ஹனுமத் ஜெயந்தி - 2011
ஸ்ரீ ராமஜெயம்
வழக்கம் போல் இந்த ஆண்டும் மாதங்களில் சிறந்த மார்கழிமாதம், அமாவாசையும் , மூல நட்சத்திரமும் கலந்த நன்னாளில் வாயுபுத்ரன் ஹனுமனின் ஜெயந்தியை முன்னிட்டு இரு ஆலயங்களின் சொல்லின் செல்வனின் அலங்காரங்கள் தங்கள் பார்வைக்காக.
தாரக பிரம்மம் சீதா, லக்ஷ்மண சகித ராமபிரான்
எங்கெங்கு இரகுநாத கீர்த்தனமோ அங்கெல்லாம் கை குவித்து, மனம் உருகி, ஆனந்த கண்ணீர் மல்க நின்று கேட்கும் இராமதூதன் அனுமன். இராமர் அவதார காலம் முடிந்து வைகுண்டம் சென்ற போது அவருடன் செல்லாமல் பூலோகத்திலேயே தங்கிவிட்ட சிரஞ்சீவி அனுமன்.
எங்கெங்கு ரகுராம கீர்த்தனமோ அங்கெல்லாம்
கரம் குவித்து , மனம் உருகி, நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி
கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீஆஞ்சநேயா உன்னைப்
பணிகின்றோம்! பன்முறை உன்னைப் பணிகின்றோம்!!
சென்னை மேற்கு மாம்பலம்
சஞ்சிவி ஆஞ்சனேயர் சிறப்பு அலங்காரம்
சென்னை அசோக்நகர் கருமாரி திரிபுரசுந்தரி ஆலயத்தில் ஹனுமத் ஜெயந்தி அன்று 100008( ஒரு லட்சத்து எட்டு) வடை மாலை அலங்காரம் நடைபெறும். இந்த வருடமும் வடைத்தேரில் பஞ்சமுக ஆஞ்சனேயரும், வீனை வாசிக்கும் கோலத்தில் பக்த ஆஞ்சனேயரும், மாருதியும், யோக ஆஞ்சனேயரும், பால ஆஞ்சனேயரும் சேவை சாதித்தனர். உடன் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளும் சேவை சாதித்தாள் இக்காட்சிகளை கண்டு அனுமன் அருள் பெறுங்கள்.
வீணை வாசிக்கும் பக்த ஆஞ்சனேயர்
நீயே இராமராச்சியத்தின் வாயில் காவலன், உன் அனுமதியின்றி யாரும் அங்கு செல்ல முடியாது . இத்தனை பாக்கியம் பெற்ற அனுமனே உன்னை வணங்குகின்றேன்.
ராம துவாரே தும் ரக்வாரே
ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே
நீயே இராமராச்சியத்தின் வாயில் காவலன், உன் அனுமதியின்றி யாரும் அங்கு செல்ல முடியாது . இத்தனை பாக்கியம் பெற்ற அனுமனே உன்னை வணங்குகின்றேன்.
மார்கழி மாத பாவை பாடிய ஆண்டாள்
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.
மேலிருந்து ஆசிர்வதிக்கும் பால ஆஞ்சனேயர்
லாய ஸஜீவன் லக்ஷன ஜியாயே
ஸ்ரீரகுவீர ஹரஷி உர லாயே
சஞ்சிவி மலையைக் கொணார்ந்து இலக்குவனுடைய உயிரைக் காத்து, இராமனுக்கு மகிழ்ச்சி தந்து இராமனால் தழுவப்பட்டவனே, அனுமனே உன்னை வணங்குகின்றேன்.
வடை இரதத்தில் பஞ்சமுக ஆஞ்சனேயர்
அனுமன், கருடர், வராஹர், ஹயக்ரீவர், நரசிம்மர் என்ற ஐந்து முகங்களைக் கொண்டவராய் இங்கு அருள் புரிகின்றார் பஞ்சமுக ஆஞ்சனேயர். மேற்கு நோக்கிய அனுமன் முகமும், கிழக்கு நோக்கிய கருட முகமும், வடக்கு நோக்கிய நரசிம்ம முகமும், தெற்கு நோக்கிய வராஹ முகமும் விளங்க மேலே ஹயக்ரீவ முகத்துடனும், வலது திருக்கரங்களில் சஞ்சீவி மலை, மழு, வாள், அமிர்த கலசம் தாங்கி அபய முத்திரையுடனும், இடது திருக்கரங்களில் ஏடு, பாசம், சௌகந்தி மலர், கேடயம். கதை தாங்கி மணியுடன் கூடிய வால் முன்னே தோன்ற நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார் மிகுந்த வரப் பிரசாதியான பஞ்ச முக ஆஞ்சனேயர்.
ஒவ்வொரு முகத்தால் நமக்கு பல வித நன்மைகள் விளைவிக்கின்றார் இவர். அவையாவன,
அனுமன் முகம் : சகல காரிய ஸ்த்தியளித்து, சனித் தொல்லையை நீக்கி, சகல தோஷங்களையும் போக்கி, எதிரிகளை அடக்கி காக்கின்றார்.
நரசிம்மர் முகம் : பில்லி சூனியம் பேய் பயக் கோளாறுகளை நீக்கி , துஷ்ட தேவதைகளை அடக்குகிறார்.
கருடர் முகம்: சரும நோய்களையும், விஷ நோய்களையும் , பழ வினை சம்பந்தப்பட்ட வியாதிகளையும் போக்குகின்றார்.
வராஹ முகம்: தீராத கடன் தீர்த்து செல்வம் பெருகச் செய்கின்றார். ஜுர ரோகம், விஷ ஜுரம், தீர்க்க முடியாத ரோகத்தையும், சகல வினைகளையும் பாவங்களையும் போக்குகின்றார்.
ஹயக்ரீவ முகம் : சகல கலைகள், படிப்பு, வாய் பேசாதிருப்பவர்களுக்கு வாக்கு வன்மை பெற செய்து சகல கலா வல்லவனாக்குகின்றார்.
அஷ்ட சித்தி நவநிதி கே தாதா
அஸ் வர தீன் ஜானகி மாதா
அணிமா முதல் வசித்வம் ஈறான அட்டமா சித்திகளையும், சங்கநிதி, பத்மநிதி முதலான நவநிதிகளையும் அருளும் ஆற்றலை அனுமனே உனக்கு ஜானகி மாதா தந்திருக்கின்றாள். பிராட்டியின் திருவாக்கால் சிரஞ்சீவி பட்டம் பெற்ற அனுமனே உன்னை வணங்குகின்றேன்
ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம்
ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்
கோசல நாட்டின் பிரபு ஆன ஸ்ரீராமனின் முத்திரை மோதிரத்தை (கனையாழி) வாயில் அடக்கியபடியே ஆழ் கடலை அநாசயமாக தாண்டிய அசகாய சூரனே, உன்னுடைய அளவிலா ஆற்றல் கண்டு அனுமனே உன்னை வணங்குகின்றேன்.
நாசை ரோக் ஹரை ஸப் பீரா
ஜபத நிரந்தர ஹனுமத் வீரா
வல்லமை மிக்க உன் நாமத்தை செபித்தால் நோய் நொடிகள் நீங்கும், துன்பம் அகலும், தாயே அனையாய் உன்னை வணங்குகின்றேன்.
ஸ்ரீ யோக ஆஞ்சனேயர்
பவன தனய ஸங்கட ஹரன்
மங்கள மூரதி ரூப |
ராமலக்ஷன் ஸீதா ஸஹித
ஹ்ருதய பஸஹு ஸூரபூப ||
சங்கடகங்களை நீக்குபவனும், மங்கள வடிவினனும், வாயு புத்திரனுமான அனுமன் என் இதயத்தில் இராம, இலட்சுமண, சீதா சகிதனாக எழுந்தருளி அருள் பாலிக்க பிரார்த்திக்கின்றேன்.
( துளசி தாசரின் ஹனுமான் சாலீஸாவின் சில ஸ்லோகங்கள் இப்பதிவில் இடம்பெற்றுள்ளன )
Labels: சிரஞ்சிவி ஆஞ்சனேயர், பக்த ஆஞ்சனேயர், பஞ்சமுக ஆஞ்சனேயர், யோக ஆஞ்சனேயர்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home