Sunday, November 20, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -6

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:

ஆனேகுந்தி நவபிருந்தாவனம்

இனி நவபிருந்தாவனம் மற்றும் மந்திராலயம் அமைந்துள்ள புனித துங்கபத்ரை நதியின் சிறப்பைப் பற்றிக் காண்போமா? ஹிரண்ய கசிபுவின் சகோதரன் ஹிரண்யாட்சகன் ஒரு சமயம் பூமியை கடலுக்கடியில் கொண்டு ஒளித்து வைத்த போது பகவான் வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாட்சனை மாய்த்து பூமிதேவியை மேலே கொண்டு வந்தார். இப்படி வந்த போது அவர் சற்றே இளைப்பாறுவதற்காக ஒரு மலையின் உச்சியில் சென்று அமர்ந்தார். அந்த மலை இப்போது வராஹ மலை அல்லது வராஹ பர்வதம் என்று அழைக்கப்படுகின்றது. இது தற்போதய ஸஹ்யாத்ரிபகுதி இது. சிருங்கேரிக்கு தெற்கே உள்ளது இப்பகுதி. அப்போது பகவானின் இடது பற்களில் ஒன்று உடைந்து அதிலிருந்து வெளிபட்ட நீர் கிழக்கு நோக்கி நதியாகப் பாய்ந்தது இதுதான் பத்ரா நதி. வலது புற கோரைப்பல் உடைந்து மேற்கு நோக்கிப் பாய்ந்த நீர் துங்கா நதியாகப் பாய்ந்தது. இவை இரண்டும் தற்போது ஷிமோகா அருகே இனைந்து துங்கபத்ரா நதியாக பாய்கின்றது.

நவபிருந்தாவன துங்கபத்ரா நதியின் அழகு

இந்த கூடலில்தான் பிரஹலாதர் பெருமாளின் வக்ஷ ஸ்தலத்திலிருந்து எடுத்துத் தந்த சாலக்ராமத்தால் ஆன சிந்தாமணி நரசிம்மரை பிரதிஷ்டை செய்தார். சங்கு கர்ண தேவதையின் ஸ்ரீ பிரஹலாத அவதாரத்திலும், ஸ்ரீ வியாஸராஜ அவதாரத்திலும், ஸ்ரீ ராகவேந்த்ர அவதாரத்திலும் துங்க பத்ரையில் அமைந்த நவ பிருந்தாவனப்பகுதி ஈர்த்துள்ளது. இத்தனை சிறப்புடையது இந்த பகுதி.


இதுவரை நவபிருந்தாவன மகான்களைப்பற்றியும், நவபிருந்தாவனப் பகுதியின் மற்றும் துங்கபத்ரா நதியின் மகிமைகளைப் பற்றியும் கண்டோம் வாருங்கள் இனி யாத்திரைக்கு செல்வோமா?

யாத்திரையில் உடன் வந்த இரு சின்ன சாமிகள்

வைஷ்ணவி ஐஸ்வர்யா

யாத்திரைக்கான நாளும் நெருங்கியது சுமார் மூன்று நாட்கள் இருக்கும் போது திரு. தனுஷ்கோடி அவர்களுக்கு போன் செய்து நிலவரம் பற்றிக்கேட்டேன் பள்ளி அட்டவனையில் மாறுதல் செய்யபட்டுள்ளதால் பலர் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது ஆயினும் தங்கள் குடும்பம், நான் மற்றும் எனது நண்பர் திரு. வைத்தி, மற்றும் திரு, மோகன் அவர்களின் குடும்பத்தினர் செல்கின்றோம் என்றார். முதலில் 23 கொண்ட பெரிய குழுவானது இப்போது 10 பேர் கொண்ட சிறு குழுவாக சுருங்கி விட்டது. புகைவண்டி டிக்கெட்கள் உறுதியாகி விட்டன தற்போது திரும்பி வருவதற்கான டிக்கெட் மட்டும் RACயில் உள்ளது ஒன்றும் கவலையில்லை என்று கூறினார்.


பெங்களூர் செல்லும் புகைவண்டியில் பயணம்

2010ம் வருடத்தின் கடைநாள் டிசம்பர் 31 அன்று மதியம் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து மதியம், 12069 பெங்களூர் எக்ஸ்பிரஸ் புகைவண்டி மூலமாக பெங்களூருக்கு புறப்படோம். பகல் வண்டியானதால் யாத்திரையில் உடன் வருபவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டு அளவளாவினோம். எப்படி அந்த மகான்களின் அருளினால் இந்த யாத்திரை நமக்கு சித்தியானது என்று அவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டே பெங்களூரை அடைந்தோம். அடியேன் மற்றும் எனது மனைவி, மகள் மற்றும் அக்கா, மாமா என்று நாங்கள் ஆறு பேரும், திரு.மோகன் அவரது தங்கை அருணா மற்றும் அவரது சிறு வயது மகள்கள் இருவர், திரு. தனுஷ்கோடி மற்றும் திரு.வைத்தி அவர்கள் அடங்கிய குழு இரவு 7 மணியளவில் பெங்களூரை அடைந்தது. பெங்களூர் இரயில் நிலையத்தில் இறங்கி ஹம்பி எக்ஸ்பிரஸ் வண்டிக்காக காத்திருந்தோம். முதலில் அந்த புகைவண்டி ஐந்தாவது நடைமேடையில் வருவதாக இருந்தது ஆனால் கடைசி நிமிடத்தில் ஏழாவது நடைமேடைக்கு மாற்றப்பட்டது. அவசர அவசரமாக மேலேறி இறங்கி வண்டியில் ஏறி அமர்ந்து அந்த மந்திராலய மகானுக்கு நன்றி செலுத்தினோம். ஒரு வருடம் முழுதும் பயணம் செய்து ஆம் அன்றைய தினம் ஆங்கில வருடப்பிறப்பானதால் புது வருடத்தின்(2011) காலையில் ஹோஸ்பெட் புகைவண்டி நிலையத்தில் வந்து இறங்கினோம்.


Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home