அஹோபிலம் - 1
ஸ்ரீ அஹோபில திவ்யதேசத்தின் பெருமை
மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களினால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலங்கள் திவ்ய தேசங்கள் ஆகும். ஆந்திர மாநிலத்தில் உள்ள இரண்டு திவ்ய தேசங்களுள் ஒன்று இந்த அஹோபிலம். மற்ற திவய தேசம் கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் வேங்கடவனாய் , திருமலையாய் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கும் திருப்பதி. அஹோபிலத்தில் பெருமாள் ந்ருஸிம்ஹராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். கிழ்க்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பு மலையில் ( தெலுங்கில் நல்ல கொண்ட) நவ ந்ருஸிம்ஹராய் சேவை சாதிக்கின்றார் பெருமாள். இந்த மலைதான் க்ருத யுகத்தில் ஹிரண்யகசிபுவின் கோட்டையாக இருந்தது என்றும், ஒரு பிரதோஷ காலத்தில், தன் மகன் விஷ்ணு பக்தன், ஓம் நமோ நாராயணா என்று ஓதிக் கொண்டிருக்கும் பிரகலாதனை கொல்ல அவன் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து விட கோபத்தின் உச்சியில் எங்கிருக்கிறான் உன் நாராயணன்? என்ற ஹிரண்யனின் கேள்விக்கு அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று பதில் கூறிய தன் பக்தனின் சொல்லை நிரூபிக்க உடனே அந்த க்ஷணமே கருடன் மேல் வந்தால் கூட தாமதமாகி விடும் என்பதால் உடனே, ஒரு தூணை ஹுரண்யன் கதையால் ஓங்கி அடிக்க அந்த தூணை பிளந்து கொண்டு ந்ருஸிம்ஹராய் தோன்றி, ஹிரண்யன் பெற்ற வரத்தினால், மனிதனாகவோ, மிருகமாகவோ, தேவராகவோ, பறவையாகவோ இல்லாமலும், நிலத்திலோ, ஆகாயத்திலோ இல்லாமல் தன் தொடையில் வைத்தும், பகலாகவோ இரவாகவோ இல்லாத சந்தியா வேளையில், உள்ளேயோ, வெளியேயோ இல்லாமல் வாசற்படியில் அமர்ந்து, எந்த வித ஆயுதமும் இல்லாமல் தன்து வஜ்ர நகங்களினால் இரணியது வயிற்றைக் கிழித்து அவன் குடலை மாலையாக இட்டுக் கொண்டு அவனை வதம் செய்து, பிரகலாதனது பக்தியின் பெருமையை உலகுக்கு காட்டிய அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். அந்த ஜ்வாலா ந்ருஸிம்ஹயாயும் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தலம் தான் அஹோபிலம். இத்தலத்தை திருமங்கை ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என்று மங்களா சாசனம் செய்துள்ளார். இந்த சிங்க வேள் குன்ற திவ்ய தேசத்தில் சீரிய சிங்கப் பெருமாள் சுயம்பு மூர்த்தியாக தோன்றி அருள் பாலிக்கின்றார். இத்திருப்பதி எம்பெருமான் நரசிம்ம மூர்த்தியாக தம் பக்தன் ப்ரகலாதன் பொருட்டு தோன்றி, அவனை நைந்து வந்த அவன் தந்தை இரணியனை பிளந்து மாய்த்த இடம் என்று திருமங்கையாழ்வார் கொண்டாடுகிறார்.
இத்திவ்ய தேசம் மலையும் மலை சார்ந்த (குறிஞ்சி நிலத்தில்) பகுதியுமாக அமைந்து திகழ்கின்றது. திருமால் நரசிங்கமதாகி இக்குன்றின் மீது மிக்க வேட்கையோடு வந்து அமர்ந்ததால் இக்குன்றம் சிங்கவேள் குன்றம் எனப்படுகின்றது.
நரசிங்கம் என்ற வேள் வந்து அமர்ந்ததால் சிங்கவேள் குன்றம் என்பாரும் உண்டு. வேள் என்றால் யாவராலும் வேடகை கொள்ளப்படுபவர் என்றும் பொருள்படும்.
இத்தலத்து நரசிம்மப் பெருமான் தோற்றத்தாலும், ஏற்றத்தாலும், தன் பக்தன் ப்ரஹலாதன் பொருட்டு ஓடி வந்து தூணில் தோன்றிய எளிமையாலும், இரணியனை வகிர்ந்து அழித்த திறத்தாலும், எல்லாருடைய விருப்பினையும் வேட்கையினையும் பெற்று விளங்குவதால், அவன் உறைந்த குன்றம் சிங்க வேள் குன்றமென்றானது.
அகோபலம் என்பாரும் உண்டு. பெருமாள் மிகுந்த பலமுடன் தோன்றியதால் ஆஹா பலம், ஆஹா பலம் என்று தேவர்கள் அனைவரும் போற்றியதால் அஹோபிலம் ஆனது.
கிழக்குத் தொடர்ச்சி மலை ஆதி சேஷன் தலைப்பகுதி திருவேங்கடம், வால்ப் பகுதி ஸ்ரீ சைலம், முதுகு அஹோபிலம் என்பது ஐதீகம்.
இரண்டு தளங்களாக அமைந்துள்ளது அஹோபில ஷேத்திரம். கீழ் அஹோபிலத்தில் பிரகலாத வரதர் ஆலயமும், மேல் அஹோபிலத்தில் அகோர ந்ருஸிமஹர் ஆல்யமும் அமைந்துள்ளன. மலையடிவாரம் கீழ் அஹோபிலம் என்று அழைக்கப்படுகின்றது. அடிவாரத்திலிருந்து எட்டு கி.மீ தூரத்தில் சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதி மேல் அஹோபிலம் என்று அழைப்படுகின்றது. மற்ற நவ நரசிம்மர் ஆலயங்கள் சுற்றிலும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன.
மலையேற்றம் மற்றும் நடைப்பயணம் அவசியம் என்பதால் அந்த எம்பெருமானின் அருளும் உண்மையான உடல் உறுதியும் இருந்தால் மட்டுமே நவநரசிம்மர்களையும் சேவிக்க முடியும். எனவே தான் திருமங்கை ஆழ்வார் தமது பாசுரத்தில் "தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்!" என்று பாடியுள்ளார்.
கபாலிகர்களால் கை வெட்டப்பட்ட ஆதி சங்கர பகவத் பாதாள் அகோர ந்ருஸிம்ஹரை ஸேவித்து லக்ஷ்மி ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம் பாடி இழந்த க்ரம் மீண்டது என்றும். ஆதி சங்கரர் ஸ்தாபித்த சிவலிங்கமும், ந்ருஸிம்ஹ சுதர்சன சக்கரமும் இன்றும் இத்தலத்தில் உள்ளன.
அஹோபில மடம் உள்ளதும் கீழ் அஹோபிலத்தில்தான். ஸ்ரீனிவாச்சாரியாரின் வயதில் ந்ருஸிம்ஹ சுவாமி அவரது கனவில் தோன்றி அஹோபிலம் அழைத்து குருவாக வந்து வேதாந்தம் கற்பித்து ந்ருஸிம்ஹ மந்திரத்தை உபதேசித்து , திரிதண்டம், சங்கு சக்ரம் வழங்கி ’ சடகோப யதி என்று நாமம் வழங்கி முதல் ஜீயராக்கினார். இக்குன்றின் மேல் உற்சவ மூர்த்தியாய் எழுந்தருளி இருக்கும் "ஸ்ரீமாலோல நரசிம்ம மூர்த்தியை" திருவாராதனைப் பெருமாளாக கொண்டு பிற்காலத்தில் ஆதிவண் சடகோப யதீந்த்ர மஹா தேசிஹர் என்னும் ஜ“யரால் அகோபில மடம் நிறுவப்பட்டு இன்று வரை சிறப்பாக இயங்கி வருகின்றது.
ஜ்வாலாஹோபில மாலோல க்ரோடாகாரச்ச பார்கவ:
யோகாநந்தச் சத்ரவடு பாவனோ நவமூர்த்திய:
என்பது அஹோபில நவநரசிம்ம ஸ்தோத்திரம்.
நவநரசிம்மர்களை நவகிரஹ்ங்கள் வழிபட்டதால் இவர்களை சேவிப்பதால் நவகிரகங்கள் நன்மை செய்வதாக ஐதீகம்.
ஜ்வாலா ந்ருஸிம்ஹர் - செவ்வாய்
அஹோபில ந்ருஸிம்ஹர் - குரு
மாலோல ந்ருஸிம்ஹர் - சுக்கிரன்
வராஹ ந்ருஸிம்ஹர் - இராகு
காரஞ்ச ந்ருஸிம்ஹர் - ச்ந்திரன்
பார்கவ ந்ருஸிம்ஹர் - சூரியன்
யோகானந்த ந்ருஸிம்ஹர் - சனி
சத்ர வட ந்ருஸிம்ஹர் - கேது
பாவன ந்ருஸிம்ஹர் - புதன்.
ஜ்வாலா ந்ருஸிம்ஹர் - செவ்வாய்
அஹோபில ந்ருஸிம்ஹர் - குரு
மாலோல ந்ருஸிம்ஹர் - சுக்கிரன்
வராஹ ந்ருஸிம்ஹர் - இராகு
காரஞ்ச ந்ருஸிம்ஹர் - ச்ந்திரன்
பார்கவ ந்ருஸிம்ஹர் - சூரியன்
யோகானந்த ந்ருஸிம்ஹர் - சனி
சத்ர வட ந்ருஸிம்ஹர் - கேது
பாவன ந்ருஸிம்ஹர் - புதன்.