Sunday, December 25, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -17

Visit BlogAdda.com to discover Indian blogs
 

நீங்கள் ஹம்பியை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த போது ஹரிப்பிரியா விரைவு வண்டி மந்திராலயம் ரோடு புகைவண்டி நிலையத்தை அடைந்து விட்டது. இரவு சுமார் 3.oo மணிக்கு  நாங்கள் அந்த நிலையத்தை அடைந்தோம். அந்த நேரத்திலும் மந்திராலயம் செல்ல அரசு பேருந்து காத்துக்கொண்டிருந்து. விசாரித்த போது பக்தர்களின் நன்மையை முன்னிட்டு புகை வண்டி வரும் சமயங்களில் பேருந்து உள்ளது என்று கூறினார்கள்.      மந்திராலயம் ரோடு புகைவண்டி நிலையத்திற்கும். ஸ்ரீ இராகவேந்திரர் மந்திராலயத்திற்கும் இடையே 32 கி.மீ தூரம் உள்ளது. நாங்கள் ஆட்டோ மூலமாக மந்திராலயத்திற்கு புறப்பட்டோம்.  மந்திராலயம் சென்று சேர்வதற்குள் இராகவேந்திர சுவாமிகளின் சரிதத்தை சுருக்கமாக பார்த்து விடுவோமா? 
 
 ஸ்ரீ மத்வாசாசாரியாரின் பிரதான சீடர்கள் நான்கு பேர்  அவர்களுள் ஸ்ரீ பத்மநாப தீர்த்தரின் சீடர்களால் ஆரம்பிக்கப்பட்ட மடம் ஸ்ரீபாதராஜ மடம் என்று அழைக்கபப்டுகின்றது. ஸ்ரீஅக்ஷோப்ய தீர்த்தரின் சீடர் ஸ்ரீவித்யாதிராஜரின் இரண்டு சீடர் பரம்பரையால் உருவான மடங்கள் மூன்று அவையாவன ஸ்ரீவியாஸராஜ மடம், மற்றும்  ஸ்ரீ ராமச்சந்த்ரர் அவர்களின் சீடர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீஇராகவேந்திர மடம் மற்றும் ஸ்ரீ உத்திராதி மடம் ஆகியவை ஆகும்.  மத்வ மதாச்சார்யர்களில்  மிகவும் புகழ் பெற்றவர் ஸ்ரீ இராகவேந்திர சுவாமிகள் இவரது ஜீவபிருந்தாவனம் தான் மந்திராலயம் என்று புகழ் பெற்று விளங்குகின்றது. தனது காலத்தில் ஸ்ரீ ஹரிவாயு குருவான இவர் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார், மற்றும் அச்சமயத்தின் மிகச்சிறந்த ஞானியாகவும் விளங்கினார். இன்றும் அவர் தன் பக்தர்களுக்கு பல்வித நன்மைகளை செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கு அவரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களே சான்று. 

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச|
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||
 என்று தன் பக்தர்களுக்கு கற்பக விருக்ஷமாகவும், காமதேனுவாகவும்  விளங்கும், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595-1671), 16ஆம் நூற்றாண்டில்  இப்பூவுலகில் வாழ்ந்து மத்வரின் கொள்கைகளைப் பரப்பினார். முற்பிறவியில்  சங்கு கர்ணன் என்ற தேவராக இருந்த இவர் பிரம்மவின்  சாபத்தின் காரணமாக பூவுலகில் அரக்கர் வேந்தன் ஹிரண்ய கசிபு மற்றும் லீலாவதியின்  மகனாக  பிரஹலாதனாய் பிறந்தார்தாயின் கருவில் இருந்த போதே நாரத மஹாரிஷியின் மூலம் திருமந்திர உபதேசம் பெற்றார்.  மஹா விஷ்ணுவின் மேல் இருந்த தீவிர பக்தியினால் பிரஹலாதனுக்காக  அரக்கன் ஹிரண்ய கசிபுவை வதம் செய்ய பெருமாள் நரசிம்ஹ அவதாரம் எடுத்தார். தனது அடுத்த பிறவியில் பாஹ்லிகனாக பிறந்தார். பாஹ்லிகர் மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டாலும் ஒரு நல்ல ஹரி பக்தராக விளங்கினார். இவர் பாரதப் போரில் பீமனின் கையினால் உயிர் துறந்தார் . தன் அடுத்த பிறவியில் வியாசராஜராய் பிறந்து மத்வரின் தத்துவத்தை பரப்பினார். அப்பிறவியில் தாம் செய்த தொண்டினால் திருப்தி அடையாமல் மீண்டும் குருராகவேந்திரராக அவதரித்தார்.

 

விஜயநகர சாம்ராஜ்யத்தின் அழிவினால் அந்த அரசவையில் இருந்த கலைஞர்கள் பலரும் மேலும் தெற்குப்பக்கம் வந்து குடியேறினர். திம்மண்ண பட்டரும் இவர்களில் ஒருவர், இவர் கிருஷ்ணதேவராயருக்கு வீணை கற்பித்த கிருஷ்ணபட்டரின் பேரன் ஆவார். இவர் காவிரிக்கரையின் புவனகிரியில் வந்து தங்கினார்.  திம்மண்ண பட்டருக்கும் கோபிகாம்பிகாவிற்கும், திருமலை வேங்கடவனின் அருளால்  ஹரிவாயு குரு  மூன்றாவது திருமகனாக 1959ம் ஆண்டு நாம் எல்லோரும் உய்ய திருஅவதாரம் செய்தார். இவரது முத்த சகோதரர் குருராஜர், மற்றும் தமக்கையார் வேங்கடாம்பாள். இவரது இயற்பெயர் வேங்கடநாதர் ஆகும். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கிணங்க வேங்கடநாதர் சிறு வயது முதலிலேயே கல்வியில் சிறந்து  விளங்கினார். ஆனால் இவரது தகப்பனார் இவரது திறமைகளை கண்டு களிக்க முடியாமல் இறைவனடி சேர்ந்தார். இவரது தமையானர்  இவரது படிப்பை கவனித்து கொண்டார். இவரது முதல் குரு இவரது தமக்கையின் கணவர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் ஆவார்.

மதுரையிலிருந்து திரும்பி வந்தபின் சரஸ்வதியுடன்  இவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்க்குபிரகு இவர் கும்பகோணம் சென்று தனது படிப்பைத் தொடர்ந்தார். கும்பகோணம் மதத்தில் சுதீந்திர தீர்த்தரிடம் துவைத வேதாந்தத்தை கற்றார் வேங்கடநாதர். இவர் தமது வாதத் திறமையினால் பல்வேறு பண்டிதர்களை தோற்கடித்தார். இவர்களில் முக்கியமானவர் தஞ்சாவூர் அரசவை அறிஞர் வெங்கடேஸ்வர தீக்ஷிதர் ஆவார்.  இலக்கணத்தில் இவருக்கிருந்த புலமையைக்கண்டு சுதீந்திர தீர்த்த்ரே வியந்தார். இவருக்கு “மஹாபாஸ்ய வேங்கடநாதாச்சாரியர்” என்று பட்டம் வழங்கினார். 

ஆனால் இவரது மண வாழக்கை ஏழ்மையில் கழிந்தது. இவரது மனைவி இவருக்கு ஏற்ற மனைவி குடும்பத்தை இந்த ஏழ்மையிலும்  சீர்மையாக நடத்தி சென்றார். இவர்களுக்கு ஒரு மகன் லக்ஷ்மிநாராயணன்.   ஒரு தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக்குளிக்கக்கூட இவர் வீட்டில் எண்ணெய் இல்லாத ஏழ்மை, புதுத்துணிக்கு எங்கு செல்ல. எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல ஒரு நாள் கள்வன் இவரது வீட்டில் இருந்து தட்டு முட்டு சாமான்களைக்கூட திருடிச்சென்று விட இவர் மடத்திற்கே சென்று தங்கிவிட நேர்ந்தது. 


மடம் வந்து சேர்ந்த பிறகு வேங்கட நாதன் மேல் தனிக்கவனம் செலுத்தினார் சுதீந்திரர். இது மற்ற சீடர்களிடம் அசூயையை ஏற்படுத்தியது. ஒரு நாள் இரவில் வெங்கடநாதன் எதோ எழுதிக்கொண்டிருப்பதை கவனித்த குரு தேவர், அவர் உரங்கியபின் சென்று பார்த்தார் அந்த ஓலையை, அவருக்கு புரிந்து விட்டது உறங்கும் இவன் இவ்வுலகை விழிப்புற செய்ய பிறந்தவன் என்று. அவரது போர்வையை போர்த்தி விட்டு ஓலைச்சுவடியை எடுத்துக்கொண்டு வந்து விட்தார். காலையில் ஓலையைக்காணாமல் தேடிய வேங்கடநாதரிடம் தாம்தான் எதுத்து வந்தோம் என்று மற்ரவர்களுக்கும் உண்மையை கூறினார் அவர்களும் தலை குனிந்தனர்.  இவரது ஞான அறிவு பூவின் மணம் போல பரிமளிப்பதால் "பரிமளாச்சாரியார்" என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
 
ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் தமக்குப்பின் மடத்தை நிர்வகிக்க தகுந்த சீடர் வேங்கடநாதர் என்று உணர்ந்தார். கனவில் ஸ்ரீஇராமசந்திர மூர்த்தியும் இதை உணர்த்தினார். எனவே ஸ்ரீசுதீந்திரர் வேங்கடநாதரை சந்நியாசம் பெற்றுக்கொள்ள வேண்டினார்.  குடும்பமா? மடமா? என்று இவர் குழம்பி முதலில் மறுத்து விட்டார். பின்னர் வித்யா லக்ஷ்மி இவர் கனவில் வந்து மடத்தின் பொறுப்பை எற்றுக்கொண்டு எல்லாரையும் உய்விக்க வேண்டும் என்று கட்டளையிட, இவர் சந்நியாசம் பெற்றுக்கொள்ள முடிவு செய்தார். தனது மனைவியையும் இதற்கு சம்மதிக்க வைத்தார். மகனுக்கும் உபநயனம் செய்து வைத்தார். துர்மதி வருடம் (1621),  பங்குனி மாதம் வளர்பிறை  இரண்டாம் நாள் சந்நியாசம் பெறுவதற்கான நாள் குறிக்கப்பட்டது. கணவர் சந்நியாசம் பெறுவதற்கு முன் அவரது முகத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலினால் மடத்தை நோக்கி ஓடிய இவர் மனைவி சரஸ்வதி ஒரு பாழடைந்த கிணற்றில் விழுந்து இறந்து ஆவியாக மாறினார். ஸ்ரீஇராகவேந்திரார் என்ற நாமத்துடன் சந்நியாசம் ஏற்ற கருணாமுர்த்தி இராயரு  தமது தவ சக்தியால் அவளுக்கு மோட்சம் வழங்கினார். அவளது பெயரால் வஸ்திர தானம் நடத்தப்படவேண்டும் என்று நியமம் செய்தார். 

1623ல் ஸ்ரீசுதீந்திர தீர்த்தர் ஆனேகுந்தியில் பிருந்தாவனஸ்தர் ஆனபின் இவர் மடாதிபதியாக பொறுப்பேற்று  மத்வாச்சாரியாரின் கொள்கைகளை நாடெங்கும் பரப்பினார். உலக நன்மைக்காக பல கிரந்தங்களையும்  எழுதி அருளினார். பாரத தேசமெங்கும் தீர்த்த யாத்திரை செய்தார் உடுப்பி, பண்டரிபுரம், கொல்லபுரம், கர்நூல் என்று இவர் திருபாதம் பதித்த இடங்கள் எல்லாம் புண்ணிய தலங்களாக மாறின. அங்குள்ள  அறிஞர்களை வென்று அவர்களை துவைத வேதாந்தத்திற்கு மாற்றினார். மத்வாச்சாரியரின்  கொள்கைகளை பரப்பினார். தமது அற்புத  சக்தியினால் பல அதிசயங்களை நிகழ்வித்தார். அவற்றுள் சில   இறந்தவரை உயிர்பித்த்து, மூடனை  ஞானியாக்கியது, நம்பாத சுல்தான் கொண்டு வந்த மாமிசத்தை பழங்களாக்கி அவரை  மாற்றியது ஆகியவை அவற்றுள் சில. இவர் மட்டுமல்ல இவரது காவி ஆடை, இவர் வழங்கிய மந்திர அக்ஷதை, பிரசாதம், மிருத்திகை என்னும் மண் ஆகியவையும் அற்புதம் நிகழ்த்தின. 


இவர் வியாசராஜரின் சந்திரிகைக்கு பிரகாசம் என்னும் உரை, தந்திர தீபிகை என்னும் நூலுக்கு நியாய முக்தாவளி என்னும் உரை என்று பல உரைகளை எழுதினார். வேதத்தின் சாரத்தை பாமரரும் உணரும்படி பல கிரந்தங்களை இயற்றினார்.

ஸ்ரீ இராகவேந்திரரின்  ஜாதகத்தை கணித்த மூன்று ஜோதிடர்கள் மூன்று விதமான ஆயுட்காலங்களை கணித்தனர், அவையாவன, 100, 300, 700. ஸ்ரீஇராகவேந்திரரிடம் விளக்கம் கேட்ட போது இந்த பூத உடலுடன் 100 வருடங்கள், என் நூல்கள்  300 வருடங்களுக்குப்பிறகு பிரசுரமடையும், பிருந்தாவனத்தில்  700 வருடங்கள் வாசம் செய்வேன்   என்று விளக்கமளித்தார் ஹரிவாயு குரு.

தனது கடமைகளை முடித்த இராயர்  தாம் பிரகலாதனாக இருந்த போது யக்ஞம் செய்த மாஞ்சாலியில்  பிருந்தாவனஸ்தராக அமர முடிவு செய்தார் ஸ்ரீஇராமர்  அமர்ந்த கல்லினால் பிருந்தாவனம் அமைக்கப்பட்டது. தமது பிரிய சீடரான அப்பணாச்சாருயாரை வேறு வேலையாக அனுப்பி விட்டு 1671ம் வருடம் (விரோதிகிருது) ஆவணி மாதம், கிருஷ்ணபக்ஷம், துவிதியை திதியுடன் கூடிய வியாழன்று   பிருந்தாவனத்தில் அமர்ந்தார்.  இன்றும் அங்கிருந்து நம்மை எல்லாம் இரட்சித்து வருகின்றார். அவரே  கூறியபடி கற்பக விருக்ஷமாய், காமதேனுவாய் வேண்டுபவர் வேண்டுவன அருளும்  அவரது இந்த பிருந்தாவனம் உள்ள மந்திராலயத்திற்குத்தான் நாம் இப்போது சென்று கொண்டிருக்கிறோம்.         

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home