Saturday, December 3, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -13

Visit BlogAdda.com to discover Indian blogs
 
 நவபிருந்தாவனம் 
நாங்கள் செல்லவில்லை என்றாலும் ஆனேகுந்திக்கு அருகில் உள்ள இரண்டு மலைகளை பற்றி சொல்ல விழைகின்றேன் முடிந்தவர்கள் சென்று தரிசிக்கலாம். முதலாவது  அழகு கொஞ்சும் துர்க்கா மலை. அஞ்சனாத்திரி மலை போல் அதிக படிகள் இல்லை, மலைமேலே பெரும்பாலான தூரம் வரை வாகனங்கள் செல்கின்றன எனவே கொஞ்சம் படிகள்தான் அனைவரும் ஏற வேண்டும். இங்கிருந்து நாம் இப்பகுதியின் வனப்பை கண்டு மகிழலாம். மலை மேல் துர்க்கா தேவிக்கு ஒரு கோயில் உள்ளது. அமாவாசை , பௌர்ணமி நாட்கள் மிகவும்  விசேஷம்

இரண்டாவது மலை தாரா பர்வதம். தாரை வாலியின் மனைவி. இவள் சிறந்த பக்தை மற்றும் அருமையான சொல்வன்மை கொண்டவள்மழைக்காலத்திற்காக வானரங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு சமயத்தில் அன்னை சீதா தேவியை  தேட கிளம்பாமல் சுக்ரீவனும் வானரப் படைகளும் களித்துக் கிடந்த  சமயம் இவர்களை நாடி கோபத்துடன் இளைய பெருமாள் இலக்குவன் வந்த போது அவரை சமாதனப்படுத்த சுக்ரீவன் தாரையைத் தான் முன்னிறுத்தினான்வாலிக்கு நல்ல யோசனைகளை தந்தவள் தாரை, வாலி சில சமயம் அவளது யோசனையை கேட்காத் போது  தாரை தியானம் செய்த மலைதான் இந்த தாராபர்வதம்.  இந்த தாரா பர்வதத்திலிருந்து பிரதி அமாவாசை, பௌர்ணமி தோறும்  இரவு நேரங்களில் ஒரு ஜோதி புறப்பட்டு நவ பிருந்தாவனத்தை சுற்றி வருவதாக இங்குள்ளவர்கள் நம்புகின்றன்ர். . தாராபர்வதம் ஆனேகுந்தி படகுத்துறையின் இடப்பக்கம் உள்ளது. நவபிருந்தாவனத்திலிருந்து அருமையாக தரிசிக்கலாம்.  பல்வேறு இடங்களில் வாலி மற்றும் சுக்ரீவனைப்  பேசுகின்றோம் எனவே   அவர்கள் கதையை சிறிது பார்ப்போமா?ரிக்ஷரஜஸ் என்னும் கபியின் வாலிலிருந்து இந்திர புத்ரனாக வாலியும், கழுத்திலிருந்து சூரிய புத்ரனாக  சுக்ரீவனும் பிறந்தனர், ஒரு சமயம்  மாயாவி என்னும் இராக்ஷஸன் கிஷ்கிந்தை மீது படையெடுத்து வந்தான். அவனை வாலி சுக்ரீவன் இருவரும் துரத்தினர் அப்போது அவனொரு குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான்,  வாலி அவனுடன் போர் செய்ய உள்ளே சென்றான், சுக்ரீவன் வெளியிலேயே நின்றான், வெகு நேரம்  ஆகியும்  அவன் வெளியே வரவில்லை ஆனால் குருதி மட்டும் வெளியே வந்தது. சுக்ரீவன் வாலிதான் இறந்து  விட்டான் என்று அதை தவறாக  கருதி குகையின் வாசலை ஒரு பெரிய கல்லினால் மூடி வைத்து விட்டு திரும்பினான் இராக்ஷசன் வெளியே வராமல் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினால். இவ்வாறு சரியாக புரிந்து கொள்ளாமல் சுக்ரீவன் செய்த செயல் வாலிக்கு கோபத்தை மூட்டியது, குகையிலிருந்து வெளியே வந்த அவன் சுக்ரீவன் அரசனாகவும் உள்ளதைக் கண்டு அவனை கொல்ல பாயந்தான் அவனிடமிருந்து தப்பிக்க ஒடினான், வாலியும் துரத்திக் கொண்டு ஒடினான்சுக்ரீவன் ரிஷ்யமுக பர்வதத்தை அடைந்த போது  மாதங்க முனியின் சாபத்தால் வாலி அம்மலையில் கால் வைக்க முடியாமல் திரும்பினான் சுக்ரீவன் அன்று முதல் ஹனுமன் முதலிய தனது நண்பர்களுடன் அங்கு வாழ்ந்து வரலானான். ரிஷ்யமுக பர்வத்ததில் வாலி கால் வைக்க முடியாமல் போனதற்கு காரணம் மதங்க முனி கொடுத்த சாபம்தான். இவர்தான் சபரியின் குருநாதர் என்று முன்னரே பார்த்தோம் அல்லவா?. அந்த கதை என்னவென்றால், துந்துபி என்ற வலிமை மிக்கவன் கிஷ்கிந்தையை தாக்கி துன்புறுத்தி வந்தான். ஒரு சமயம் அவன் எருமை வடிவம் எடுத்து வந்த போது வாலி அவனது காலால் எட்டி உதைக்க அவன் தூக்கி எறியப்பட்டு மதங்கர் தவம் செய்யும் ரிஷ்யமுக பர்வதத்தில் சென்று விழுந்தான். தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களின் தவம் கலைந்ததால்  மதங்க முனிவர் வாலிக்கு சாபம் கொடுத்தார்
துங்கபத்ரா அணை
 
 துங்கபத்ரா அணை சூரியன் மறையும் தருணத்தில் 
சுக்ரீவன் தன்னிடமிருந்து தப்பித்து விட்டதால்  கோபத்துடன் திரும்பி சென்ற வாலி, சுக்ரீவனின் மனைவி ருமையை தனது மனைவி ஆக்கிக்கொண்டான். ஸ்ரீஇராமன் மறைந்திருந்து  அம்பெய்து அவனைக் கொல்வதற்கு இதுவும் ஒரு காரணம் . வாலி மிக சிறந்த வீரன். அவன் இராவணனை தனது  வாலில் கட்டி சுமந்து சென்று கடலில் குளித்து விட்டு வருவானாம். மேலும் அவனுக்கு இருந்த ஒரு வரத்தின்படி  அவனுக்கு நேரெதிர் சென்று போர் செய்பவரின் பாதி வீரம் இவனுடையதாகிவிடும், ஆகவே அவனை எதிர்த்து யாரும் வெல்ல முடியாத வலிமை பெற்றிருந்தான். நீதிக்கு புறம்பானதை செய்ததால் அவன் இராமனின் பாணத்திற்கு இரையாக நேர்ந்தது. இந்த தாரா மலையிலிருந்து  அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இரவு நேரங்களில்  ஒரு ஜோதி புறப்பட்டு நவபிருந்தாவனத்தை  வலம் வந்து செல்வதாக இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.   


சுமார் 4 மணியளவில் அஞ்சனாத்ரி மலையிலிருந்து கீழே இறங்கி வந்தோம். புகை வண்டி இரவில்தான் என்பதால் ஹம்பி சென்று பார்த்து வருவோம் என்று புறப்பட்டோம். ஆனேகுந்தியிலிருந்து ஹம்பிக்கு செல்ல ஒரு குறுக்கு வழி உள்ளது அதில் ஆனேகுந்தி பக்கமே நமது வண்டியை நிறுத்திவிட்டு படகு மூலம் துங்கபத்ராவை கடந்து அந்தப் பக்கம் சென்று  வேறு ஆட்டோ அமர்த்திக்கொண்டு ஹம்பியில் பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் பார்த்து விட்டு  படகு மூலம் இப்பக்கம் வந்து பின்னர் ஹோஸ்பெட் அடையலாம். எங்களுக்கு அதிக நேரம் இல்லாததால் முடிந்தால் விருபாக்ஷீஸ்வரர்  ஆலயத்தை மட்டும் தரிசித்து உடனே தங்கும் விடுதிக்கு சென்று விடலாம் என்று நாங்கள் ஹோஸ்பெட் வழியாக ஹம்பிக்கு புறப்பட்டோம்.  சுமார் ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம் என்று புறப்பட்டோம். ஆனால் ஹோஸ்பெட்டை நெருங்க நெருங்க  வாகனங்கள் அதிகமாகி விட்டதால் வண்டி ஊர்ந்து செல்ல வேண்டியதாக ஆகிவிட்டதுசென்னையில் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது போக்குவரத்து.

 துங்கபத்ரா கால்வாய்

 போக்குவரத்து  நெரிசல் ஏற்படுத்திய லாரி
இரண்டு பக்கமும் செழிப்பான வயல்களை பார்த்தோம். வாழை மரங்களில் வாழைத்தார்கள்  தொங்கின. தென்றல் காற்றில் நெல் கதிர்கள் ஊசலாடிக்கொண்டிருந்தன. வரும் வழியில் துங்கபத்ரா அணையின் முன்னே வண்டி சரியாக நின்றது  ஏனென்றால் சரியாக அந்த பாலத்த்தின் மேல் வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற ஒரு லாரி கோளாறு காரணமாக சிக்கிக்கொண்டது. சூரியன் மறையும் அந்த அந்தி வேளையில் வான மகள் ஆரஞ்சுப் போர்வை போர்த்திக்கொண்ட நேரத்தில் அணையின் காட்சி மிகவும் இரம்மியமாக இருந்தது. புகைப்படமும் எடுத்துக்கொண்டோம்.   நல்ல வாய்ப்பு என்று   இறங்கி அணையின்  அழகை இரசித்தோம். துங்கபத்ரா அணையைப்பற்றிய ஒரு சிறிய குறிப்பு. கிருஷ்ணா நதியின் துணை நதி துங்கபத்ரா, துங்கா மற்றும் பத்ரா என்னும் இரு நதிகள் சங்கமமாகி துங்கபத்ரா ஆகின்றது. இந்நதி கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களை வளப்படுத்துகின்றது.
 
 
 துங்கபத்ரா அணை
 ஹோஸ்பெட்டிலிருந்து சுமார் 4.8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அணை. இதன் நீளம் 2.4 கி.மீ, உயரம் 50 மீ. கொள்ளவு 135 டிம்சி, ஆனால் தற்போது அது 30  டிஎம்சி யாக குறைக்கப்பட்டுள்ளது. மூன்று கால்வாய்களின் வழியாக தண்ணீர் பாய்கின்றதுஅனையின் இருபக்கமும் இரு மலைகள் வலப்பக்கம் கயிலாயம் இடப்பக்கம் வைகுண்டம். வைகுண்ட மலையின் மேல் ஒரு ஆஞ்சனேயர் ஆலயம் உள்ளதுமலையின் மேலிருந்து அருமையான  காட்சிகளைக் காணலாம். கயிலாயத்தின் கீழ் அருமையான சிறிய தோட்டம் உள்ளது. நீங்கள் துங்கபத்ரா அணையை ரசித்து கொண்டிருந்த போது மெல்ல மெல்ல ஊர்ந்து ஹோஸ்பெட் வழியாக நாங்களும் ஹம்பி அடைந்து விருபாக்ஷீஸ்வரர் திருக்கோயிலை அடைந்து விட்டோம்.

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home