Saturday, February 27, 2010

நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -12

Visit BlogAdda.com to discover Indian blogs
கீழ் அஹோபில திருக்கோயில்கள்
(சத்ரவட நரசிம்மர் தரிசனம்)


சத்ரவட ந்ருஸிம்ஹர்


அடுத்து நாங்கள் சேவிக்க சென்றது சத்ர வட நரசிம்மரை. கீழ் அஹோபிலத்திலிருந்து செல்லும் வழியிலேயே இக்கோவில் அமைந்திருந்தாலும் நாங்கள் சென்ற போது கோவில் பூட்டியிருந்தால் திரும்பி வந்து சத்ர வட நரசிம்மரை சேவித்தோம். அன்று ஆலிலையில் துயில் கொண்டு ஞாலமேழுமுண்ட மாயன், ஸ்ரீ வில்லிபுத்தூரிலே இன்றும் வடபத்ர சாயியாய் ஆலிலைகளின் நிழலில் பாம்பனையில் பள்ளி கொண்ட பரமனாய் சேவை சாதிக்கின்றார். அந்த பாரிடந்து, பாரையுண்டு, பாரையளந்த மாயவனே இங்கே அந்த குடை போன்று பரந்து விரிந்த ஆலமர நிழலில் மிகவும் சந்தோஷமாக அமர்ந்தத கோலத்தில் சேவை சாதிக்கின்றார் சத்ர வட நரசிம்மராக. இவரது சிரிப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஒன்பது நரசிம்மர்களிலே அளவில் பெரியவர் இவர்தான். இவர் அழகை நாள் முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் இவர் அக்காரகனி, ஆராவமுது, எவ்வளவு பருகினாலும் திகட்டவே திகட்டாது. மய்யோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ, ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகு என்று ஆழ்வார் பாடியபடி அற்புதமான வடிவழகு கொண்டவர் சத்ரவட நரசிம்மர்.


பத்மாசனத்தில் அமர்ந்து மேற்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, வலக்கரத்தால் அபயம் வழங்கி இடக்கரத்தால் தொடையில் தாளம் போட்டபடி ஹாயாக புன்னகையுடன் அமர்ந்திருக்கின்றார் குடை போன்ற ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் நரசிம்மர். இவர். தாளம் போட்டுக்கொண்டு இருக்கிறார் என்று கூறினீர்களே யார் பாட்டுப் பாடுவது என்று கேட்கிறீர்களா? ஒரு தடவை தேவேந்திரன் மற்ற முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ வந்து நரசிம்மரை சேவித்த போது "ஹாஹா ஹூஹூ" என்ற இரு கந்தவர்கள் அருமையாக பாடினார்கள் அவர்களது இசையில் மயங்கிய நரசிம்மர் அவர்கள் இருவரும் அங்கேயே இருந்து தன்னை இசையால் மகிழ்விக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆகவே அவர்கள் இருவரும் இன்றும் பாடிக்கொண்டிருப்பதாகவும் அதைக் கேட்டு மகிழ்ந்து சத்ரவட நரசிம்மர் தாளம் போட்டுக் கொண்டு பிரசன்ன வதனத்துடன் ஆனந்தமாக சேவை சாதிக்கின்றார் என்பது ஐதீகம். ( இந்த ஹாஹா என்ற கந்தவர்களே சிவபெருமானின் குண்டலங்களாக இருந்து தங்கள் இசையால் அவரை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறுவர்) இவரது சுந்தர ரூபத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இவர் நவநரசிம்மர்களில் எட்டாமவர். இக்கோவிலில் நாங்கள் சென்ற போது பட்டர் இருந்தார் அவர் அற்புதமாக பெருமாளை சேவை செய்து வைத்து தீர்த்த பிரசாதமும் வழங்கினார்.


மலை முழுவதும் இவர்கள் இராச்சியம்தான்



நரசிம்மர் என்றாலே உக்கிரம் பார்க்க பயமாக இருக்கும் என்றெல்லாம் நினைப்பவர்கள் அதை இவரைப் பார்த்தால் தங்கள் மனதை நிச்சயம் மாற்றிக்கொள்வார்கள் என்பதில் ஐயம் சிறிதளவுமில்லை. சிங்கம் மற்ற மிருகங்களுக்குத்தான் பயங்கரமானது அதுவே தன் குட்டிகளுக்கு எப்போதும் அதுவும் ஒரு தாய்தானே அது போலத்தான் நரசிம்மரும் , கூடாருக்கு அவர் உக்கிரமானவர் ஆனால் அதன் பக்தர்களுக்கு அவர் ஆபத்பாந்தவர். அவரை சரணமடைந்தவர்களை அவர் என்றுமே கைவிட்டதில்லை.


முன்நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூவுலகில்

மன்னரஞ்சும் மதுசூதனன் வாயில் குழலினோசை செவியைப்பற்றி வாங்க

நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தந்தம் வீணை மறந்து

கின்னரமிதுனங்களும் தந்தம் கின்னரம் தொடுகிலோமென்றனரே.


எம்பெருமான் கண்ணனாக மணிவண்னனாக குழல் கொண்டு ஊதிய போது நாரதர், தும்புரு முதலானவர்கள் அந்த இசையில் மயங்கி தங்கள் வீனையை மறந்தவர்களாய் நின்றார்கள். கின்னரர்களும் அப்படியே இனி நாங்கள் குழலையே தொடமாட்டோம் என்று கூற இனிய குழலூதி சகல புவனங்களையும் தனது மயக்கும் மாயக் கண்ணன் யாரெனில் முன்னர் நரங்கலந்த சிங்கமாகி அவுணன் முக்கியத்தை முடித்தவன் என்னும் பெரியாழ்வர் பாசுரம் மனதில் தோன்றியது. இவ்வாறு மயக்கிய அந்த மோகனன் நமக்காக இங்கு தானே மயங்கிய நிலையில் சேவை சாதிக்கும் அழகை என்னவென்று சொல்ல. சென்றி சேவியுங்கள் அப்போதுதான் அந்த சுகம் உங்களுக்கும் புரியும்.



கீழ் அஹோபிலத்திலிருந்து வேதாசல மலையின் காட்சி



எல்லா நவநரசிம்மர் ஆலயங்கள் போலவே இந்த சன்னதியும் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்குகின்றது. ஹாஹா ஹூஹூ என்ற இரு கந்தவர்களும் சுதை சிற்பங்களாக காட்சி தருகின்றனர். தற்போதைய அஹோபில மட ஜீயர் 46வது ஸ்ரீமத் அழகிய சிங்கரின் முயற்சியால் அனைத்து சந்நிதிகளிலும் திருப்பணிகள் நடைபெற்று சம்ப்ரோக்ஷணமும் நடைபெற்றிருப்பதை காண முடிந்தது, கேது வழிபட்ட சத்ரவட நரசிம்மரை பிரிய மனமில்லாமல் பிரிந்து காரஞ்ச நரசிம்மரை சேவிக்க புறப்பட்டோம்.


சத்ரவட நரசிம்மரை சேவித்த மகிழ்ச்சியில் குமுதவல்லி மணாளரின் நான்காவது பாசுரத்தை சேவிப்போமா?


எவ்வும் வெவேல் பொன்பெயரோன் ஏதலன்னின்னுயிரை

வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம்

கவ்வுநாயும் கழுகும் உச்சிப்போதொடு கால் கழன்று

தெய்வமல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள் குன்றமே (4)


பொருள்: துக்கத்தை உன்தாக்கும் கொடிய வேலையுடைய சத்ருவான ஹிரண்யனுடைய உயிரை பறித்து அவனுடைய சரீரத்தை வஜ்ரம் போன்ற கூரிய நகங்களால் கிழித்த சர்வேஸ்வரனுடைய இடமானது, கண்டாரை எல்லாம் கவருதுமான நாய்களும், கழுகுகளும் சூரியனும் கூட கால் தடுமாறு உயர்ந்த மலையாகிய, தன்னை விரும்பித் தொழும் அன்பர்கள் அல்லாத மற்றவர்கள் சென்று கிட்டவொண்ணாத சிங்கவேள் குன்றமாகும்.


அடுத்து காரஞ்ச நரசிம்மரை சேவிக்கலாம்..........


Labels: , , ,

10 Comments:

Blogger Rajewh said...

இவரு ஜாலியான நரசிம்மர்
படித்தவுடன் பிரிய மனமில்லை
இங்கிருந்தே தரிசனம் காண்பித்த உங்களுக்கு கோடான கோடி நன்றி!!!

March 2, 2010 at 12:00 AM  
Blogger Rajewh said...

நரசிம்மர் தலையில் ஒரு சிகப்பு கலர் செம்பருத்தி பூ உள்ளது.
செம்பருத்தி பூ என்றால் நரசிம்மருக்கு ரொம்ப பிரியம் போலிருக்கு!

March 2, 2010 at 12:02 AM  
Blogger Rajewh said...

"ஹாஹா ஹூஹூ" என்ற இரு கந்தவர்கள்::)))

பேரே ஒரு காமெடியா இருக்கு!
.கண்டர்வகள் இசை அமைத்தது உண்மையே!
இந்த பெயர்கள்?? No chance

March 2, 2010 at 12:03 AM  
Blogger Rajewh said...

போடுவா மூலவர் படம் எடுக்க விட மாட்டாங்க!
உங்கள் பதிவில் மூலவர் படமும் இடம் பெற்று இருப்பது மேலும் ஒரு சிறப்பு நன்றி

March 2, 2010 at 12:03 AM  
Blogger S.Muruganandam said...

//இவரு ஜாலியான நரசிம்மர் //

ஆம் மஹா சங்கீத ரசிகர் அல்லவா. அதுவும் மந்தகாசமான திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றார்.

March 2, 2010 at 9:37 PM  
Blogger S.Muruganandam said...

//செம்பருத்தி பூ என்றால் நரசிம்மருக்கு ரொம்ப பிரியம் போலிருக்கு//

அங்கு அதிகம் கிடைப்பதால் அவருக்கு செம்பருத்திப்பூ சார்த்தி்யிருப்பார்கள்.

March 2, 2010 at 9:38 PM  
Blogger S.Muruganandam said...

//கண்டர்வகள் இசை அமைத்தது உண்மையே!
இந்த பெயர்கள்?? No chance//

ஆம் ஐயா அவர்கலின் பெயர்கள் ஹாஹா ஹூஹூ தான்.

March 2, 2010 at 9:44 PM  
Blogger குமரன் (Kumaran) said...

நாடி நாடி நரசிங்கா என்று ஆடினாள் பராங்குச நாயகி. அந்த நரசிங்கத்தை நாடி நாடிச் சென்று எங்களுக்கும் தரிசனம் செய்துவைக்கிறீர்கள். மிக்க நன்றி.

July 2, 2010 at 12:44 PM  
Blogger S.Muruganandam said...

நன்றியெல்லாம் அந்த நரசிம்மருக்குத்தான் குமரன் ஐயா. அவர் தானே அடியேனையும் எழுத வைக்கின்றார், தங்களையும் படிக்க வைக்கின்றார்.

எங்கே ( தமிழுக்கு ஏற்றம் தரும் விழாவில் செய்த தவறினால்) தாங்கள் கோபம் கொண்டு இந்தப் பக்கமே வராமல் இருந்து விட்டீர்களோ என்று நினைத்தேன் மீண்டும் வந்ததற்கு நன்றி.

July 8, 2010 at 9:52 AM  
Blogger குமரன் (Kumaran) said...

நீங்கள் தவறு செய்தீர்களா? நினைவே இல்லையே!

பல இடுகைகள் இன்னும் படிக்க வேண்டியிருக்கின்றன. கால தாமதமாகப் படிக்கிறேன். சில இடுகைகளுக்குப் பின்னூட்டம் இடுகிறேன். அவ்வளவு தான்.

July 8, 2010 at 4:00 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home