நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -20
மந்திராலயத்தில் துங்கபத்ரையின் அழகு
சென்ற பதிவில் பிட்சாலயாவின் சிறப்புகளையும், அப்பணாச்சாரியாரின் பக்தியையும் பற்றிப் பார்த்தோம் இப்பதிவில் அங்கு செல்வோமா? தங்கும் விடுதியில் இருந்து புறப்பட்டு முதலில் அனைவரும் பரிசல் துறை சென்று சேர்ந்தோம். அங்கிருந்து துங்கபத்ரையை அப்பரிசல் மூலம் கடந்து அக்கரை அடைந்தோம். பரிசலில் பயணம் செய்வதும் ஒரு சுகமான அனுபவமாகவே இருந்து பரிசல்காரர் எங்கு ஆழம் அதிகம் என்று அறிந்து லாகவமாக பரிசலை நடத்திச்சென்றார். மோகன் அவர்கள் கூறியது போல அங்கு வேன் தயாராக இருந்தது. பிச்சாலி மற்றும் பஞ்சமுகி இரண்டும் போக வேண்டும் என்று கூறினோம் அவர்களோ இருட்டி விட்டால் பரிசல் கிட்டாது எனவே பிச்சாலியில் தரிசனத்தை சீக்கிரமாக முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறி அழைத்து சென்றனர்.
பரிசலுக்காக காத்ததிருக்கின்றோம்
பாதை ஒன்றும் அவ்வளவு நன்றாக இல்லை. வழியில் ஷேர் ஆட்டோக்களில் எவ்வளவு பேரை அடைக்கமுடியுமோ அவ்வளவு பேரை அடைத்துகொண்டு செல்வதைப் பார்த்தோம். துங்கபத்ரையின் நீரால் வளமான வயல்கள் இரு புறமும் பச்சை பசேல் என்று காட்சி அளித்தது. நடு நடுவே சிறு கிராமங்கள் கண்ணில் பட்டன. இவ்வாறாக பிச்சாலி வந்து சேர்ந்தோம். முதலில் அமைதியாக ஒடும் துங்கபத்ரா நதியில் நீராடினோம். அந்தி சாயும் வேளை ஆகிவிட்டதால் வானம் செம்மைச்சாயம் பூசிக்கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் சிவப்பாக அடித்துக்கொண்டிருந்தாள் அப்படியே ரம்மியமாக இருந்தது. தூரத்தில் துங்கபத்ரா பாலம் அருமையாக காட்சி தந்தது அதில் அப்போது ஒரு புகை வண்டி சென்றது அருமையாக இருந்தது. இந்த யாத்திரையில் நாங்கள் மூன்று இடங்களில் துங்கபத்ராவில் குளித்தோம், நவபிருந்தாவனத்திற்கருகில், மந்திராலயத்தில் மற்றும் இங்கு பிச்சாலியில், இங்கு இருக்கும் சுழ்நிலை மிகவும் இரம்மியமாக இருந்தது என்பதில் எந்த ஐயமுமில்லை.
அந்தி சாயும் நேரத்தில்
துங்கபத்ரையின் அழகு - பிச்சாலி
துங்கபத்ரா - பிச்சாலி
பிச்சாலாயவில் கோமாதாவிற்கு பழம் சமர்ப்பணம்
பின்னர் ஜாபட கட்டேவில் அமைந்துள்ள ஏக சிலா பிருந்தாவனத்தை வலம் வந்து வணங்கினோம். ஜோதி வடிவாக காட்சி தந்த ஹரி வாயு குருவுக்கு 9 ஜோதி விளக்கேற்றினோம், ஆம் நெய் விளக்கேற்றி அவரவர்கள் குறை தீர, எல்லாரும் இன்புன்றிருக்க மனதார வேண்டிக்கொண்டோம். அகல், நெய், திரி எல்லாம் நாம் கொண்டு செல்லவேண்டும். இன்றும் இரவு நேரங்களில் குருநாதர் ஜோதி ரூபத்தில் காட்சி தருகிறார் என்கிறார்கள்.
ஏக சிலா பிருந்தாவனம்
அப்பணாச்சாரியாரும் குருதேவரும்
இந்த பிருந்தாவனத்திற்கு கூரை கிடையாது வெட்ட வெளியில் அமைந்துள்ளது, மூல பிருந்தாவனத்திற்குப் பின் அமைக்கப்பட்ட முதல் பிருந்தாவனம் இது என்பதெல்லாம் இந்த ஏக சிலா பிருந்தாவனத்தின் சிறப்பு. அந்தி சாயும் அந்த நேரத்தில் துங்கபத்ரா சலசலவென்று ஒடிக்கொண்டிருக்க, பறவைகள் எழுப்பிய கீச், கீச் சத்தமும் சேர்ந்து ஒரு அருமையான தெய்வீக சூழ்நிலையை உருவாக்கியது மனதில் இனம் புரியாத ஒரு அமைதி குடி கொண்டது அப்படியே தியானத்தில் அமர அருமையான இடம். பின்னர் அருகில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஹனுமன் மற்றும் சிவலிங்கங்களை தரிசித்தோம். அவ்விடம் நிறைய நாக சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதையும் கண்டோம். மூல ஆல மரம் கீழே விழுந்து விட்டது தற்போது அரசும் வேம்பும் இனைந்து பிருந்தாவனத்திற்கு நிழல் வழங்கிக்கொண்டு இருக்கின்றது.
அங்கிருந்த அபர்ணாச்சாரியாரின் வம்சத்தில் வந்த ராமசந்திர பதாதா அவர்கள் பிட்சாலயாவின் சிறப்புக்களையும், அபர்ணாச்சாரியார் மற்றும் இராகவேந்திரரின் நட்பையும் பற்றி ஆங்கிலத்தில் அற்புதமாக விளக்கிக் கூறினார். அவர் கூறிய சில செய்திகள் பரிமளாச்சாரியர் பல கிரந்தங்களை இங்கு அப்பணாச்சாரியாரின் இல்லத்தில் இயற்றி உள்ளார். இராகவேந்திரர் பிச்சாலி வந்த போது அபர்ணாச்சாரியார் அவருக்கு தேங்காய் சட்னி அரைத்துக் கொடுத்த ஆட்டுக்கல்லையும், தேங்காய் உரிக்க பயன்படுத்திய கொழுவையும் காண்பித்தார். பிட்சாலயாவில் அநேக நாகதேவதைகள் வாசம் செய்வதாக அவர் கூறினார். இராகவேந்திரர் அபர்ணாச்சாரியாரின் இல்லத்தில் மூல இராமருக்கு பூஜை செய்துள்ளார். மற்றும் அவர் பிட்சாலயா வந்த காலத்தில் அபர்ணாச்சாரியாரின் இல்லத்தில் ஒரு பாம்புப் புற்று இருந்ததாகவும் அதில் இருந்த கரு நாக(ம்) தேவதை குருதேவர் அளித்த பாலை பருகி வந்ததாகவும், தமது பிருந்தாவன பிரவேசத்திற்கு முன் அவர் நாக நடமாட்டம் இருந்தால் மக்கள் துன்பப்படுவார்கள் என்று புற்றை மறைத்து நாகதேவரை சிலையாக பிரதிஷ்டை செய்தாராம் கருணை மிக்க குருநாதர்.
சுமார் 400 ஆண்டுகள் பழமையான அபர்ணாச்சாரியாரின் இல்லம், 2009 ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்து இடிந்து விட்டதாம், தற்போது மராமத்து வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன அதனால் அங்கு சென்று குருநாதர் நடமாடிய இடத்தை பார்க்கமுடியவில்லை. பிட்சாலயாவில் தினமும் மதியம் அன்னதானம் நடந்து வருகின்றது. முதலிலேயே சொல்லி விட்டால் உணவு தயார் செய்து வைக்கின்றனர். அவர்களின் தொலைப்பேசி எண் 08532-204108 / 9885853864.
அருமையான ஒரு தரிசனத்திற்குப் பின் பஞ்சமுகிக்கு புறப்பட்டோம். பஞ்சமுகி வந்த போது இருட்டிவிட்டிருந்தது கோவில் சாத்தி இருக்கலாம் என்று அவசர அவசர சென்றோம். இக்கோவில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது இராகவேந்திரர் இங்கு சுமார் 12 ஆண்டுகள் தவம் செய்த பஞ்ச முக ஆஞ்சனேயர் குகை உள்ளது இந்த குகையில்தான் பஞ்ச முக அனுமன் இங்கு பிரத்யக்ஷமாகி குரு தேவருக்கு பிரஹலாதன் யாகம் செய்த இடத்தில் பிருந்தாவனஸ்தர் ஆகுங்கள் என்று கூறியருளினார். மேலும் வேங்கடேசரும், மஹாலக்ஷ்மித் தாயாரும் குருநாதருக்கு இக்குகையில் பிரத்யக்ஷ்யமாகி அருள் புரிந்துள்ளனர். இராகவேந்திரர் பூஜித்த சிவலிங்கமும் அவர் பிரதிஷ்டை செய்த பிள்ளையாரும், நாகராஜாவும் இங்குள்ளது. இராகவேந்திரர் தவம் செய்த இடத்தில் ஒரு பிருந்தாவனம் அமைத்துள்ளனர். இங்கு ஒரு பாறையில் பஞ்சமுக ஆஞ்சனேயரும், வெங்கடேசரும், பெரிய பிராட்டியாரும், சிவபெருமானும் பிரத்யக்ஷமாகிய இடங்கள் சந்தனம் மற்றும் மலர் மாலைகளில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவர்களை திவ்யமாக தரிசனம் செய்தோம்.
பஞ்சமுகி
மயில்இராவணன் யுத்தத்தின் போது இராம லக்ஷ்மணர்களை கடத்திக்கொண்டு பாதாள லோகத்தில் சிறையில் அடைத்து விட்டான். அவர்களை விடுவிக்க ஹனுமன் விபீஷணரிடம் மயில் இராவணன் அரண்மணைக்கு எவ்வறு செல்வது என்று கேட்க, அவரும் இரு வழிகள் உள்ளன ஒன்று இராவணன் அரண்மணை வழியாக செல்வது, இரண்டாவது தண்டகாரண்யத்தின் வழியாக செல்வது. தண்டகாரண்யம் செல் அங்கு எருக்கலாம்பாள் உனக்கு உதவி செய்வாள் என்று கூறினார். அனுமனும் தண்டகாரண்யம் சென்று அம்பாளை வேண்ட அவளும் சந்திரசேனன் என்ற இராமபக்தர் உனக்கு உதவுவார் என்று உபாயம் கூறி அனுப்பினாள். சந்திரசேனன் ஐந்து வண்டுகளில் மயில்ராவணனின் உயிர் நிலை ஐந்து வண்டுகளில் உள்ளதால் அனைத்தையும் ஒரே சமயத்தில் கொல்ல வேண்டுமென கூறினார். எனவே அனுமன் விஷ்ணு பகவானின் அவதாரங்களைக் கொண்ட பஞ்சமுக ஆஞ்சனேயராக மாறி ஒரே சமயத்தில் ஐந்து வண்டுகளையும் தின்று மயில்ராவணனை கொன்று இராம லக்ஷ்மணர்களை விடுதலை செய்தார். இவ்வாறு ஆஞ்சனேயருக்கு எருக்கலாம்பாள் உதவியதால் இன்றும் இக்குகைக்கோவிலின் பின்னர் எருக்கலாம்பாளுக்கு ஒரு சன்னதி உள்ளது. அம்மனுக்கு வளையல் சார்த்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
பஞ்சமுக ஆஞ்சனேயரின் ஐந்து முகங்களுள் ஹனுமான் கிழக்கு நோக்கி இருக்கிறார், இவர் மனத் தெளிவைத் தருகிறார். நரசிம்மர் தெற்கு நோக்கியிருக்கிறார், இவர் வெற்றியையும் அஞ்சாமையையும் தருகிறார். மேற்குப் பார்த்த கருடன் தீய சக்திகளையும் விஷங்களையும் நீக்கி அருள்கிறார். வடக்கு நோக்கிய வராஹர் வளமையையும் செல்வத்தையும் நல்குகிறார். வானத்தை நோக்கியுள்ள ஹயக்ரீவர் அறிவையும் நல்ல குழந்தைகளையும் அளிக்கிறார்.
ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக அனுமனை கம்பர் பாடிய பஞ்சபூதப் பாடலால் வணங்குவோமா?
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்று தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற ஆரணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மையளித்து காப்பான்.
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற ஆரணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மையளித்து காப்பான்.
பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு புத்திரன் அனுமன், மற்றொரு பூதமான கடலைத் (தண்ணீர்) தாண்டி ஆகாய வழியில் ஸ்ரீ இராமருக்காக பூமிப் பிராட்டியின் மகள் சீதா தேவியைக் கண்டு இலங்கைக்கு நெருப்பு(அக்னி) வைத்தார் அந்த இராமதூதன் நம்மை காப்பான.
அருகில் ஒரு சன்னதியில் ஹனுமனின் பாதுகைகள் உள்ளன, கேரேபுதூர் பீமண்ணாவின் கனவில் ஹனுமன் தோன்றி தனக்கு பாதுகைகள் செய்யுமாறு கூறினார், காலின் அளவு எங்கு கிடைக்கும் என்று உணர்த்தினார். காலை அவ்விடத்தில் சென்று பார்த்த போது அஞ்சனை மைந்தனின் காலடித் தடம் இருந்தது. அவரும் அந்த அளவிற்கு பாதுகைகள் செய்து அர்பணித்தார். தினமும் காலையில் அர்சகர்கள் சன்னதியைத் திறக்கும் பொது பாதுகையில் புல், மண் ஒட்டியிருப்பதையும் சிறிது தேய்ந்திருப்பதையும் காண்கின்றார்களாம், ஐந்து வருடத்திற்கு ஒரு முறை புது பாதுகைகள் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன. இரவில் சென்றதால் புஷ்பக விமானம் போன்ற பாறை, மெத்தை தலையணை போன்ற பாறை ஆகியவற்றை காணமுடியவில்லை. கோவிலுக்கு அருகே உள்ள கடைகளில் காரப்பொரி மற்றும் மசால்பொரி விற்கிறார்கள். அருமையாக இருக்கும் என்று மோகன் அவர்கள் கூறினார்கள். ஆளுக்கொரு பொட்டலம் வாங்கிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டே பரிசல் துறை வந்தோம். அக்கரையில் மின் ஓளியில் மந்திராலயம் அருமையாக காட்சி தந்தது. சுமார் 7 மணியளவில் இருட்டில் திக் திக் என்று மனது அடித்துகொள்ள, துங்கபத்ராவை மனதில் ராகவேந்திரர் துதியுடன் கடந்து சுகமாக இக்கரை அடைந்தோம்.
இரவில் தினமும் மர, வெள்ளி, தங்கத்தேர் கோவில் வலம் உள்ளது இப்போது சென்றால் தரிசிக்கலாம் என்று மோகன் அவர்கள் கூறினார்கள். எனவே ஒரு சிலர் கோவிலுக்கு சென்றோம், முடியாதவர்கள் தங்கும் விடுதிக்கு சென்றனர். அந்த அற்புத தரிசனத்தை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.
ஹனுமன் பாதம்
அபர்ணாச்சாரியார் குருதேவருக்கு
சட்னி அரைத்த ஆட்டாங்கல்
வழியில் ஒரு ஷேர் ஆட்டோ நிறைய மக்கள்
இரவில் தினமும் மர, வெள்ளி, தங்கத்தேர் கோவில் வலம் உள்ளது இப்போது சென்றால் தரிசிக்கலாம் என்று மோகன் அவர்கள் கூறினார்கள். எனவே ஒரு சிலர் கோவிலுக்கு சென்றோம், முடியாதவர்கள் தங்கும் விடுதிக்கு சென்றனர். அந்த அற்புத தரிசனத்தை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.
Labels: பஞ்சமுக ஆஞ்சனேயர், பஞ்சமுகி, பிட்சாலயா. அப்பணாச்சார்யார்
4 Comments:
அருமை.. மிக்க நன்றி
அருமை.. மிக்க நன்றி
மிக்க நன்றி Sri
சிறப்பான பயண அனுபவம்,நன்றி.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home