Thursday, November 28, 2013

கைசிக ஏகாதசி -3

Visit BlogAdda.com to discover Indian blogs
கைசிக புராணம் 

கைசிக புராணம் காண  வரும் வடிவழகிய நம்பி 

கைசிகப் புராணம், வராக மூர்த்தி, தான் மடியில் இருத்தியிருந்த நாச்சியாருக்காக  உரைத்த பெருமை கொண்டது. பூமிதேவி பிறவித் துயரிலிருந்து விடுபட எளிதான வழி என்ன என்று கேட்க அதற்கு வராஹப் பெருமாள் இசைத் தொண்டே சிறந்த வழி என்று இவ்வாறு  கைசிகப் பண்ணிசைத்து புண்ணியம் சேர்த்துக்கொண்டு, வைகுண்டம் சென்றடைந்த நம்பாடுவானின் கதையை பூமி தேவிக்கு கூறுகின்றார்.. எனவே  இப்போதும், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசியன்று பெரும்பாலும் எல்லா வைணவத் தலங்களிலும் கைசிக புராணம் பராசர பட்டரின் வியாக்கியானத்துடன் வாசிக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கத்தில், இந்த புராணத்தை பராசர பட்டர் என்பவர் மிகத் தெளிவாக வாசிக்கக் கேட்டு இன்புற்ற அரங்கன், அவருக்குப் பரமபதம் கொடுத்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறார். திருக்குறுங்குடியில் நம்பாடுவான் வாழ்க்கையை நாடகமாக நடத்தி பக்தர்களைப் பரவசப்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

திருக்குறுங்குடிக்கு அருகில் உள்ள மகேந்திர கிரியின் சாரலில் வசித்து வந்தவர் நம்பாடுவான் என்ற பக்தர். இது காரணப் பெயர். `நம்மைப் பாடுவான்' என்று பெருமானால் சொல்லப்பட்டதாலும் வடிவழகிய நம்பியையே சதமாக  "நம்பிப் பாடுவார்" என்பதனாலும் நம்பாடுவான் என்று ஆயிற்று. கைசிகம் என்ற பண்ணில் (பைரவி இராகம்) நம்பியின் புகழை இசைத்து மகிழ்வித்து வந்தவர் இவர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசியன்று ஏகாதசி விரதம் மேற்கொண்டு நம்பியைத் தொழுவதே தன் வாழ்க்கை இலட்சியம் என்று  எனக் கொண்டு வாழ்ந்து வந்த பரம பாகவதர்.  

  . ஆழ்வார் - ஆச்சாரியர்கள் 

தினமும்  அதிகாலை பொழுதில் எழுந்து நீராடி, ஆலயத்தை நாடிச்செல்வார். குலத்தினால் தாழ்ந்தவன் என்பதால்  திருக்கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத போதிலும், வெளியிலேயே  நின்று  வண்ணமழகிய குறுங்குடி நம்பியை நினைத்து மனங்கசிந்து திருப்பள்ளியெழுச்சி பாடுபவர். ஜாக்ர விரதம் என்னும் இந்த பெருமாளை திருப்பள்ளியெழுப்புவதை தனது சேவையாக செய்து வந்தார்.  ஒரு நாள் இரு நாளல்ல. பத்து  ஆண்டுகளாக இவ்வாறு  பாடிக்கொண்டிருந்தார் நம்பாடுவான் என்ற அந்த தூய பக்தர்.

அன்று கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி   
வழக்கம் போல நம்பாடுவான் கையில் வீணையுடன் திருப்பள்ளியெழுச்சி  பாட புறப்பட்டு ஆலயத்துக்கு சென்று கொண்டிருந்தார். மகேந்திரகிரியில் இருந்து குறுங்குடி செல்லும் வழியில் அடர்ந்த  காடு. அந்த காட்டின் வழியே வந்தவரை தடுத்து நிறுத்தியது ஒரு பெரிய பிரம்மராக்ஷசன். `நல்லவேளை! வந்தாயா என்னுடைய பத்து நாள் பசி தீர்ந்து போயிற்று' என்று சொல்லி, அவரை உண்ண  நெருங்கியது. 

சிவபெருமான் சிற்பம்  


பயம்தரக்கூடிய கரிய மேனி, நெடிய உருவம், பிறை போல் எயிறு, நெட்டூரமாக அலறிக் கொண்டே, அனல் போல கண்களுடன் வந்த பிரம்ம ராக்ஷசனின் அந்த கோரவடிவைக் கண்டும் கலங்கவில்லை நம்பாடுவான். பெருமாள் மேல் பாரத்தை போட்டு விட்டு அந்த பிரம்மராக்ஷசனுடன் உரையாடினார். உன்னுடைய விருப்பப்படியே ஆகட்டும். எதற்கும் பலனில்லாத இந்த உடல், உன் பசியைப் போக்க உதவும் என்றால் அது சிறப்பானதுதான். 

ஆனால் நான் பெருமாளை எழுப்பும் ஜாக்ர விரதம்  பூண்டிருப்பதால் நான் சென்று அந்த சேவையை செய்து  விட்டு வருகிறேன் என்றார். அதை கேட்டு  அந்த பிரம்மராக்ஷசன் சிரித்தது. நான் ஏமாறுவேன் என்று நினைக்கிறாயா? என்னிடமிருந்து தப்புவதற்காக நீ  சொல்லும் பொய் இது. வேறு வழியில் என்னிடமிருந்து தப்பி ஓடி விடப் பார்க்கிறாய் என்றது. மேலும் . தன்னுடைய உடல்   அழிந்து விடும் என்பதை அறிந்த பிறகும் ஒருவன் திரும்பி வருவானா? உன்னை விழுங்கி என் பசியைத் தீர்த்துக்கொள்வேன் என்று ஓடிவந்தது. அப்போதும் கூப்பிய கை விலக்காமல் பேசினார் நம்பாடுவான். உன்னிடம் சொன்னபடி நான் கண்டிப்பாக திரும்பி வருவேன் என்பதற்காக பல சத்தியம் செய்தார். 


மஹாலக்ஷ்மி சிற்பம்  


அப்படி வராமல் போனால் இறைவன் வடிவான சத்தியத்தை மீறுபவன் அடையும் பாவத்தை அடைவேனாக, தன் மனைவியை விடுத்து வேறு பெண்ணை நாடுபவன் அடையும் பாவத்தை அடைவேனாக, உணவு உண்ணும் இடத்தில் தனக்கும் மற்ற்வர்களுக்கும் வேறு விதமான உணவளிப்பவன் அடையும் பாவத்தை அடைவேனாக, யார் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்து விட்டு அதை மீண்டும் அபகரிக்கின்றானோ அவன் செய்த பாவத்தை நான் அடைவேனாக, ஒரு அழகிய பெண்ணை இளமையில் அனுபவித்து விட்டு அவளை முதுமையில் எவன் ஒதுக்கி வைக்கின்றானோ அவன் அடையும் பாவத்தை அடைவேனாக, என்று தொடர்ந்து இறுதியாக யார் ஒருவன் அனைத்திற்கும் ஆத்மாவாகவும், அனைத்திற்கும் அந்தர்யாமியாகவும், மோக்ஷம் அளிப்பவனாகவும் உள்ள சர்வேஸ்வரனையும் மற்ற கர்மத்திற்கு வசப்படுகின்ற தெய்வங்களையும் ஒன்று என்று எண்ணுகின்றானோ அவன் அடையும் கொடிய பாவத்தை அடிவேனாக என்று இவ்விதமாக    பதினெட்டு வகையான பாவங்கள் தன்னை வந்து சேரட்டும் என்றார். இந்த வார்த்தையில் மனம் இளகிய பிரம்மராக்ஷசன்  அவரை ஆலயம் செல்ல அனுமதித்தது. அவரும் சம்சாரத்திலிருந்து விடுபட்ட ஆத்மா வைகுந்தம் செல்வது  போல விரைந்து  குறுங்குடிக்கு வந்தார். ஆலயத்தின் தொலைவில் நின்றபடியே பாட ஆரம்பித்தார்.


இன்றைய ஏகாதசியும் வீணாகாமல் பாட முடிந்ததே என்பது நம்பாடுவாருக்குள்  சந்தோஷம் ஏற்பட்டது.. ஆனால் பவ வினை தீர்க்கும் பெருமானை தரிசிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் ஏற்பட்டது. தனக்கு சேவை செய்து தன் உடலையும் இழக்க விரும்பும் அன்பனுக்கு அருள விரும்பினார் நம்பி,  எனவே தன் அன்பன் தன்னை தரிசிக்கும் விதமாக கொடிமரத்தை விலகப் பணித்தார். நம்பாடுவானின் மனத்தில் அந்த வருத்தம் அழுத்தும் முன்பாக விலகியது கொடிமரம். கருவறையில் நின்ற திருக்கோலத்தில் அர்ச்சாவதார நிலையில் வண்ணமழகிய நம்பி, நம்பாடுவானுக்கு சேவை சாதித்தார்
 

பெருமாளின் திருவருளை நினைந்து கண்ணீர் விட்டார். அப்போது தனக்காக பூதம் பசியோடு காத்துக் கொண்டிருப்பது அவருக்கு நினைவில் வந்தது. தான் செய்த சத்தியத்தைக் காப்பாற்ற  முன்னை விட இரட்டிப்பு  வேகமாக புறப்பட்டார். அப்போது முதியவர் உருவில் நலமிகு செங்கனிவாய் நம்பி  வந்தார். அவர் நம்பாடுவானிடம் இவ்வளவு அவசரமாக எங்கே போகிறாய்? என்று கேட்டார். அவரது தோற்றமும் இனிய பேச்சும், நம்பாடுவானை கவர்ந்தன. உடனே அவர் நான் ஒரு  பிரம்மராக்ஷசனிடம் சத்யம் செய்து கொடுத்து விட்டு வந்திருக்கிறேன் அவனைத் தேடி சென்று கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.. அதை கேட்ட அந்த முதியவர் சிரித்தார்.

 மல்லர்கள் சிற்பங்கள் 

இதென்ன பைத்தியக்காரத்தனம் யாராவது வலியச் சென்று உயிரை விடுவார்களா? உயிருக்கே ஆபத்தான சந்தர்ப்பத்தில் சொல்லப்படும் பொய் பாவமாகாது. போய் பிழைக்கும் வழியைப் பார் என்றார் அவர். வேதியர் நிமித்தம், குரு நிமித்தம், உயிர் பிழைப்பதற்காகவும் பொய் சொல்லலாம் என்றார். இதைக் கேட்ட நம்பாடுவான்  சத்தியம் – மாதா, ஞானம் – பிதா, தர்மம் – சகோதரர்கள், சாந்தம் – மனைவி, பொறுமை – புத்திரன், இந்த ஆறு குணங்களுக்கும்(அறுவருக்கும்) விசுவாச பாதகம் செய்பவர்கள் பூமிக்கு பாரமாக வசிக்கிறார்கள்.  “சத்தியத்தை மீறுவதை விட  உயிரை விடுவதே மேல்” என்றார் நம்பாடுவான். மேலும்  . பூதத்தின் பசியைப் போக்குவதைவிட இந்த உடல் பெரிதுமல்ல. எனவே பூதத்தை திருப்திப்படுத்துவதே என் திருப்தி என்றார் அதைக்கேட்ட முதியவர் தன் சுய உருவைக் காட்டினார். முதலில் அர்ச்சவதாரமாக சேவை சாதித்த பெருமாள் நம்பாடுவானுக்கு நேரில் சேவை சாதித்து நம்பாடுவானை தன்னிடம் வரச்செய்த பிரம்மராக்ஷசனின் ஆபத்து மற்றும் நம்பாடுவானின் ஆபத்து ஆகிய இரண்டும் விலகும் என்று அருளி அந்தர்தியானமானார். நம்பாடுவான் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற அதிவேகமாக நடந்தார். 

அவருக்காகவே காத்திருந்த பிரம்மராக்ஷசன் நம்பாடுவானைப் பார்த்ததும் வேகமாக ஓடி வந்தது.
  அவரை பிடித்துத் தூக்கியது. நம்பாடுவானிடம் எந்த சலனமுமில்லை. மிகவும் பசிக்கிறதா?  சரி என்னைச் சாப்பிட்டு உன் பசியைத் தீர்த்துக்கொள் என்றார். பிரம்மராக்ஷசன் அதிர்ந்தது. தன்னுடைய மரணத்தை இவன் எப்படி சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறான் அப்படி இவனை நாம் சாப்பிடுவதால் அதைவிடப் பெரிதாக ஏதோ ஒன்று அவனுக்கு கிடைக்கப்போகிறது என்று அதற்குத் தோன்றியது. 

                                  கால சம்ஹார மூர்த்தி

அதன் தயக்கத்தைக் கவனித்தார் நம்பாடுவான். என்ன யோசனை சீக்கிரம் என்னைச் சாப்பிட்டு உன் பசியைத் தணித்துக்கொள். என்னுடைய விரதத்தை முடித்து விட்டேன் என்று . உற்சாகமாகச் கூறினார் நம்பாடுவான். அந்த உற்சாகமும் மலர்ச்சியும் பிரம்மராக்ஷசனுக்கு மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அதன் மனம் மாறியது.


தூண் சிற்பம் 


சரி உன்னை விட்டு விடுகிறேன், நீ இதுவரை பாடித் துதித்தாய் அல்லவா. அதன் பலனை எனக்குக்  கொடு என்றது பிரம்மராக்ஷசன். அதை மறுத்து தன்னை சாப்பிடச் சொன்னார் நம்பாடுவான். இதனால் பூதம் மேலும் அதிர்ந்தது. ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாய் மனிதப் பிறவி கிடைத்தற்கரியது என்பது உனக்குத் தெரியாதா? உனது பாடலின் பாதி பலத்தையாவது எனக்கு கொடுத்துவிட்டு நீ சென்று  உன் மனைவி மக்களோடு  சந்தோஷமாக இரு  என்றது. அதற்கும் அவர் ஒத்துக்கொள்ளாததால் பின்னர் ஒரே ஒரு நாள் பலனை மட்டும் கொடு. உன்னை விட்டு விடுகிறேன் என்றது. நம்பாடுவான் அதற்கும் மறுத்தார். இறுதியில் பிரம்மராக்ஷசன் கெஞ்சியது. தயவு செய்து நீ பெருமாளின் முன் பாடிய ஒரு பாடலின்  பலனையாவது  எனக்கு கொடு. அதன் மூலம் என்னுடைய பிரம்மராக்ஷச  கோலம் முடிவுக்கு வரும் என்று நம்பாடுவானிடம் சரணமடைந்தது.


 பசுவும் கன்றும் 

அதற்கு நம்பாடுவான் உனக்கு இந்தக் பிரம்மராக்ஷச வடிவம் வர  என்ன பாவம் செய்தாய்?  என்று வினவ, அதற்கு அந்த பிரம்மராக்ஷசன், பூர்வ ஜென்மத்தில் நான் சோமசர்மன் என்னும் அந்தணனாக சரக குலத்திலே பிறந்து ஒரு யாகம் செய்தேன். தேவர்கள் நிறைந்த அந்த யாகத்தில் மந்திரத்தை தவறாக சொன்னதால்  தேவர்கள் இட்ட சாபத்தினால்   இந்த பிரம்மராக்ஷச பிறவி ஏற்பட்டது. சாப விமோசனம் எப்போது என்று கேட்ட போது எப்போது ஒரு தூய வைணவனிடம் சரணடைகிறாயோ அன்று சாப விமோசனம் என்று அருளினர். என்னை கடைத்தேற்று என்று நம்பாடுவானை சரணமடைந்தது. 

 தூணின் யாழி சிற்பம் 

அதனால் மனமிரங்கிய நம்பாடுவான். தன்னிடம் சரணமடைந்த விபீஷணனுக்கு பெருமாள் சரணாகதி அளித்தது போல  அன்று தான் பாடிய கைசிகப் பண்ணின் பலனை தானமாக  பிரம்மராக்ஷசனனுக்கு அளித்தார் . பிரம்மராக்ஷசனும்  தன்னுடைய சாபம் நீங்கி, புதுப்பிறவி பெற்று பெருமாளுக்கு சேவை செய்து வைகுண்டம் அடைந்தது. நம்பாடுவானும் பல காலம் பெருமாளுக்கு சேவை செய்து பின் வைகுண்டம் சேர்ந்தார்.

மேலும் வராஹப் பெருமான் பூமிதேவி நாச்சியாரிடம் யார் ஒருவன்  பக்தியுடன் வந்து நம் முன் கைசிக இராகம் இசைக்கின்|றானோ அவனுக்கு நான் வைகுந்தம் அருளுவேன் என்று கூறினார், இதனால் இந்த ஏகாதசிக்கு `கைசிக ஏகாதசி' என்று பெயர். 

இன்றும் தென்திருக்குறுங்குடியில் இந்த கைசிக ஏகாதசி விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்று கைசிக புராண நாடகமும்  சிறப்பாக நடைபெறுகின்றது. கைசிக ஏகாதசி விரதமிருக்கும் பக்தனுக்கும் சாப நிவர்த்தி செய்யும் ஆற்றல் உண்டாகிறது என்பது இந்த ஏகாதசியின் தனிச்சிறப்பு. இனி இந்த திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி எவ்வாறு சிறப்பாக நடைபெறுகின்றது என்று காணலமா அன்பர்களே?

Labels: , , ,

2 Comments:

Blogger நம்பள்கி said...

+1

November 28, 2013 at 10:07 PM  
Blogger Muruganandam Subramanian said...

நன்றி நம்பள்கி

November 29, 2013 at 8:13 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home