பழைய சீவரம் பரிவேட்டை உற்சவம்
காஞ்சி வரதர் கனு உற்சவம்
சென்ற வருடம் அத்தி வரதரை அனைவரும் தரிசித்து மகிழ்ந்தோம். புஷ்கரிணியில் பள்ளி கொண்டிருந்த அத்தி வரதர் ஒரு மண்டல காலம் வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு பள்ளி கொண்ட கோலத்திலும், நின்ற கோலத்திலும், சேவை சாதித்தார். அத்திகிரியில் ஆதி காலத்தில் இவரே மூல மூர்த்தியாக இருந்துள்ளார். எக்காரணத்தாலோ இவரை புஷ்கரிணியில் எழுந்தருளச் செய்தபோது புது மூலவரை பழைய சீவரம் மலையிலிருந்து எடுத்து சென்றார்களாம், எனவே வருடத்தில் ஒரு முறை உற்சவர் வரதராஜப்பெருமாள் பழைய சீவரம் எழுந்தருளுகிறார். இந்த உற்சவம் கனு மாட்டுப்பொங்கலன்று நடைபெறுகின்றது. பழைய சீவரம் பரிவேட்டையென்று அழைக்கப்படுகின்றது. சென்ற வருட பரிவேட்டையின் காட்சிகள் இப்பதிவில் இடம்பெறுகின்றன.
ஆதி அத்தி வரதர்
பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு இம்மூன்றும் சங்கமிக்கும் இடத்தின் வடகரையில் மலைக்கோயில் அமைந்துள்ள கிராமம் பழையசீவரம். செங்கல்பட்டிலிருந்து காஞ்சீபுரம் செல்லும் சாலையில் பழைய சீவரம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள சிறிய மலைமேல் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது.
தைத்திங்கள் இரண்டாம் நாள் இவ்வுற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. பொங்கலன்று இரவு காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 70 கி.மீ தூரம் பயணம் செய்து பழைய சீவரத்தை அடைகின்றார் காஞ்சி வரதர்.
பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்
(பாலாற்றின் ஒரு கரையில் அமைந்துள்ளது)
ஸ்ரீபுரி, ஸ்ரீபுரம், சீயபுரம், சீவரம், ஜீயர்புரம், விண்ணபுரம், பழைய சீவரம் மற்றும் திரிபுவன வீர சதுர்வேதி மங்கலம் என்று பலவாறு அழைக்கப்பட்ட திருத்தலம் பழைய சீவரம். ஊர் பெயரிலேயே பழைய என்ற சொல் உள்ளது. பல்லவர் காலம் தொட்டு பழைமை மிக்க ஊராக பழைய சீவரம் திகழ்ந்துள்ளது. முதலாம் பராந்தக சோழன் காலம் (கி.பி.907-957) இவ்வூர் முற்கால சோழரது ஆட்சியில் இருந்துள்ளது. கோப்பரகேசரி முதலாம் பராந்தகனின் 15வது ஆட்சி கல்வெட்டு (கி.பி.922) இவ்வூரில் கிடைத்துள்ளது.
இவ்வூர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. 1080-1) சீயபுரம் என வழங்கப்பட்டது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சீயபுரம் என்ற ஊர் திரிபுவன வீர சதுர்வேதி மங்கலம் என்று மாற்றப்பட்டுள்ளது. திரிபுவன வீரன் என்பது மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய விருது பெயராகும். இடைச்சோழர் காலத்தில் ராஜேந்திர சோழன் பெயரில் ராஜேந்திர சோழ விண்ணகர் என்று அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் இறைவன் ராஜேந்திர சோழ விண்ணகர ஆழ்வார், திருமாலிருஞ்சோலை ஆழ்வார் என்று சோழர் காலத்தில் அழைக்கப்பட்டுள்ளார். கி.பி.1729-ல் ஜீயபுர லக்ஷ்மி நரசிம்மர் என இறைவன் வழங்கப்பட்டுள்ளார். சோழர்கள் முதல் தனி நபர்கள் வரை பலர் இக்கோயிலுக்கு தானம் தந்துள்ளனர்.
மூலவர் பற்றிய செவி வழிச் செய்தி ஒன்று குறிப்பிடத்தக்கது. தற்போது காஞ்சிபுரத்தில் இருக்கும்ஸ்ரீவரதராஜப் பெருமாளின் மூலவர் பழைய சீவரத்தில் உள்ள மேல் மலையிலிருந்து எடுத்துச் சென்றதாக செவி வழிச் செய்தி கூறுகிறது.
அடுத்து சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் வட இந்தியர்கள் யாத்திரை வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி இருந்திருக்கிறது. இங்கு வரும்போது இறைவன் கனவில் தோன்றி, இவ்விடத்தில் ஒரு மண்டலம் தங்கினால் நோய் குணமாகும் என்று கூறியுள்ளார். அதன்படியே இங்குள்ள பிப்பிலி மரத்தினடியில் தங்கி, ஆற்றில் நீராடி ஒரு மண்டலம் வழிபட்டிருக்கிறார். நோயும் நீங்கி இருக்கிறது. அதன் பிறகு கோயிலின் ஒரு முக்கிய பிரமுகராக அவர் இருந்திருக்கிறார்.
பழைய சீவரம் மலைக்கோயில் போன்று திகழ்கிறது. மூலஸ்தானத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மேற்கு திருமுகமாக வீற்றருள்கிறார். இக்கோயில் மூலஸ்தானம், விமானம், அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், கொடிமரம், பலிபீடம், திருச்சுற்று பிராகாரம், கருடாழ்வார் சந்நதி, யாகசாலை, கண்ணாடி அறை, மடப்பள்ளி, ராஜகோபுரம், நான்குகால் மண்டபம், வாகன மண்டபம், ஆகிய பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது. இக்கோயில் மூலஸ்தானம் செவ்வக வடிவுடையது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் லட்சுமி நரசிம்மர் இடக்காலை மடித்து வலக்காலை தொங்கவிட்டு பத்மபீடத்தில் ஊன்றிய நிலையில் சதுர்புஜங்களுடன் ஸ்ரீலட்சுமி தேவியை இடது தொடையின் மீது அமர்த்தி ஆலிங்கனம் செய்த வண்ணம் மேற்கு திசையை நோக்கி அருட்பாலிக்கிறார். நரசிம்மரின் மேல் வலக்கரம் கத்தரி முத்திரையில் சக்கராயுதத்தைப் பற்றியுள்ளது. அவ்வாறு மேல் இடக்கரம் கத்தரி முத்திரையில் சங்கினை ஏந்தியுள்ளது.
கீழ் வலக்கரம் அபயஹஸ்தம் காட்டுகிறது. கீழ் இடக்கரம் இடது தொடையில் வீற்றிருக்கும் திருமகளை ஆலிங்கனம் செய்த வண்ணம் அமைந்துள்ளது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரஹரி இவர். நரசிம்மரின் திருமுக மண்டலம் சிம்ம முகமாக அமைந்துள்ளது. சிங்கபிரானின் தலையை கிரீடமகுடம் அலங்கரிக்கிறது. திருமார்பில் மகரகண்டிகையும், கௌஸ்துபமும் அலங்கரிக்கிறது. புஜங்களில் கேயூரமும், பாஜிபந்தமும், முன்கரங்களில் வளைகளும், நாபியின் மேல் உதரபந்தமும், இடையிலிருந்து முழங்கால் வரை வஸ்திர அலங்காரமும் பாதங்களில் பாதசரமும் அணிந்து வனப்போடு காட்சியளிக்கிறார்.
ஸ்ரீலட்சுமியாகிய திருமகள் சிங்கபிரானின் இடது தொடைமீது இரு கரங்களுடன் அமர்ந்துள்ளாள். அவளது இடக்கரம் கடக ஹஸ்தத்தில் தாமரை மலரைப் பற்றியுள்ளது. வலக்கரம் அழகிய சிங்கபிரானை அணைத்து ஆலிங்கனம் செய்த வண்ணம் காட்சியளிக்கிறது. திருமகளின் தலையை கரண்ட மகுடம் அலங்கரிக்கிறது. காதிலும், கழுத்திலும், மார்பிலும், இடையிலும், திரு பாதத்திலுமாக குண்டலங்கள், கண்டாபரணம், முத்துவடம், மணிவடம், ஒட்டியாணம், மேகலை, வஸ்திர கட்டு, கொலுசு, சதங்கையாவும் அணி செய்ய எழிலுருவாய் காட்சியளிக்கிறாள். ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் திருவுருவம் சுமார் 6 அடி உயரத்தில் வீற்றிருந்த நிலையில் எழுந்தருளியுள்ளது.
மூல விக்கிரகத்திற்கு முன்பு பிரகலாதவரதன் எனும் பெயரில் அழைக்கப்படும் திருமால், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் தலையை கிரீடமகுடம் அலங்கரிக்க, மேற்கரங்களில் சங்கு சக்கரம் தரித்து, கீழ்வலக்கரத்தில் அபயஹஸ்தம் காட்டி அருட்பாலிக்கிறார். இடக்கரம் கட்யவலம்பித ஹஸ்தத்தில் அமைந்துள்ளது. வலப்புறம் ஸ்ரீதேவி நாச்சியார் வலது கரத்தை லோல ஹஸ்தமாகக் கொண்டு இடக் கரத்தில் தாமரை மலரை கடக ஹஸ்தத்தில் கொண்டுள்ளாள். இடப்புறம் உள்ள ஸ்ரீதேவி நாச்சியார் வலக்கரம் நீலோற்பலம் பற்றியும், இடக்கரம் லம்ப ஹஸ்தமாக கொண்டு திரிபங்கியாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள்.
இங்கு தனிக்கோயில் நாச்சியார் அகோபிலவல்லித் தாயார் என்ற பெயரில் பத்மா சனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். உற்சவராகிய இவரது மேற்கரங்கள் இரண்டும் தாமரை மலரை தாங்கிய வண்ணம் காட்சியளிக்கிறது. கீழ்கரங்கள் இரண்டும் அபய ஹஸ்தத்திலும், வரத ஹஸ்தத்திலும் அமைந்துள்ளது. பெருமாளுக்கு இடப்புறம் உள்ள ஆண்டாள் திரிபங்கியாக நின்ற கோலத்தில் தரிசனம் அளிக்கிறார். இவளது வலக்கரம் நீலோற்பலமலரைப் பற்றியுள்ளது. இடக்கரம் லம்ப கரமாக நீண்டுள்ளது. தலையில் வசீகரிக்கும் ஆண்டாள் கொண்டையும், காதுகளில் குண்டலங்களும், கழுத்திலும், மார்பிலும் ஆபரணங்களும், இடையில் கச்சையும் அணிந்து திரிபங்கியாக ஆண்டாள் அற்புத வடிவில் அருட்கோலம் கொண்டு காட்சியளிக்கிறாள்.
பழைய சீவரம் மலையின் மேல் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சனம் கண்டருளுகின்றார். பின் அம்மண்டபத்தில் பூரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தருளுகின்றார். ஆங்கிலேயன் ராபர்ட் கிளைவ் அளித்த மகர கண்டியுடன் எழிலாக பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளுகின்றார். மண்டபத்தில் பெருமாளுக்கு மிக அருகில் நின்று நாம் திவ்யமாக இங்கு சேவிக்கலாம் என்பதால் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பரிவேட்டை உற்சவத்தன்று பழைய சீவரம் வருகின்றனர்.
பேரருளான் மண்டப சேவை 2018
பிரம்மாவின் யாகத்தில் இருந்து தோன்றியவர் என்பதால் பேரருளாரரின் திருமுகத்தில் வடுக்கள் நிறைந்திருக்கின்றன. அதுவே அவருக்கு அழகு.
பெருமாளின் பின்னழகு
தேவப் பெருமாள் மண்டப சேவை 2019
பின்னழகு
அந்தி சாயும் நேரம், புது அலங்காரத்துடன் மலையிலிருந்து கீழே இறங்கி முதலில் பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்கு எழுந்தருளுகிறார் வரதர். அவரை லக்ஷ்மி நரசிம்மர் எதிர் கொண்டு அழைக்கிறார். இவ்வாலயத்தில் சிறிது நேரம் இருந்த பின் இரு பெருமாள்களும். பாலாற்றின் அக்கரையில் அமைந்துள்ள திருமுக்கூடல் ஸ்ரீநிவாசப்பெருமாள் ஆலயத்திற்கு எழுந்தருளுகின்றனர். பகதர் அனைவரும் கோவிந்தா! கோவிந்தா! என்ற முழக்கத்துடன், ஆனந்த பரவசத்துடன் உடன் செல்கின்றனர்.
அந்தி சாயும் வேளை வரதர் மலையில் இருந்து இறங்குகின்றார்
மலை மேல் இருந்து பாலாற்றின் காட்சி
காஞ்சி வரதர் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்கு எழுந்தருளுகிறார்
எதிர் சேவை தந்தருளும் லக்ஷ்மி நரசிம்மர்
சிறிது நேரம் பழைய சீவரம் ஆலயத்தில் சேவை சாதிக்கின்றார் வரதர், பின்னர் இரு பெருமாள்களுமாக திருமுக்கூடல் அப்பன் ஆலயத்திற்கு எழுந்தருளுகின்றனர். சாலை வழியாக செல்லாமல் ஆற்றைக் கடந்தே இருவரும் வருகின்றனர். அப்போது வாண வேடிக்கைகள் சிறப்பாக நடைபெறுகின்றன
அப்பன் வெங்கடேசன் விமானம்
தொண்டை மண்டலத்திற்கே உரிய தூங்கானை மாடவடிவில் காணப்படும் கருவறையில் பெருமாள் வடக்கு நோக்கி திருமுகம் காட்டி நின்ற கோலத்தில் ஆஜானுபாவனாய் காட்சி தரும் அற்புதக் கோலம். திருமுக்கூடலில் எழுந்தருளும் வெங்கடேசப்பெருமாள் மூம்மூர்த்தி ரூபமாக சேவை சாதிக்கின்றார். திருக்கரங்களில் சங்கமும், சக்கரமும் ஏந்தியுள்ளதால் விஷ்ணு ரூபமாகவும், தலையில் ஜடாமுடியும், நெற்றிக்கண்ணும் உள்ளதால் சிவரூபமாகவும், திருக்கரங்களிலும், திருவடியிலும் தாமரை மலர் இருப்பதால் பிரம்ம ரூபமாகவும் அருள் பாலிக்கின்றார் வேங்கடேசப் பெருமாள். பெருமாளின் திருவடியில் பூமாதேவியும் மார்க்கண்டேயரும் அமா்ந்து வழிபடுகின்றனா். பெருமாளின் திருமார்பில் அலர்மேல் மங்கைத் தாயார் ஒருபுறமும், பத்மாவதித் தாயார் மறுபுறமும் உறைகின்றனர். உற்சவர் திருநாமம் ஸ்ரீநிவாசப்பெருமாள். திருவேங்கட மலையில் இருக்கும் வேங்கடவனின் தரிசனத்தைக் கண்ட மன நிறைவு இங்கும் ஏற்படுகின்றது.
தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டைமான் சக்கரவர்த்தி என்ற அரசர் , திருவேங்கடமலையில் அருளும் எம்பெருமானிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். அந்தப் பக்தியின் வெளிப்பாடாக திருமலை தெய்வத்துக்கு ஏராளமான திருப்பணிகளை மனமுவந்து செய்துவந்தார்.
ஒருமுறை திருமலையில் நடைபெறும் திருப்பணிகளைப் பார்வையிடச் சென்றார் மன்னர். இந்தச் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி, தொண்டை நாட்டின் மீது படையெடுத்து வந்த பகை மன்னன், நாட்டை முற்றுகையிட்டுவிட்டான். மன்னர் நாட்டில் இல்லாத நிலையில், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றனர் அமைச்சர்கள். ஒற்றர்கள் மூலம் மன்னருக்குத் தகவல் சென்றது. ஆனாலும், பகையரசன் முற்றுகையிட்டுவிட்ட நிலையில், மன்னர் மட்டும் என்னதான் செய்யமுடியும்?
பெருமாளிடம் பேரன்பும், மாசற்ற பக்தியும் கொண்டிருந்த தொண்டைமான், வேங்கடவனிடமே சரணடைந்தார். மனமுருகப் பிரார்த்தித்தார். பக்தர்களிடம் வாத்சல்யம் கொண்டிருப்பதால், பக்தவத்சலன் என்று போற்றப் பெறும் வேங்கடவன், தன் பக்தனைக் காப்பாற்றத் திருவுள்ளம் கொண்டுவிட்டார். தன் திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கினையும், சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வாரையும் களம் காணச் செய்து பகைவர்களை விரட்டி, மன்னரையும் நாட்டையும் காப்பாற்றினார்.
திருமுக்கூடல் திரும்பிய பல்லவ மன்னர், தனது நித்ய ஆராதனை மூா்த்தியான முக்கூடல் அழகனைத் தரிசிக்க திருக்கோயிலுக்கு வந்தார். திருமலையில் வேங்கடவனின் திருக்கரங்களை அலங்கரிக்கும் சங்கும் சக்கரமும் திருமுக்கூடலில் இருப்பதைக் கண்டு வியப்படைந்து, தன் வேண்டுதலுக்கு இரங்கி, திருவேங்கடமுடையானே பகையரசனை விரட்டிய அற்புதத்தை குறிப்பால் உணர்ந்தார்.
திருமலை தெய்வத்தின் பெருங்கருணையை எண்ணி வியந்த மன்னர் மெய்சிலிர்த்து, ‘என் அப்பனே!’ என்று பெருங்குரலில் இறைவனை அழைத்து, எம்பெருமானின் திருவடிகளில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். அன்று முதல் சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டின் மக்களும் மன்னரது வழியைப் பின்பற்றி, திருமுக்கூடல் வெங்கடேசப் பெருமாளை ‘அப்பன் வெங்கடேசப் பெருமான்’ எனப் போற்றி வணங்குகின்றனா்.
பல்லவா், சோழா், விஜயநகர மற்றும் நாயக்க மன்னா்களின் காலத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இந்தத் தலத்தின் புராதனத்தை எடுத்துக் கூறுகின்றன. இந்தக் கல்வெட்டுகளிலிருந்து இத்தலத்தின் எம்பெருமான், ‘விஷ்ணு படாரா்’, ‘திருமுக்கூடல் ஆழ்வார்’, ‘திருவேங்கடமுடையான்’ மற்றும் ‘ஸ்ரீவெங்க டேசுவர ஸ்வாமி’ எனப் பல திருநாமங்களில் வணங்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.
ஸ்ரீதேவிக்கும், பூமாதேவிக்கும் தனிச்சன்னதிகள் உள்ளன. மேலும் தாயார் அலர்மேல் மங்கை, ஆண்டாள் நாச்சியார், சக்கரத்தாழ்வார், கருமாணிக்க வரதர் மற்றும் கர்ண குண்டல அனுமார் சன்னதியும் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஸ்ரீஅனுமன் ‘கா்ணகுண்டலம்’ அணிந்து வித்தியாசமாகக் காட்சி தருகின்றார்.
பக்தா்கள், தங்கள் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட, திருமுக் கூடல் பெருமாளையும், இங்கு தனிச் சந்நிதியில் அருளும் கர்ண குண்டல ஸ்ரீஅனுமனையும் பக்தியோடு வழிபடுகின்றனா். இங்கு இவருக்கு ‘வடை மாலை’க்கு பதில் தேன்குழல் மாலை சாத்தப்படுகிறது.
முற்காலத்தில் திருக்கோயில்கள் போர், வெள்ளம், வறட்சிக் காலங்களில் பாதுகாப்பான காவல் அரணாகவும், மக்களைக் காப்பாற்றும் மையங்களாகவும் திகழ்ந்தன. மேலும், மக்கள் நலன் சார்ந்த மருத்துவமனைகளாகவும் கலைகளை வளர்க்கும் மன்றங்களாகவும் அக்கால ஆலயங்கள் அமைந்திருந்தன. குறிப்பாக ஆலயங்களில் மருத்துவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டி ருந்தது. ஆலயங்களிலிருந்த மருத்துவமனைகள், ‘ஆதுலர் சாலை’ என்ற பெயரில் அழைக்கப்பட்டன.
இவ்வாறு மருத்துவமனையையும் தன்னகத்தே கொண்டு திகழ்ந்த ஆலயங்களில் ஒன்றுதான், திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்!. தற்போது இந்தக் கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் மிகச்சிறப்புடன் பராமரிக்கப்படுகிறது. திருப்பதி சென்று வேங்கடவனை மனம் குளிர தரிசிக்க இயலாத அன்பா்கள், திருமலை தெய்வத்தை தம் மனக்கண் முன் நிறுத்தி திருமுக்கூடல் அப்பன் வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்யலாம்.
சோழர் காலத்திய மூலிகை வைத்தியம்
தொன்மையான சிங்கத்தூண்
பெருமாள்கள் எழுந்தருளும் மண்டபங்கள்
( பந்தல் ,வாழை மரம், மாவிலை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன)
கருட வாகனம்
திருமுக்கூடலில் உள்ள அலங்கரிக்கப்பட்ட மண்டபங்களில் சாலவாக்கம் சீனிவாசப் பெருமாள் மற்றும் காவாந்தண்டலம் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆகியோருடன் திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாளும்
எழுந்தருளி, காஞ்சி வரதரும், பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மரும் வருவதற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பாலாற்றைக் கடந்து வரும் இரு பெருமாள்களையும் எதிர் கொண்டழைக்கிறார் திருமுக்கூடல் வெங்கடேசப்பெருமாள், பின்னர் திருமுக்கூடல் ஆலயத்தின் உள்ளே உள்ள மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் வரதர். ஐந்து பெருமாள்களையும் சேவித்து மகிழ்கின்றனர் பக்தர்கள்.
திருமுக்கூடல் ஸ்ரீநிவாசப்பெருமாள்
சாலவாக்கம் சீனிவாசப் பெருமாள்
காவாந்தண்டலம் லக்ஷ்மி நாராயணப் பெருமாள்
தேவராஜன் திருமுக மண்டல சேவை
Labels: அத்தி வரதர், திருமுக்கூடல், பரி வேட்டை, பழைய சீவரம்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home