Friday, December 2, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -12

Visit BlogAdda.com to discover Indian blogs
 

பால ஆஞ்சனேயர் விமானம்
கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஆனேகுந்தி அருகில் உள்ள நவபிருந்தாவனம், சிந்தாமணி கோயில் வளாகம் மற்றும் பம்பாசரோவர்ம் தரிசனம் செய்த பிறகு நாங்கள் சென்ற தலம் அஞ்சனாத்ரி ஆகும். ஆம் அஞ்சனா புத்ரன், அஷ்ட சிரஞ்சிவிகளில் ஒருவன் இராமபக்தன் சுந்தரன்  அனுமன் பிறந்த இடமாக இந்த அஞ்சனாத்ரி கொண்டாடப்படுகின்றது வாருங்கள் சென்று பால ஆஞ்சனேயரையும் அன்னை அஞ்சனையையும் தரிசனம் செய்யலாம்.


அஞ்சனை மைந்தனைக் காணப்

படியேறி செல்கின்றோம்
 
பம்பா சரோவரிலிருந்து சிறிது தூரத்தில் (2 கி.மீட்டருக்குள்) ஆனேகுந்தியிலிருந்து ஹுலிகி செல்லும் பாதையில் உயர்ந்த இந்த அழகே உருவான அஞ்சனாத்ரி மலை அமைந்துள்ளது. வண்டி ஓட்டுநர் இந்தப் பகுதியை சார்ந்தவர் என்பதனால் எங்களுக்கு எந்த சிரமமும்  இருக்கவில்லை அவரே எல்லா இடங்களுக்கும் அவரே  அழைத்து சென்றார். மலையின் மேல்   ஹனுமனுக்கும் அஞ்சனா தேவிக்கும் கோயில் அமைந்துள்ளதுமேலே ஏறி செல்ல சுமார் 545 படிகள் ஏற வேண்டும், மிகவும் குறுகிய படிகள் பல இடங்களில் செங்குத்தாக படிகள் அமைந்துள்ளனசில இடங்களில் தான்  மேலே உள்ள  பாறைகள் நமக்கு நிழலை அளிக்கின்றன. ஆகவே வெயில் காலத்தில்  அதிகாலையில் மலையேறுவதுதான் உகந்தது. படிகளின் ஆரம்பத்தில் ஒரு அலங்கார வளைவு உள்ளது. அதில் அன்னை அஞ்சனா தேவி அனுமனை தனது மடியில் வைத்து அழகு பார்க்கும் கோலத்தில் காட்சி தருகின்றாள். வழியெங்கும் வானரங்கள் உள்ளன. கீழே பொரி,  ஊற வைத்த கடலை விற்கின்றார்கள் வாங்கி குரங்குகளுக்கு அளிக்கலாம்.

 மேலே உள்ள கோவிலில் மூன்று சன்னதிகள். முக்கிய சன்னதி பால ஆஞ்சனேயர் புடைப்பு சிற்பமாக கையில் கதை ஏந்திய வண்ணம் அருட்காட்சி தருகின்றார் அஞ்சனா புத்ரன். அந்த வாயுபுத்ரனை, இராம தூதனை, மாருதியை, சிரஞ்சிவி மலை கொண்டு வந்த சுந்தரனை, கண்டேன் சீதையை என்று கூறிய சொல்லின் செல்வனை புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், செயலில் உறுதிப்பாடு, ஆரோக்கியம், நாவன்மை இத்தனையும் தரும் வள்ளலை மனதார 

அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றா றாக ஆரியற் காகஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனெம்மை அளித்துக்காப்பான்

என்று துதி சொல்லி வழிபட்டு அடுத்த சன்னதிக்கு சென்றோம். அது வேத மாதா  காயத்ரி  சன்னதி அங்கு பல் வேறு சாதுக்கள் அமர்ந்து பஜனை செய்து கொண்டிருந்தனர். அடுத்த சன்னதி  அஞ்சனா தேவி சன்னதி, பளிங்கு கல்லினால் ஆன சிலை அமர்ந்த கோலத்தில்  குழந்தை அனுமனை மடியில் வைத்த கோலத்தில் காட்சி தருகின்றாள் மாதா அஞ்சனாதேவி. அன்னையையும் மனதார வெளியே வந்த போது மாருதியின் அருளால் தேங்காய் பிரசாதம் கிடைத்தது.  சன்னதியில் இருந்து வெளியே வந்த போது கீழே சுமார் பத்து படிகள் சென்றன. இறங்கி சென்ற போது  ஒரு சிவலிங்கம்  இருந்தது ஈசனை, சிவகாமி நேசனை, ருத்திரனை தரிசனம் செய்தோம்

அனுமன் வாயு புத்ரன். ஸ்ரீ ஹரியுடன் ஒவ்வோரு அவதாரத்திலும் அவருக்கு சேவை செய்வதற்காக உடன் வருபவர்.  வாயு பகவன் எங்குள்ளாரோ அங்கேதான் ஜெயம் ஏனென்றால் ஸ்ரீ ஹரியின் பூரண அருள் அவருக்கு உண்டு.  த்ரேதா யுகத்தில் சூரிய புத்ரன் சுக்ரீவன், இந்திரனின் புத்ரன் வாலி, இந்த கிஷ்கிந்தையிலே வாயு புத்ரன் ஆஞ்சனேயன் துணை இருப்பதனால் சுக்ரீவன் வெல்கிறான், இந்திர புத்ரன் வாலி வீழ்கிறான்.    அதே துவாபர யுகத்தில் அது தலைகீழ் ஆகிறது கர்ணன் சூரிய புத்ரன், அர்ச்சுனன் இந்திர புத்ரன். குருக்ஷேத்திரத்தில் சூரிய புத்ரன் கர்ணன் வீழ்கிறான், அர்ச்சுனன் வெல்கிறான், ஏனென்றால் வாயு புத்திரன் பீமனும் அவனுடன் இருந்தான்.


பால ஆஞ்சனேயரை பார்த்த மகிழ்ச்சியில் , கம்பன் சொல்லின் செல்வரின் வாய் மொழியாகப் பாடிய  இரு பாடலைக் காண்போமா?

விற்பெருந் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்
நற்பெருந் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன்
இற்பிறப்பென்பதொன்றும் இரும்பொறை யென்பதொன்றும்
கற்பெனும் பெயரதொன்றும் களி நடம் புரியக் கண்டேன்

சுந்தரனான அனுமன், சிறந்த  சீதா பிராட்டியின் நலம் எவ்வாறு உள்ளது  என்று அறிய விரும்பும் இராமனிடம் கூறுகின்றான், கடல் சூழ்ந்த இலங்கை மாநகரில் நான் சீதாபிராட்டியை காணவில்லை, நல்ல குடிப்பண்பும்,  பூமாதேவியைப் போன்ற பொறுமையும், கற்பில் சிறந்தவளும் ஆன பெருந்தவத்தவளான நங்கையைக் கண்டேன்  என்றார் மேலும் , அவள்

உன்பெருந்தேவி என்னும் உரிமைக்கும் உன்னைப் பெற்ற
மன் பெரும் மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன்
தன் பெருந் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள்
என் பெருந் தெய்வம்!ஐயா!

சிறை வாழ்க்கையிலும் மனைவி, மகள், மருமகள் என்னும் உறவுமுறைகளெல்லாம் தன் மூலம் சிறப்பு அடையும் படியாக விளங்கினாள். இதுவரை மற்றவர்களுக்கு உறவு முறையால் பெருமை சேர்த்த பிராட்டி எனக்குப் பெருந்தெய்வமாகக் காட்சி தந்தாள் என்கிறான் அனுமன். என்னே சொல்லின் செல்வனின் பெருமை. தாயாரையும் பெருமாளையும் சேர்த்து வைத்தவரல்லவா. 
 மலைமேலிருந்து பறவைப்பார்வையில் துங்கபத்ரை

மேலிருந்து இந்த கிஷ்கந்தையின் முழு அழகையும் பார்த்தோம், சுற்றிலும் வளமான நெல் வயல்கள், பச்சை போர்வை போர்த்தது போல காட்சி தந்தது. சுற்றிலும் மலைகள் குழந்தைகள் கட்டியது போல பாறைகளை ஒன்றின் மேல் ஒன்று வைத்தது போல அருமையாக காட்சி தந்தது. இந்த இயற்கையின் அழகை வீடியோவிலும் பதிவு செய்தோம். இங்கிருந்து ஹம்பியின் விருபாக்ஷீஸ்வரர் கோயில் கோபுரம், மற்றும் வளைந்து ஒடும் துங்கபத்ரா நதியின் முழு ஓட்டம் மற்றும் சுற்றுமுற்றும் உள்ள காட்சிகளை எல்லாம் கண்டு களித்தோம்


இம்மலை ஏறும் போது ஒன்றை கவனித்தோம். நிறைய வெளிநாட்டினர் இந்த ஹம்பி பகுதியை பார்க்க வருகின்றனர். பலர் மலையேறி வந்தனர். பின்னர் திரும்பி ஹோஸ்பெட் செல்லும் போதும் சைக்கிளில் பயணம் செய்யும் வெளி நாட்டினர் பலரைக் கண்டோம். இனி அருகில் உள்ள இரு மலைகளைக் காணலாம் சற்று பொறுங்கள். 

Labels: , ,

2 Comments:

Blogger DrPKandaswamyPhD said...

நானும் இந்தக் கோயிலுக்குப் போயிருக்கிறேன்.

December 2, 2011 at 5:24 AM  
Blogger Kailashi said...

மிக்க மகிழ்ச்சி கந்தசாமி ஐயா. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். அஞ்சனை மைந்தனை தரிசனம் செய்ததும் மனதில் ஒரு அற்புதமான ஆனந்தம் தோன்றியது.

December 2, 2011 at 6:42 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home