Tuesday, November 29, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -10

Visit BlogAdda.com to discover Indian blogs
நவ பிருந்தாவன மகான்களின் அருமையான தரிசனத்திற்கு பிறகு நாங்கள் சென்ற இடம் சிந்தாமணி கோயில் வளாகம் ஆகும். இங்கிருந்துதான் சுக்ரீவனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இராமபிரான் வாலியின் மீது அம்பெய்தினாராம். மேலும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் ஸ்ரீமகிஷாசுர மர்த்தினி ஆலயங்கள் இவ்வளாகத்தில் உள்ளன. துங்கபத்ரையின் இக்கரையில் ஆனேகுந்தி படகுத்துறையின் இடப்பக்கம் அழகான தாரா பர்வதம் உள்ளது. வலப்பக்கம் சுமார் ஒரு கி.மீ தூரத்தில் சிந்தாமணி அமைந்துள்ளது. நாங்கள் வண்டி மூலமாக இவ்விடத்தை அடைந்தோம்.
ருத்ராக்ஷ பந்தலில்
காசி விஸ்வநாதர் அன்னபூரணி அம்பாள்

இந்த
ஹம்பியும் ஆனேகுந்தியும் இனைந்த பகுதிதான் இராமாயணக்கால கிஷ்கிந்தை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. இராமபிரான் சீதாதேவியை பிரிந்து அவரைத்தேடி வந்த போது சுந்தரன் அனுமனின் மூலம் சுக்ரீவனுடன் நட்பு கொண்டு வாலியை அம்பு எய்து வதம் செய்த இடம்தான் துங்கபத்ரை நதிக்கரையில் அமைந்துள்ள சிந்தாமணி. இராவணன் சீதா தேவியை கடத்தி சென்ற போது தாயார் தன்னுடைய அணிகலன்களை எல்லாம் மூட்டையாகக் கட்டி கீழே போட்ட இடம்தான் இந்த த்ரேதாயுகத்து கிஷ்கிந்தை. ஆனேகுந்திக்கு “பம்பா க்ஷேத்ரம்” என்ற பெயருமுண்டு என்று கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகின்றது. இந்த பம்பா க்ஷேத்ரம்தான் வாலி மற்றும் சுக்ரீவனின் தலைநகராக இருந்தது. அருகிலேயே வாலியின் மனைவி தாராவின் பெயர் கொண்ட தாரா மலையும் உள்ளது. துங்கபத்ரையின் இந்த தெற்குக்கரையில்தான் ஆஞ்சனேயர் அவதரித்த, அஞ்சனை ஹனுமனை வளர்த்த அஞ்சனாத்ரி மலை உள்ளது. இன்றும் ஸ்ரீராமருடன் வைகுண்டம் செல்லாமல் அவருடைய நாமம் ஒலிக்கு இடமெல்லாம் ஆனந்த கண்ணீருடன் அமர்ந்து கேட்கும் ஹனுமனின் சஞ்சாரம் உள்ள இடம் இந்த ஆனேகுந்தி ஹம்பி பகுதி என்பது ஐதீகம்.
சிந்தாமணி ஆலய வளாக வாயில்
சிவன் கோயில் கோபுரம்

நந்தி
கல்லிலே கலை வண்ணம்
சிவன் சன்னதிக்கு செல்லும் படிகள்
இவ்விடம் சிந்தாமணி என்று அழைக்கப்படுவதற்கு ஒரு காரணமும் உண்டு அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அன்னை சீதா தேவியை தேடி வந்த இராமபிரானிடம் சுக்ரீவன் சீதா தேவியின் நகைகளை காண்பித்த இடம் என்பதால் இப்பெயர் வந்ததாம். இத்தலம் பூமாதேவியின் பிறந்த வீடு. இராமர் முதன் முதலாக சுக்ரீவனை சந்தித்த குகையும் இங்குள்ளது. நாங்கள் சென்ற சமயம் நரசிம்மர் சன்னதியில் பட்டர் இருந்தார் அவர் திவ்யமாக சேவை செய்து வைத்து தீர்த்த சடாரி பிரசாதமும் வழங்கினார். மற்ற சன்னதிகள் பூட்டியிருந்தன. எனவே உள்ளுரில் விசாரித்துக்கொண்டு அல்லது ஒரு வழிகாட்டியுடன் செல்வது நல்லது.

வாலியின் எலும்பு மலை
விழுந்து விடுவது போல உள்ள பாறைகள்
சிவன் சன்னதிக்கு படிகளில் மேலே ஏறி செல்ல வேண்டும். இங்கு தவம் செய்த மகான் ஒருவர் சிவலிங்கத்தையும் அன்னபூரணி அம்மையும் பிரதிஷ்டை செய்தாராம். அம்பாளின் முன்னர் ஸ்ரீசக்ரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவசக்தி இருவரும் ருத்ராக்ஷ பந்தலில் அருட்காட்சி தருகின்றனர். (மேலே உள்ள படம், நன்றி - ஆலயம் கண்டேன் வலைப்பூ )அந்த மகான் இக்கோவிலின் கீழேயே அப்படியே ஒரு நாள் மறைந்து விட்டாராம்.
சிவ பெருமான் விமானம்
ஸ்ரீராமர் பாதம்
(இங்கிருந்துதான் வாலியை வீழ்த்த அம்பு எய்தினாராம்)

கீழே உள்ள ஒரு இடத்தில் இருந்துதான் ஸ்ரீராமர் அம்பெய்து வாலியை கொன்றாராம். எதிரே தெரியும் மரங்கள் வரை இராமனின் அம்புகள் சென்று வாலியை வீழ்த்தியதாம். இன்னும் அந்த இடத்தில் வாலியின் எலும்புகள் குவியலாக உள்ளதாக நம்பப்படுகின்றது. பின்னர் இங்கிருந்து பம்பா சரோவர் சென்றோம்.

Labels: , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home