நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -16
மேல் அஹோபில திருக்கோயில்கள்
( க்ரோடா நரசிம்மர் தரிசனம்)
பாவன நரசிம்மர் மற்றும் செஞ்சு லக்ஷ்மித்தாயாரின் அற்புதமான சேவைக்கு அப்புறம் மடத்திற்கு திரும்பி வந்து மதிய உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் மலையேறின களைப்பு தீர ஓய்வெடுத்தோம். சுமார் மூன்று மணியளவில் பின் மற்றுமுள்ள நரசிம்மர்களை சேவிக்கப் புறப்பட்டோம். காலையில் நாம் சென்றது கருட மலையில் ஆம் கருடனே இங்கு மலையாக நிற்க அதன் குகையில் பெருமாள் உக்ர நரசிம்மராக சேவை சாதிக்கின்றார் இன்னொரு பகுதியில் பாவன நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இன்று நாம் சேவிக்கும் நரசிம்மர்கள் கோவில் கொண்ட மலை வேத மலை. இந்த இரண்டு மலைகளுக்கும் இடையில்தான் பவநாசினியாறு ஒடுகின்றது. இம்மலை வேத மலை என்று அழைக்கப்படுகின்றது என்று முதலில் பார்ப்போமா? முன்பு கிருதயுகத்தில் சோமகன் என்ற கொடிய அசுரன் வேதங்களைப் பிரம்மாவிடமிருந்து திருடிக்கொண்டு சென்று விட்டான். இதனால் மூன்று உலகமும் என்ன செய்வதென அறியாமல் குழப்பம் அடைந்தன. எல்லா அறங்களும் தடுமாறின.
விஷ்ணு பகவான் சோமகன் என்னும் ராக்ஷஸனைக் கொன்று வேதங்களை மீட்டுக் கொடுத்தார் பிரம்மாவிடம். பிறகு வேதங்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஆலோசிக்கத் தொடங்கின. 'நமக்கு வேண்டிய வரத்தைக் கொடுக்கப் பிரம்ம தேவர் சக்தியற்றவர்". எனவே நாம் தவம் புரிந்து ஸர்வேச்வரனான பகவானைக் கண்டு வரம் பெற வேண்டும். ஒருவரிடமும் நாம் தோல்வி அடையக்கூடாது. அனைவரையும் நாம் வெல்ல வேண்டும். அசுரர்கள். தேவர்கள், மனிதர்கள், நாஸ்திகர்கள், புராணங்கள், ஸ்ம்ருதிகள், இதிஹாஸங்கள் இவை மூலமாக நமக்கு எப்பொழுதுமே பரிபவம் ஏற்படக் கூடாது. அதற்காக நாம் முயற்சி செய்ய வேண்டாமா? என்று எண்ணி தவம் செய்வதற்குரிய இடத்தைத் தேடி சென்றன.

இம்மலைக்கு செல்ல பவநாசினி ஆற்றை கடந்து செல்ல வேண்டி வந்தது, அஹோபில நரசிம்மர் ஆலயத்திற்கு அருகில் ஒரு இரும்புப் பாலம் இவ்வாற்றின் குறுக்காக கட்டப்படுள்ளது. ஆற்றைக் கடந்து ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றோம் செல்லும் வழியில் பாழடைந்த ஒரு மண்டபத்தைக் கண்டோம்.
வழியில் கண்ட பாழடைந்த மண்டபங்கள்
முற்காலத்தில் அதாவது வாகனங்கள் செல்லும் வசதியில்லாத காலத்தில் யாத்ரீகர்கள் பவநாசினி ஆற்றங்கரையோரமாகவே வந்து பெருமாளை சேவித்து விட்டு செல்வார்களாம் அவர்களுக்காக கட்டிய இம்மண்டபங்கள் இப்போது பாதைகள் போடப்பட்டதாலும் பாலங்கள் கட்டப்பட்டதாலும் இப்போது யாரும் பயன்படுத்தாமல் பாழடைந்து விட்டன. அந்த காலத்தில் ஆதி சங்கரரும், திருமங்கை மன்னனும் எவ்வாறு வந்திருப்பார்கள் என்று என்ணினால் அவர்களின் பக்தியின் மேன்மை நமக்கு புரியும். ஆகவே தான் ஆலிநாடன் தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும் என்று தம் பாசுரத்தில் சிங்கவேள் பெருமாளை மங்களாசாசனம் செய்தாரோ?
நாங்கள் .முதலில் சேவிக்க சென்றது இவ்வேத மலையின் கிழக்குப் பாகத்தில் ஒரு குகையில் சேவை சாதிக்கும் க்ரோடா நரசிம்மரை.
பாசிதூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள்’
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே!
என்று சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் பாடிக் கொடுத்தபடி இரணியனின் சகோதரன் இரணியாக்ஷன் பூமி பிராட்டியை எடுத்துக் கொண்டு பாதாளத்தில் ஒளித்து வைத்து விட, பெருமாள் கோல வராஹமாய் அவதாரம் எடுத்து தன் கோரைப் பற்களில் பூமிப் பிராட்டியை ஏந்தி , தாயாருக்கு சரம ஸ்லோகத்தை உபதேசிக்கும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அருகிலேயே லக்ஷ்மி நரசிம்மரும் சேவை சாதிக்கின்றார். இவரது பாதங்களை பவநாசினி ஆறு வருடிக்கொண்டே ஒடுகிறது, குகைக்கு முன்னர் ஒரு மண்டபம் உள்ளது. சேவார்த்திகள் உட்கார்ந்து பெருமாளை சேவிக்க.
சிலம்பிடைச்சிறுபரல்போல்பெரியமேரு
திருக்குளம்பில்கணகணப்ப திருவாகரம்
குலுங்க நிலமடந்தைதனை இடந்துபுல்கி
கோட்டிடைவைத்தருளிய எங்கோமான்கண்டீர் …..
பெருமாள் எடுத்த இவ்வராக அவதாரத்தை திருமங்கை மன்னன் இவ்வாறு பாடுகின்றார். அதாவது பெருமாள் வாமன அவதாரம் எடுத்து திரிவிக்ரமனாக நெடிதுயர்ந்த போது அவர் ஒரு காலடியில் அளந்த இந்த பூமி இப்போது அவர் காலில் இருந்த சிலம்பின் சிறு பரல் போல் தோன்றியதாம். பெருமாள் எடுத்த வராஹ அவதாரம் இவ்வளவு பெரிதாக இருந்தது. பெருமாள் பாதாளத்திலிருந்து தமது வளைந்த கொம்பில் பூமி பிராட்டியை எடுத்துக் கொண்டு மேலே வந்த போது அகலகில்லேன் இறையுமென்று பிராட்டி உறையும் மார்பு அப்படியே குலுங்கியதாம்.
ஒவ்வொரு நரசிம்மர் ஆலயத்தின் அருகிலும் ஒன்பது நரசிம்மர்களின் ஆலயங்களை காட்டும் வரைபடம் மற்றும் அருகில் உள்ள மற்ற ஆலயங்களுக்கான தூரத்தைக் காட்டும் மைல் கல் வைத்துள்ளனர். இது எந்த நரசிம்மர் என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளனர். மற்ற இடங்களில் இதை சரியாக கவனிக்கவில்லை. இங்கு ஸ்பஷ்டமாக தெரிந்தது. ஆயினும் தக்க ஒரு வழிகாட்டியின் உதவியுடன் செல்வதே நல்லது. இங்கிருந்து அடுத்து எந்த நரசிம்மரை தரிசிக்க சென்றோம் தெரியுமா? அதற்கு முன் நம் கலியனின் எட்டாவது பாசுரத்தை அநுபவிப்போம்.
நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த அங்கு ஆளரியாய் இருந்த அம்மானதிடம்
காய்த்த வாகை நெற்றொலிப்பக் கலாதர் வேய்ங்கழைபோய்
தேய்த்த தீயால் விண்சிவக்கும் சிங்கவேள் குன்றமே (8)
(பொருள்): நாவானது தழும்பேறும்படியாக நான்முகத்தையுடைய பிரம்மனும், ருத்ரனும், வேண்டிக்கொள்ள அங்கு ந்ருஸிம்ஹமாய் எழுந்தருளிய சர்வேஸ்வரனுடைய இடம், காய்கள் நிறைந்த வாகைகளின் நெற்றுக்கள் ஒலிக்கும் கல்வழியிலே உண்டான குழல் மூங்கிலானது ஆகாயத்தளவும் ஓங்கி தன்னிலே அவை உராய்ந்து உண்டான நெருப்பால் ஆகாயம் சிவக்கும் சிங்கவேள்குன்றமே.
வரும் பதிவில் அஹோபில மடத்தின் திருவாதாரனப் பெருமாளான மாலோலனின் சேவை காண்போம்.
Labels: குகை நரசிம்மர், க்ரோடா நரசிம்மர், பிரகலாதன் பள்ளி, மாலோல நரசிம்மர்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home