Saturday, November 30, 2013

கைசிக ஏகாதசி -4

Visit BlogAdda.com to discover Indian blogs
திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி உற்சவம் 

 வண்ணமழகிய நம்பி 
வடிவழகிய நம்பி 
தென் குறுங்கை நம்பி


இது வரை திருக்குறுங்குடி திவ்ய தேசத்தின் சிறப்புகளையும், ஏகாதசி விரதத்தின் மேன்மையையும், கைசிக புராணத்தையும் பற்றி பார்த்தோம். இப்பதிவில் சென்ற வருடம்   அடியோங்கள் திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி தரிசித்த  அனுபவத்தை காணலாமா அன்பர்களே. சென்னையிலிருந்து நான்கு பேர் அனந்தபுரி விரைவு வண்டி மூலம் வள்ளியூர் சென்றோம், அங்கிருந்து வண்டி ஏற்பாடு செய்திருந்தார் எங்களை அழைத்துச் சென்ற திருமலை சுவாமிகள். திருக்குறுங்குடியில்  ஆலயத்தின் அருகிலேயே தங்குவதற்கும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். அங்கு சென்று மூட்டை முடிச்சுகளை வைத்து விட்டு முதலில் மலை மேல் நம்பியை சேவிக்கக் கிளம்பினோம்.

முண்டந்துறை களக்காடு வனப் பகுதியில் மகேந்திரகிரி மலையின்  மேல் நம்பி ஆற்றின் அருகில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. ஜீப்பில் சென்று வர வேண்டும். பொதுவாக காலையில் சென்றால் நாம் விரும்பும் போது திரும்பி வரலாம். அன்றைய தினம் கைசிக ஏகாதசி என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்து விடுங்கள் என்று ஜீப் ஓட்டுனர் வேண்டிக்கொள்ள அப்படியே ஒத்துக்கொண்டு கிளம்பினோம்.

காட்டின் இடையே பயணம் என்பதால் பாதை என்பது இல்லை, ஜீப்கள் சென்றதால் பாதை போல உள்ளது அதிலும் குழி குண்டுகள் மற்றும் பாறைகள் என்று குலுக்கி எடுக்கும் ஒரு பயணம். வழியில் ஏதாவது ஒரு பிரச்னை என்றால் ஜீப் ஓட்டுனர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்கின்றனர். ஒரு பெரிய பாறையின் மேல் ஜீப் ஏற திணறிய போது அடுத்த ஓட்டுனர் வந்து தள்ளி ஏற்றிக் கொடுத்தார். பொதுவாக அனைத்து ஜீப்களும் ஒரே சமயத்தில் சென்று வருகின்றன. சில இடங்களில் மழை தூறியதால் பாதை வழுக்கலாகவும் இருந்தது.  குலுக்கி குலுக்கி சென்ற இந்த பயணமும் ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.

ஆழ்வார் - ஆச்சாரியார்கள்  

முதலில் மூலிகை மணத்துடன் ஓடி வரும் நம்பியாற்றில் குளித்தோம். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைத் தண்ணீர் ஆறாக ஓடி வருகின்றது.   ஆலயத்தின் அருகில் ஒரு சிறிய அருவியும் உள்ளது. இந்த மூலிகை கலந்த தீர்த்தத்தைத் தான் நம்பிக்கு திருமஞ்சனம் செய்ய பயன்படுத்துகின்றோம் ஆகவே யாரும் சோப், சிகைக்காய் பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   சிறு வயதில் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள திருமூர்த்தி மலைக்கு சென்று அருவியில் குளித்த அந்த அனுபவத்தை இங்கேயும் அனுபவித்தோம். பின்னர் மலை மேல் நம்பியை சேவித்தோம். அண்மையில் தான் புணருத்தாரணம் செய்யப் பட்டு  சம்ப்ரோக்ஷணம் ஆகியிருந்தது, ஆலயம் புது வர்ணத்தில் அருமையாக இருந்தது. சுதை சிற்பங்கள் மற்றும் சிங்க முக தாரைகள் அருமையாக உள்ளன.  ஸ்ரீதேவி பூதேவியுடன் மலை மேல் நம்பி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.  எதிரே கையை கட்டியவாறு சன்னதி கருடன். பெருமாளை  திவ்யமாக சேவித்தோம். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 3 மணி அளவில் கருடசேவை நடைபெறுகின்றது. மலை மேல் உள்ளதால் மாலை 6 மணிக்கெல்லாம் திருக்காப்பிடப்படுகின்றது. விநாயகர் மற்றும் காவல் தெய்வமான சங்கிலி பூததத்தார் சன்னதிகளும் உள்ளன. ஆந்திர மக்கள்தான் இக்கோவிலை கண்டு பிடித்தார்களாம் அவர்களுக்கு இவர்தான் அரங்கன் என்று பட்டர் கூறினார்.  ஒரே பிரகாரத்துடன் அற்புதமாக உள்ளது ஆலயம். அங்கேயே காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு ஊர் திரும்பினோம். குரங்குகள் அதிகம் உள்ளன.

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் ஆலயம் சிற்பங்களுக்கு பெயர் பெற்ற ஆலயம் ஆகும். அருமையான சிற்பங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இப்பதிவுகளில் காண்கின்றீர்கள். முதலில் பராங்குச நாயகின் மனதை கொள்ளை கொண்ட கோலத் திருக்குறுங்குடி நம்பியின் தாமரைக் கண்களையும்  செங்கனி வாயினையும், இராமானுஜருக்கு சேவை செய்த நெடிய கரங்களையும் திவ்யமாக  சேவித்தோம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நெடியோனாக நின்ற கோலத்தில் எழிலாக சேவை சாதிக்கின்றார் வண்ணமழகிய நம்பி, வடிவழகிய நம்பி,  கோலத்திருக்குறுங்குடி நம்பி, வைஷ்ணவ  நம்பியை,  நம்பினோர் கைவிடப்பட்டதாக சரித்திரம் இல்லை. நம்பாடுவான் என்னும் சண்டாளன் மூலமாக பிரம்ம ராக்ஷசனாக திரிந்த பிராம்மணனுக்கு சாப விமோசனம் அளித்த பெருமாள். பக்தி ஒன்றே முக்கியம் வேறு எதுவும் தேவையில்லை, “மாம் ஏகம் சரணம் விரஜ” என்று காட்டிய பெருமாள், அந்த காலத்திலேயே புரட்சி செய்து அதை வருடா வருடம் நடத்திக் கொண்டிருக்கும் பெருமாள். நின்ற நம்பியை , ஏனமாக முன் நிலம் கீண்ட வராஹராய், நரசிங்கமாய் அவுணன் உடல் கீரிய, வாமனனாய் வந்து  த்ரிவிக்ரமனாய் உலகளந்த நம்பியாய்  

நம்பியை தென்குறுங்குடி நின்ற அச்
செம்பொனேதிகழும் திருமூர்த்தியை
உம்பர்வானவர் ஆதியஞ்சோதியை
எம்பிரானை என்சொல்லி மறப்பனோ?

என்று அற்புதமாக நம்மாழ்வார் பாசுரம் இசைத்து தென்னன் குறுங்குடியுள் செம்பவளக்குன்றினை திவ்யமாக  சேவித்தோம். மூலிகை வர்ணத்தில் அற்புதமாக சேவை சாதிக்கின்றார் நம்பி. 

முருகன் சிற்பம் 

குறடில் உபய நாச்சியார்களுடனும், இரு தாயார்களுடனும் ஏக சிம்மாசனத்தில்  உற்சவர் சேவை சாதித்துக்கொண்டிருந்தார், இன்று கைசிக ஏகாதசி என்பதால் கூட்டம் அதிகமாக இருந்ததால் அர்ச்சனை இவருக்குத்தான் நடந்து கொண்டிருந்தது.  அவர்களையும் திவ்யமாக சேவித்துவிட்டு வெளியே வந்தபோது மடப்பள்ளியின் அருகில் நைவேத்ய பிரசாதம் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். கொடி மரம் விலகி உள்ளதைக் கண்டோம். சிற்பங்கள் நிறைந்த முன் மண்டபத்தை தாண்டியவுடன் யாழித் தூண்கள் கொண்ட கலா மண்டபம். அடுத்து மணவாள மாமுனிகள் மண்டபம், இந்த சந்னிதிக்கு முன் உள்ள மண்டபத்தில்  இராமாவதார சிற்பங்கள், இரதி, மன்மதன், குறவன் குறத்தி சிற்பங்கள் அருமையாக தத்ரூபமாக  வடித்துள்ளனர்.   எழு நிலை இராஜ கோபுரத்தின்  மூன்றடுக்குத் தூண்களிலும் அருமையான சிற்பங்கள் உள்ளன. குறிப்பாக யானை சிற்பங்கள் அருமை. இராஜகோபுரத்தின் உள் கூட்டில் மர சட்டத்தில் அற்புதமான மரச்சிலைகள் உள்ளன. அவை  சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளன. யாரும் எளிதாக பார்க்கவும் வசதி இல்லை.  பின் கோவிலை வலம் வந்து தாயார், ஆண்டாள்,  இருந்த நம்பி வைகுண்ட நாதரையும், கிடந்த நம்பியையும், நம்பியின் அருகில் இருக்கும் புலியதளாடையரையும்(மகேந்திர நாதர்) சேவித்தோம். வெளிப் பிரகாரத்தில் லக்ஷ்மி நரசிம்மருக்கு தனி சன்னதி உள்ளது. பின்னர் வெளியே வந்து மணவாள மாமுனிகளையும் சேவித்தோம்., கற்சிலைகளுக்கு ஒரு அருமையான பொக்கிஷம் இவ்வாலயம் என்பதில் சிறிதளவு ஐயமும் இல்லை.

நிறைந்தவன்பழிநங்குடிக்கிவளென்று அன்னைகாண கொடாள்
சிறந்தகீர்த்தித்திருக்குறுங்குடிநம்பியை நான்கண்டபின்
நிறைந்தசோதிவெள்ளம்சூழ்ந்த நீண்டபொன்மேனி யொடும்
நிறைந்தென்னுள்ளே நின்றொழிந்தான் நேமியங்கையுளதே
என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்குறுங்குடி நம்பியை திவ்யமாக சேவித்த பின்னர் திருமங்கையாழ்வாரையும் இரமானுஜரையும் தரிசிக்க சென்றோம். "திருமங்கையாழ்வார் திருவரசு" பச்சை பசேல் என்ற வாழை, கமுகு, தென்னை, நெல்  வயல்களின் நடுவே  மலை ஒரு புறமாக இருக்க அருமையான இயற்கை சூழலில் அமைந்துள்ளது. நாங்கள் சென்ற போது வானம் வேறு மப்பும் மந்தாரமுமாக இருக்க  தும்பிகள் பறந்த கொண்டிருந்தன, பறவைகள் கீச்சு கீச்சு  என்று குறுக்கும் நெடுக்குமாக பறந்து கொண்டிருந்த காட்சி  மிகவும் இரம்மியமாக இருந்தது.  இங்கும் பரிவட்டப்பாறையிலும் சேவிக்க கோவிலில் இருந்தே பட்டர்களை அழைத்துச் செல்ல வேண்டும். பொதுவாக காலை 9 மணி அளவில் திருவாராதனம் நடக்கும் போது மட்டுமே இச்சந்நிதி திறந்திருக்கும். வாள் கேடயம் இல்லாமல் அஞ்சலி ஹஸ்தத்துடன் கொண்டையுடன் திருமங்கையாழ்வாரை அற்புதமாக சேவித்தோம்.

ஆழ்வாரை அருமையாக சேவித்து விட்டு இராமானுஜரை சேவிக்கப் புறப்பட்டோம். செல்லும் வழியில் திருப்பாற்கடல் குளத்தின் கரையில் திருப்பாற்கடல் நம்பியை சேவித்தோம்.  ஊருக்கு வெளியே இராமனுஜரின் சன்னதி உள்ளது. நம்பியாறு மாலையாக இரு புறமும் சுற்றிக்கொண்டு செல்ல நடுவில் உள்ள தீவில் இராமானுஜர் ஆலயம் அமைந்துள்ளது.  கோவிலைச் சுற்றி அருமையாக மலர்த் தோட்டம் அமைத்துள்ளனர். இராமானுஜ கூடமும் உள்ளது.  பள்ளத்தில் ஒரு பாறையில் இராமானுஜருக்கு நம்பி சேவை செய்யும் சிற்பம் உள்ளது. மறு பக்கம் பரிவட்ட பாறையில் இராமானுஜரின் சிற்பம் உள்ளது. இராமானுஜருடன் அவர் ஆராதித்த யோக நரசிம்மரையும் சேவிக்கலாம். இராமானுஜரை சேவித்துவிட்டு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு பின்னர் மலை நாட்டு திவ்ய தேசங்களான வண்பரிசாரத்தில் திருவாழ் மார்பனையும், திருவட்டாற்றில் ஆதி கேசவனையும்  சேவித்து விட்டு வந்தோம். வண்பரிசாரம் நம்மாழ்வாரின் தாயார் உடைய நங்கையாரின் ஊர், அவருக்கு ஒரு சிறு கோவில் உள்ளது அவரையும் சேவித்து விட்டு திருகுறுங்குடி திரும்பி வந்து சேர்ந்த போது கோவில் ஜே ! ஜே! என்று கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மாலை ஆறு மணியில் இருந்தே கைசிக மண்டபத்தில் பக்தர் அமர ஆரம்பித்துவிட்டனர்.

 இந்திரன் சிற்பம் 

கைசிக மண்டபம் நிறைந்திருந்தது. அனைவரும்  உற்சவரின் புறப்பாட்டிற்காக காத்திருந்தனர்.  இரவு ஒன்பது மணியளவில் கைசிக ஏகாதசி மண்டபத்திற்கு  உபய நாச்சியார்களுடன் அழகிய நம்பி எழுந்தருளினார். உடன் தாயார்கள் இருவரும் எழுந்தருளினர். ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் பின்னர் வந்து  எழுந்தருளினர்.  சுமார் பத்து மணியளவில் கைசிக புராணம் நாடகம் துவங்கியது. சில வருடங்களாக நடக்காமல் நின்று போயிருந்த இந்த நாடகம் தற்போது T.V.S குழுமத்தினரின் ஒத்துழைப்புடன் நடன வல்லுநர்  திருமதி. அனிதா ரத்னம் அவர்களின் உதவியுடன் மீண்டும் சிறப்பாக நடத்தப்படுகின்றது. இசை நாடமாக தூய இசைத்தமிழில் இந்த "பார் கொண்டான் தாளடி வணங்கும் பாகவதனின் சரிதம்"   சொல்லும் இந்த  நாடகம் நடைபெறுகின்றது. T.V.S குழுமத்தின் நிறுவனர் திரு. சுந்தரம் ஐயங்கார் அவர்கள் திருக்குறுங்குடியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தினர் பல பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களை புதுப்பித்துள்ளனர்.

சிறு வயதில்  வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்த போது ஏகாதசி இரவில் கண் முழித்திருக்கிறோம். பல வருடங்களுக்கு பிறகு ஒரு ஏகாதசி இரவு அதுவும் ஒரு திவ்ய தேசத்தில் அமர்ந்து பெருமாளை சேவிக்கும் பெரும் பாக்கியம் கிட்டியது.

அருமையாக நடைபெற்றது கைசிக புராண நாடகம் . வராஹ புராணத்தில் உள்ள படியே வசனங்கள் அமைந்திருந்தது ஒரு தனி சிறப்பு. வண்ணமழகிய நம்பி, வடிவழகிய நம்பி, ஜாக்ர வ்ரதமான திருஏகாதசி விரதம், வாரும் பிள்ளாய் பாகவதனே,  வாரும் பிள்ளாய் பிரம்ம ராக்ஷனனே, என்ற பதங்கள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விட்டது. எப்போதும் மறக்கவே முடியாது, அப்படி ஒரு அருமையான நடிப்பு அதிலும் குறிப்பாக தசவாதாரங்களை காட்டிய விதம் மிகவும் அருமை, பாற் கடலைக் கடைந்த நாமும் கடைந்தோம், நரசிம்ம அவதாரத்தின் நாமும் ஆவேசப்பட்டோம், கிருஷ்ணாவதாரத்தில் கண்ணணின் சிறு பிள்ளை குறும்பகளை இரசித்தோம்,  சீதா தேவியிடம் அனுமன் கணையாழி தரும் காட்சியும் மிகவும் அருமை.   எவ்வாறு வராஹப் பெருமானின் வார்த்தைகளே சிறந்தவை என்று கூறிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. நடிகர்களின் அபிநயங்களையும், இசையையும் பின்னணி குரல்  கொடுத்தவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாய்ப்புக் கிடைக்கும் போது மீண்டும் மீண்டும் சென்று இரசிக்க வேண்டிய நாடகம்.

 பிரம்ம தேவர் சிற்பம் 

அடியேனுக்கு மிகவும் இஷ்டமான கருட சேவையை நாடகத்தில் கண்டு அப்படியே மனது மிகவும் பிரசன்னமாகியது , நம்பாடுவானுக்கு அருள நம்பி பூலோகத்திற்கு  கருடனில் ஆரோகணித்து இறங்கி வரும் அந்த காட்சியை மிகவும் அருமையாக நம் கண் முன் கொண்டு வந்தனர்.  கருடனாக நடித்தவர் எரி சின பறவை என்பதற்கு தக்கபடி பெருமாளை தாங்கிவரும் போது  கண்ணை உருட்டி விழித்து நான்கு  புறமும் பார்த்து பத்திரமாக தாங்கி வந்த பாங்கும், ஒயிலாக வண்ணமழகிய நம்பி வரும் எழிலும், பெருமாளுக்கு குடை தாங்கி வந்த எழிலையும் எப்படி வர்ணிக்க, ஆயிரம் நாவு கொண்ட ஆதி சேஷனுக்கே கடினம் என்றால் அடியேன் எந்த மூலை. அனைவரும் பார்க்க வேண்டிய அற்புத காட்சி அது . 

நிறைவாக நம்பாடுவான் பிரம்ம ராக்ஷசனுக்கு தான் பாடிய கைசிகப் பண்ணின் பலனைக் கொடுத்து அவனுக்கு சாப விமோசனம் அளித்த அந்த காட்சியும் மிகவும் அருமை. சுமார் மூன்று மணி நேரம் சிறப்பாக நம்பி கண்டு களிக்க சிறப்பாக நடைபெற்றது கைசிக புராண நாடகம்.   பின்னர் அனைவரும் பெருமாள் திருமுன்னர் வந்து அமர்ந்தனர்.  

புருஷா மிருகம் சிற்பம் 

நாலாயிர திவ்ய பிரபந்தங்களை மீட்டளித்த நாத முனிகள் ஆரம்பித்து வைத்த அரையர் சேவை தற்போது மூன்று திவ்ய தேசங்களில் மட்டுமே வழக்கில் உள்ளது. அவற்றுள் ஒன்று இந்த திருக்குறுங்குடி திவ்யதேசம் ஆகும். ஆகவே கைசிக ஏகாதசியன்று இரவில் அரையர்கள்  தென்னன் குறுங்குடின் செம்பவளக்குன்றின் திருமுன்னர்

நிறைந்தவன்பழிநங்குடிக்கிவளென்று அன்னைகாண கொடாள்
சிறந்தகீர்த்தித்திருறுக்குறுங்குடிநம்பியை நான்கண்டபின்
நிறைந்தசோதிவெள்ளம்சூழ்ந்த நீண்டபொன்மேனி யொடும்
நிறைந்தென்னுள்லேநின்ரொழிந்தான் நேமியுங்கை யுளதே 

என்று   திருக்குறுங்குடி பாசுரங்களை அபிநயத்துடன் சேவித்தனர். பின்னர் அதிகாலை நேரத்தில் கைசிக பண்ணில் வராஹ புராணத்தில் உள்ள கைசிக புராணம் சேவிக்கப்பட்டது. பின்னர் பெருமாளுக்கு திருவாராதனம் ஆகி அனைவருக்கும் தீர்த்தம், சடாரி மற்றும் நைவேத்ய பிரசாதம் வழங்கப்பட்டது.  இவ்வாறாக ஏகாதசி இரவு முழுவதும் பெருமாளின் திருவழகை பருகும் பாக்கியம் கிட்டியது.


காலை பின்னர் அங்கிருந்து கிளம்பி நவதிருப்பதிகள்,  பாண்டிநாட்டு திவ்ய தேசங்கள் சிலவற்றை தரிசித்துவிட்டு திருநெல்வேலி வந்து பேருந்து மூலம் சென்னை வந்தடைந்தோம். வாய்ப்புக் கிடைத்தால் தாங்களும் ஒரு தடவை சென்று

நின்றவினையும்துயரும்கெட மாமலரேந்தி
சென்றுபணிமின்எழுமின் தொழுமின்தொண்டீர்காள்!
என்றும்இரவும்பகலும் வரிவண்டுஇசைபாட
குன்றின்முல்லை மன்றிடைநாறும்குறுங்குடியே

என்று திருமங்கையாழ்வார் பாடிய பவ விணை தீர்க்கும் வனம் சூழ் தென் குறுங்குடி நம்பியின் கைசிக  ஏகாதசியில் கலந்து கொள்ளுங்கள் நிச்சயம் ஒரு அருமையான அனுபவமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.  

http://www.arangham.com/  வலைத்தளத்தில் உள்ள சில கைசிக நாடக காட்சிகள்
 நம்பாடுவானாக நடித்தவர்


 பிரம்ம இராக்ஷசனாக நடித்தவர்


திருக்குறுங்குடி நம்பியாக நடித்தவர்

இத்துடன் இந்த கைசிக ஏகாதசி தொடர் நிறைவுற்றது. இந்த வருடம் 13.12.13 வெள்ளிகிழமையன்று   திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி சிறப்பாக நடைபெறவுள்ளது,. முடிந்த அன்பர்கள் சென்று கலந்து கொண்டு வண்ணமழகிய நம்பியின் அருள் பெறுமாறு வேண்டுகிறேன்.  

Labels: , , , ,

2 Comments:

Blogger MURUGANANDAM said...


Superb.

November 30, 2013 at 6:24 AM  
Blogger S.Muruganandam said...

Welcome sir,

Your name is same as mine.

Thank you very much

November 30, 2013 at 7:32 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home