நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -8
(பெயர்களுடன் படத்தை பெரிதாக்கிப் பார்க்கவும்)
நவபிருந்தாவனத்தில் நாங்கள் முதலில் சேவித்த சன்னதி அரங்கநாதர் சன்னதி ஆகும். அரங்கநாதர் சன்னதியும், ஜாக்ரதை அனுமன் சன்னதியும் சிறிது உயரமாக அமைந்துள்ளதால் நாம் உள்ளே நுழைந்தவுடன் வலப்பக்கம் உள்ள இச்சன்னதிக்கு படியேறி செல்ல வேண்டும். உள்ளே சென்றால் பாம்பணையில் யோக நித்திரையில் உள்ள அரங்கநாதரை சேவிக்கலாம்.
நவபிருந்தாவன அரங்கநாதர் சன்னதி
இம்மூர்த்தத்தின் ஒரு தனி சிறப்பு பெரிய பிராட்டியார் ஆதிசேஷனில் அமர்ந்து சேவை செய்யாமல் கீழே நின்று சேவை செய்யும் வண்ணம் அமைந்துள்ளது. இங்கு நெய் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறந்தது என்பதால் ஒன்பது நெய் விளக்கு ஏற்றினோம். நாங்கள் சென்ற சமயம் ஒரு அம்மையார் அகல் விளக்குகளும் நெய் விளக்குகளும் விற்றுக்கொண்டிருந்தார் பல சமயம் அங்கு பூஜை சாமான்கள் எதுவும் கிட்டாது நாமே எடுத்து செல்வது நல்லது.
உள்ளே நுழைந்தவுடன் கிட்டும் நவபிருந்தாவனக்காட்சி
பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில் கங்கையினும் புனிதமான காவேரியின் நடுவில் உள்ள அரங்கத்தில் பெருமாள் இதேவிதமாக ஆதி சேஷனில் யோக நித்திரையில் சேவை சாதிக்கின்றார். இங்கே இந்த துங்கபத்ரையின் அரங்கத்திலும் பெருமாள் அரங்கநாதனாகவே சேவை சாதிக்கின்றார். அங்கே தாயார் , பிரம்மன் எதுவும் இல்லாத யோக சயனம் இங்கே பெரிய பிராட்டியுடன் கூடிய போக சயனம்.
பாம்பணையில் அனந்தபத்மநாப சுவாமி
திருமாலை( பிரபந்தம்) அறியாதர் திருமாலையே( ஸ்ரீமந் நாராயணன்) அறியாதார் என்னும் புகழ் பெற்ற திவ்ய பிரபந்தத்தின் இந்த அற்புத பாசுரத்தை பாடி இவரை மனதார வணங்கினோம்.
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம்கொழுந்தே! என்னும்
இச்சுவைதவிரயான்போய் இந்திரலோகமாளும்
அச்சுவைபெறினும்வேண்டேன் அரங்கமாநகருளானே!
இச்சன்னதியின் அருகே ஜாக்ரதை அனுமனின் சன்னதி உள்ளது. இச்சன்னதியில் அனுமன் தனது இராவணனின் மகன் அக்ஷய குமாரனைத் தன் காலில் இட்டு வதம் செய்யும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவரது சன்னதியிலும் விளக்கேற்றினோம். இங்கு ஒரு பத்து நிமிடம் அமர்ந்து வாயு குமாரனை மனதில் இருத்தி தியானம் செய்து பாருங்கள். அவரின் அதிர்வலைகளை தாங்கள் உணரலாம். இந்த இரண்டு சன்னதிகளுக்கு இடையில் ஒரு குகை உள்ளது ஏகாந்தமாக இங்கு உட்கார்ந்து நவ பிருந்தாவன நாயகர்களை நினைத்து தியானம் செய்ய ஏற்ற இடம்.
அவதாரத்ரய ஹனுமான்
இப்படம் மற்றும் மேலே உள்ள அரங்கநாதர் சன்னதி படம்
Aalayam kanden வலைப்பூவில் இருந்து எடுத்தாளப்பட்டது.
திருமதி பிரியா அவர்களுக்கு நன்றி.
பின்னர் அரங்கநாதர் ஆலயத்தின் முன்னுள்ள படிகளில் இறங்கி நவ பிருந்தாவனத்தை சுற்றி இடப்பட்டுள்ள மஞ்சள் கோட்டிற்கு வெளியே வலம் வந்து அவதாரத்ரய ஹனுமான் சன்னதி சென்று அவரை
அஸாத்ய ஸாதக ஸ்வாமிந் அஸாத்யம் தவ கிம் வதா
ராம தூத கிருபாஸிந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ
வணங்கினோம். அங்கே ஒரு பட்டர் இருக்கின்றார் அவர் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து அட்சதையால் ஆசிர்வாதமும் செய்கிறார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ஆனேகுந்தியில் உள்ள இராகவேந்திரர் மடத்திலிருந்து தினம் வந்து செல்வதாகவும் காலை நவபிருந்தாவனங்களுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்வதாகவும் பின்னர் மாலை திரும்பி செல்வதாகவும் கூறினார். மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் அதிகம் செல்லும் போது நவபிருந்தாவனம் செல்வது சிரமமாம் அப்போது ஆற்றின் இக்கரையிலிருந்தே கற்பூர ஆரத்தி காட்டுகின்றனர்.
அது என்ன அவதாரத்ரய ஆஞ்சநேயர் என்ற நாமம் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? மூன்று அவதாரங்கள் ஒன்று சேர்ந்த ஹனுமான் இவர். ஸ்ரீ வாயு பகவான் த்ரேதா யுகத்தில் ஸ்ரீராம சேவை செய்வதற்காக ஸ்ரீ அனுமனாகவும், துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சேவை செய்வதற்காக ஸ்ரீ பீமனாகவும், இக்கலியுகத்தில் ஸ்ரீ வியாச சேவை செய்ய ஸ்ரீமத்வராகவும் அவதாரம் செய்தார் இந்த மூன்று அவதாரங்களும் ஒன்றாக இனைந்தவர்தான் அவதாரத்ரய ஹனுமான். ஹனுமன் முகமும், பீமனை குறிக்கும் புஜங்களும், மத்வரை குறிக்கும் பகவத்கீதை சுவடியும் கொண்டு சேவை சாதிக்கின்றார். இவருக்குப் பின்னே சங்கு சக்ரங்களுடன் ஸ்ரீ நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இந்த அவதாரத்ரய அனுமனை வியாஸராஜர் பிரதிஷ்டை செய்தார்.
குருஷேத்திரத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்யும் போது அதை தேர்க்கொடியில் இருந்த வாயு புத்திரன் அனுமனும் செவி மடுத்தார். அப்போது கேட்டு, பீமனாக உணர்ந்ததை மத்வராக அவதரித்தபோது கீதா பாஷ்யம், கீதா தாத்பர்யம் என்று இரு கிரந்தங்களை இயற்றினார் என்ற தகவல் அம்மன் சத்தியநாதன் நூலில் உள்ளது. அவதாரத்ரய ஹனுமனை திவ்யமாக சேவித்து பின்னர் பூமி அதிராமல் மெல்ல மெல்ல தம் கோரிக்கைகளை மனதில் கொண்டு நவபிருந்தாவனங்களை ஒன்பது முறை வலம் வந்து வணங்கினோம்.
பத்மநாபம் ஜெயமுனீம் கவீந்த்ரம் ச வாகீசம்
வ்யாஸராஜஹம் ஸ்ரீநிவாஸம் ராமதீர்த்தம் த்தைவ ச
ஸ்ரீ ஸுதீந்த்ரம் ச கோவிந்தம்
நவ பிருந்தாவனம் பஜே! நவ பிருந்தாவனம் பஜே!
கோவிந்த ஓடயர் பிருந்தாவனம்
பத்மநாபம் கவீந்த்ரம் ச வாகீசம் வ்யாஸராஜஹம்
ரகுவர்யம் ஸ்ரீநிவாஸம் ராமதீர்த்தம் த்தைவ ச
ஸ்ரீ ஸுதீந்த்ரம் ச கோவிந்தம்
நவ பிருந்தாவனம் பஜே! நவ பிருந்தாவனம் பஜே!
என்ற தியான ஸ்லோகங்களை ஜபித்துக்கொண்டும் வலம் வருவது மிகவும் உத்தமம். முடிந்தவர்கள் ஒவ்வொரு மகானுக்கும் தனித்தனியாக உள்ள ஸ்லோகங்களை சொல்லியும் வலம் வரலாம். இந்த பிருந்தாவனங்கள் சுமார் 300 ஆண்டு காலமாக தோன்றின. முதல் பிருந்தாவனம் 1324ம் ஆண்டும், ஒன்பதாவது பிருந்தாவனமான ஸ்ரீஸுதீந்திரரின் பிருந்தாவனம் 1623லும் தோன்றியது. மத்வாச்சார்யர் வியாசருக்கு சேவை செய்ய பத்ரிகாச்சிரமம் சென்று விட்டதால் மத்வ மகான்களின் முதல் பிருந்தாவனம் ஸ்ரீபத்மநாபதீர்த்தருடையதுதான்.
மகான்களை தரி்சித்து விட்டு சிறிது நேர தியானம்
மனமுருக மகான்களை வணங்கி அந்த பக்கம் வெளியே சென்று அங்கிருந்த ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் ஏறி நின்று பறவைப் பார்வையாக முழு பிருந்தாவனத்தையும் தரிசனம் செய்தோம். அந்த பக்கம் சென்று அப்பக்கம் பாயும் துங்கபத்ரை நதியையும் சோலையும் கண்டோம். பின்னர் திரும்பி வந்து அரங்கநாதர் கோவிலின் அருகில் உள்ள குகையில் அமர்ந்து தியானம் செய்து இன்னொரு முறை எல்லா சன்னதிகளையும் சென்று சேவித்தோம். முக்கியமாக தங்களை வந்து தரிசனம் செய்ய அனுமதித்த அவர்களுக்கு அனந்த கோடி நன்றிகளை கூறிக்கொண்டோம்.
இனி இந்த நவபிருந்தாவங்களை வணங்கும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளைப் பற்றி காண்போம்.
Labels: . ஜாக்ரத ஹனுமான், அவதாரத்ரய ஹனுமான், நவபிருந்தாவன்
5 Comments:
Please see this video.
http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
வியாழக்கிழமை நவ பிருந்தாவன தரிசனம் கிடைத்தது என் பாக்கியம். இனி தவறாமல் படிக்கிறேன்.
விரிவான பகிர்வு. தொடர்ந்து படித்தேன்.
மிக்க நன்றி.
//இனி தவறாமல் படிக்கிறேன்.//
அவசியம் வாருங்கள் வல்லியம்மா.
இனியும் மகான்களின் அருள் தொடரும். தாங்களும் தொடர்ந்து வாருங்கள் மாதேவி. வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home