நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -14
(உக்ர நரசிம்மர் தரிசனம்)
உக்ர நரசிம்மரும் செஞ்சு லக்ஷ்மித் தாயாரும்
கீழ் அஹோபிலத்தில் உள்ள நரசிம்மர்கள் அனைவரையும் சேவித்துவிட்டு முதல் நாள் மாலை ஐந்து மணியளவில் மேல் அஹோபிலம் வந்து சேர்ந்த போதும் மழை ஜோராகக் கொட்டிக்கொண்டிருந்தது. அந்த புது வெள்ளம் பவநாசினி ஆற்றின் நீர் வீழ்ச்சியில் எம்பெருமானின் கருணை வெள்ளம் போல் கொட்டிக்கொண்டிருப்பதை வேனில் இருந்தே கண்டோம். ஆம் ஒரு அருமையான ஆனால் ஆழமான ( சென்று குளிக்கமுடியாத) நீர் வீழ்ச்சி நம்மை வரவேற்கின்றது மேல் அஹோபிலத்தை அடைந்தவுடன். நீர் வீழ்ச்சி மட்டுமா? மந்திகளும் தான், இராமாவாதாரத்தில் பெருமாளின் சேனைகள் இந்த மந்திகள் தானே?. மழை நின்றதும் கீழே இறங்கி நீர் வீழ்ச்சியின் அழகை ரசித்தோம்.
ஆலய இராஜ கோபுரம்
மேல் அஹோபிலத்தில் தங்கும் வசதிகள் உள்ளன. அங்குதான் உணவு உட்கொள்ள வேண்டும் தனியாக உணவகங்கள் இல்லை. சிறுபெட்டிக் கடைகள், தேநீர் விடுதி மட்டும் உள்ளது. நாங்கள் "ஆர்ய வைஸ்யர்கள் மடத்தில் தங்கினோம்" . மடமெங்கும் இம்மடத்திற்காக நன்கொடை அளித்த அன்பர்களின் குடும்ப புகைப்படஙகளை மாட்டி வைத்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பாங்கு அருமையாக இருந்தது. ஒருவர் தங்கக்கூடிய அறைகளும் இருவர் தங்கக்கூடிய அறைகளும் உள்ளன. அறையிலிருந்து நீர் விழ்ச்சியின் காட்சி அருமையாக கிடைக்கின்றது. உணவு நாம் சொல்லுகின்ற வகையில் செய்து தருகின்றனர். அருகில் உள்ள நகரத்தில் இருந்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்து வருகின்றனர். சரியான சமயத்தில் உணவு உண்ண வேண்டியது அவசியம். அனைவரும் அமர்ந்து முதலில் அமர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்த பின்னரே உணவு படைக்கப்படுகின்றது.
சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொண்ட பின் அஹோபில நரசிம்மரை சேவிக்க சென்றோம். மேல் அஹோபிலத்தில் திருக்கோவில் மாலை ஆறு மணி வரைதான் திறந்திருக்கும் என்பதால் சீக்கரமே சென்றோம். மடத்திலிருந்து வெளியே வந்தால் அருகில் ஒரு குளம் ஆனால் அதில் அதிக தண்ணீர் இருக்கவில்லை. எதிரே பெரிய மலை அதில் பல விதமான குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன, பின் செங்குத்தான படிகளில் ஏறி வலம் திரும்பினால் அகன்ற வீதி அதன் இறுதியில் அஹோபில நரசிம்மர் ஆலயம். இருபுறமும் சுதை சிற்பங்கள் நிறைந்த கோபுரங்களுடன் எழிலாக அமைந்துள்ளது உக்ர நரசிம்மர் ஆலயம். அருகிலேயே பவநாசினி ஆறு ஓடுகின்றது. ஜ்வாலா நரசிம்மரை தரிசிக்கவும், பாவன நரசிம்மரை தரிசிக்கவும் இக்கோவிலை கடந்தே செல்ல வேண்டும். அக்ரஹாரம் போல தெரிகின்றது செல்லும் பாதை. இக்கோடியில் திருக்கோவிலுக்கு எதிரே ஒரு மண்டபம் உள்ளது. பிரம்மோற்சவ காலங்களில் இவ்வீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் போலும்.
ஐந்து நிலை கோபுரம் நம்மை வா வா என்று அழைக்க திருக்கோவிலின் உள்ளே சென்றோம், ஒன்பது நரசிம்மர்களின் ஓவியங்களையும் இக்கோவிலில் முதலில் தரிசித்தோம். சிற்பங்கள் இக்கோவிலிலும் நிறைந்திருக்கின்றன. பின் புற கோபுரம் மூன்று நிலை கோபுரம். மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும் நடுவில் யாருடைய காலும் படாதபடி சிறிது இடத்தை பாதுகாத்து வைத்திருந்தனர். விசாரித்த போது 1513ம் ஆண்டு 6ம் ஜீயர் ஸ்ரீ செஷ்ட பராங்குச யதீந்திர மஹா தேசிகர் குகைக்குள் திருநாட்டிற்கு ஏகியதால் அங்கு யார் பாதமும் படக்கூடாது என்று வேலியிட்டு வைத்திருக்கின்றனர். அந்த நேரத்திலும் சிறிது கூட்டம் இருந்தது, சிறிது நேரம் வரிசையில் நின்று கருடனுக்காக குகையில் வந்து சேவை சாதித்த உக்ர ந்ருஸிம்ஹரை சேவிக்க குகையினுள் சென்றோம். அங்கே எம்பெருமான் அளித்த தரிசனம் மிகவும் அற்புதமானது. சாலக்கிராம மாலையுடன், தன் மடியில் இடந்திரட்டிரணியன் நெஞ்சை இரு பிளவாக தன் வஜ்ர நகங்களால் பிளக்கும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார் அஹோபில உக்ர நரசிம்மர். நரங்கலந்த உருவத்தில் சக்ராசனத்தில், சங்கு சக்கரம் தாங்கி, ஜடை, பிடரி மயிருடன் கூடியவராய், அசுர கூட்டத்தை வேருடன் அழிக்கும் பெருமாள் கோரைப் பற்கள் தெரிய கர்ஜிக்கும் கோலத்தில் மூன்று கண்களுடன், நெற்றிக் கண்ணில் தோன்றிய தீ முவ்வுலகங்களையும் அழிக்கும் விதமாகவும், அதே சமயம் அருகில் கை கூப்பி நிற்கும் ப்ரஹலாதன் மேல் அமுத பார்வையை வர்ஷிக்கும் கோலத்தில் அற்புதமாக, ஆனந்தமாக, திவ்யமாக சேவை சாதிக்கின்றார். கருட பகவான் செய்த கடும் தவத்திற்கு இரங்கி சத்திய சொரூபனாக மலைக்குகையில் நெருப்பின் உக்கிரத்தோடு தோன்றிய பெருமாள் வெள்ளி கவசத்தில் மின்னுகின்றார். காணக்கண் கோடி வேண்டும் பெருமாளை கண்ணாரக் காண. இவர் ப்ரஹலாதனுக்கும் பிரத்யக்ஷம்.
சுற்றிலும் மலைகள் சூழ அஹோபில நரசிம்மர் ஆலயம்
அமைந்திருக்கும் அழகு
"அஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவமக்ஷிணி” என்ற சாம வேத உபநிஷத்தான ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்தில் “ தாமரைத் தடாகத்திலே நீண்ட தண்டுடன் விளங்கும் தாமரை சூரியனைக் கண்டதும் எப்படி மலர்கின்றதோ அது போல திருமுக மண்டலமும், திருக்கண்களும் கொண்டவன் எம்பெருமான். அந்த அமிர்தம் பொழியும் திருக்கண்களால் எல்லோரும் குளிரக் கடாக்ஷித்தருளும் பரந்த கண்ணழகு மிக்கவன் என்று போற்றப்படும் பெருமாளின் திருக்கண்களுக்கு மட்டும் தங்க கண்ணடக்கம் சாத்தியுள்ளனர். திருப்பாணாழ்வார், கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய என்று அநுபவித்த பெருமாளின் திருக்கண்களை இங்கேயும் கண்டோம். அருகிலேயே ஆதி சேஷன் குடைப்பிடிக்க லக்ஷ்மி நரசிம்மர் உற்சவராய் எழுந்தருளியுள்ளார். அஹோபில மடத்தின் முதல் ஜீயர் ஸ்ரீ ஆதிவண் சடகோபர் பெருமாளை வணங்கும் கோலத்தில் எழுந்தருளியுள்ளார். கண்குளிர, மனம் உருக அந்த கருணா மூர்த்தியை சேவித்தோம். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் கருணை வெள்ளமே எல்லோரையும் காத்தருள் என்று கருடனுக்காக தோன்றி சேவை சாதிக்கும் பெருமாளை வேண்டிக் கொண்டோம்.
குகையில் பெருமாள் ஏன் எழுந்தருளியுள்ளார். சிம்மம் குகையில் வசிக்கும் அதனாலா? சூடிக் கொடுத்த சுடர்க்கொடியும் அவ்வாறு தானே மாரி முலை முழஞ்சில் மன்னி கிடந்துறங்கும் சீரிய சிங்கம் என்று பாடியுள்ளாள். வேதங்கள் பர்வதங்கள் என்றால் குகைகள் வேதாந்தம் அதாவது உபநிஷத்துக்கள். எனவே வேதாந்த சாரமே பெருமாள்தான் என்பதை உணர்த்த பெருமாள் குகையில் சேவை சாதிக்கின்றார். எம்பெருமானின் குகை வாசமே நமது ஹ்ருதய வாசம் என்பதை நாம் உணர வேண்டும். எல்லா ஜீவராசிகளிலும் அந்தர்யாமியாக நாராயணன் விளங்குகின்றான் என்பதை உணர்த்தவே இந்த குஹா வாசம். இந்த அஹோபில மஹா ஷேத்திரத்தில் எம்பெருமான் இருக்கும் இருப்பே நம்மள்ளும் அவர் இருக்கும் இருப்பு. எனவே கடினமான மலைக்குகையில் அமர்ந்திருக்கும் நரசிம்மப் பெருமாளே இங்கு ஓடி வந்து எங்கள் இருதய குகையிலும் நித்யவாசம் செய் என்று மனமார வேண்டிக்கொண்டோம்.
பெருமாளுக்கு எதிரே கைகூப்பிய நிலையில் கருடன் ஆனந்தமாக சேவை சாதிக்கின்றான். குகையை விட்டு வெளியே வந்ததும் அருகில் இன்னொரு குகையில் சிவலிங்கம். ஆதி சங்கரர் உக்ர நரஸிம்மரை தரிசிக்க வந்த சமயம் கபாலிகர்கள் இவரது கையை வெட்டி விட , "ஸ்ரீ ந்ருஸிம்ஹ கராவலம்பம்" பாடி ஆதி சங்கரர் பெருமாளை துதி செய்ய அவர் கை மீண்டும் வளர்ந்தது. அவர் ஸ்தாபனம் செய்த நரசிம்ம சுதர்சன சக்கரமும் செஞ்சு லக்ஷ்மி தாயார் சன்னதிக்கு அருகில் உள்ளது. செஞ்சு என்பது இந்த நல்ல மலைகளில் வசிக்கும் ஆதிவாசி மக்களின் பெயர். இந்த செஞ்சு இனப்பெண்ணை நரசிம்மர் மணந்து கொண்டதால் தாயாருக்கு இத்திருநாமம். தாயார் பத்மாசனத்தில் இரு மேற்கரங்களில் தாமரை மலர் தாங்கி வைர கிரீடம் வைர தடாகங்கள் அணிந்து சர்வலாங்கர பூஷிதையாக சேவை சாதித்தாள். அன்னையை, அகலகில்லேன் என்று பெருமாளை பிரியாத அலர்மேல் மங்கையை, அலை கடலில் தோன்றிய அமுதத்தை மனதார வழிபட்டோம். பின் வெளியே வந்து அமர்ந்து திருமங்கை மன்னன் அருளிய சிங்கவேள் குன்ற பாசுரத்தை
எரிந்த பைங்கண் இலங்கு பேழ்வாய் எயிற்றோடு இது எவ்வுருவென்று
இரிந்து வானோர் கலங்கியோட இருந்த வம்மானதிடம்
நெரிந்தவேயின் முழையுள் நின்று நீள்நெறிவாய் உழுவை
திரிந்தவானைச் சுவடுபார்க்கும் சிங்கவேள் குன்றமே (6)
பொருள் : சீற்றத்தாலே எரியா நின்ற பசுமையான கண்களையும் கோரைப் பற்களையுடைய விளங்கா நின்றுள்ள பெரிய வாயையும் கொண்டு, இது என்ன வடிவு என்று அஞ்சி தேவர்கள் எல்லாம் சிதறி ஒடும்படியாக எழுந்தருளிய சர்வேஸ்வரனின் இடமானது, ஒன்றோடு ஒன்று மூங்கிலின் வழியாக புலிகள் பெரிய வழிகளிலே யானைகள் சென்ற மோப்ப சக்தியாலே அடையாளத்தை பாரா நின்றுள்ள சிங்கவேள்குன்றமாகும்.
என்று சேவித்து பெருமாளை வணங்கி விட்டு அப்படியே காலார நடந்து வந்து விடுதியை அடைந்து உணவு அருந்தி விட்டு அடுத்த நாள் அதிகாலையிலேயே பாவன நரசிம்மரை சேவிக்க செல்ல வேண்டும் என்பதால், இன்று அருமையான தரிசனம் தந்ததற்காக நரசிம்மருக்கு நன்றி தெரிவித்து உறங்கச் சென்றோம். இவ்வாறு யாத்திரையின் முதல் நாள் திவ்ய தரிசனம் கண்டோம். இரண்டாம் நாள் அனுபவம் என்ன எந்த நரசிம்மரை தரிசனம் செய்தோம் என்று அறிய ஆவலாக உள்ளதா பொறுங்கள் சூரியன் உதயமாகும் வரை.
Labels: அஹோபில நரசிம்மர், செஞ்சு லக்ஷ்மித் தாயார், மேல் அஹோபிலம். உக்ர நரசிம்மர்
1 Comments:
This comment has been removed by a blog administrator.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home