நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -18
குகை நரசிம்மர் தரிசனம்
குகை நரசிம்மர் சன்னதி அருகில் உள்ள அருவி
முன்னரே கூறியது போல க்ருத யுகத்தில் இம்மலைதான் ஆயிரம் தூண்கள் கொண்ட ஹிரணியன் அரண்மனையாக இருந்தது. ஆகவே அதன் அருகிலேயே பிரஹலாதன் குருகுலம் வாசம் செய்த இடமும் இருப்பது இயற்கைதானே. அனைவரும் காலையில் இருந்து மலை ஏறிக்கொண்டு இருப்பதால் களைப்பாகவே இருந்தோம் ஆயினும் பிரஹலாதன் பள்ளியை இன்றே பார்த்து விட்டால் நாளை ஜ்வாலா நரசிம்மரை தரிசித்து விட்டு உக்ரஸ்தம்பம் ஏறலாம் என்பதால் இன்றே மெதுவாக பிரகலாதன் குருகுலத்திற்கு புறப்பட்டோம்.
மேலே இருந்து கழுகுப்பார்வையில் மேல் அஹோபிலம்
செல்லும் வழியில் ஒரு பாதை ஜ்வாலா நரசிம்மர் சன்னதிக்கு செல்லுவதைப் பார்த்தோம். மரங்களின் வழியே ஒற்றையடிப்பாதையில் மேலே ஏறிச் சென்றோம். செல்லும் போது மேலிருந்து மேல் அஹோபிலத்தை கழுகுப்பார்வையால் பார்த்தோம். அஹோபில நரசிம்மர் திருக்கோயில், நாங்கள் தங்கிய மடம், அக்ரஹாரம், மண்டபம் அனைத்தும் தெரிந்தது, புகைப்படமும் எடுத்தோம். சுமார் அரை கி, மீ சென்ற பின், பிரகலாதன் மெட்டு என்னும் பிரகலாதன் படிகளில் இறங்கி பிரஹலாதன் படித்த பள்ளியைப் தரிசித்தோம்.
அங்கு ஒரு பள்ளத்தாக்கு போல இருந்தது ஒரு பக்கம் ஒரு அருவி அருமையாக வீழ்ந்து கொண்டிருந்தது, அருவியின் நீர் பள்ளத்தாக்கில் ஓடியது. பாறைகளில் ஜாங்கிரி ஜாங்கிரியாக எழுத்துக்கள் தெரிந்தன. மனிதர்களின் கால் பட்டு அநேகமாக அவை மறைந்து விட்டன. அப்படியே நடந்து ஆற்றைக் கடந்து குகை நரசிம்மரை தரிசனம் செய்தோம், குகை நரசிம்மருடன் மாருதியும் சேவை சாதிக்கின்றார். குகைக்கு செல்லும் படிகள் ஒருவர் ஏறும் அளவே உள்ளன. அதிலும் அருவித் தண்ணீர் விழுந்து வழுக்குகின்றது. பார்த்து பார்த்து ஒருவர் ஒருவராக சென்று பெருமாளை சேவித்து விட்டு வந்தோம். சிறிது நேரம் அங்கு ஒய்வெடுத்தோம் , பின் இறங்கி வந்து இரண்டாவது முறையாக அனைவருடனும் இனைந்து அஹோபில நரசிம்மரையும், செஞ்சு லக்ஷ்மித் தாயாரையும் சேவித்தோம்.
வரங்கருதித் தன்னை வணங்காத வன்மை
உரங்கருதி மூர்க்கத் தவனை – நரங்கலந்த
சிங்கமாய் கீண்ட திருவடியிணையே
அங்கண் மா ஞாலத்தமுது என்று ஸ்ரீ நரஹரியின் திருவடிகளே உண்மையான அமிர்தம் என்று பற்றினோம்.
இன்று கூட்டம் சிறிது அதிகமாகவே இருந்தது. அருமையான தரிசனம் பெற்ற ஒரு நீண்ட நாள் முடிவுக்கு வந்தது. அருமையான நினைவுகளுடன் உறங்கச்சென்றோம். இவ்வாறு அஹோபில யாத்திரையின் இரண்டாம் நாள் மிகவும் நன்றாக நிறைவு பெற்றது். ஜ்வாலா நரசிம்மரையும் அவர் பிளந்து கொண்டு வந்த உக்ர ஸ்தம்பத்தையும் சேவிக்க சற்று பொருத்திருங்கள் அன்பர்களே.
Labels: குகை நரசிம்மர், பிரகலாதன் பள்ளி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home