Monday, October 12, 2009

அதிசயமாய் வரும் தீபாவளி

Visit BlogAdda.com to discover Indian blogs


இந்த வருடம் நாம் கொண்டாடும் தீபாவளி ஒரு அதிசய தீபாவளி. ஆம் முன்னூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுமாதிரி புரட்டாசி மாதத்திலேயே தீபாவளி வரும். அதுவும் இந்த வருடம் திருமாலுக்கு மிகவும் உகந்த புரட்டாசி சனிக்கிழமையன்று தீபாவளி வருகின்றது. அநேகமாக எல்லா ஆண்டும் நான்கு சனிக்கிழமைதான் வரும். அதிசயமாக சில ஆண்டுகள் மட்டுமே ஐந்து சனிக்கழமைகள் வரும். இந்த வருடம் அம்மனுக்கு உகந்த ஆடி வெள்ளியும் ஐந்து தடவை வந்தது. அது போலவே பெருமாளுக்கு உரிய புரட்டாசி சனிக்கிழமையும் சேர்ந்து வந்துள்ளது. இந்த வருட நிறை சனிக்கிழமையன்று தீபாவளி இணைந்து வருவது மிகவும் சிறப்பு. இதுவே புரட்டாசி மாதத்தின் நிறை நாள். இந்தியாவெங்கும் ஸ்ரீ கிருஷ்ணரையும், ஸ்ரீ இராமரையும், ஸ்ரீ மஹா லக்ஷ்மியையும் வழிபடும் இந்த சிறந்த நன்னாளில் கண்கண்ட தெய்வம் கலியுக வரதன் திருமலையப்பன், ஸ்ரீநிவாஸன், ஏழுமலைவாசன், வேங்கடாசலபதி தங்கள் அனைவருக்கும் அனைத்து நலங்களையும், வளங்களையும் வழங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். எங்கள் குடும்பத்தினரும் தங்கள் உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.

Wish you and your family a very Happy Deepavali.
பண்டிகை ஒன்றென்றாலும் அதை கொண்டாடும் காரணமும், கொண்டாடும் விதமும் மாறுபடுகின்றது இந்தியாவிலேயே. இருந்தாலும் வெளி நாடுகளிலும் இது போல பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது அவற்றை பற்றியும் பார்ப்போம்.


கிருஷ்ண பரமாத்மாவும் சத்யபாமையும்நரகாசுரனுடன் போர் செய்யும் குறு ஓவியம்

தென்னிந்தியர்களாகிய நாம் தீபாவளியை நரக சதுர்த்தசி என்று அமாவாசைக்கு முதல் நாள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, தாயார் சத்யபாமையுடன் சென்று நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் வகையில் கங்கா ஸ்நானம் சூரியோதயத்திற்க்கு முன்னர் செய்து புத்தாடை அணிந்து, இனிப்பு சாப்பிட்டு, பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றோம்.

குஜராத் மக்களுக்கு தீபாவளிதான் வருடப்பிறப்பு . அங்கு இத்திருவிழா லக்ஷ்மி பூஜை, புது கணக்கு ஆரம்பித்தல் என்று வெகு சிறப்பாக அமாவாசை தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகின்றது. குஜராத் என்றாலே இனிப்புதான் ஐந்து நாட்கள் ஆனந்தமாக கொண்டாடுகின்றர் இவர்கள் முழு விடுமுறையுடன். இவர்கள் தீபாவளியன்று தங்கள் இல்லம் முழுவதும் வண்ண வண்ண தீபங்கள் ஏற்றுகின்றனர் தீபாவளி என்றால் தீப+ ஆவளி அதாவது தீப வரிசை என்று பொருளல்லவா? தீபம் ஏற்றுவதற்கான காரணம் என்ன என்பதை பின்னர் பார்ப்போம்.

நமது நாட்டின் மேற்குப் பகுதியில் இருந்து கிழக்குப் பகுதிக்கு சென்றால் அங்கே வேறு விதமான கொண்டாட்டம் இவர்கள் தீபாவளியை மஹாநிசா என்று கொண்டாடுகின்றனர். அசுர இரத்தம் குடித்ததால் காளி தேவிக்கு ஏற்பட்ட ஆங்காரத்தை சிவபெருமான் தணித்த தினம் என்பதால்அமாவாசை இரவில் காளி பூஜை பிரபலம் விடிய விடிய வெகு சிரத்தையுடன் சிவபெருமானின் மேல் முண்ட மாலையுடன் நடனமாடும் தக்ஷிண காளி ரூப சிலை பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர் சமஷ்டி பூர்வமாக. இன்று நாம் கார்த்திகை தீபத்தன்று வீடெங்கும் தீபம் ஏற்றுவது போல தீபம் ஏற்றுகின்றனர். குறிப்பாக மேற்கு வங்காளத்திலும் அசாமிலும் வீட்டின் முன்னர் வாழை மரம் கட்டி அதில் மூங்கில் பத்தைகளை செருகியும். வீட்டின் மதில் சுவர் முழுவதும் வாழைமட்டை வைத்து அதில் மூங்கில் பத்தைகளை செருகியும் தீபம் ஏற்றும் ஒரு அழகே அழகு. ஒரே சொர்க்க பூமி போல அந்த அமாவாசை கும்மிருட்டில் தீபங்கள் ஒளிரும் காட்சி. மேலும் இளம்பெண்கள் இரவில் தீபங்களை ஏற்றி அதை ஆற்றில் மிதக்க விடுகின்றனர்.விளக்கொளியில் ஸ்ரீராமர்


சரி இனி வடநாடு செல்வோமா?. விஜயதசமியன்று ஸ்ரீஇராமர் இராவணனை வென்ற நாள், அந்த விஜய கோதண்டராமர், தாயார் சீதாதேவியுடனும், இளையவன் இலக்குவனோடும் அயோத்திக்கு திரும்பிய நாள்தான் தீபாவளித் திருநாள். வெற்றி இராவனாக திரும்பி வந்த தம் அண்ணலை அயோத்தி நகர மக்கள் தங்கள் இல்லங்கள் தோறும் தீபங்கள் ஏற்றி வரவேற்றனராம் இன்றும் அதுபோலவே வடநாடெங்கும் தங்கள் இல்லம் முழுவதும் தீபங்கள் ஏற்றி தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகின்றனர். தீபாவளியை சம்பந்தப்படுத்தி கூறப்படும் அனைத்து கதைகளும் தீமைகள் அனைத்தும் கடைசியில் இறைவனால் அழிக்கப்பட்டுவிடும் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. மேலும் விளக்கு அஞ்ஞான இருளை அகற்றி ஞானத்தை வழங்குகின்றது என்பதைக்குறிக்கின்றது.


இந்திய தபால் தலை

சீக்கியர்களின் மதகுருவான குருகோவிந்த்சிங், முகலாய மன்னன் ஜஹாங்கீரின் சிரையில் இருந்து விடுபட்டு தீபாவளி அன்று அமிர்தசரஸ்க்கு வந்தார். அதைக் கொண்டாடும் வகையில் அமிதசரஸ் பொற்கோவிலில் சிறப்பு தீப அலங்காரங்கள் செய்கின்றனர்.

ஜைனர்கள் தீபாவளி நாளை மஹாவீரர் பரிநிர்வாணம்(வீடுபேறு) அடைந்த நாளாக கொண்டாடுகின்றார்கள்.


அன்னபூரணி
அன்னபூர்ணே சதாபூர்ணேசங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய சித்யர்த்தம்
பிக்ஷாம் தேஹி ச பார்வதி.
முக்தி நகரமாம் வாரணாசியில் தங்க அன்னபூரணி தீபாவளியன்று லட்டுத்தேரில் வலம் வருகின்றாள். வருடத்தில் தீபாவளி சமயத்தில் மட்டுமே நாம் தங்க அன்னபூரணியை நாம் தரிசனம் செய்ய முடியும்.

எங்கள் இல்ல அன்னபூரணி

பார்வதி தேவி கேதார கௌரி விரதம் 21 நாள் இருந்து விரதம் முடித்து இறைவனின் உடலில் இடப்பாகம் பெற்றது ஐப்பசி அமாவாசை அன்றுதான். இன்றும் பலர் தம் இல்லங்களில் கேதார கௌரி விரத நோன்பு கும்பிடுகின்றனர்.

தீபாவளியன்றுதான் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சிவபெருமானை வழிபட்டு பொக்கிஷங்களை பெற்றார். அதனால் தீபாவளியன்று பல்வேறு பலகாரங்களுடன் காசு, பணம் வைத்து குபேர பூஜை செய்வது உண்டு. இந்த பூஜை செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

இவ்வாறு இந்திய நாடெங்கும் கொண்டாடப்படும் தீபாவளியைப் போல மற்ற நாடுகளிலும் எவ்வாறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றது என்று பார்ப்போமா?

நேபாள நாட்டில் தீபாவளியை "தீஹார்" என்ற பெயரில் 5 நாள் விழாவாக கொண்டாடுகின்றனர். இதில் லக்ஷ்மி பூஜை சிறப்பிடம் பெறுகின்றது.

பர்மாவின் “தாங்கீஜீ” என்ற விழாவும், சீனாவின் “நஹீம்-ஹீபா" என்ற விழாவும், தாய்லாந்தின் “லாய் கிரதோஸ்” என்ற விழாவும், ஜப்பானின் “டோரா நாகாஷி” , ஸ்வீடனின் “லூசியா”, இங்கிலாந்தின் "கைப்பாக்கல்" என்ற விழாவும் நம் தீபாவளியைப் போலவே விளக்கு வரிசைகளுடன் கொண்டாடப்படுகின்றது.


சிங்கப்பூர் வெளியிட்ட தபால் தலை

தீபாவளிப் பண்டிகையை சிறப்பித்து தபால் தலை வெளியிட்ட முதல் நாடு சிங்கப்பூர் ஆகும் அமெரிக்காவும் தபால் தலை வெளியிட்டுள்ளது. .

Labels: , , ,

4 Comments:

Blogger துளசி கோபால் said...

மிகவும் அருமையான இடுகை கைலாஷி.


அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்து(க்)களை இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதிசயம்தான். நானும் 35 வருசங்களுப் பிறகு தீபாவளியை இங்கே சென்னையில் கொண்டாடறேன்!

October 14, 2009 at 1:40 AM  
Blogger கோமதி அரசு said...

//தீமைகள் அனைத்தும் கடைசியில் இறைவனால் அழிக்கப்பட்டுவிடும்//

//அஞ்ஞான இருளை அகற்றி ஞானத்தை
வழங்குகின்றது//

அருமையான பதிவு.

படங்கள் அருமை.
பகிர்வுக்கு நன்றி.

October 14, 2009 at 2:31 AM  
Blogger Kailashi said...

வாருங்கள் துளசியம்மா. இன்னும் எத்தனை நாட்கள் சென்னையில் இருப்பீர்கள். முடிந்தால் ஒரு தடவை தங்களை நேரில் சந்திக்க விரும்புகின்றேன். மின்னஞ்சல் அனுப்புகின்றேன்.

October 20, 2009 at 7:20 PM  
Blogger Kailashi said...

வாருங்கள் கோமதி அரசு. முதல் முறை வருகின்றீர்கள். இன்னும் வரும் காலங்களிலும் வந்து தரிசனம் பெறுங்கள்.

October 20, 2009 at 7:21 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home