Thursday, December 13, 2007

பகல் பத்து ஐந்தாம் நாள்

Visit BlogAdda.com to discover Indian blogs
பகல் பத்து ஐந்தாம் நாள்

அசோக் நகர் கருமாரி திரிபுர சுந்தரி ஆலயம்
ஸ்ரீநிவாசர் ஏணி கண்ணன் கோலம்









பகல் பத்து உற்சவத்தின் ஐந்தாம் நாள் முதல் ஆயிரத்தில் உள்ள மற்ற ஆழ்வார்களின் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன.

திருமழிசையாழ்வாரின் திருச்சந்த விருத்தம்

தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலை, திருபள்ளியெழுச்சி.

திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான்

மதுர கவியாழ்வாரின் கண்ணி நுண் சிறுத்தாம்பு ஆகிய பாசுரங்கள் இன்று சேவிக்கப்படுகின்றன.

திருமழிசையாழ்வார் பெருமாளையே சொன்ன வண்ணம் செய்ய வைத்தவர், திருக்குடந்தை ஆராவமுதரை எழுந்து பேச வைத்தவர். முதலில் சிவ வாக்கியர் என்று சைவராக இருந்தவர் ஸ்ரீமந் நாராயணனே முழு முதற் கடவுள் என்பதை உணர்ந்து வைணவராகியவர். பக்தி ஸாரர் என்றும் அழைக்கப்படுகின்றார். திருசந்த விருத்தம். நான் முகன் திருவந்தாதி என்ற நூல்களை அருளினார்.

தொண்டரடிப்பொடியாழ்வார் ஒருவர்தான் அரங்கனைத் தவிர வேறு ஒரு பெருமாளையும் மங்களா சாசனம் செய்யாதவர். விதி வசத்தால் தேவ தேவி என்ற பெண்ணினால் திசை மாறி சென்ற ஆழ்வாரை தடுத்து அந்த திருவரங்கத்து இன்னமுதன் ஆட்கொள்ள அவரையே பற்றுக்கோடாக கொண்டு வாழ்ந்தவர்.

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகமாளும்
அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்கமா நகருளானே ! என்று பாடியவர். மேலும் அரங்கனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியவரும் இவரே.

திருப்பாணாழ்வார் அரங்கன் மீது மிகவும் பக்தி கொண்டிருந்தவர் யாழ் கொண்டு பண்பாடும் குலத்தை சார்ந்தவர். தெரியாமல் அரங்கனுக்கு தீர்த்தம் கொண்டு வரும் வழியில் நின்றிருந்தவரை பட்டர் தாக்க அவர் தலையிலிருந்து இரத்தம் கொட்டியது. கருவறையை அடைந்த போது அரங்கன் தகையிலும் அதே இடத்திலிருந்து இரத்தம் கொட்டுவதை கண்டு வருந்தி ஆழ்வாரின் பெருமையை உணர்ந்து அவரை மரியாதையுடன் அழைத்து வந்து கருவறையில் நிறுத்திய போது அவர் பாடிய பாசுரம் தான் அமலனாதிபிரான்.
அரங்கனது திருவடி தொடங்கி திருமுடியீறாக நன்கு சேவித்து அவ்வெழிலைக் கூறும் அமலனாதிபிரான் என்ற பத்து பாசுரங்களைப் திருவாய் மலர்ந்தருளினார்.


அவரது முதல் பாசுரம் அமலனாதிபிரான் என்று ’அ’காரத்தில் துவங்குகின்றது இரண்டாவது பாசுரம் உந்தி ’உ’காரத்தில் துவங்குகின்றது. மூன்றாவது பாசுரம் மந்தி ’ம’காரத்தில் துவங்குகின்றது . அ+உ+ம = ஓம் ஆகவே திருப்பாணாழ்வாரின் பாசுரம் பிரணவத்தின் விளக்கம்.
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
யுண்டவாயன் என்னுள்ளம்கவர்ந்தானை
அண்டர்கோனணியரங்கன் என்னமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே. என்று நிறைவாக அருளி பெரிய பெருமாளின் திருவடியில் இரும்புண்ட நீர் போல கலந்து மறைந்தார்.

பெருமாளைப் பாடாமல் தந்து ஆச்சாரியனான நம்மாழ்வாரை மட்டுமே பாடியவர் மதுரகவியாழ்வார். வேதங்களையும், சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்து செவிக்கினிய செஞ்சொற்கவி பாடுமாற்றல் பெற்று மதுரகவி என்று பெயர் பெற்றார். இவர் வட நாட்டில் பயணம் செய்து கொண்டிருந்த போது தென் திசையில் ஒரு பேரொளி தோன்றியதைக் கண்டு அங்கே வந்து நம்மாழ்வாரை சேவித்து அவரது žடரானார். அவரது புகழை பரப்பினார். அவர் எழுதிய பாசுரம் கண்ணிநுண்சிறுத்தாம்பு.
இன்றைய தினம் திருவல்லிக்கேணியிலும், திருமயிலையிலும் ஏணி கண்ணன் திருக்கோலம்.

4 Comments:

Blogger துளசி கோபால் said...

படங்களுக்காகவே தினமும் வந்து போகின்றேன்.


அருமையா இருக்கு.

December 13, 2007 at 5:58 PM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஏணிக் கண்ணன் திருக்கோலம் அருமை!
அழகான புகைப்படங்கள்!
பகல் பத்துக்கு படங்களுக்கு நன்றி கைலாஷி!

திருமழிசையாழ்வார்
தொண்டரடிப்பொடி
திருப்பாணாழ்வார்
மதுரகவிகள்...
என்று இன்று தான் பல ஆழ்வார்களின் பாசுரங்கள் ஒரே நாளில் ஓதப்படுகின்றன!

December 13, 2007 at 6:13 PM  
Blogger S.Muruganandam said...

தாங்கள் ஏணி கிருஷ்ணனை முன்னர் சேவித்ததில்லை என்றதால்தான் இவ்வளவு கோணங்களில் எடுத்தேன். நன்றாக சேவித்து மகிழுங்கள்.

December 14, 2007 at 12:45 AM  
Blogger S.Muruganandam said...

வாருங்கள் கண்ணபிரான் அவர்களே. ஆம் இன்று நான்கு ஆழ்வார்களின் திருமொழிகள் சேவிக்கப்படுகின்றன.

December 14, 2007 at 12:47 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home