல்லி தாயார். பத்மத்தில் அமர்ந்த கோலத்தில் தாமரை கையில் ஏந்தி அபய வரத ஹஸ்தங்களுடன் சேவை சாதிக்கின்றாள் அன்னை மஹாலக்ஷ்மி, சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாளுக்கும் தனி சன்னதி உள்ளது. ஆழ்வார், ஆச்சாரியர்களும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். நவ நரசிம்மர்களின் உற்சவ மூர்த்திகளும் இக்கோவிலில்தான் உள்ளனர். கோவிலின் தென் கிழக்கு மூலையில் சதுர வடிவ புஷ்கரணி உள்ளது. நடுவில் கிணறு உள்ளதால் யாத்திரிகள் புஷ்கரணியில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாசி மாத பிரம்மோற்சவமும், நரசிம்ம ஜெயந்தியும் இக்கோவிலின் முக்கிய திருவிழாக்கள்





கலையம்சம் நிறைந்த மண்டபம்.




ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்பராப்தம்

ம்ருத்யும் சத்ருகணாந்விதம் |

பக்தாநாம் நாசயேத்யஸ்து

ம்ருத்யும்ருத்யும் நாமம்யஹம் ||


என்று ம்ருத்யுவிற்கும் ம்ருத்யுவானவன் ஸ்ரீ ந்ருஸிம்ஹன் அவரை விட சிறந்த தெய்வம் இல்லை என்னும் ம்ருத்யுஞ்ஜய்ரான பரமேஸ்வரன் சிவபெருமான் அருளிய மந்திரபத ஸ்தோத்திரத்தை பொருளுடன் எழுதி வைத்துள்ளனர். ஒரு ஈச்வரனுக்கும் ந்ருஸிம்ஹருக்கும் உள்ள இன்னும் சில ஒற்றுமைகள் இவருக்கும் பிரதோஷ காலம் உகந்தது, இருவருக்கும் முக்கண்கள். ஸ்வாமி ஸ்ரீ தேசிகன் தாம் அருளிய ஸ்ரீ காமாஸிகாஷ்டகத்தில் சூரியனை வலது கண்ணாகவும், சந்திரனை இடது கண்ணாகவும், அக்னியை நெற்றியில் உடையவனாகவும் ந்ருஸிம்ஹன் விளங்குகிறார் என்று பாடுகிறார்.


தசாவதார சிற்பங்கள்


அடி பணிந்தோரின் பகைவர்களை அறவே பூண்டோடு அழித்திடுபவர். தனது சிம்ம கர்ஜனையினால் அண்டங்கள் அனைத்தையும் அதிரச் செய்தவர், அப்படிப்பட்ட எங்கும் பரவி நின்ற உக்ர ரூபியான எம்பெருமானை நான் வணங்குகின்றேன். வரத்தால் வலி மிக்க அசுரன் ஹிரண்யகசிபுவை வஜ்ர நகத்தாலே தகர்த்தெரித்த வீரன் ஸ்ரீ நரசிம்மன்(அஹோபில). திருவடி பாதாளத்திலும், திருமுடி ஆகாயத்திலும், திருக்கரங்கள் எட்டு திக்குகளிலும் பரவி நின்ற மஹா விஷ்ணு இவரே. ஒளி பொருந்திய சூரிய, சந்திர, நட்சத்திரங்களுக்கு ஒளியாக விளங்குபவர். இவருடைய ஓளியினால் இவையெல்லாம் ஒளி பெறுகின்றன. இப்படிபெற்ற ஒளிமயமாக ஜொலிக்கிண்ரவரை நான் வணங்குகின்றேன். எல்லாவற்றையும், எங்கும், எப்பொழுதும், புலன்களின் உதவியின்றி தானே அறிபவர், முழு முதலான எங்கும் முகமுடைய ஸ்ர்வதோமுகரை நான் வணங்குகிறேன். நரங்கலந்த சிங்கமதான திருவுருவத்துடன் தோன்றிய மஹாதமாவானவரை, மாபெரும் பிடரியுடனும், பற்களுடனும் காட்சியளுக்கும் ஸ்ரீ ந்ருஸிம்ஹரை வணங்குகிறேன். யாருடைய பெயரை நினைத்தாலே பூதங்கள், பிசாசங்கள், இராக்ஷஸர்கள் நடுங்கி ஒடுவார்களோ, தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்தொழியுமோ அப்படிபட்ட பயங்கரமானவரை நான் வணங்குகிறேன். எல்லோரும் எவரை அடிபணிந்து எல்லாவிதமான மங்களங்களையும் அடைகின்றனரோ, மங்களமானவளான ஸ்ரீ மஹா லக்ஷ்மியுடன் உடனுறையும் மங்களமானவரை நான் வணங்குகிறேன். காலத்தில் வந்து பக்தர்களின் சத்ருக்களுக்கு ம்ருத்யுவானவனான, ம்ருத்யுவிற்கும் ம்ருத்யுவானவனை நான் வணங்குகிறேன். அவர் திருவடிகளில் நம: என்று கூறி ஆத்ம நிவேதனம் செய்துவிட்டால் அவர் யாராயினும் காத்திடுவான், துயர் கெடும். இன்னல்கள் இடிபட்டோடும். இத்தகைய நலன்களை அருளும் எம்பெருமானை நான் வணங்குகிறேன். எல்லோரும் அவரது தாசர்களே, இயற்கையிலேயே தாசர்கள், நானும் அவருக்கு தாசர்தான் என்பதை நன்குணர்ந்த நான் அவரை வணங்குகிறேன் என்று பரமேஸ்வரன் 11 ஸ்லோகங்களால் ஸ்தோத்ரம் செய்து பன்னிரெண்டாம் ஸ்லோகத்தில் இவ்வாறு பலன் கூறுகின்றார்.


இந்த மந்திரங்களுக்கெல்லாம் ராஜாவான ஸ்ரீ மந்திரராஜத்தின் பதங்களின் தத்வநிர்ணயம் சங்கரனான என்னால் மிகவும் உகந்து வெளீயிடப்பட்டது. இந்த ஸ்ரீ மந்த்ரராஜ பதஸ்தோத்திரத்தை தினமும் காலையில், மதியத்தில், மாலையில் யார் உகந்து உரைக்கவல்லார்களோ, அவர்களுக்கு நீங்காத செல்வமும், வளமிக்க கல்வியும், நீண்ட ஆயுளும் நலமுடன் விளங்கும் என்று பலச்ருதியும் கூறி முடிக்கிறார் ஸ்ரீ ஈச்வரர்.


மண்டபத்தின் அழகிய தூண்


ஒவ்வொரு ந்ருஸிம்ஹரை தரிசனம் செய்த பின்னும் திருமங்கை ஆழ்வாரின் சிங்க வேள் குன்ற பாசுரம் ஒன்றை அனுபவிக்கலாம் அதன்படி முதல் பாசுரமும் விளக்கமும் இதோ:


அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓராளரியாய் அவுணன்

பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்

பைங்கணானைக் கொம்புகொண்டு பத்திமையால் அடிக்கீழ்ச்

செங்கணாளி இட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே. (1)


பொருள்: பிரஹலாதன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றவுடன் இரணியன் ஒரு தூணை கதையால் த்ட்ட அதே இடத்தில் அழகிய இப்பூமியில்லுரோரெல்லாம் பயப்படும்படி அபூர்வமான நரஸிம்ஹரூபியாய் தோன்றி அதைக் கண்டு ஹ்ரண்யன் கோபத்துடன் சண்தையிட அவனுடைய மார்பை வஜ்ர நகங்களால் பிளந்த பரிசுத்தனான சர்வேச்வரன் இடமாவது சிவந்த கண்களையுடைய சிங்கங்களானவை, பச்சைக் கண்களையுடைய யாணைகளின் கொம்புகளை பறித்துக் கொண்டு பகவத் பக்தியாலே அவரது திருவடியிலே சமர்ப்ப்பிக்கின்ற சிங்கவேள் குன்றமாகும்.

நவநரசிம்மர் தரிசனம் தொடரும் ...........

Labels: , ,

5 Comments:

Blogger Rajewh said...

ஒவ்வொரு ந்ருஸிம்ஹரை தரிசனம் செய்த பின்னும் திருமங்கை ஆழ்வாரின் சிங்க வேள் குன்ற பாசுரம் ஒன்றை அனுபவிக்கலாம்
::)))

THANK YOU VERYMUCH SIR

AADI AADI AGAM KARAINDU
ISAI PAADI PAADI KANNEER MALGI
NAADI NAADI NARASINGA VENRU
VAADI VAADUM IVVANUDALE!
Narasimmar arulvaaraga!

February 24, 2010 at 12:09 AM  
Blogger Rajewh said...

பச்சைக் கண்களையுடைய யாணைகளின் கொம்புகளை பறித்துக் கொண்டு பகவத் பக்தியாலே அவரது திருவடியிலே சமர்ப்ப்பிக்கின்ற சிங்கவேள் குன்றமாகும்.::)))

எதுக்கு sir யானையின் கொம்பு நரசிம்மர் பாதத்தில் சமர்பிக்கபடுகிறது!

February 24, 2010 at 12:18 AM  
Blogger S.Muruganandam said...

நாம் கடவுளை தரிசிக்க செல்லும் போது எதாவது எடுத்துக்கொண்டு சென்று அவருக்கு சமர்ப்பிக்கின்றோம் அல்லவா அது போல சிங்கங்கள் தமது பக்தியின் மிகுதியால் சிங்கப்பிரானுக்கு விலை உயர்ந்த தங்கங்களை சமர்ப்பிக்கின்றன.

February 24, 2010 at 12:51 AM  
Blogger Rajewh said...

திருப்பதியிலிருந்து வெங்கடாஜலபதி இங்கு எழுந்தருளி பத்மாவதித் தாயாரின் கல்யாணத்திற்கு முன் நரசிம்மரிடம் ஆசி பெற்று சென்றாராம்.:)))

ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீமன் நாராயணிடமே ஆசிர்வாதம் வாங்கினாரா?
இது எந்த அளவுக்கு உண்மை என்பது சந்தேகமே!

February 24, 2010 at 2:17 AM  
Blogger S.Muruganandam said...

//ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீமன் நாராயணிடமே ஆசிர்வாதம் வாங்கினாரா?
இது எந்த அளவுக்கு உண்மை என்பது சந்தேகமே!//

திருமலையில் முதலில் வராக ஷேத்திரம் என்பது பின் ஸ்ரீநிவாசர் வந்த பின் வேங்கடாசலமாக மாறியது அல்லவா? அது போல வெங்கடாசலபதிக்கு முந்தைய சிறப்புப் பெற்ற தலம் அஹோபிலம் என்பதுதான் இதன் உட்கருத்து.

February 24, 2010 at 5:25 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home