நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -21
வெள்ளித்தேர் பவனி
தங்கத்தேர் பவனி
துங்கபத்ரையை கடந்தவுடன் ஒய்வெடுக்க விரும்பியவர்களை விடுதிக்கு அனுப்பி விட்டு மற்றவர்கள் ஆலயத்திற்கு விரைந்தோம். நாங்கள் செல்லும் போது மரத்தேர் பவனி முடிந்து விட்டிருந்தது. சுவாமியை வெள்ளித்தேருக்கு எழுந்தருளப்பண்ணிக்கொண்டிருந்தனர். அருமையாக வெள்ளித்தேர் பவனியையும் பின்னர் அதற்கடுத்து தங்கத்தேர் பவனியையும் அதற்குப்பின்னர் நடந்த ஊஞ்சல் உற்சவத்தையும் மனதார வாயு குருதேவருக்கு நன்றியுடன் கண்டு களித்தோம். வேத கோஷத்துடன் ஊஞ்சல் சேவை மிகவும் அற்புதமாக நடைபெற்றது, அதை சேவித்தது மனதிற்கு மிகவும் அமைதியாக இருந்தது, அனைத்து தேவைகளையும் குருதேவர் கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கை பிறந்தது. பின்னர் நடைபெற்ற ஆரத்தியையும் சேவித்து மிகுந்த மன மகிழ்ச்சியுடன் விடுதி திரும்பினோம்.
ஊஞ்சல் உற்சவம்
யாத்திரையின் மூன்றாம் நாள் காலை மறுபடியும் குரு தேவரை தரிசனம் செய்ய சென்றோம். முதலில்காலையில் குரு நாதருக்கு நடைபெற்ற அபிஷேகத்தையும் பின்னர் நடைபெற்ற ஆரத்தியையும் சேவித்தோம். இன்று தர்ம தரிசன வழியில் சென்று தரிசனம் செய்யலாம் என்று அந்த வழியாக சென்றோம். அவ்வாறு சென்ற போது ஹனுமனையும் , சிவபெருமானையும் அருகில் இருந்து சேவித்தோம், சிவபெருமானுக்கு அருமையாக வெள்ளிக்கவசம் சார்த்தியிருந்தர்கள். பின்னர் தீர்த்த பிரசாதம் சுவீகரித்துக்கொண்டு வெளியே வந்த போது பின் மண்டபத்தில் வேத கோஷம் கேட்டது. மூல இராமருக்கும் மற்ற பூஜா மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கொண்டிருப்பது புரிந்தது. உடனே சென்று அங்கு அமர்ந்து அந்த பூஜையில் பங்கெடுத்துக்கொண்டோம்.
மூல மூர்த்திகளுக்கு பூஜை
பரமபதநாதர் சேவை
மூல இராமர் சேவை
மூல இராமரையும், பரமபதநாதரையும் அற்புதமாக தரிசனம் செய்தோம். பின்னர் சுவாமிகள் கொடுத்த அட்சதைப் பிரசாதம் மற்றும் குருதேவரின் டாலர் பெற்று மிக மகிழ்ச்சி அடைந்தோம். பின்னர் வெளியே வந்து அடி அளந்து வலம் வந்தோம். மதிய ஆரத்தியும் கண்டோம், அருமையான தரிசனம் தந்ததற்கு குருதேவருக்கு மனதார நன்றி தெரிவித்துக்கொண்டு, விடுதிக்கு திரும்பி வந்து, பின்னர் ஆட்டோ பிடித்து மந்திராலயம் ரோடு வந்து மும்பையில் இருந்து சென்னை வரும் மும்பை மெயில் புகைவண்டி மூலம் சென்னை வந்து சேர்ந்தோம். அனைவருக்கும் ஒரே பெட்டியில் படுக்கை வசதி கிடைத்தது, ஆனால் தனித்தனி இடத்தில் இருந்தது. சென்னை வந்த பின் அருமையாக எல்லா ஏற்பாடுகளும் செய்து அழைத்துச் சென்று அருமையாக தரிசனம் செய்து வைத்த மோகன் அவர்களுக்கும், தனுஷ்கோடி அவர்களுக்கும் மற்றும் உடன் வந்த அனைவருக்கும் நன்றி விடைபெற்றோம். இவ்வாறு நவபிருந்தாவனம் மற்றும் மந்திராலயம் யாத்திரை அவனருளால் அருமையாக நிறைவு பெற்றது.
மந்திராலயத்தில் இன்னும் தரிசிக்க வேண்டிய இடங்கள் பல உள்ளன அவற்றைப் பற்றி சிறிது பார்க்கலாமா? இந்த குறிப்பை அனுப்பியவர் மாடம்பாக்கம் சங்கர் அவர்கள் அவருக்கு மிக்க நன்றி.
இதுவரை வந்து இந்த யாத்திரையை அனுபவித்த அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. ஹரிவாயு குருவின் அருளால் அனைவரும் எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்ற சுகமாக வாழ அவர் தாள் வணங்கி பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Labels: நவ பிருந்தாவனம், பஞ்சமுகி, பிக்ஷாலயா, மந்திராலயம்
2 Comments:
அருமையான தரிசனம். நன்றி ஐயா.
வாருங்கள் குமரன் ஐயா. மிக்க நன்றி.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home