Tuesday, December 11, 2007

பகல் பத்து மூன்றாம் நாள்

Visit BlogAdda.com to discover Indian blogs
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்

சத்ய நாராயணப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம்


பகல் பத்தின் மூன்றாம் நாள் "சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்" , ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் சேவிக்கப்படுகின்றது.


தனனை கோபிகையாக பாவித்து கண்ணனை கணவனாக அடையவும், நல்ல மழை பொழிந்து எங்கும் வளம் பெருகவும், ஸ்ரீ வில்லிபுத்தூரையே கோகுலமாகவும், வட பத்ர சாயியையே கண்ணனாகவும் கொண்டு பாவை நோன்பிற்காக ஆண்டாள் பாடிய முப்பது பாசுரங்களே திருப்பாவை. சரணாகதி தத்துவத்தை அருமையாக காட்டுகின்றாள் பிராட்டி இந்த பாசுரத்தில்

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

இந்தப் பிறவியில் மட்டுமல்ல ஏழேழு ஜன்மங்களிலும் உனக்கு சேவை செய்து கொண்டு உன் காலடியில் கிடக்க வேண்டும் மற்ற எண்ணங்கள் வந்தாலும் அதை நீ மாற்று என்று பாடுகிறார் ஆண்டாள்.


திருப்பாவை, "ஆன்ம நேயத்தை" போதிக்கின்றது. ஒரு ஆன்மா பிற ஆன்மாக்கள் மீது நேயம் கொண்டு தன்னோடு அவை அனைத்தும் இறைவனை அடையுமாறு செய்யும் நோக்கில் பாடப்பட்ட பாடல்களே இவை. "வஸுதைவ குடும்பகம்" என்று வட மொழியில் உலகம் எல்லாம் ஒரே குடும்பம் என்றும் நமது தமிழில் "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் " என்பதும் இந்நெறிதானன்றோ?

நாச்சியார் திருமொழியில் கண்ணனைத்தவிர வேறு யாருக்கும் தான் வாழ்க்கைப் பட மாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பதை தெளிவாக பாடுகின்றார் ஆண்டாள், மன்மதனை, குயிலை, பூக்களை, மேகங்களை தூதாக அன்ய்ப்புகின்றாள், கூடலிழைத்து பார்க்கின்றாள், கண்ணனுடன் திருமணம் நடைபெறுவதாக கனவு காண்கிறாள். இறுதியில் விருந்தாவனத்தில் பரந்தாமனைக் கண்டதைப் பாடுகின்றாள். இந்த மூன்றாம் நாள் நாமும் அந்த எம்பெருமானிடம் சரணாகதி அடைந்து உய்வோமாக.


திருவல்லிக்கேணியில்
நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலைநம்பிக்கு நான்

நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்துபராவிவைத்தேன்

நூறுதடாநிறைந்த அக்காரவடி சில்சொன்னேன்

ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ?

என்ற திருமாலிருஞ்சோலை பாசுரத்தின் போது பார்த்தசாரதி பெருமாளுக்கு ஒரு தடாவில் வெண்ணெய் நைவேத்தியம் செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குகின்றனர்.

இன்றைய தினம் திருவல்லிக்கேணியிலும், திருமயிலையிலும் காளிங்க நர்த்தன திருக்கோலம்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home