Saturday, December 3, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -14

Visit BlogAdda.com to discover Indian blogs
 
 இராஜ கோபுரத்தில் உள்ள ஒரு அழகிய சிற்பம்

இது போன்ற ஒரு நகரத்தை கண்கள் பார்த்தது இல்லை என மேலை நாட்டுப்பயணிகள் பலராலும் புகழப்பட்ட நகரம். அகலமான வீதிகள், வேலைப்பாடுகள் கொண்ட அழகிய மாளிகைகள், வண்ண மலர்களும் கனிகளும் நிறைந்த தோட்டங்கள், ஓடைகள், நீருற்றுகள், என நகரம் முழுவதும் பசுமையும் குழுமையும் பரவிக்கிடந்தன. வணிக வீதிகளில் வைரம் வைடூரியம், முத்து, பவளம் என்று பலவிதமான விலைமதிப்பற்ற நவரத்தினங்கள் கொட்டிக்கிடந்தன. செல்வமும் வளமையும் திகழ ரோமாபுரிக்கு நிகராக விளங்கியது அந்த நகரம் என்று விஜய நகர சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய ஹம்பியைப் பற்றி தனதுடிஸ்கவரி ஆப் இந்தியாஎன்ற நூலில்  ஜவஹர்லால் நேரு கூறியுள்ள ஹம்பி நகரைத் தலைநகராக கொண்ட  .விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் வரலாற்றை சுருக்கமாக காண்போமா? 1296ம் ஆண்டில் அலாவுதின் கில்ஜி தென்னிந்தியாவை ஆக்ரமித்த பின் நமது கோயில்கள் சூறையாடப்பட்டன, கலாச்சார சின்னங்கள் அழிக்கப்பட்டன, திருக்கோவில்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இவ்வாறு மிலேச்சர்களினால் நமது கலாச்சாரம ழிவதைக் கண்டு  ஆத்திரம் கொண்ட மக்கள் தங்கள் தர்மத்தை காக்க எடுத்துக்கொண்ட முயற்சியின் மூலமே விஜயநகர சாம்ராஜ்யம் தோன்றி மாபெரும் இந்து சாம்ராஜ்யமாக விரிந்தது

 
 பெரிய வெங்கல மணிகள் 
 
முதலில் எவ்வாறு சங்கமாவின்  ஐந்து பிள்ளைகளில் இருவரான ஹரிஹர புக்கர் என்னும் சகோதரர்கள்  ஸ்ரீவித்யாரண்யரின் ஆலோசனையின் பேரில் ஆனேகுந்தியில் விஜய நகர சாம்ராஜ்ஜியத்திற்கு 18.04.1336 அன்று வித்திட்டனர் என்பதை பார்த்தோம். இவர்கள் சங்கமா வம்சாவளியை சார்ந்தவர்கள். வித்யாரண்யரை சிறப்புப்படுத்தும் விதமாக விஜயநகரம் முன்பு வித்யாநகரம் என்று அறியப்பட்டது என்பதை கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்கிறோம். அதற்குப்பின் சால்வ வம்சத்தினரினரும், துளு வம்சத்தினரும், அரவிது வம்சத்தினரும் விஜயநகரை ஆண்டனர். கிருஷ்ணதேவராயர் துளு வம்சத்தை சார்ந்தவர், இவர் தனது வெற்றியின் மூலம் இச்சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார்இவரது காலத்தில் பல்வேறு கோவில்கள் கட்டப்பட்டன. இவர் தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் பல காவியங்கள் படைத்துள்ளார். இவருக்குபின் வந்த சதாசிவராயரின் காலத்தில் முஸ்லிம்களின் படையெடுப்பில் இந்த சாம்ராஜ்யம் அழிந்தது, மலைகளும், துங்கபத்ரா ஆறும் தங்களுக்கு அரணாக விளங்கும் என்று போட்ட கணக்கு பொய்த்தது விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ந்த்து.  மீண்டும் ஹம்பி நகரம் சூறையாடப்பட்டது அவ்வாறு ஆறு மாதங்களாக சூறையாடப்பட்டபின் எஞ்சியவற்றையே நாம் இன்று காண்கின்றோம். விஜயநகர கதையை சிறிது மனதில் வைத்துகொண்டு இனி விருபாக்ஷீஸ்வரர் ஆலயத்திற்குள் செல்வோமா?  

அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்கள்
  
இக்கோவிலுக்கு செல்லும் பாதை ஒரு காலத்தில் இராஜ பாட்டையாக இருந்தது. இப்போது அந்த அகலமான வீதிகளின் இருபுறமும் கடைகள் உள்ளன.   இவ்வாலயம் புகழ் வாய்ந்த ஹேமகூட பர்வத்ததின் மேல் அமைந்துள்ளது. சிவபெருமான் இத்தலத்தில் விரூபாக்ஷீஸ்வரராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்பம்பாதேவியாக அன்னை மலைமகள் பார்வதி தவம் செய்து சிவபெருமானை தவ்ம் செய்ததால் பம்பாபதி என்ற திருநாமமும் சிவபெருமானுக்கு உண்டுஇவ்வாலயம் யாரால் முதலில் கட்டப்பட்டது என்று தெரியவில்லை ஆனால் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இக்கோயில் புதுபிக்கப்பட்டு விரிவிபடுத்தப்பட்டுள்ளது. இரண்டு பெரிய இராஜகோபுரங்களும் இரண்டு பிரகாரங்களும் கொண்டது இக்கோவில்வெளிக்கோபுரம்  பிஸ்டப்பய்ய கோபுரம் என்று அழைக்கப்படுகின்றது. கோபுர முகப்பில் பல்வேறு அருமையான சிற்பங்கள் உள்ளன.  11 நிலை கொண்ட இந்த கோபுரம் 165 அடி உயரமானது. இரண்டாவது கோபுரம் ராயர் கோபுரம் என்றழைக்கப்படுகின்றது. இந்த இரண்டு கோபுரங்களையும் கடந்து சென்றபின் கொடி மரத்தையும், விளக்குத்தூனையும் காணலாம் அதன் அருகில் எண்ணத்தாஈ ஈடேற்றும் கல் உள்ளது. அதில் கை வைத்து பக்தர்கள் தாங்கள் நினைத்தது  நடைபெறுமா? என்று சோதித்துப் பார்த்துக்கொள்கின்றனர். ஐயனுடைய வாகனமான நந்தி மூன்று முகங்களுடன் வித்தியாசமாக  அமைந்துள்ளது( படத்தை பார்க்கவும்
 மூன்று நந்திகள்


 
 மத்தளம் 
 
கோயில் கற்றளி கோயில் அருமையான தூண்கள் அதில் உள்ள  சிற்பங்கள் அனைத்தும் அதை விட அருமை ஒரு தூணில் இன்றைய தினம் பட்டுப்புடவைகளில் வரும் அனைத்து டிசைன்களையும் அக்காலமே செதுக்கி வைத்திருப்பதைக் காண முடிந்தது. இடப்புறம் பாதாளேஸ்வரர், முக்திநரசிம்மர், சூரியநாராயணர்  சன்னதிகள் உள்ளன. விருபாக்ஷீஸ்வரர் சன்னதி நடுவில் அமைந்துள்ளது. கர்ப்பகிரகத்தில்  சுயம்பு மூர்த்திலிங்க ரூபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார் பம்பாபதி. ஆவுடை கிடையாது. வெள்ளி முக கவசம்   எம்பெருமானுக்கு சார்த்துகின்றனர். நாங்கள் சென்ற சமயம் அபிஷேகம் நடந்து கொண்டிருந்து. நிஜ ரூபத்தில்  ஆலமுண்ட நீலகண்டனை, வேதப்பொருளோனை, மா வகிடண்ண கண்ணி பாகனை  தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. ஸ்ரீவிருபாக்ஷீஸ்வரர் மேல் ஸ்ரீவியாஸராஜர் சிவஸ்துதி அருளியுள்ளார்சீனப்பநாயக்காக இருந்து மனம் மாறி தாசரான ஸ்ரீபுரந்தரதாஸரும் பல கீர்த்தனைகள் இயற்றியுள்ளார்.  இக்கோவிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன

அம்மன் ஆலயத்தில் முன் உள்ள அற்புத மர ஓவியம்
மும்மூர்த்திகளும் தமது வாகனங்களில் உள்ளனர் 


   முதலாவது ஹம்பாம்பா என்னும் பம்பாதேவி மற்றும் புவனேஸ்வரி. இதில் புவனேஸ்வரி கிருஷ்ணதேவராயரின் குலதெய்வமாம் அவர் போருக்கு செல்லும் முன் இந்த அன்னைக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து அனுமதி பெற்றுச்செல்வாராம் என்று அங்கிருந்த அர்ச்சகர் கூறினார். பட்டுச்சேலைகள் மடிப்பு மடிப்பாக  படிப்படியாக ஜகத் ஜனிக்கு, ஜகம் மாதாவிற்கு, அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகிக்கு செய்திருந்த அலங்காரம் வித்தியாசமாகவும் அதே சமயம் அருமையாகவும் இருந்தது. புவனேஸ்வரி அம்மனின் சன்னதி கதவின் மேல் இருந்த மரச்சிற்பம் மிகவும்  நுணுக்கமாக  செதுக்கப்பட்டுளது. மூஷிக வாகனத்தில் விநாயகர், அன்ன வாகனத்தில் பிரம்மா, கருட வாகனத்தில் விஷ்ணு, ஏழு குதிரைகள் பூட்டிய  தேரில் சூரியன் என்று அருமையாக செதுக்கப்பட்டுள்ளதுசன்னதிக்குப்பின் புறம் ஒரு இருட்டான பகுதி உள்ளது அங்கு ஒரு துளையின் வழியாக இராஜ கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் வண்ணம் அமைத்துள்ளனர். இரவு நேரம் என்பதால் நாங்கள் பார்க்கவில்லை சூரிய வெளிச்சத்தில்தான் நிழல் தெரியுமாம். இக்கோவில் அக்கால சிற்பிகளின் கை வண்ணத்திற்கு  ஒரு   சிறந்த உதாரணம். நாங்கள் ஹம்பிக்காக நாள் ஒதுக்கவில்லை, தாங்கள் இந்த யாத்திரை மேற்கொண்டால் ஒரு நாளாவது அங்கு தங்கி இந்த அருமையான கலைப்படைப்புகளை கண்டு களியுங்கள், தாங்கள் இந்த முடிவுக்காக நிச்சயம் வருத்தப்பட மாட்டீர்கள். மேலும் நவக்கிரக சன்னதி மற்றும் மாதவப்பெருமாள் சன்னதியும் உள்ளது. இவ்வாலயத்தின் உள்ளே ஒரு மூடப்பட்ட கால்வாயின் வழியே துங்கபத்ரா நதி ஓடுகின்றது. மிகப்பெருய வெங்கல காண்டா மணிகளையும் பார்த்தோம்
 பகலில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் இடம் 
 
 உண்மையிலேயே இக்கோயில் ஒரு கலைக்கூடம்அருமையான ஒரு கோவில் தரிசனத்திற்குப்பின் வெளியே வந்தோம். கோபுர வாசலில் வாழைத்தார்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தனர், அதை அங்கிருந்த பக்தர்கள் வாங்கி கோ மாதாவிற்கு கொடுத்துக்கொண்டிருந்தனர். நம்மூரில் அகத்திக்கீரை கொடுப்போம் இங்கோ வாழைத் தோப்புகள் நிறைந்துள்ளதால் வாழைசீப்புகளை ( 2 ரூபாய்தான் ஒரு சீப்பு) வாங்கிக் கொடுக்கின்றனர். நாங்களும் ஆளுக்கு ஒரு சீப்பு வழைப்பழம் வாங்கிக்கொடுத்து விட்டு சிறிது நேரம் கடைகளை சுற்றிப்பார்த்து விட்டு தங்கும் விடுதிக்கு திரும்பி வந்து இரவு உணவை முடித்து விட்டு ஹரிப்ரியா வண்டிக்காக புகை வண்டி நிலையம் சென்று காத்திருந்தோம்.
 
  அற்புத கல் சிற்பங்கள்
 
இந்த வண்டி திருப்பதியிலிருந்து கோலாப்பூருக்கு செல்கின்றது. அதாவது கண்கண்ட தெய்வம் கலியுக வரதன் வேங்கடேச  பெருமாளின் ஷேத்திரத்திலிருந்து அகலகில்லேன் இறையும் என்று அவன் திருமார்பில் அலர்மேல் மங்கையாம் மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் கோலாப்பூர் செல்லும் வண்டிக்கு ஹரிப்பிரியா என்று அவள் நாமம் வைத்திருப்பது சால பொருத்தமாக உள்ளது அல்லவா?  காத்திருக்கும் நேரத்தில் இன்னும் ஹம்பியில் அவசியம் பார்க்கவேண்டிய இடங்களை  தங்களுக்கு சுற்றிக்காட்டுகின்றேன் அடியேனது மைத்துனன் அனுப்பிய படங்கள் உள்ளன.

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home