Tuesday, January 29, 2008

கருட சேவை - 3

Visit BlogAdda.com to discover Indian blogs
பெரியாழ்வார் வைபவம்


கருடன் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும் நிகழ்ச்சிகள் இரண்டு முதலாவது விஷ்ணு சித்தர் பொற்கிழி பெற்று யானையின் மேல் நகர்வலம் வரும் போது பெருமாள் பெரிய பிராட்டியுடன் வரும் போது அவருக்கு கண்ணேறு பட்டுவிடுமோ என்று பயந்து பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடியது. இரண்டாவது கஜேந்திர மோட்சம் இந்தப் பதிவில் பெரியாழ்வார் வைபவத்தைப் பற்றிப் பார்ப்போம்.


பெரியாழ்வார் என்னும் விஷ்ணு சித்தர் கருடாம்சமாய் பிறந்தவர். பெருமாளுக்கு திருப்பல்லாண்டு பாடியவர் இவரே. . ஸ்ரீ வில்லிபுத்தூரிலே வடபெருங்கோயிலுடையானுக்கு (வடபத்ர சாயிக்கு) நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார் பெரியாழ்வார். இவரே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள், ஆண்டாள் நாச்சியாரை வளர்த்து அரங்கனுக்கே மாமானார் ஆகும் பேறு பெற்றார்.


அப்போது கூடல் நகராம் மதுரையை ஆண்டு வந்த வல்லப தேவன் என்ற பாண்டிய மன்னன் ஒரு சடசு நடதினான். அதில் அவன் " யார் முழு முதற் கடவுள்" ? என்ற கேள்வியை மக்கள் முன் வைத்தான். அதற்கு பரிசாக தங்க நாணயங்கள் அடங்கிய பொற்கிழி ஒன்றை தனது தவத்திறமையினால் எந்த வித பிடிப்புமில்லாமல் ஆகாயத்தில் தொங்க விட்டான். தனது கேள்விக்கு யார் சரியான விடை அளிக்கின்றார்களோ அவரது காலடியில் இந்த பொற்கிழி தானாக விழும் என்றும் அறிவித்திருந்தான்

விஷ்ணு சித்தர் கனவிலே பெருமாள் தோன்றி அவரை சடசில் கலந்து கொள்ள பணித்தார். இறைவன் ஆணைப்படி விஷ்ணு சித்தர் அஞ்சிக்கொண்டே அந்த சடசில் கலந்து கொள்ள சென்றார். அவர் வால்மீகி, துருவன் போல மயர்வறும் மதி நலம் பெற்று , மிகுந்த திறமையுடன் ஸ்ரீமந் நாராயணனே முழுமுதற் பரம்பொருள் என்று வேதங்கள் ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் இவைகளிலிருந்து ஆயிரமாயிரம் மேற்கோள்கள் காட்டி விளக்கினார்.
.
பொற்கிழி இவர் பக்காம் தாழ வளைய இவரும் அக்கிழியை அறுத்துக் கொண்டு உருவினார். இதனைக் கண்ட அரசன், மற்ற வித்வான்கள் வியந்தனர். வெற்றி பெற்ற விஷ்ணு சித்தரை வல்லப தேவன் தன்து பட்டத்து யானையின் மேல் ஏற்றி, நகர்வலமாக அழைத்து சென்றான். விஷ்ணு சித்தருக்கு பட்டர் பிரான் அல்லது அறிவாளிகளின் தலைவன் என்னும் பட்டம் அளித்து கௌரவித்தான் அரசன்.


பெரிய திருவடியில் பெருமாள் பெரிய பிராட்டியாருடன்


விருது, சங்கம் போன்ற பல வாத்ய கோஷங்களுடன் பட்டத்து யானையின் மேல் நகர் வலம் அழகைக் காண வியப்பூட்டும் வகையில் பரம் பொருளான ஸ்ரீமந் நாராயணன் வானின் மேல் பெரிய பிராட்டியுடன் பெரிய திருவடியான கருடன் மேல் ஆரோகணித்து தன் பரிவாரங்களுடன் நகர்வலத்தைக் காண விழைபவன் போல் காட்சி தந்தார். எம்பெருமானுக்கு எங்கே கண்ணேறு பட்டு தீங்கு விளைந்துவிடுமோ என்று அஞ்சி அன்பு மிகுதியால் விஷ்ணு சித்தர் காப்பாக யானை மீதிருந்த மணிகளைத் தாளாமாகக் கொண்டு , "பல்லாண்டு", "பல்லாண்டு" என்று செய்யுளிசைத்துப் பாடத் தொடங்கினார். இவ்வாறு பரந்தாமனுக்கே பல்லாண்டு பாடியதால் இவர் "பெரியாழ்வார்" என்று அழைக்கப்படலானார்.

கருடனைப் போற்றும் பெரியாழ்வாரின் ஒரு பாசுரம்

நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமுமத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமுந்தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே.


அடுத்து கஜேந்திர மோக்ஷ பதிவில் சந்திப்போம்.

2 Comments:

Blogger மதுரையம்பதி said...

மதுரையில் இருக்கும் கூடலழகர் கோவிலே இந்த நிகழ்ச்சி நடந்த இடமாக சொல்வர்.
பதிவுக்கு நன்றி கைலாஷி அவர்களே

January 30, 2008 at 9:11 PM  
Blogger Kailashi said...

செய்திக்கு நன்றி மதுரையம்பதி அவர்களே.

January 30, 2008 at 9:51 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home