Monday, November 21, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -7

Visit BlogAdda.com to discover Indian blogs


ஹோஸ்பெட்டில் நாங்கள் தங்கிய SLV யாத்ரி நிவாஸ்


காலை நேர சூரியன் ஆரஞ்சு வண்ணத்தில் புது வருடத்திற்கு கட்டியம் கூறிக்கொண்டிருந்தான். ஆம் சூரியன் உதிக்கும் இரம்மியமான நேரத்தில் சென்று இறங்கினோம். மரங்களில் பறவைகள் கீசு கீசு என்று எங்களை நவபிருந்தாவனத்திற்கு வரவேற்றன. ஒரு சிறு நகரம்தான் புகைவண்டி சந்திப்பில் அதிக கூட்டம் இருக்கவில்லை. மெல்ல சாமான்களையெல்லாம் எடுத்துக் கொண்டு இயற்கை அழகை இரசித்துக்கொண்டே வெளியே வந்தோம். மார்கழி மாதம் என்பதால் பனி மூட்டமாக இருந்தது சிறிது குளிரும் இருந்தது குழந்தைகள் பெண்கள் ஸ்வெட்டர் அணிந்து கொண்டனர்.

வெளியே வந்த போது புகைவண்டி நிலையத்திலிருந்து செல்லும் பாதையின் இருமருங்கும் ஹோட்டல்களாக இருந்ததை கவனித்தோம். ஹோஸ்பெட் கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ளது. இங்கு தற்போது பெல்லாரி சகோதர அமைச்சர்களால் பிரபலமானதும், ஒரு முதலமைச்சர் ராஜினாமா செய்ய காரணமான இருந்ததும், சீனாவிற்கு தற்போது அதிகம் எற்றுமதி செய்யப்படும் இரும்புத்தாது (Iron Ore) இப்பகுதியில் கிடைக்கின்றது என்பதாலும், உருக்கு ஆலை(Steel plant) உள்ளதாலும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முதல் அனைத்து ரகமான தங்கும் விடுதிகளும் உள்ளன.


நவபிருந்தாவனம் சென்ற வாகனம்

ஒரு காலத்தில் இந்த நகரம் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் நுழைவு வாயிலாக இருந்துள்ளது. இந்நகரை கிருஷ்ணதேவராயர் தமது அன்னையின் நினைவாக நாகலாபுரம் என்று அமைத்தார் ஆயினும் கன்னடத்தில் புதிய நகரம் என்று பொருள் படும் ஹோஸ்பெடெ என்ற பெயர் நிலைத்துவிட்டது.

எங்களை தங்கும் விடுதிக்கு கூட்டிச்செல்ல வண்டி (Tempo Traveller van) தயாராக நின்றிருந்தது காலையிலிருந்து இரவு வரை இந்த வண்டியை திரு. மோகன் அவர்கள் வாடகைக்கு அமர்த்தி இருந்தார் வண்டி ஒட்டுனரே வழிகாட்டியாகவும் விளங்கினார். புகை வண்டி நிலையத்தின் மிக அருகிலேயே தங்கும் விடுதி இருந்தது. SLV YATRI NIVAS, OPP To Rotary Club, Station Road, Hospet- 583201 என்ற விடுதியில் தங்கினோம். விடுதியின் தொலைப்பேசி எண் (08394-221525/26, சுரேஷ் பிரபு – 9448576148 அவர்களையும் தொடர்பு கொள்ளலாம் ) மகான்களை தரிசிக்கும் ஆவலினால் சீக்கிரமாக காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தயாரானோம்.

அந்த விடுதியிலேயே காலை உணவை முடித்துக் கொண்டோம். நவபிருந்தாவனம் செல்லும் முன் துங்கபத்ரை நதியில் குளிக்கலாம் என்பதால் அதற்குரிய துண்டு, மாற்று துணி, பூஜை சாமான்கள், புத்தகங்கள் ஆகியவற்றை மட்டும் ஒரு சிறு பையில் கொண்டு கொண்டு ஆனே குந்திக்கு வண்டியில் கிளம்பினோம். செல்லும் வழியில் நீண்ட துங்கபத்ரை அணையை பார்த்தோம். அதன் அடிவாரத்தில் ஜப்பானிய பாணியில் ஒரு அருமையான தோட்டம் உள்ளது. எப்போதும் தண்ணீர் பாயும் பூமி என்பதால் இரு மருங்கும் வாழை, தென்னை, நெல் வயல்கள் செழிப்பாக காட்சி தந்தன. வாய்க்கால்கள் சாலையின் குறுக்காக ஓடின. கங்காவதி என்ற ஊரைக் கடந்த போது பழங்கால பாலம் ஒன்றையும் அழிந்து போன விஜயநகர சாம்ராஜ்ய நகரான ஹம்பியின் அழிவுகளையும் கண்டோம். சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்து ஆனேகுந்தி அடைந்தோம்.

கங்காவதி பழைய பாலம்

துங்கபத்ரா நதியினால் செழிப்பாக விளங்கும் பூமி

ஒரு காலத்தில் இந்த ஆனேகுந்தி அரசனை முகமது பின் துக்ளக் தோற்கடித்து அரசனையும், அவன் குடும்பத்தாரையும் கோட்டையிலே சிறை வைத்திருந்தான். வித்யாணயரின் வழிகாட்டுதலின் பேரில் ஹரிஹரன், புக்கராயன் என்னும் சகோதரர்கள் தந்திரத்தால் கோட்டைக்குள் நுழைந்து துக்ளக்கின் படைகளை தோற்கடித்து அரசனை விடுவித்து இந்த நகரை கைப்பற்றி, விஜய நகர சாம்ராஜ்யத்திற்க்கு வித்திட்ட இடம் இதுதான். விஜயநகர சாம்ராஜ்ஜியத்திற்கு அஸ்திவாரம் ஆனேகுந்திதான்.

இது என்ன ஆனேகுந்தி என்று மனதில் தோன்றுகின்றதா? விஜயநகர ஆட்சி காலத்தில் யானைகள் கட்டிய இடம் என்பதால் ஆனே கோந்தி என்பது மருவி இப்போது ஆனேகுந்தி ஆகிவிட்டது. நாங்கள் அங்கு சென்று சேர்ந்தபோது மணி சுமார் பத்தாகிவிட்டது. நவபிருந்தாவனம் தரிசனம் செய்து விட்டு திரும்பி வரும் சமயம் மதியம் ஆகி விடும் என்பதால் இங்கேயே மதிய உணவை முடித்துக் கொண்டால் அருகில் உள்ள சிந்தாமணி, அஞ்சனாத்திரி, பம்பா சரோவர் ஆகிய தலங்களை தரிசித்துக் கொண்டு பின்னர் ஹம்பி செல்லலாம் என்று மோகன் அவர்கள் HOOVA CAFÉ என்னும் விடுதியில் ( வீடுதான், சொல்லிவிட்டு சென்றால் சமையல் செய்து வைக்கின்றனர்) மதிய சாப்பாட்டிற்கு சொல்லி விட்டு சென்றோம்.

துங்கபத்ரை நதிக்கரையில் அமைந்துள்ள சிறிய கிராமம் ஆனேகுந்தி சுமார் 25 சிறு வீடுகள்தான் உள்ளன. அதிக அரசு பஸ் வசதியில்லை ஹோஸ்பெட்டிலிருந்து அவரவர்கள் வண்டிகளில் வருவது உத்தமம். குக்கிராமத்தைப் போல ஆடுகள் அங்கங்கே மேய்ந்து கொண்டிருந்தன. கோழிகள் குஞ்சுகளுடன் ஆலவட்டம் வந்து கொண்டிருந்தன.

ஆலவட்டம் போட்டுக்கொண்டிருக்கும் கோழிக்குஞ்சு

ஒன்றிரண்டு விவசாயிகள் மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர், மற்றபடி சத்தம், கூட்ட நெரிசல் ஏதும் இல்லை. இராகவேந்திர சுவாமிகளின் மடம் ஒன்று கண்ணில்பட்டது திரும்பிவரும் போது தரிசனம் செய்து கொள்ளலாம் என்று படித்துறையை நோக்கி சென்றோம். படித்துறையை நெருங்கும் பொது இடப்பக்கம் கருங்கல்லாலான ஒரு மண்டபத்தைப் பார்த்தோம். அதில் ஒரு காலத்தில் யாணைகளை கட்டி இருக்க வேண்டும் இப்போது வைக்கோற் போராக மாறி இருந்தது.

யானை கட்டி போரடடித்த மண்டபமோ?

சுமார் ஐந்து படிகள் இறங்கி துங்கபத்ரை நதிக்கரையை அடைந்தோம். எனது மைத்துனன் கூறியிருந்தான் நாங்கள் பரிசலில் துங்கபத்ரை கடந்தோம் என்று. எனவே பரிசலை எதிர்பார்த்து சென்றோம் ஆனால் ஒன்றும் கண்ணில் படவில்லை! ஆனால் நவபிருந்தாவன் ஹோஹுத்தாரா? என்ற ஒரு குரல் கேட்டது, யார்? என்று பார்த்தால் ஒரு படகுடன் இருவர் நின்று கொண்டு வருபவர்களை அழைத்துக் கொண்டிருந்தனர். பரிசல் பயணம் செய்ய முடியவில்லையே என்ற வருத்தும் இருந்தாலும் சீக்கிரம் செல்லலாம் என்பதால் அதில் ஏறி அமர்ந்தோம், பத்து நிமிடங்களில் இன்னொரு குழு வர படகு நிரம்ப டீசல் எஞ்சினை உசுப்பினார் படகோட்டி, படகும் நகர ஆரம்பித்தது.

ஆனேகுந்தி படகுத்துறை


அமைதியான துங்கபத்ராவில் படகுப்பயணம்

படகில் அமர்ந்து கொண்டே அதிக வேகம் இல்லாமல் சாந்தமாக பாயும் துங்கபத்ராவின் நீரோடத்தில் கையை வைத்து தண்ணீரை வாரி இரைத்துக்கொண்டு சென்றோம். அங்கு வட்டமிட்ட நீர்க்காக்கைகளை படம் பிடித்தோம். வந்த இப்பயணத்தை மறந்துவிடக்கூடாது என்பத்ற்காக நிழற்படம் பிடித்தோம், படகோட்டி காட்டிய அறுபத்து நான்கு கால் மண்டபத்தையும், அதோ அங்கு தெரிகின்றதே, அதுதான் சிந்தாமணி அங்குதான் இராமர் வாலியை வதம் செய்தார் என்று கூறிய வரலாறுகளை மனதில் பதிய வைத்துக்கொண்டோம். எதிரே எதோ குழந்தை உருவாக்கியது போல பாறையின் மேல் பாறை அடுக்கி மலையாக உள்ளதே இது இத்தனை வருட காலம் எவ்வாறு சரிந்து விழாமல் இருக்கின்றது காலத்தின் கோலத்தினால் பெரிய பாறைகள் இவ்வாறு வெளுப்புறமாக வெடித்து இவ்வாறு உருமாறி விட்டனவா? என்று விவாதித்தோம்.

நவபிருந்தாவனம் செல்லும் வழியில்


பாறையின் நிழலில் இளைப்பாறுகின்றோமா?

(இல்லை புகைப்படம் எடுத்துக்கொண்டோம்)

எல்லாவற்றிக்கும் மேலாக பல நாள் கனவாக இருந்தது இன்று மகான்களின் மாப்பெரும் கருணையினால் சித்திக்கப் போகின்றதே என்று அவர்களை நோக்கி துதித்தோம். சுமார் பத்து நிமிடங்கள் பயணம் செய்து நவபிருந்தாவனத் தீவின் கரையில் இறங்கினோம். சூரியன் உச்சிக்கு வந்து கொண்டிருந்தான். தீவெங்கும் பச்சைப் பசேல் என்று தாவரங்களால் நிறைந்திருந்தது. ஒரு வகை புல்லும், தொட்டாற் சிணுங்கி செடிகளும் நிறைந்திருந்தன. தொட்டாச்சிணுங்கி செடியை தொட்டு குழந்தைகளுக்கு காட்டினோம். கோ மாதக்கள் சில இந்த புல்லினை மேய்ந்து கொண்டிருந்தன. நவபிருந்தாவனத்திற்கு செல்வதற்கு முன் துங்கபத்ரையில் குளித்தோம் குளிக்கும் போது அங்கு போக்குக் காட்டிக் கொண்டு பறந்து விளையாடிக் கொண்டிருந்த பல்வேறு பறவைகளை வீடியோ எடுத்தோம். வேஷ்டி அணிந்து கொண்டு தூய உள்ளத்துடன் மகான்களை தரிசிக்க சென்றோம்.

நவபிருந்தாவனத்தின் அருகில் துங்கபத்ரை சாந்தமாக பாயும் அழகு

இங்கு துங்கபத்ரையானவள் சாந்தமாக ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக ஓடுகின்றாள் அதிக ஆழமில்லை ஆனால் பாறைகள் வழுக்கும் என்பதால் கவனமாக குளிப்பது நல்லது. துங்கபத்ரையில் குளித்து விட்டு நவபிருந்தாவங்களை தரிசிக்க சென்றோம் மணல் பாதைதான் சூரியன் உச்சிக்கு வருவதால் மணல் கொதித்துக்கொண்டிருந்தது.

நவபிருந்தாவனத்திற்கு செல்லும் மணல் பாதை


முதலில் கண்ணில் பட்டது மதில் சுவர்தான். நடுவிலே ஒரு வாயில், வாயிலின் சுவற்றிலே நவ பிருந்தாவனங்களை தொடக்கூடாது என்ற எச்சரிக்கை வாசகம் மேலே தமிழிலும், கீழே கன்னடத்திலும் இருந்தன. சப்தம் செய்யாமல் அடி மேல் அடி வைத்து உள்ளே நுழைந்தோம் மகான்களின் அருள் மழையில் நனைந்தோம், உள்ளே நுழைந்தவுடன் அற்புதமான அதிர்வலை, மனம் ஆனந்தத்தில் துள்ளியது, ஒரு இனம் புரியாத அமைதி மனதில் குடிகொண்டது. நவபிருந்தாவனத்தின் தரிசனம் அடுத்த பதிவில் .

Labels: , , ,

2 Comments:

Blogger DrPKandaswamyPhD said...

பதிவு நன்றாக உள்ளது.

November 21, 2011 at 4:25 PM  
Blogger Kailashi said...

வாருங்கள் கந்தசாமி ஐயா.மிக்க நன்றி.

November 21, 2011 at 6:44 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home