நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -3
அத்வைதம்: (அ + துவைதம், அத்துவிதம்) - அதாவது இரண்டற்ற நிலை. சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் தத்துவம் இந்த அத்வைத தத்துவம் வேதங்களின் சாரம். அத்வைதத்தின் பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டுமானால் ஆதிசங்கரர், திருமூலர், தாயுமானவர், அருட்பிரகாச வள்ளலார், பாரதியார் போன்றோர்கள் கூறிச் சென்ற பல அறிய கருத்துக்களின் மூலம் அறியலாம்,
கி.பி 788-820ம் காலத்தே வாழ்ந்த ஆதி சங்கர பகவத் பாதாள் (இவரது காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கின்றது) முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார்
அத்வைதத்தின் நான்கு அடிப்படைக்கொள்கைகள்
1. என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ‘ஸத்’ என்றும், (பரப்-)பிரும்மம் அல்லது பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல.
2. பிரும்மம் என்பது பெயர் உருவம் ஆகிய எந்த குணங்களும் அற்றது. அதனால் அதை நிர்க்குணப்பிரும்மம் என்று சொல்லி, நாம் மனதால் நினைக்கக்கூடிய குணங்களுடன் சேர்ந்த கடவுள் என்ற பரம்பொருளை ஸகுணப்-பிரும்மம் என்றும் வேறுபடுத்தவேண்டும்.
3. அனைத்துயிர்களுக்கும் உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும் ஜீவாத்மா வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் பரமாத்மா ஆகிய இரண்டும் இரண்டல்ல, ஒன்றே.
4. உபநிடதங்கள் மெய்ப்பொருளை குணங்களுள்ளதாக விவரிக்கும்போது அதை இடைநிலை விளக்கங்களாகவும், குணங்களற்றதாக விவரிக்கும்போது அதை கடைநிலை விளக்கமாகவும் கொள்ளவேண்டும்.
இதனையே சுருக்கமாகச் சொல்வதாயின்
1. பிரம்மத்தின் இரண்டற்ற நிலை.
2. பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபடாத நிலை.
3. உலகத்தின் உண்மையற்ற நிலை. எனக் கூறலாம்.
இராமானுஜர்
விசிஷ்டாத்வைதம்: இவ்வேதாந்த நெறியை உலகிற்கு அளித்தவர் ஸ்ரீ மந் இராமனுஜர் ஆவார். இவர் பிரம்ம சூத்திரம் பகவத் கீதை முதலியவற்றிற்கு தமது விசிஷ்டாத்வைதக் கொள்கைப்படி உரை எழுதினார். விசிஷ்ட +அத்வைதம் = விசிஷ்டாத்வைதம். அதாவது விசேஷ அத்வைதம் விசிஷ்டாத்வைதமானது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது விசிஷ்டாத்வைதம் , சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈஸ்வரன் என்றும் விஷ்ணு என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் த்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர் . சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை .சாரிய அன்பு, சுருதி, ஸ்மிருதி நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுதல், தரும சிந்தனை, வேத பாராயணம், சாது சங்கமச் சேர்க்கை முதலானவற்றால் கர்மபந்தத்தை விட்டு முக்தி பெறலாம். பிரபத்தி என்னும் சரணாகதி மூலம் முக்தி அடையலாம் . வேதம் தமிழ் செய்த மாறன் என்று போற்றப்படும் நம்மாழ்வாரின் திவ்விய பிரபந்த பாடல்கள் விசிஷ்டாத்வைத கோட்பாடுகளுக்கு ஒரு சிறந்த ஆதாரம்.
மத்வாச்சாரியார்
துவைதம் : இந்நெறியை அல்லது சமயத்தைப் பரப்பியவர் மத்வாச்சாரியர் என்று அழைக்கப்படும் மத்துவர் இவர் துளுவ நாட்டில் உள்ள உடுப்பிக்கு அருகில் அநந்தேஸ்வரம் என்னும் கிராமத்தில் அவதரித்தார் .மது ஒன்பதாம் வயதில் அச்சுதபிரகாசரின் சீடராகி துறவு மேற்கொண்டார். துவி என்றால் இரண்டு. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறானவை ஜீவாத்மா தனி பரமாத்மா தனி. மற்றவை அதில் சேராதவை என்பதாம். பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம்.
துவைதம்’ என்றால் இரண்டு. முக்கியமாக பிரம்மத்தையும் ஆன்மாவையும் இரண்டு வேறு வேறு தத்துவங்களாகப் பிரித்துச் சொல்வதால் மத்வருடைய தத்துவக் கூற்றுகளுக்கு இந்தப் பெயர் நிலைத்தது. உண்மையில் இந்த வேதாந்தத்தில் இன்னும் சில தத்துவங்கள் வேறுபடுத்திச் சொல்லப்படுகின்றன. அதன்படி ஐந்து வேற்றுமைகள் நிரந்தரமானவை. அவை:
• பிரம்மமும் ஆன்மாக்களும்;
• ஆன்மாவும் ஆன்மாவும்;
• பிரம்மமும் உலகும்;
• ஆன்மாவும் உலகும்; மற்றும்
• உலகிலுள்ள பொருளும் பொருளும்.
இவ்வைந்து வேற்றுமைகளைத் தத்துவக் கண் கொண்டு ஆராய்ந்தால், பிரம்மம் என்று அழைக்கப்படும் நாராயணன் அல்லது கடவுள் தத்துவத்தில் இரண்டு அடிப்படை வேற்றுமைகளை இப்படியும் பாகுபடுத்தலாம். ஆன்மா கடவுளின் ஒரு அணுவளவு பாகமாதலால், இவர்களின் வேற்றுமையை மரத்திற்கும் மரத்திலுள்ள ஒரு இலைக்கும் உள்ள வேற்றுமையாகச் சொல்லலாம். இதை வடமொழியில் ஸ்வகத பேதம் என்பர். அதாவது ‘தன்னுள்ளிருக்கும் வேற்றுமை’. கடவுளுக்கும் உலகுக்கும் உள்ள வேற்றுமையோ இரு பகுப்புகளுக்குள் (Categories) இருக்கும் வேற்றுமை. இவ்வேற்றுமையை விஜாதீய பேதம் என்பர். மரத்திற்கும் வேறு பகுப்பைச்சேர்ந்த மலைக்கும் உள்ள பகுப்பு வேற்றுமை போல. இவ்விரண்டு அடிப்படை வேற்றுமைகளை முன் நிறுத்தியே மத்வரின் தத்துவ இயல் விரிவாக்கம் செயல்படுகிறது. அதனாலும் அவருடைய தத்துவம் துவைத-தத்துவம் என்று பெயர் பெறுகிறது. இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் இவ்வேற்றுமை விஷயத்தில் முதலில் சொன்ன ‘தன்னுள்ளிருக்கும் வேற்றுமையை’ ஒப்புக்கொள்கிறது. ஆனால் இரண்டாவது வேற்றுமையை ஒப்புக்கொள்கிறதில்லை. ஆதி சங்கரரின் அத்வைதமோ இரண்டு வேற்றுமைகளையுமே ஒப்புக்கொள்வதில்லை.
மத்வருடைய வேதாந்தக்கொள்கையை ‘துவைதம்’ (இரண்டுள்ளது) என்று அழைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் உண்டு. கடவுள் நாராயணன் ஒருவர் தான் சுதந்திரர். மற்ற எல்லா உலகப்பொருள்களும் அவரிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும் சுதந்திரமில்லாமல் அவரால் ஆட்டிப் படைக்கப்படுகின்றன. அதனால் சுதந்திரர் ஒரு பகுப்பாகவும் சுதந்திரமற்றதெல்லாம் ஒரு பகுப்பாகவும் இரண்டு பகுப்புகள் எக்காலமும் இருந்தே தீரும். இதனாலும் இக்கொள்கை ‘துவைதம்’ என்று கூறப்படுகிறது.
Labels: அத்வைதம், ஆதி சங்கரர், இராமானுஜர், துவைதம், மத்வர், விசிஷ்டாத்வைதம்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home