Monday, December 16, 2013

திருப்பாவை # 3

Visit BlogAdda.com to discover Indian blogs
  ஸ்ரீ:
                                   


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் லூடு கயலுகல
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். .........(3)


பொருள்:பாவை நோன்பின் பயன்:


வாமனனாக வந்து நெடியோன் திரிவிக்கிரமனாக ஓங்கி வளர்ந்து இந்த உலகத்தை ஓர் அடியால் அளந்த உத்தமன் திருமால்! அந்த பெருமாளின் திருநாமங்களை கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா, இருடிகேசா ,பத்மநாபா, தாமோதரா, கோபாலா, வாமனா, மாமாயா, தேவ தேவா, பால கிருஷ்ணா, மணி வண்ணா, பூவண்ணா, புள்ளரையா, ஸ்ரீஹரி, பரமா, கண்ணா, மாதவா, வைகுண்ட நாதா என்று பாடி நாம் நம் பாவை நோன்பை நோற்பதன் பலன்கள் என்ன என்று தெரியுமா தோழி?

ஊர் செழிக்க தீமையில்லாமல் மாதம் மூன்று மழை தவறாமல் பெய்யும், அதனால் வயல்களில் செந்நெல் ப்யிர்கள் நெடு நெடுவென வளரும், அந்த பயிர்களின் ஊடே கயல் மீன்கள் துள்ளித் திரியும், நிரம்பியிருக்கும் நீர் நிலைகளில் கருங்குவளை மலர்களில் புள்ளிகளையுடைய அறுகால் வண்டினங்கள் தேனைக் குடித்து மெய் மறந்து உறங்கும். மாட்டுத் தொழுவத்தில் புகுந்து அழகிய பசுக்களின் மடியைப் பற்றி இழுத்தால் பாலை தேக்கி வைத்துக் கொள்ளாமல் வள்ளல்களைப் போல பாலைப் பொழிந்து குடங்களை நிறைக்கும். எப்போதும் அழியாத செல்வம் எங்கும் நிறைந்திருக்கும் அறி பெண்ணே!


இப்பாசுரத்தில் அவதாரப்பெருமை: வாமன அவதாரம் இந்த மூன்றாம் பாசுரம், பதினேழாம் பாசுரம் மற்றும் இருபத்து நான்காம் பாசுரம் மூன்றிலும் ஆண்டாள், எம்பெருமானின் வாமன அவதாரத்தை போற்றுகின்றார். இப்பாசுரத்தில் "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி" என்னும் பதத்தினால் இவ்வவதார பெருமையை உணர்த்துகின்றார்.


வாமன அவதாரம்: பலி சக்கரவர்த்தி பிரகலாதரின் பேரன், விரோசனரின் புத்திரன், இந்திரப்பதவியை கைப்பற்றியதால் இந்திரனுடைய தாய் அதிதியின் கர்பத்தில் பெருமாள் வாமனனாக அவதரித்தார். "வாமன அவதாரம்" எடுத்து வந்து மஹாபலியிடம் சென்று தவம் செய்வதற்கு தன் காலடியில் மூன்றடி மண் தருமாறு யாசித்தார். மகா பலியும் தருவதற்கு இசைந்து , தாரை வார்த்து தர முற்படும் போது ஓங்கி திரிவிக்கிரமனாக வளர்ந்து, ஓரடியால் மண்ணுலகத்தையும், இரண்டாவது அடியால் விண்ணுலகத்தையும் அளந்து நின்ற நெடுமால், இன்னுமொரு அடிக்கு மண் எங்கே? என்று வினவ, மகாபலி தன் தலையை தாழ்த்தி வணங்கி நின்றான். பெருமாள் அவனது முடியில் தன் அடியை வைத்து பாதாளத்திற்க்கு அழுத்தி அவனது செருக்கை அடக்கினார்.

பாசுரத்தின் உட்கருத்துபக்குவமடைந்த ஜீவாத்மாக்கள் (பசுவின் மடியைப்பற்றுவதுபோல) குருவின் காலைப்பிடித்து ஞானப்பாலைப்பெற்று பருகினால் ஆனந்த வெள்ளமாம் அது! அவர்களின் இதயகமலத்தில் பகவான் பொறிவண்டுபோல படுத்து உறங்குவானாம். 

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home