Tuesday, December 6, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -16

Visit BlogAdda.com to discover Indian blogs
 
 ஹம்பியில் பார்க்க வேண்டிய இடங்கள் 
(படத்தை பெரிதுபடுத்தி பாருங்கள்)
அடுத்து ஹம்பியில் பார்க்க வேண்டிய ஆலயம் விந்தைமிகு விஜயவிட்டல ஆலயம். மிலேச்சர்களால் சிதைக்கப்பட்டும் இவ்வாலயம் இன்றும் நம் கண்ணுக்கு விருந்தாக விளங்குகின்றது. இவ்வாலயம் கி.பி. 1513ல் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. பல்கோண வடிவில் கட்டப்பட்டுள்ள ஆலயத்தின் ஒவ்வொரு தூணும் ஒரு கதை சொல்கின்றது. இவ்வாலயத்திற்கு   எதிரே உள்ள கல் இரதம் ஒரு அருமையான  கலைப் படைப்பு. 
 
 கல் இரதம்
இதில் உள்ள சிற்பங்களின் அழகைக் காணுங்கள் 
( இப்பதிவில் உள்ள படங்களை எடுத்தவர்கள் இவர்கள் ) 
ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் ஆலயத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் மதங்க மலை உள்ளது இம்மலையின் மேல் வீரபுவனேஸ்வரர் ஆலயம் உள்ளது.  மலை உச்சிக்கு சென்று பார்த்தால்  விருபாக்ஷீஸ்வரர்   ஆலயத்தின் மேற்கு பகுதியை அருமையாக தரிசிக்கலாம்.  மேலும் ஹேமகூட மலை, இரத வீதி,  துங்கபத்ரா, யாணை கொட்டகை , கோட்டை ஆகியவற்றை பறவைப் பார்வையில் காணலாம்.  
 உக்ர நரசிம்மர்
பெருமாளின் அழகே அழகு

 படாவி லிங்கம் 


கண்காணிப்பு  காவற் கூடம்



இதுவல்லாமல்  ஹம்பியிலிருந்து கமலாப்பூர் செல்லும் வழியில்   18அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன கடலேகலு  கணபதி, அழகிய நீராழி மண்டபத்துடன் கூடிய கிருஷ்ணர் கோயில்,   12 அடி  கருப்புக் கல்லால் ஆன படாவி லிங்கம்,   லிங்கத்தின் கீழே கால்வாய் ஒன்று செல்கின்றது.  மற்றும் 22 அடி உக்ர நரசிம்மர்  கைகள் சிதைந்த நிலையிலும் சுவாமியின் உக்கிரம் இன்னும் குறையவில்லை, வீரபத்திரர் கோவில், பாதாளீஸ்வர் கோவில் , இராஜ மாதா குளிக்கும்  “குயின்ஸ் பாத்” , 11 யாணைகள் கட்டப்பட்ட எலிபென்ட்ஸ் ஸ்டேபிள்.  ஆகியவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் சமயம் எடுத்துக்கொண்டு அனைத்தையும் பார்த்து மகிழுங்கள்.  மேலே உள்ள ஹம்பியின் வரைபடத்தை பாருங்கள். மழைக்காலம் விடுத்து செல்ல ஹம்பியில் அருமையாக பார்க்க அநேக இடங்கள் உள்ளன. 

படிக்குளம் (Stepped tank)

நீங்கள் ஹம்பியை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த போது ஹரிப்பிரியா விரைவு வண்டி மந்திராலயம் ரோடு புகைவண்டி நிலையத்தை அடைந்து விட்டது. இரவு சுமார் 3.oo மணிக்கு  நாங்கள் அந்த நிலையத்தை அடைந்தோம். அந்த நேரத்திலும் மந்திராலயம் செல்ல அரசு பேருந்து காத்துக்கொண்டிருந்து. விசாரித்த போது பக்தர்களின் நன்மையை முன்னிட்டு புகை வண்டி வரும் சமயங்களில் பேருந்து உள்ளது என்று கூறினார்கள்.      மந்திராலயம் ரோடு புகைவண்டி நிலையத்திற்கும். ஸ்ரீ ஸ்ரீ இராகவேந்திரர் மந்திராலயத்திற்கும் இடையே 32 கி.மீ தூரம் உள்ளது. நாங்கள் ஆட்டோ மூலமாக மந்திராலயத்திற்கு புறப்பட்டோம்.  மந்திராலயம் சென்று சேர்வதற்குள் இராகவேந்திர சுவாமிகளின் சரிதத்தை சுருக்கமாக பார்த்து விடுவோமா? 

 இத்துடன் நவபிருந்தாவன பதிவுகள் நிறைவுற்றன. இது வரை ஒரு சிறு விபத்து காரணமாக வீட்டின் உள்ளேயே இருந்த காரணத்தால் நவபிருந்தாவன யாத்திரைப்பகுதியை வெகு வேகமாக பதிவிட முடிந்தது, இனி பணிக்கு செல்ல வேண்டும் மற்ற வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டும் என்பதால் சிறிது  இடைவெளி விட்டு மந்திராலயப் பதிவுகள் தொடரும். தொடர்ந்து வந்து படித்து ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

Labels: , , ,

Monday, December 5, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -15

Visit BlogAdda.com to discover Indian blogs

 
 ஸ்ரீ யந்த்ரோத்தாரக ஹனுமன்

அடுத்து நாம் பார்க்க இருப்பது சக்ர தீர்த்தமும் அதன்  கரையில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் ஆலயம் மற்றும் ஸ்ரீ யந்த்ரோத்தாரக ஹனுமான் ஆலயமும் ஆகும்.  துங்கபத்ரா நதி கிழக்காக ஓடி வந்தவள் உத்தரவாகினியாக ( வடக்காக) திரும்பும் இடம் தான் சக்க்ர தீர்த்தம் இவ்விடத்தில் துங்கபத்ரை கிழக்கில் சிறிது தூரம் நீண்டு சென்று பின் வடக்காக திரும்புவதால் ஒரு சுழற்சி ஏற்படுகின்றது. இவ்வாறு சுழற்சி ஏற்படுவதல் இவ்விடத்திற்கு சக்கர தீர்த்தம் என்று பெயர். இவ்விடத்தில்தான் ஸ்ரீ வியாசராஜருக்கு அனுமன் காட்சியளித்தான் அதன்பலனாக அவர்  ஸ்ரீ யந்த்ரோத்தாரக ஹனுமனை பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீராமருக்கு சுக்ரீவன் அன்னை சீதாதேவியின் நகைகளை  காட்டிய இடம் இதுதான். சக்கர தீர்த்தத்தில் சிக்கிய  கோவிந்த ஓடயரை ஸ்ரீவியாஸராஜர் காப்பாற்றிய இடமும் இதுதான். 

யந்த்ரோத்தாரக ஹனுமன் கோவில் 

ஹம்பியிலே ஸ்ரீவியாஸராஜர் சுமார் 40 ஆண்டு காலம் இருந்தார். அப்போது அவர்  தினமும் சக்ரதீர்த்த கரியில் ஆம்ர்ந்து  தியானம் செய்வது வழக்கம். இவ்வாறு ஒரு நாள் தியானம் செய்து கொண்டிருந்த போது அவரது மனத்திரையில் வாயு புத்ரன் அனுமன் வரத்தொடங்கினார். இவ்வாறு ஏன் நடக்கின்றது என்று புரியாமல் ஸ்ரீவியாஸராஜர் அனுமனை பிரார்த்தனை செய்ய, சொல்லின் செல்வனும் அவரது கனவில் தோன்றி தன்னை சக்கர  தீர்த்தக்கரையில் பிரதிஷ்டை செய்யுமாறு பணித்தார்.  பின்னர் தானே  வானர ரூபத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டிய இடத்தையும் காட்டி அருளினார். ஸ்ரீவியாஸராஜரும் கரித்துண்டினால் அவ்விடத்தில் ஒரு பாறையில் அனுமன் உருவம் வரைந்து பொட்டு வைத்தார், உடனே ஒரு அற்புதம் நிகழ்ந்தது, பாறையில் வரைந்த ஸ்ரீஆஞ்சநேயர் உருவம் உயிர் பெற்று பறந்தது மற்றும் பாறையில் இருந்த உருவமும் மறைந்தது. இப்படியே பன்னிரண்டு நாட்கள் நடந்தன. பதிமூன்றாம் நாள் உருவம் வரைந்து  முதலில் கயிற்றினால் யந்திரம் அமைத்து திக்பந்தனம் செய்து பின்னர் பொட்டு வைத்தார் அன்றைய தினம் ஸ்ரீவியாஸராஜரின் பக்திக்கு கட்டுப்பட்டு அனுமனும் அப்படியே நின்றார். பின்னர் ஸ்ரீவியாஸராஜர் பறந்து சென்ற பன்னிரண்டு அனுமன்களையும் ஒன்றன் வாலை ஒன்று பிடிக்குமாறு  அமைத்து ஒரு வேலி உருவாக்கினார். இவ்வாறு பக்தர்களுக்கு அருள யந்திரத்தில் எழுந்தருளிய  சஞ்சீவி மலை கொணர்ந்த அஞ்சனை மைந்தனை ஸ்ரீ யந்த்ரோத்தாரக ஹனுமானை ஆனேகுந்தி செல்பவர்கள் அவசியம் தரிசனம் செய்து நன்மையடைகின்றனர்.   இவ்வாலயம் கோதண்டராமர் ஆலயத்தின் அருகில் ஒரு சிறு குன்றின் மேல் உள்ளது. ஆறு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் இராமர் அன்னை ஜானகியுடனும், இளவல் இலக்குவனுடனும் வித்தியாசமாக  சுக்ரீவனுடனும் (அனுமன் அல்ல)  சேவை சாதிக்கின்றார்.  முதலில் கோதண்டராமர் ஆலயத்தில் இராமனை வணங்கி விட்டு பின் அனுமனை நெய் விளக்கேற்றி வணங்க சகல நன்மைகளும் கிட்டும், பாவங்கள் பறந்தோடும் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை. இந்த ஆலயங்களுக்கு நேர் எதிராக அஞ்சனாத்ரி மலை அமைந்துள்ளது மிகவும் சிறப்பு. இக்கோவிலுக்கு வலப்புறம் ஸ்ரீஅச்சுதராயர் ஆலயம் உள்ளது.  இதன் எதிரே அக்காலத்தில் முத்தும் மணியும் விற்பனை செய்யப்பட்ட ஸுலேபஜார் உள்ளது. 

கோதண்டராமரின் ஆலயத்திற்கு எதிரில் உள்ள ஒரு சிறு மலையில் ஸ்ரீநரஹரி  தீர்த்தர் மற்றும் ஸ்ரீரகுநந்தனர் பிருந்தாவனங்கள் உள்ளன.  முதலாமவர் மத்வாச்சாரியாரின் பிரதான நான்கு சீடர்களில் ஒருவர்.  பத்மநாப தீர்த்தருக்குப் பின் பட்டத்திற்கு வந்தவர். கஜபதி வம்ச அரசரிடமிருந்து ஸ்ரீமூலராமர் விஹ்ரகத்தைப் பெற்று மத்வரிடம் தந்தவர். ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் அருகே உள்ள ஸ்ரீகூர்மம் என்ற தலத்தில் கூர்மரை பிரதிஷ்டை செய்தவர். இரகுநந்தனர் தற்போது ஸ்ரீஇராகவேந்திர மடம் என்று அழைக்கப்படும் வித்யா மடத்தின் பீடாதிபதியாக இருந்தவர். இவரது குருநாதர், இன்றும்  விருக்ஷ ரூபமாய் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஸ்ரீஜதாமித்ரர் ஆவார்.  

அடுத்து நாம் பார்க்க வேண்டிய இடம் மதங்க மலை. விருபாக்ஷீஸ்வரர் ஆலயத்திலிருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் இம்மலை உள்ளது. மதங்கமலையின் மேல் வீரபுவனேஸ்வர் ஆலயம் அமைந்துள்ளது. இம்மலையின் உச்சியில் இருந்து விருபாக்ஷீஸ்வரர் ஆலயத்தின் மேற்கு கோபுரம், ஹேமகூட மலை, தேரோ(டிய)டும்  இராஜ பாட்டை, யாணை லாயம், மற்றும் கோட்டை ஆகியவற்றை அருமையாக கண்டு களிக்கலாம்.
கோதண்டராமர் ஆலயத்திற்கு இடப்புறம் ஸ்ரீவராஹ சுவாமி ஆலயம், ஸ்ரீபுரந்தரதாசர் மண்டபம் மற்றும் ஸ்ரீவிட்டல் ஆலயம் அமைந்துள்ளன. 


 
புரந்தரதாசர் 

  முதலில் மிகுந்த பணக்காரராக   இருந்தார். இளம்பருவத்திலேயே சீனப்பநாயக் என்று அழைக்கப்பட்ட இவர் வைரத்தில் விளையாடியவர் இவர். வளர்ந்தபின் வைரவைடூரிய வியாபாரி ஆகி அளவற்ற செல்வம் சம்பாதித்து நவகோடி நாராயணாய் விளங்கினார். ஆனால் அவர் பரமலோபியாக இருந்தார். எச்சில் கையால் கூட காக்கையை ஓட்டாதவர். தன் மனைவி யாருக்கோ பிச்சை இடுவது போல கனவு கண்டதற்காகவே இரண்டு நாட்கள் மனைவியை பட்டினி போட்டவர். இவரை திருத்தி பணிகொள்ள ஸ்ரீமன் நாராயணன் திருவுளம் கொண்டு ஒரு வயோதிகராக  இவரிதம் வந்து யாசகம் கேட்டார், அவருக்கு சீனப்ப நாயக் எந்த யாசகமும் தரவில்லை. இவ்வாறு ஆறு மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் முதியவர் சீனப்பநாயக்கின் ,மனிவியிடம் சென்று யாசகம் கேட்டார், அந்த அம்மையாரும் என்னுடைய சொத்து எதுவுமில்லை எல்லாம் அவருடையது என்று மறுக்க, உன் மூக்குத்தி உன் பிறந்த வீட்டில் போட்டது தானே அதைக்கொடு என்று கேட்ல அந்த அம்மையாரும் அதை கழற்றிக்கொடுக்க அதை சீனப்பநாயக்கிடமே சென்று விற்க, தனது மனைவியின் வைர மூக்குத்தி போல அல்லவா உள்ளது என்று சந்தேகப்பட்டு அம்மூக்குத்தியை தனது இரும்புப்பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு வீட்டிற்கு சென்று பார்த்தபோது மனைவியின் மூக்கு மூளியாக இருப்பதைக்கண்டு மூக்குத்தி எங்கே என்று வினவ அந்த அம்மையாரும்  ஸ்நானம் செய்வதற்காக கழற்றி வைத்துள்ளேன் எடுத்து வருகின்றேன் என்று கூறி, உள்ளே சென்று கணவனை ஏமாற்றி ஏழை பிராமணனுக்கு உதவியதற்காக தனது வைர மோதிரத்தை உடைத்து பாலில் கலந்து குடிக்க சென்றபோது அந்த கிண்ணத்திலிருந்து அந்த வைர மூக்குத்தி  வெளியே விழுந்த்து. இறைவனின் கருனையை எண்ணி வியந்த அந்த அம்மையார் அதை தன் கணவரிடம் கொடுத்தார். அதை எடுத்துக்கொண்டு கதைக்கு ஓடிய சீனப்பநாயக் அங்கு இரும்புப்பெட்டியை திறந்து பார்க்க அங்கு வைர மூக்குத்தியை காணாமல் திகைத்தார். அவருக்கு உண்மை புலனாகியது. வயதானவராக தன்னிடம் வந்து யாசகம் கேட்டவர் வேறு யாருமல்ல மஹாலக்ஷ்மியை தனது மார்பில் கொண்ட  மாதவன் ஸ்ரீஹரிதான். தனது லோபித்தனத்தினால் அவரை தரிசனம் செய்யும் பாக்கியத்தை இழந்தேனே! வ்ன்று மனம் வருந்தி தனது செல்வம் அனைத்தையும் துறந்து உடுத்த உடுப்புடன் மனைவி மற்றூம் மகனுடன் ஸ்ரீஹரியை நோக்கி தேடி நடுவீதியில் நடக்கலானார்.  பின்னர் வியாஸராஜரை கண்டு அவரால் தீக்ஷை பெற்று புரந்தரதாஸராகி, புரந்தரவிட்டல என்ற அங்கிதத்தில் சுமார் 4,75,000 கீர்த்தனைகள் புனைந்தார். வியாஸராஜர் பிருந்தாவனஸ்தரான போது உடனிருந்தவர் இவர்.  துங்கபத்ரா நதிக்கரையிலேயே சுற்றி வந்த புரந்தரதாசர் தன் காலத்தை கழித்து இறுதியில் சக்ர தீர்த்த கரையிலேயே அந்தர்யாமியானார். அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது அதன் ஒரு தூணில் கையில் தும்புராவுடன் புரந்தரதாசர்  சிலை உள்ளது. இம்மண்டபத்திலிருந்தும் அஞ்சனாத்ரியை  தரிசிக்கலாம்.  இம்மண்டபத்திற்கு இடப்புறம் அழகான கல்லால் ஆன இராஜ துலாபாரம் உள்ளது. இத்துலாபாரத்தில் ஒரு சமயம் கிருஷ்ணதேவராயர் ஸ்ரீவியாசராஜருக்கு எடைக்கு எதை தங்கம் தந்து மகிழ்ந்தாராம்.  அரசர்கள் சில நாட்களில் தங்கள் எடைக்கு நிகரான செல்வத்தை ஏழை மக்களுக்கு இத்துலாபாரத்தில் நிறுத்து  கொடுத்தனர் என்பாரும் உண்டு. இம்மண்டபத்திற்கு அருகில் ஒரு பாழடைந்த  ஆனேகுந்தியையும், ஹம்பியையும் இனைக்கும்  பாலம் உள்ளது.

Labels: , , ,

Saturday, December 3, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -14

Visit BlogAdda.com to discover Indian blogs
 
 இராஜ கோபுரத்தில் உள்ள ஒரு அழகிய சிற்பம்

இது போன்ற ஒரு நகரத்தை கண்கள் பார்த்தது இல்லை என மேலை நாட்டுப்பயணிகள் பலராலும் புகழப்பட்ட நகரம். அகலமான வீதிகள், வேலைப்பாடுகள் கொண்ட அழகிய மாளிகைகள், வண்ண மலர்களும் கனிகளும் நிறைந்த தோட்டங்கள், ஓடைகள், நீருற்றுகள், என நகரம் முழுவதும் பசுமையும் குழுமையும் பரவிக்கிடந்தன. வணிக வீதிகளில் வைரம் வைடூரியம், முத்து, பவளம் என்று பலவிதமான விலைமதிப்பற்ற நவரத்தினங்கள் கொட்டிக்கிடந்தன. செல்வமும் வளமையும் திகழ ரோமாபுரிக்கு நிகராக விளங்கியது அந்த நகரம் என்று விஜய நகர சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய ஹம்பியைப் பற்றி தனது ’டிஸ்கவரி ஆப் இந்தியா’ என்ற நூலில்  ஜவஹர்லால் நேரு கூறியுள்ள ஹம்பி நகரைத் தலைநகராக கொண்ட  .விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் வரலாற்றை சுருக்கமாக காண்போமா? 1296ம் ஆண்டில் அலாவுதின் கில்ஜி தென்னிந்தியாவை ஆக்ரமித்த பின் நமது கோயில்கள் சூறையாடப்பட்டன, கலாச்சார சின்னங்கள் அழிக்கப்பட்டன, திருக்கோவில்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இவ்வாறு மிலேச்சர்களினால் நமது கலாச்சாரம ழிவதைக் கண்டு  ஆத்திரம் கொண்ட மக்கள் தங்கள் தர்மத்தை காக்க எடுத்துக்கொண்ட முயற்சியின் மூலமே விஜயநகர சாம்ராஜ்யம் தோன்றி மாபெரும் இந்து சாம்ராஜ்யமாக விரிந்தது. 

 
 பெரிய வெங்கல மணிகள் 
 
முதலில் எவ்வாறு சங்கமாவின்  ஐந்து பிள்ளைகளில் இருவரான ஹரிஹர புக்கர் என்னும் சகோதரர்கள்  ஸ்ரீவித்யாரண்யரின் ஆலோசனையின் பேரில் ஆனேகுந்தியில் விஜய நகர சாம்ராஜ்ஜியத்திற்கு 18.04.1336 அன்று வித்திட்டனர் என்பதை பார்த்தோம். இவர்கள் சங்கமா வம்சாவளியை சார்ந்தவர்கள். வித்யாரண்யரை சிறப்புப்படுத்தும் விதமாக விஜயநகரம் முன்பு வித்யாநகரம் என்று அறியப்பட்டது என்பதை கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்கிறோம். அதற்குப்பின் சால்வ வம்சத்தினரினரும், துளு வம்சத்தினரும், அரவிது வம்சத்தினரும் விஜயநகரை ஆண்டனர். கிருஷ்ணதேவராயர் துளு வம்சத்தை சார்ந்தவர், இவர் தனது வெற்றியின் மூலம் இச்சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார்.  இவரது காலத்தில் பல்வேறு கோவில்கள் கட்டப்பட்டன. இவர் தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் பல காவியங்கள் படைத்துள்ளார். இவருக்குபின் வந்த சதாசிவராயரின் காலத்தில் முஸ்லிம்களின் படையெடுப்பில் இந்த சாம்ராஜ்யம் அழிந்தது, மலைகளும், துங்கபத்ரா ஆறும் தங்களுக்கு அரணாக விளங்கும் என்று போட்ட கணக்கு பொய்த்தது விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ந்த்து.  மீண்டும் ஹம்பி நகரம் சூறையாடப்பட்டது அவ்வாறு ஆறு மாதங்களாக சூறையாடப்பட்டபின் எஞ்சியவற்றையே நாம் இன்று காண்கின்றோம். விஜயநகர கதையை சிறிது மனதில் வைத்துகொண்டு இனி விருபாக்ஷீஸ்வரர் ஆலயத்திற்குள் செல்வோமா?  

அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்கள்
  
இக்கோவிலுக்கு செல்லும் பாதை ஒரு காலத்தில் இராஜ பாட்டையாக இருந்தது. இப்போது அந்த அகலமான வீதிகளின் இருபுறமும் கடைகள் உள்ளன.   இவ்வாலயம் புகழ் வாய்ந்த ஹேமகூட பர்வத்ததின் மேல் அமைந்துள்ளது. சிவபெருமான் இத்தலத்தில் விரூபாக்ஷீஸ்வரராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.  பம்பாதேவியாக அன்னை மலைமகள் பார்வதி தவம் செய்து சிவபெருமானை தவ்ம் செய்ததால் பம்பாபதி என்ற திருநாமமும் சிவபெருமானுக்கு உண்டு.  இவ்வாலயம் யாரால் முதலில் கட்டப்பட்டது என்று தெரியவில்லை ஆனால் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இக்கோயில் புதுபிக்கப்பட்டு விரிவிபடுத்தப்பட்டுள்ளது. இரண்டு பெரிய இராஜகோபுரங்களும் இரண்டு பிரகாரங்களும் கொண்டது இக்கோவில்.  வெளிக்கோபுரம்  பிஸ்டப்பய்ய கோபுரம் என்று அழைக்கப்படுகின்றது. கோபுர முகப்பில் பல்வேறு அருமையான சிற்பங்கள் உள்ளன.  11 நிலை கொண்ட இந்த கோபுரம் 165 அடி உயரமானது. இரண்டாவது கோபுரம் ராயர் கோபுரம் என்றழைக்கப்படுகின்றது. இந்த இரண்டு கோபுரங்களையும் கடந்து சென்றபின் கொடி மரத்தையும், விளக்குத்தூனையும் காணலாம் அதன் அருகில் எண்ணத்தாஈ ஈடேற்றும் கல் உள்ளது. அதில் கை வைத்து பக்தர்கள் தாங்கள் நினைத்தது  நடைபெறுமா? என்று சோதித்துப் பார்த்துக்கொள்கின்றனர். ஐயனுடைய வாகனமான நந்தி மூன்று முகங்களுடன் வித்தியாசமாக  அமைந்துள்ளது( படத்தை பார்க்கவும்) 
 மூன்று நந்திகள்


 
 மத்தளம் 
 
கோயில் கற்றளி கோயில் அருமையான தூண்கள் அதில் உள்ள  சிற்பங்கள் அனைத்தும் அதை விட அருமை ஒரு தூணில் இன்றைய தினம் பட்டுப்புடவைகளில் வரும் அனைத்து டிசைன்களையும் அக்காலமே செதுக்கி வைத்திருப்பதைக் காண முடிந்தது. இடப்புறம் பாதாளேஸ்வரர், முக்திநரசிம்மர், சூரியநாராயணர்  சன்னதிகள் உள்ளன. விருபாக்ஷீஸ்வரர் சன்னதி நடுவில் அமைந்துள்ளது. கர்ப்பகிரகத்தில்  சுயம்பு மூர்த்தி,  லிங்க ரூபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார் பம்பாபதி. ஆவுடை கிடையாது. வெள்ளி முக கவசம்   எம்பெருமானுக்கு சார்த்துகின்றனர். நாங்கள் சென்ற சமயம் அபிஷேகம் நடந்து கொண்டிருந்து. நிஜ ரூபத்தில்  ஆலமுண்ட நீலகண்டனை, வேதப்பொருளோனை, மா வகிடண்ண கண்ணி பாகனை  தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. ஸ்ரீவிருபாக்ஷீஸ்வரர் மேல் ஸ்ரீவியாஸராஜர் சிவஸ்துதி அருளியுள்ளார்.  சீனப்பநாயக்காக இருந்து மனம் மாறி தாசரான ஸ்ரீபுரந்தரதாஸரும் பல கீர்த்தனைகள் இயற்றியுள்ளார்.  இக்கோவிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. 

அம்மன் ஆலயத்தில் முன் உள்ள அற்புத மர ஓவியம்
மும்மூர்த்திகளும் தமது வாகனங்களில் உள்ளனர் 


   முதலாவது ஹம்பாம்பா என்னும் பம்பாதேவி மற்றும் புவனேஸ்வரி. இதில் புவனேஸ்வரி கிருஷ்ணதேவராயரின் குலதெய்வமாம் அவர் போருக்கு செல்லும் முன் இந்த அன்னைக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து அனுமதி பெற்றுச்செல்வாராம் என்று அங்கிருந்த அர்ச்சகர் கூறினார். பட்டுச்சேலைகள் மடிப்பு மடிப்பாக  படிப்படியாக ஜகத் ஜனிக்கு, ஜகம் மாதாவிற்கு, அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகிக்கு செய்திருந்த அலங்காரம் வித்தியாசமாகவும் அதே சமயம் அருமையாகவும் இருந்தது. புவனேஸ்வரி அம்மனின் சன்னதி கதவின் மேல் இருந்த மரச்சிற்பம் மிகவும்  நுணுக்கமாக  செதுக்கப்பட்டுளது. மூஷிக வாகனத்தில் விநாயகர், அன்ன வாகனத்தில் பிரம்மா, கருட வாகனத்தில் விஷ்ணு, ஏழு குதிரைகள் பூட்டிய  தேரில் சூரியன் என்று அருமையாக செதுக்கப்பட்டுள்ளது.  சன்னதிக்குப்பின் புறம் ஒரு இருட்டான பகுதி உள்ளது அங்கு ஒரு துளையின் வழியாக இராஜ கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் வண்ணம் அமைத்துள்ளனர். இரவு நேரம் என்பதால் நாங்கள் பார்க்கவில்லை சூரிய வெளிச்சத்தில்தான் நிழல் தெரியுமாம். இக்கோவில் அக்கால சிற்பிகளின் கை வண்ணத்திற்கு  ஒரு   சிறந்த உதாரணம். நாங்கள் ஹம்பிக்காக நாள் ஒதுக்கவில்லை, தாங்கள் இந்த யாத்திரை மேற்கொண்டால் ஒரு நாளாவது அங்கு தங்கி இந்த அருமையான கலைப்படைப்புகளை கண்டு களியுங்கள், தாங்கள் இந்த முடிவுக்காக நிச்சயம் வருத்தப்பட மாட்டீர்கள். மேலும் நவக்கிரக சன்னதி மற்றும் மாதவப்பெருமாள் சன்னதியும் உள்ளது. இவ்வாலயத்தின் உள்ளே ஒரு மூடப்பட்ட கால்வாயின் வழியே துங்கபத்ரா நதி ஓடுகின்றது. மிகப்பெருய வெங்கல காண்டா மணிகளையும் பார்த்தோம். 
 பகலில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் இடம் 
 
 உண்மையிலேயே இக்கோயில் ஒரு கலைக்கூடம்.  அருமையான ஒரு கோவில் தரிசனத்திற்குப்பின் வெளியே வந்தோம். கோபுர வாசலில் வாழைத்தார்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தனர், அதை அங்கிருந்த பக்தர்கள் வாங்கி கோ மாதாவிற்கு கொடுத்துக்கொண்டிருந்தனர். நம்மூரில் அகத்திக்கீரை கொடுப்போம் இங்கோ வாழைத் தோப்புகள் நிறைந்துள்ளதால் வாழைசீப்புகளை ( 2 ரூபாய்தான் ஒரு சீப்பு) வாங்கிக் கொடுக்கின்றனர். நாங்களும் ஆளுக்கு ஒரு சீப்பு வழைப்பழம் வாங்கிக்கொடுத்து விட்டு சிறிது நேரம் கடைகளை சுற்றிப்பார்த்து விட்டு தங்கும் விடுதிக்கு திரும்பி வந்து இரவு உணவை முடித்து விட்டு ஹரிப்ரியா வண்டிக்காக புகை வண்டி நிலையம் சென்று காத்திருந்தோம்.
 
  அற்புத கல் சிற்பங்கள்
 
இந்த வண்டி திருப்பதியிலிருந்து கோலாப்பூருக்கு செல்கின்றது. அதாவது கண்கண்ட தெய்வம் கலியுக வரதன் வேங்கடேச  பெருமாளின் ஷேத்திரத்திலிருந்து அகலகில்லேன் இறையும் என்று அவன் திருமார்பில் அலர்மேல் மங்கையாம் மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் கோலாப்பூர் செல்லும் வண்டிக்கு ஹரிப்பிரியா என்று அவள் நாமம் வைத்திருப்பது சால பொருத்தமாக உள்ளது அல்லவா?  காத்திருக்கும் நேரத்தில் இன்னும் ஹம்பியில் அவசியம் பார்க்கவேண்டிய இடங்களை  தங்களுக்கு சுற்றிக்காட்டுகின்றேன் அடியேனது மைத்துனன் அனுப்பிய படங்கள் உள்ளன.

Labels: , , ,