Tuesday, January 24, 2012

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -21

Visit BlogAdda.com to discover Indian blogs
 
 வெள்ளித்தேர் பவனி

 தங்கத்தேர் பவனி 

துங்கபத்ரையை  கடந்தவுடன் ஒய்வெடுக்க விரும்பியவர்களை விடுதிக்கு அனுப்பி விட்டு மற்றவர்கள் ஆலயத்திற்கு விரைந்தோம். நாங்கள் செல்லும் போது மரத்தேர் பவனி முடிந்து விட்டிருந்தது. சுவாமியை வெள்ளித்தேருக்கு எழுந்தருளப்பண்ணிக்கொண்டிருந்தனர். அருமையாக வெள்ளித்தேர் பவனியையும் பின்னர் அதற்கடுத்து தங்கத்தேர் பவனியையும் அதற்குப்பின்னர் நடந்த ஊஞ்சல் உற்சவத்தையும் மனதார வாயு குருதேவருக்கு நன்றியுடன் கண்டு களித்தோம். வேத கோஷத்துடன் ஊஞ்சல் சேவை மிகவும் அற்புதமாக நடைபெற்றது, அதை சேவித்தது மனதிற்கு மிகவும் அமைதியாக இருந்தது, அனைத்து  தேவைகளையும் குருதேவர் கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கை பிறந்தது. பின்னர் நடைபெற்ற ஆரத்தியையும் சேவித்து மிகுந்த மன மகிழ்ச்சியுடன் விடுதி திரும்பினோம். 

 
ஊஞ்சல் உற்சவம்

யாத்திரையின் மூன்றாம் நாள் காலை மறுபடியும் குரு தேவரை தரிசனம் செய்ய சென்றோம். முதலில்காலையில் குரு நாதருக்கு நடைபெற்ற அபிஷேகத்தையும் பின்னர் நடைபெற்ற    ஆரத்தியையும் சேவித்தோம்.  இன்று தர்ம தரிசன வழியில்  சென்று தரிசனம் செய்யலாம் என்று அந்த வழியாக சென்றோம். அவ்வாறு சென்ற போது ஹனுமனையும் , சிவபெருமானையும் அருகில் இருந்து சேவித்தோம், சிவபெருமானுக்கு அருமையாக வெள்ளிக்கவசம் சார்த்தியிருந்தர்கள்.  பின்னர் தீர்த்த பிரசாதம் சுவீகரித்துக்கொண்டு வெளியே வந்த போது  பின் மண்டபத்தில் வேத கோஷம்  கேட்டது. மூல இராமருக்கும் மற்ற பூஜா மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கொண்டிருப்பது   புரிந்தது. உடனே சென்று அங்கு அமர்ந்து அந்த பூஜையில் பங்கெடுத்துக்கொண்டோம்.



 
 மூல மூர்த்திகளுக்கு பூஜை 

பரமபதநாதர் சேவை



 மூல இராமர் சேவை

மூல இராமரையும், பரமபதநாதரையும் அற்புதமாக தரிசனம் செய்தோம். பின்னர் சுவாமிகள் கொடுத்த அட்சதைப் பிரசாதம் மற்றும் குருதேவரின் டாலர் பெற்று மிக மகிழ்ச்சி  அடைந்தோம்.  பின்னர் வெளியே வந்து அடி அளந்து வலம் வந்தோம். மதிய ஆரத்தியும் கண்டோம்,  அருமையான தரிசனம் தந்ததற்கு குருதேவருக்கு மனதார நன்றி தெரிவித்துக்கொண்டு, விடுதிக்கு திரும்பி வந்து, பின்னர் ஆட்டோ பிடித்து மந்திராலயம் ரோடு வந்து மும்பையில் இருந்து சென்னை வரும் மும்பை மெயில் புகைவண்டி மூலம் சென்னை வந்து சேர்ந்தோம். அனைவருக்கும் ஒரே பெட்டியில் படுக்கை  வசதி கிடைத்தது, ஆனால் தனித்தனி இடத்தில் இருந்தது.  சென்னை வந்த பின்   அருமையாக எல்லா  ஏற்பாடுகளும் செய்து அழைத்துச் சென்று அருமையாக தரிசனம் செய்து வைத்த மோகன் அவர்களுக்கும், தனுஷ்கோடி அவர்களுக்கும் மற்றும் உடன் வந்த அனைவருக்கும் நன்றி விடைபெற்றோம்.  இவ்வாறு நவபிருந்தாவனம் மற்றும் மந்திராலயம் யாத்திரை அவனருளால் அருமையாக நிறைவு பெற்றது.  

 
மந்திராலயத்தில்  இன்னும் தரிசிக்க வேண்டிய இடங்கள் பல உள்ளன அவற்றைப் பற்றி சிறிது பார்க்கலாமா?  இந்த குறிப்பை அனுப்பியவர் மாடம்பாக்கம் சங்கர் அவர்கள் அவருக்கு  மிக்க நன்றி.

இதுவரை வந்து  இந்த யாத்திரையை அனுபவித்த அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.  ஹரிவாயு குருவின் அருளால் அனைவரும் எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்ற சுகமாக வாழ அவர் தாள் வணங்கி பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

வாழ்க வையகம்                                               வாழ்க வளமுடன்

Labels: , , ,

Sunday, November 20, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -6

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:

ஆனேகுந்தி நவபிருந்தாவனம்

இனி நவபிருந்தாவனம் மற்றும் மந்திராலயம் அமைந்துள்ள புனித துங்கபத்ரை நதியின் சிறப்பைப் பற்றிக் காண்போமா? ஹிரண்ய கசிபுவின் சகோதரன் ஹிரண்யாட்சகன் ஒரு சமயம் பூமியை கடலுக்கடியில் கொண்டு ஒளித்து வைத்த போது பகவான் வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாட்சனை மாய்த்து பூமிதேவியை மேலே கொண்டு வந்தார். இப்படி வந்த போது அவர் சற்றே இளைப்பாறுவதற்காக ஒரு மலையின் உச்சியில் சென்று அமர்ந்தார். அந்த மலை இப்போது வராஹ மலை அல்லது வராஹ பர்வதம் என்று அழைக்கப்படுகின்றது. இது தற்போதய ஸஹ்யாத்ரிபகுதி இது. சிருங்கேரிக்கு தெற்கே உள்ளது இப்பகுதி. அப்போது பகவானின் இடது பற்களில் ஒன்று உடைந்து அதிலிருந்து வெளிபட்ட நீர் கிழக்கு நோக்கி நதியாகப் பாய்ந்தது இதுதான் பத்ரா நதி. வலது புற கோரைப்பல் உடைந்து மேற்கு நோக்கிப் பாய்ந்த நீர் துங்கா நதியாகப் பாய்ந்தது. இவை இரண்டும் தற்போது ஷிமோகா அருகே இனைந்து துங்கபத்ரா நதியாக பாய்கின்றது.

நவபிருந்தாவன துங்கபத்ரா நதியின் அழகு

இந்த கூடலில்தான் பிரஹலாதர் பெருமாளின் வக்ஷ ஸ்தலத்திலிருந்து எடுத்துத் தந்த சாலக்ராமத்தால் ஆன சிந்தாமணி நரசிம்மரை பிரதிஷ்டை செய்தார். சங்கு கர்ண தேவதையின் ஸ்ரீ பிரஹலாத அவதாரத்திலும், ஸ்ரீ வியாஸராஜ அவதாரத்திலும், ஸ்ரீ ராகவேந்த்ர அவதாரத்திலும் துங்க பத்ரையில் அமைந்த நவ பிருந்தாவனப்பகுதி ஈர்த்துள்ளது. இத்தனை சிறப்புடையது இந்த பகுதி.


இதுவரை நவபிருந்தாவன மகான்களைப்பற்றியும், நவபிருந்தாவனப் பகுதியின் மற்றும் துங்கபத்ரா நதியின் மகிமைகளைப் பற்றியும் கண்டோம் வாருங்கள் இனி யாத்திரைக்கு செல்வோமா?

யாத்திரையில் உடன் வந்த இரு சின்ன சாமிகள்

வைஷ்ணவி ஐஸ்வர்யா

யாத்திரைக்கான நாளும் நெருங்கியது சுமார் மூன்று நாட்கள் இருக்கும் போது திரு. தனுஷ்கோடி அவர்களுக்கு போன் செய்து நிலவரம் பற்றிக்கேட்டேன் பள்ளி அட்டவனையில் மாறுதல் செய்யபட்டுள்ளதால் பலர் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது ஆயினும் தங்கள் குடும்பம், நான் மற்றும் எனது நண்பர் திரு. வைத்தி, மற்றும் திரு, மோகன் அவர்களின் குடும்பத்தினர் செல்கின்றோம் என்றார். முதலில் 23 கொண்ட பெரிய குழுவானது இப்போது 10 பேர் கொண்ட சிறு குழுவாக சுருங்கி விட்டது. புகைவண்டி டிக்கெட்கள் உறுதியாகி விட்டன தற்போது திரும்பி வருவதற்கான டிக்கெட் மட்டும் RACயில் உள்ளது ஒன்றும் கவலையில்லை என்று கூறினார்.


பெங்களூர் செல்லும் புகைவண்டியில் பயணம்

2010ம் வருடத்தின் கடைநாள் டிசம்பர் 31 அன்று மதியம் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து மதியம், 12069 பெங்களூர் எக்ஸ்பிரஸ் புகைவண்டி மூலமாக பெங்களூருக்கு புறப்படோம். பகல் வண்டியானதால் யாத்திரையில் உடன் வருபவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டு அளவளாவினோம். எப்படி அந்த மகான்களின் அருளினால் இந்த யாத்திரை நமக்கு சித்தியானது என்று அவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டே பெங்களூரை அடைந்தோம். அடியேன் மற்றும் எனது மனைவி, மகள் மற்றும் அக்கா, மாமா என்று நாங்கள் ஆறு பேரும், திரு.மோகன் அவரது தங்கை அருணா மற்றும் அவரது சிறு வயது மகள்கள் இருவர், திரு. தனுஷ்கோடி மற்றும் திரு.வைத்தி அவர்கள் அடங்கிய குழு இரவு 7 மணியளவில் பெங்களூரை அடைந்தது. பெங்களூர் இரயில் நிலையத்தில் இறங்கி ஹம்பி எக்ஸ்பிரஸ் வண்டிக்காக காத்திருந்தோம். முதலில் அந்த புகைவண்டி ஐந்தாவது நடைமேடையில் வருவதாக இருந்தது ஆனால் கடைசி நிமிடத்தில் ஏழாவது நடைமேடைக்கு மாற்றப்பட்டது. அவசர அவசரமாக மேலேறி இறங்கி வண்டியில் ஏறி அமர்ந்து அந்த மந்திராலய மகானுக்கு நன்றி செலுத்தினோம். ஒரு வருடம் முழுதும் பயணம் செய்து ஆம் அன்றைய தினம் ஆங்கில வருடப்பிறப்பானதால் புது வருடத்தின்(2011) காலையில் ஹோஸ்பெட் புகைவண்டி நிலையத்தில் வந்து இறங்கினோம்.


Labels: , ,

Thursday, November 17, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -4

Visit BlogAdda.com to discover Indian blogs

பிச்சாலியில் சூரிய அஸ்தமன் வேளையில்

துங்கபத்ராவின் அழகு





நண்பர் தனுஷ்கோடியும் அடியேனும் பல்வேறு ஆலயங்களுக்கு யாத்திரை செல்வது வழக்கம். அவரிடம் ஒரு தடவை நவபிருந்தாவனம் சென்று தரிசித்து வரலாம் என்று கூறியிருந்தேன் அவரும் காலம் கனியட்டும் என்றார். அவனருளால் தானே அவன் தாள் பணிய முடியும் அது போலவே அந்த மகான்கள் அனுமதித்தால் மட்டுமே நாம் அவர்கள் அருகில் சென்று நாம் அவர்களை வணங்க முடியும் எனவே அந்த நாளுக்காக காத்திருந்தேன். அதிக நாட்கள் காத்திருக்க வைக்கவில்லை அவர்கள். 2011 ஜனவரி முதல் நாள் நவபிருந்தாவனமும் மந்திராலயமும் செல்லலாமா? என்று ஒரு நாள் தனுஷ்கோடி கேட்ட போது உடனே ஒத்துக்கொண்டேன். குடும்பத்தினர் அனைவருடனும் யாத்திரையை மேற்கொள்ள உத்தேசிருந்தேன் அதை தனுஷ்கோடி அவர்களிடமும் கூறினேன் அவரும் ஒத்துக் கொண்டார். அவர் முதலில் இந்த யாத்திரை சென்று வந்த திரு.மோகன் அவர்கள் அனைத்து ஏற்பாட்டையும் கவனித்துக்கொள்வார் என்று கூறினார். மேலும் தாங்கள் குடும்பத்தினருடன் வருவதால் பலர் குடும்ப சகிதமாக வருகின்றனர் மொத்தம் 23 பேர் வருகின்றனர். செல்வதற்கு புகை வண்டி டிக்கெட் முன்பதிவு செய்து விட்டோம் ஆனால் இன்னும் உறுதியாகவில்லை இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளதால் ஆகிவிடும் என்று கூறினார்.

ஆனேகுந்தியின் ஒரு மண்டபம்

சென்னையில் இருந்து ஹோஸ்பெட் செல்வதற்காக முதலில் 12609 பெங்களூர் எக்பிரஸில் பெங்களூருக்கும், பெங்களூரிலிருந்து ஹோஸ்பெட் வரை செல்ல 16592 ஹம்பி எக்ஸ்பிரஸ் வண்டியிலும், பின்னர் மந்திராலயம் செல்ல ஹோஸ்பெட்டிலிருந்து மந்திரலாயம் செல்ல திருப்பதியிலிருந்து கோலாப்பூர் செல்லும் 17415 ஹரிப்ரியா எக்ஸ்பிரஸிலும், மந்திராலயத்திலிருந்து திரும்பி வர மும்பையில் இருந்து சென்னை வரும் 11028 மும்பை மெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இந்த வழியில்தான் செல்ல முடியுமா இன்னும் வழிகள் உள்ளனவா? என்று மனதில் ஒரு ஐயம் தோன்றுகிறதா? இன்னும் சில வழிகளை காணலாம்.

நவபிருந்தாவனத்தின் ஒரு பக்க

துங்கபத்ரா நதியின் அழகு

சென்னையில் இருந்து நவபிருந்தாவனம் செல்ல மேலே கூறியபடி புகை வண்டியிலும் செல்லலாம் அல்லது சென்னையில் இருந்து குண்டக்கல் சென்று அங்கிருந்து ஹோஸ்பெட் சென்று அங்கிருந்து பேருந்து மூலமும் கார், வேன் மூலமாக ஆனேகுந்தி அடைந்து பின்னர் பரிசல் அல்லது படகு மூலம் துங்கபத்ரை நதியை கடந்து நவபிருந்தாவனத்தை அடையலாம்.

ஹோஸ்பெட்டிலிருந்து கங்காவதி வழியாக ஆனேகுந்தி 45 கி .மீ தூரமாகும். ஹோஸ்பெட்டிலிருந்து முதலில் ஹம்பி சென்று அங்குள்ள விருபாக்ஷீஸ்வரர், சக்ர தீர்த்தம், ஸ்ரீயந்த்ரோத்தாரக ஹனுமான் போன்ற தலங்களை தரிசித்து விட்டு கமலாப்பூர் வழியாக கங்காவதி வந்தும் ஆனேகுந்தி அடையலாம். குண்டக்கல்லில் இருந்து பேருந்து அல்லது சிற்றுந்து மூலம் பெல்லாரி வழியாக கங்காவதி அடைந்து பின்னர் 12 கி.மீ தூரத்தில் உள்ள ஆனேகுந்தி அடைவது இன்னொரு சாலை வழியாகும்.

பெங்களூரிலிருந்து சாலை மார்க்கமாக வருபவர்கள், தும்கூர், சிரா, சித்ரதுர்கா, ஹொசாஹல்லி, கூட்கிலி வழியாக ஆனேகுந்தியை அடையலாம். பெங்களூரிலிருந்து பல் வேறு புகைவண்டிகள் ஹோஸ்பெட்டுக்கு உள்ளன.

ஹைதராபாத்திலிருந்து நவபிருந்தாவனம் சாலை வழியாக வருபவர்கள் மெஹபூப் நகர், ரெய்ச்சூர், மான்வி, கங்காவதி வழியாக ஆனேகுந்தி அடையலாம்.

ஆனேகுந்தியிலிருந்து மந்திராலயம் சாலை வழியாக செல்ல இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று கங்காவதி, சிறுகுப்பா, சிந்தனூர், மான்வி, கல்லூர், பிக்ஷாலயா வழி. இரண்டாவது கங்காவதி ரெய்ச்சூர் வழியாகும். இதுவரை நவபிருந்தாவனத்து மஹான்களைப்பற்றியும் பல்வேறு இடங்களிலிருந்து அங்கு செல்வதற்கான மார்க்கங்களைப்பற்றியும் பார்த்தோம். இனி இந்த க்ஷேத்திரத்திற்கு இவ்வளவு மகிமை வர என்ன காரணம் அடுத்த பதிவில் பார்ப்போமா?

Labels: , , ,