Saturday, March 20, 2010

நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -15

Visit BlogAdda.com to discover Indian blogs
அஹோபில யாத்திரை

மேல் அஹோபில திருக்கோயில்கள்

( பாவன நரசிம்மர் தரிசனம்)

பாவன நரசிம்மர் செஞ்சு லக்ஷ்மித்தாயாருடன்


பாவன நரசிம்மரை தரிசனம் செய்ய வேண்டுமென்றால் கருட மலையில் ஏறிச் செல்ல வேண்டும் அரை நாள் ஆகும், ஜ்வாலா நரசிம்மரை தரிசிக்க சென்றால் வேதகிரியில் ஏறிச் செல்ல வேண்டும் அப்படியே உக்ரஸ்தம்பமும் தரிசனம் செய்யலாம் எங்கு செல்லலாம் என்று சுவாமிகள் கேட்டார். நாங்கள் பாவன நரசிம்மரை தரிசிக்க மலையேற்றம் சிறிது கடினம் என்பதால் பாவன நரசிம்மரை இன்றைய தினம் சேவிக்க முடிவு செய்தோம். காலையில் சீக்கிரமே கிளம்பினால் வெயிலுக்கு முன்னர் திரும்பி வந்து விடலாம் என்பதால் காலை ஐந்து மணிக்கே எழுந்து தயாராகி விட்டோம், அதனால் அருவிக்கு குளிக்க செல்லவில்லை தங்கும் விடுதியிலேயே குளித்து விட்டோம்.



பாவன நரசிம்மரை சேவிக்க கிளம்புகின்றோம்


சூரிய உதயம் ஆனவுடன் கையில் தடி எடுத்துக் கொண்டு கிளம்பினோம் மந்திகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளத்தான், ஏனென்றால் பாவன நரசிம்மருக்கு தளிகைக்காக பொருட்கள் எடுத்து சென்றதால். அஹோபில நரசிம்மர் கோவிலுக்கு பின் புறம் இருந்து பாதை துவங்குகின்றது, முதலில் செங்குத்தான படிகள் சுமார் 300 ஏறவேண்டும். மலை ஏறும் போது முதலில் உக்ர நரசிம்மரின் ஆலயம் முழுவதும் அற்புதமாக காணக் கிடைத்தது அடுத்த மலையில் ஏறும் போது திரும்பிப் பார்த்தால் எதிரே புதுப்பொலிவுடன் மாலோன் சன்னதி மஞ்சள் நிறத்தில் அருமையாக தரினம் கிட்டியது. அதற்கு பிறகு சிறிது கடினமான பாதைதான். சிறிது தூரம் சென்றதும் காட்டி ஒற்றையடிப்பாதை ஆகிவிட்டது.



முதலில் படிகள் ஏற வேண்டும்

சுற்றிலும் தேக்கு, மூங்கில் மரங்கள், பறவைகள் கீச் கீச் என்று ஒலி எழுப்பிக்கொண்டு பறந்து கொண்டிருந்தன. பட்டாம் பூச்சிகள் வண்ண வண்ண சட்டைகளில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக பறந்தன. வண்டுகளின் ரீங்காரம் காதுக்கு இனிமையாக இருந்தது. சாரை சாரையாக பல்தரபட்ட எறும்புகள் ஊர்ந்து கொண்டு சென்றிருந்தன. பல்வேறு கரையான்கள்களும் சாரை சாரையாக சென்று கொண்டிருந்தன. அடர்ந்த காடு நடு நடுவே காட்டாறுகளின் தாரைகள் மழைக் காலத்தில் கவனமாக செல்ல வேண்டியிருக்கும். காலணி இல்லாமல் ஏறியதால் மெதுவாகவே ஏறினோம். ஓம் நமோ நாராயணா என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தையும், ஜெய் நரசிம்மா என்று அவரை துணைக்கு அழைத்துக் கொண்டும் மெல்ல மெல்ல ஏறினோம். மொத்த தூரம் 7 கி. மீ மூலிகைக் காற்றை அனுபவித்துக் கொண்டே நடந்தோம்.




பிறகு நடைப்பயணம்



எதிரே வேதகிரியில் மாலோலன் சன்னதி


எங்களுடன் வந்த குடும்பத்தினரின் இரு குழந்தைகள் கீர்த்தனா மற்றும் சாயி அர்விந்த எங்களுடன் வந்தனர் அவர்கள் இருவரும் அருமையாக



உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸ்ர்வதோமுகம் |

ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம் யஹம் ||


(சிம்ம ரூபத்தை கொண்டவரானதால்) உக்ரமாகவும், வீரானாயும், மேலானவாயும், (சர்வவ்யாபியாயுமிருப்பதால்) மஹா விஷ்ணுவாயும், ஜ்வலிக்குமவனாயும், எல்லா இடங்களிலும் முகத்தை உடையவராயும், நரசிம்ம ரூபியாகவும் பயங்கரனாகவும், மங்களகரனாகவும், ம்ருத்யுவிற்கும் ம்ருத்யுவானவரான உம்மை வணங்குகின்றேன்.


காட்டு வழியில் அவரே துணை

என்னும் ந்ருஸிம்ஹ அனுஷ்டுப் மூல மந்திரத்தை கூறிக்கொண்டு வந்தனர், நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டோம். சிறிது தூரம் சென்ற பின் திருப்பாவை பாசுரங்களை சேவித்துக் கொண்டே நடந்தோம். நாங்கள் நரசிம்மா என்று கூவிய அந்த ஒலி அப்படியே எதிரொலியாகி ஆயிரம் நரசிம்மர்களாக திரும்பி வந்தது.




பார்க்கவ நரசிம்மர் சன்னதி விமானம்

இந்த நல்ல மலை செஞ்சு இன மக்கள் வாழும் பகுதி, சிலர் கரடிகளை மாலை வேளைகளில் பார்த்திருக்கின்றனர். நாங்கள் சென்ற பொது போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் முன்னும் பின்னும் பல்வேறு வீரர்கள் பாதுகாப்பு தர பாவன நரசிம்மரை தரிசிக்க சென்றார். பின்னர் கீழே சென்று மடத்தில் விசாரித்த போது நக்ஸல்வாதிகள் உள்ள பகுதி எனவே போலீஸ் ரோந்தில் ஈடுபடும் போது ந்ருஸிம்ஹரை தரிசிக்க வருவார்கள். புனிதமான இப்பகுதியை நக்சல்வாதிகள் கொடுமை செய்வதை ஏன் நரசிம்மர் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்று தெரியவில்லை என்று வருத்தத்துடன் கூறினார்.


கருட மலையின் ஒரு இறகில் ஏறி பின்னர் மற்றொரு இறகில் இறங்கி சுமார் 2:00 மணி நேரம் நடைப்பயணம் செய்த பின் பாவன நரசிம்மர் ஆலயத்தை அடைந்தோம். சீக்கிரமே சென்று விட்டதால் கூட்டம் அதிகம் இருக்கவில்லை, நேரம் செல்ல செல்ல கூட்டம் சேர்ந்தது. அதில் சிலர் கீழிருந்து ஜீப்பில் வந்திருந்தனர். பார்கவ நரசிம்மரை தரிசிக்க சென்ற போது எப்படி சென்றோமோ அது போல கரடு முரடான பாதியில் கற்களின் மேல் ஜீப்பை ஒட்டிக் கொண்டு வந்தார்களாம், எலும்புகள் எல்லாம் ஆட்டம் கண்டு விட்டன, சற்று கடினமான பயணம்தான் என்று அவர்கள் கூறினர். ஒரு ஜீப்பிற்க்கு 6 பேர் வரை ஏற்றிக் கொள்கின்றனராம். முழு ஜீப்பிற்கு வாடகை ரூபாய் 1200 ஆகியது என்றனர். மலை ஏற இயலாதவர்கள் இவ்வாறு வந்து பெருமாளை சேவிக்கலாம், இவையெல்லாம் எல்லாரும் சென்று சுலபமாக பெருமாளை தரிசிக்க முடியாது அவர் அருள் இருந்தால் மட்டுமே அவரை சேவிக்க முடியும் என்பது தெள்ளத் தெளிவு.


முன்பு பரத்வாஜ முனிவர் தம் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிக்கொண்ட தலம். பெரும் பாதகர்களும் இங்கு வந்து பெருமாளை வணங்கினால் அவர்கள் பாவம் விலகும். பிறவி என்னும் பெரும் கடலிலிருந்து மீள்வார்கள் என்பது திண்ணம்.


கருடாழ்வார்


சுற்றிலும் நெடிதுயர்ந்த மலைகள் நடுவில் பள்ளத்தாக்கு போல இருக்கின்ற பகுதியில் பாவன நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. ஒரு மஹா மண்டபம், சிறு அர்த்த மண்டபம் கர்ப்பகிரகம் என்று எழிலாக அமைந்துள்ளது மாப்பிள்ளை சுவாமியின் ஆலயம். ஆம் செஞ்சு லக்ஷ்மியை மணந்த கோலத்தில்தானே, தாயாருடன் சேவை சாதிக்கின்றார் பெருமாள். அம்மை ஐயனை நோக்கிய அற்புத கோலம். மற்ற இடங்களில் தாயார் முன்னே நோக்கி அமர்ந்த கோலத்தில் சேவை சாதிப்பார் ஆனால் இங்கு காதல் பொங்க பெருமாளை நோக்கும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இடது தொடையில் அம்மையை அனைத்த வண்ணம், சங்கு, சக்கரம் மேற்கைகளில் தாங்கி அபய ஹஸ்தத்துடன் பெருமாள் அளிக்கும் சேவை அத்தனை அருமை. ஆதி ஷேசன் ஏழு தலைகளுடன் எழிலாக குடை பிடிக்கின்றான் புது மண தம்பதிகளுக்கு. பெருமாளின் மீசையின் அழகை என்னவென்று சொல்வது. நெளிந்து நெளிந்து செல்கின்றது மீசை. தாயாரின் பாத சேவை இங்கு விஷேசம். அனைத்து பாவங்களையும் போக்குபவர் பாவன நரசிம்மர். இக்கோவிலில் சுயம்பு மூர்த்தியுடன் பிரதிஷ்டா மூர்த்தியும் உள்ளார். வெளிப்பிரகாரத்தில் சிவலிங்கம், வேணு கோபாலர் மூர்த்தங்களும் உள்ளன.


ஆனந்தமாக சேவித்து திரும்பி வருகின்றோம்

( குழந்தைகள் கீர்த்தனா மற்றும் சாயி அர்விந்)


திருமலை சுவாமிகள் முதலிலேயே கூறியிருந்ததால் பெருமாளுக்கு வேஷ்டி, அங்க வஸ்திரம், தாயாருக்கு புடவை, நெய்வேத்தியத்திக்கு அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை எடுத்துக் கொண்டு சென்றிருந்தோம். தளிகை அங்கேயே தயார் செய்து பெருமாளுக்கு படைக்கின்றனர் பட்டாச்சார்யர்கள். எங்களுக்கு முன் சென்றவர்களின் தளிகை தயார் ஆகிக்கொண்டிருந்ததால், நாங்கள் மஹா மண்டபத்தில் அமர்ந்து விஷ்ணு சக்ஸ்ரநாமம் திவ்யமாக சேவித்தோம். பின்னர் பெருமாளுக்கும் தாயாருக்கும் அருமையாக அலங்காரம் செய்து அற்புதமாக சேவை செய்து வைத்தார் பட்டர்.


நெளிந்த மீசையுடன் புதுமணக்கோலத்தில் பெருமாள்




விஷ்ணு சகஸ்ரநாமம் சேவிக்கின்றோம்


அஹோபில கருடாசைல மத்யே |

க்ருபாவஸாத் கல்பித சன்னிதானம் ||

லாமியா சமா அலிங்கித வாம பாகம் |

லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சரணம் ப்ரப்த்யே ||

என்று மனதார புதன் வழிபட்ட ஒன்பதாவது நரசிம்மரை வாளுகிர்ச்சிங்க உருவாய் உளந்தொட்டிரணியன் ஒண்மார்பகலம் பிளந்திட்ட கைகள் உடைய எம்பெருமானை, கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியனை, அதிரும் கழல் பெருந்தோள் இரணியனாகம் பிளந்தரியாய் உதிரமளந்த கையோடிருந்தவன், நாதனான நரசிங்கன், கோளரி மாதவனை, அரிமுகனை, அச்சுதனை, மையார் கருங்கண்ணி கமலமலர்மேல் செய்யாள் திருமார்வினில் சேரும் திருமாலை, அல்லிமாதரமரும் திருமார்பினனை, தயரதன் பெற்ற மரகத மணித்தடத்தினை, திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலை, பின்னை தோள் மணந்த பேராயனை மனங்குளிர சேவித்தோம். பின்னர் வெளியே உள்ள ஒரு மண்டபத்தின் மேல் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார். நல்ல அற்புதமான சேவை கிடைத்தது பெருமாளின் அருளினால்.


வேடுவ குலமான செஞ்சு இனத்தில் பிறந்த ஒரு பெண் நரசிம்மர் மேல் மிகவும் காதல் கொண்டு மானிடர்களுக்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண் மன்மதனே என்று திடமாக இருந்தாள். பெருமாளும் அவளை மிகவும் விரும்பினார். செஞ்சு லக்ஷ்மிக்காக பெருமாள் மிருகங்கலை வேட்டையாடி மாமிசங்களைக் கொண்டு வந்து கொடுத்தார் என்கின்றனர். இவ்வாறு இருந்த செஞ்சு லக்ஷ்மியை பெருமாள் மணந்து கொண்டார். இன்றும் வேடுவர்கள் தங்கள் மகளுக்கு (தாயாருக்கு) மாமிசம் படைத்து வழிபடுகின்றனர் பெருமாளும் அளவற்ற கருணையினால் அதை எற்றுக்கொள்கின்றார்.

செஞ்சு லக்ஷ்மித்தாயார் சன்னதி குகை நுழைவு வாயில்


பெருமாள் கோவிலிருந்து ஒரு ஒற்றையடிப்பாதையில் ஏறிச் சென்றால் செஞ்சு லக்ஷ்மியின் தனிக் கோவிலை சென்றும் சேவிக்கலாம். எல்லா வளங்களையும் நலங்களையும் அனைவருக்கும் நல்கும் அன்னை ஒரு குகையில் தாமரை மலரை கையில் ஏந்தி பிரசன்ன முகத்துடன், அழகிய புன்னகையுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றாள். அன்னைக்கு எதிரே காவலாக சிறிய திருவடி. குகையிலிருந்து வெளியே வர இன்னொரு பாதை உள்ளது. தாயின் கர்பத்திலிருந்து குழந்தை வெளியே வருவது போல தவழ்ந்து வரவேண்டும். தாயாரையும் பெருமாளையும் நன்றாக சேவித்த மகிழ்ச்சியுடன் திரும்பி நடந்து வந்தோம் மலையேற்றம் போல் இறக்கம் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. வரும் வழியில் பல வயோதிக தம்பதிகளும் காலில் காலணி இல்லாமல் பெரும் பக்தியுடன் நடந்து வருவதைக்கண்டு அவர்களின் பக்தியை எண்ணி கண்ணில் நீர் பெருகியது. சுமார் பன்னிரண்டு மணியளவில் கீழே மடத்தை வந்து அடைந்தோம்.

தாயார் சன்னதி வெளி வரும் வாயில்



இனி கலியன் சொன்ன இன்தமிழ் மாலையின் ஏழாவது பாசுரத்தை அநுபவிப்போமா?


முனைத்த சீற்றம் விண்சுடப்போய் மூவுலகும் பிறவும்

அனைத்தும் அஞ்ச ஆளரியாய் இருந்த அம்மானதிடம்

கனைத்த தீயும் கல்லுமல்லாவில்லுடை வேடருமாய்த்

தினைத்தனையும் செல்லவொண்ணாச் சிங்கவேள் குன்றமே. (7)


(பொருள்): ஆகாயத்தை சுடும்படியாக மிகுந்த கோபம் கொண்டு, மூன்று லோகங்களில் உள்ளவர்களும், மற்ற லோகங்களில் உள்ளவர்களும் பயப்படும்படியாக ந்ருஸிம்ஹ ரூபியாய் எழுந்தருளியிருக்கின்ற சர்வேஸ்வரனுடைய இடமாவது, அனையா நின்றுள்ள தீயும், கற்களும், இவற்றைக்காட்டிலும் குரூரமான வில்லைக் கையில் ஏந்திய வேடர்களும் உடைய, சிறிது நேரமாவது யாரும் அருகில் செல்ல முடியாத சிங்கவேள் குன்றமாகும்.


மலையெங்கும் வானரங்களின் ஆட்சிதான், இந்த மந்திகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பாடம் ஒன்று உள்ளது. குரங்கு குட்டிகளை நாம் பார்த்தோமென்றால் அவை தாய்க் குரங்கை கெத்தியாக பற்றிக்கொள்கின்றன. அவை எங்கு தாவினாலும் அவை தாயை விட்டும் விடுவதில்லை. இதுதான் “மர்க்கட கிசோர நியாயம்”எனப்படுகின்றது. இதனால் நாம் பெறும் பாடம். குட்டிக் குரங்கானது தன் முயற்சியால் தானேத் தாவி தன் தாயைப் பற்றிக் கொள்ள வேண்டும் – தாய்க்குரங்கை குட்டி இவ்வாறு பற்றிக் கொண்டால்தான் அது செல்லுமிடமெல்லாம் அதுவும் உதன் செல்ல முடியும். இது போலவே ஜீவாத்மாவும் முயற்சி செய்யவேண்டும். சென்று சரணாகதி செய்து பெருமாளின் திருத்தாள்களை பற்றிக் கொள்ள வேண்டும், அப்போதுதான் அவன் நம்மை காப்பாற்றுவான், அவனைப் பற்றாதாரிடம் அவனுக்கு பற்று ஏற்படாது. எனவே தான் பகவானும் பகவத் கீதையில் “ என்னையே சரணமாகப் பற்று, நான் இளைப்பாறுதல் தருவேன்” என்று கூறுகின்றார். எனவே நம் கடமை அவர் திருவடிகளைப் பற்றுதல், அவர் கடமை நம்மைக் காத்தல். நான் உன்னையின்றி இல்லை கண்டாய் நாரணனே! நீ என்னையின்றி இல்லை என்று பாடுகிறார் திருமழிசைப் பிரானும். எனவே நாமும் “புகலொன்றுமில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்று அவரிடம் சரணடைவோமாக.


இனி இன்றைய தினம் மற்ற எந்த நரசிம்மர்களை சேவித்தோம் என்று அறிய ஆவலாக உள்ளதா? நரசிம்மர்களை மட்டுமல்ல பிரகலாதன் பள்ளியையும் அவன் எழுதிய ஸ்லோகங்களையும் கண்டோம் சற்று பொறுங்கள் உணவருந்தி விட்டு வந்து தொடர்வோம்.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home