Wednesday, April 29, 2009

ஸ்ரீ பெரும்புதூர்

Visit BlogAdda.com to discover Indian blogs

விசிஷ்டாத்வைதத்தை இப்பூவுலகில் பரப்பிய மகான் ஸ்ரீ இராமானுஜர் .


" கலியும்கெடும் கண்டு கொள்மின் " என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தை மெய்பிக்க வந்தவர் இவர். வைணவர்கள் இவரை மங்களாசாசனம் செய்யும் போது " தென்னரங்கர்செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே" என்று வாழ்த்துகின்றனர், இராமனுஜர் திருவரங்கம் சென்ற போது பெரிய பெருமாள் தமது திருப்பொலிந்த திருவடியை இவரது சென்னி மேல் பொறித்து " உபய விபூதிசெல்வத்தையும், உமக்கும் உம் உடையாருக்கும் தந்தோம் இனி நம்முடையதிருக்கோவிலை திருப்பணி செய்யக்கடவீர்" என்றதால் இவர் உடையவர் எனப்படுகின்றார்.

திருக்கோஷ்ட்டியூர் நம்பிகளிடம் அஷ்டாக்ஷ்ர உபதேசம் பெற்று அதை அனைவரூம் உய்ய வேண்டி தான் நரகம் சென்றாலும் சரி என்று அனைவருக்கும் அந்த அஷ்டாக்ஷர மந்திரத்தை திருக்கோஷ்டியூர் கோவில் மதிலின் மேல் ஏறி அனைவருக்கும் அருளியதால் எம்பெருமானார் (எல்லாருக்கும் தலைவர்) எனப்படுகிறார்.

துறவிகளின் அரசர் என்பதால் யதிராஜர் .

பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதியதால் பாஷ்யக்காரர்.

ஆண்டாள் நாச்சியாரின் ஆசைப்படி திருமாலிருஞ்சோலை பெருமாளுக்கு 100 தடா வெண்னையும்,அக்கார வடிசலும் சமர்பித்ததால், ஆண்டாள் இவரை அண்ணா என்று அழைத்ததார் எனவே இவர் கோவில் அண்ணன்.

திருப்பாவையை எப்போதும் சிந்தித்த்ருந்ததால் திருப்பாவை ஜீயர்

இத்தகைய பெருமைகளையுடைய ஸ்ரீ இராமனுஜர் அவதரித்த தலம் தான் தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பெரும்புதூர் ஆகும்.


"இதுவோ பெரும்புதூர்? இங்கே பிறந்தோ

எதிராஜர் எம் இடரைத் தீர்த்தார்? -இதுவோதான்

தேங்கும் பொருநல் திருநகரிக் கொப்பான

ஒங்கு புகழுடைய ஊர்"

என்று ஆசாரியர்கள் இத்தலத்தின் பெருமையை பற்றி கூறியுள்ளனர்.

இந்த பூவுலகில் தான் அவதரித்த நோக்கம் நிறைவேறிய பின்னர் ஸ்ரீ இராமானுஜர் எம்பெருமானுடைய திருவடிகளிலே சரணடைந்திருக்கலாம். ஆனால் அவர் செய்யாமல், இந்த கலியுகத்திலே நாம் எல்லோரும் உய்யும் பொருட்டு ஜீவ விக்கிரமாக, தான் உகந்த திருமேனியாய் கோவில் கொண்ட திருத்தலமும் ஸ்ரீ பெரும்புதூர் தான். இத்தலத்திலே பெருமாள் யதிராஜ நாத வல்லி சமேத ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாளாக சேவை சாதிக்கின்றார். இத்தலமே பரம பதமாகும் பெருமை பெற்றது. அனந்தாழ்வாரின் அவதாரமான இளைய பெருமாள் எழுந்தருளியுள்ள இத்தலம் காள சர்ப்ப தோஷ நிவாரண தலமுமாகும். இந்த திருத்தலத்தின் பெருமைகளை சிறிது பார்ப்போமா?

ஒரு சமயம் சிவபெருமான் திருக்கயிலாயத்தில் ஆனந்த தாண்டவமாடிக் கொண்டிருக்கும் போது அவரது ஆடை விலகியது அதைக்கண்ட அவரது பூத கணங்கள் நகைக்க அதனால் கோபமடைந்த சிவபெருமான் அவர்களை பூலோகத்தில் வந்து பிறக்க சாபம் கொடுத்தார். சாப விமோசனம் பெற அவர்கள் திருமாலை நாட அவரும், திருவேங்கடகிரிக்கும், சத்தியகிரிக்கும் இடையே உள்ள ஆரண்யத்தில் சென்று தவம் செய்யுங்கள் என்று பணிக்க அவர்களும் இத்தலம் வந்து கடுமையான தவம் செய்தனர். அவர்களது தவத்தினால் மகிழ்ந்த பெருமாள் அவர்களுக்கு ஆதி கேசவப் பெருமாளாக பிரத்யக்ஷ்யமாகி சாப விமோசனம் அளித்தார். அனந்தாழ்வரால் ஏற்படுத்தப்பட்ட அனந்த சரஸ் திருக்குளத்தில் நீராடி பூத கணங்களும் சாப விமோசனம் பெற்று மீண்டும் சிவபெருமானுக்கு சேவை செய்ய கயிலை சென்றனர் .பூத கணங்கள் அமைத்த பூத மண்டபம், பூத ஸ்தம்பங்களுடன் பெருமாள் சன்னதிக்கு முன் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஸ்தம்பமும் நான்கு குதிரை வீரர்களுடன் கம்பீரமாக, பிரும்மாண்டமானதாக் அமைந்துள்ளன. எனவே இத்தலம் பூதபுரி என்றும் வழங்கப்படுகின்றது. மேலும் ஆதித்ய மஹாராஜாவுக்கும் பெருமாள் இத்தலத்திலே பிரத்யஷமாகி சேவை சாதித்தார்.

இளையாழ்வாரான ஸ்ரீ இராமானுஜரும் இத்தலத்திலேதான் திரு அவதாரம் செய்தார். திருவல்லிக்கேணியிலே ஆஸுரி கேசவஸோமயாஜி, அவரது மனைவி காந்திமதி அம்மையுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த போது பெருமாள் நானே உங்களுக்கு மகனாக வந்து பிறப்பேன் என்று கொடுத்த வாக்கின்படி இராமானுஜராக 1017ம் ஆண்டு சித்திரைத் திங்கள் வளர் பிறை பஞ்சமி வியாழக் கிழமை திருவாதிரை நாளில் திருஅவதாரம் செய்தார்.

இராமானுஜரின் அவதார ஸ்தலம்


இத்திருத்தலத்திலேயே இவர்

பற்பமெனத் திகழ்பைங்கழலும் தண்பல்லவமே விரலும்

பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருவழகும்

முப்புரி நூலொடு முன்கையிலேந்திய முக்கோல் தன்னழகும்

முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்

கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்

காரிசுதன் கழல் சூடிய முடியும் கனநற்சிகைமுடியும்

கூடிய வடிவழகுடன் தானுகந்த திருமேனியராய் தெற்கு நோக்கி தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். மூலவருக்கு இளையாழ்வர் என்று திருநாமம்.


அநந்த: ப்ரதமம் ரூபம்

த்ரேதயாம் லக்ஷ்மணஸ்த்த

த்வாபரே ப்லபத்ரச்ச

கலௌ கச்சித் பவிஷ்யதி

என்ற படி திரேதா யுகத்தில் இராமாவரத்தில் இராமருக்கு இடை விடாது தொண்டு செய்த லக்ஷ்மணராகவும், துவாபர யுகத்தில் கிருஷ்ணாவதாரத்தின் போது கிருஷ்ணருக்கு மூத்தவரான பலராமராகவும் அவதாரம் செய்த ஆதி சேஷன் கலியுகத்தில் நாம் அனைவரும் உய்ய இராமானுஜராக அவதரித்தார். அவரே( இராம + அனுஜர் = இராமருக்கு இளையவர் ) என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் சேவை சாதிக்கின்றார்.

உற்சவரின் திருமேனியை இராமானுஜரின் காலத்திலேயே அவரது žடர்களான முதலியாண்டானும், கந்தாடை ஆண்டானும் பிரதிஷ்டை செய்தனர், அதனால் எம்பெருமானரின் ச்ன்னதியில் உள்ள சடாரி "திருமுதலியாண்டன்" என்று அழைக்கப்படுகின்றது. தன்னுடைய 120வது வயதில் எப்படி பாஷ்யக்காரர் இருந்தாரோ அதே போலே வடிவமைக்கப்பட்ட திருமேனி, இராமானுஜரே இந்த திருமேனியை தழுவி ஆசிர்வதித்ததால் இது "தானுகந்த திருமேனி" என்று அழைக்கபடுகின்றது ஒரு தைப்பூச நன்னாளில் வழிபாட்டுக்காக இந்த திருமேனி இத்திருகோவிலிலே அமைக்கப்பட்டது.

இனி இராமனுஜரின் மற்ற திருமேனிகள். கிருமி சோழனின் கோபத்திலிருந்து தப்பிக்க இராமானுஜர் சென்று தங்கியிருந்த மேல் கோட்டை திருநாராயணபுரத்தில் அவரது žடர்களால் அமைக்கபட்ட திருமேனி "தமருகந்த திருமேனி" யாகும். இராமானுஜர் திருநாட்டுக்கு ஏகிய திருவரஙகத்தில் , அவரது விமலசரம விக்கிரகமான பூதவுடலை அரங்கத்துப் பெரியோர்களும் அவர் žடர்களும் அரங்கன் கோவில் சுற்றிலேயே திருப்பள்ளிப்படுத்தி அவ்விடத்து திருமண்ணால் உருவச்சிலையமைத்து வழிப்படும் திருமேனி "தானான திருமேனி" யாகும்.

அனந்தனின் அம்சம் இவர் என்பதால் அனந்த சரஸ் புஷ்கரணியில் நீராடி இராமானுஜரை வழிபட்டால், ராகு, கேது தோஷங்களும், காள சர்ப்ப தோஷமும் விலகுகின்றது என்பது ஐதீகம். இராமானுஜரின் திருஅவதார நட்சத்திரமான திருவாதிரையன்று மதியம் ஒரு மணிக்கு பால் அபிஷேகம் நடைபெறுகின்றது, அந்த பால் பிரசாதம் சகல தோல் வியாதிகளையும் நீக்குகின்றது என்பது கண்கூடு. ஈர ஆடை தீர்த்தம் தீராத நோய் தீர்க்கும், கிரக பீடைகள் ஒழியும், அனைத்து மங்களங்களும் உண்டாகும்.

இக்கோவிலை நிர்மாணித்தவர் அம்பரீஷ மஹாராஜாவின் பேரன் ஹரீதரன் என்பர். இவன் ஒரு முறை சாபம் பெற நேரிட்டது. பெரும்புதூரில் உள்ள அனந்த சரஸ் திருக்குளத்தில் மூழ்கி எழுந்து சாபம் நீங்கப்பெற்றதால் அவன் இக்கோவிலை கட்டினான்.

ஸ்ரீபெரும்புதூர் இராஜகோபுரம்


பரமபதமாகும் இத்தலத்தின் கோவிலை சிறிது வலம் வரலாமா?. ஐந்து நிலை ராஜ கோபுரத்தில் நுழைந்தவுடன் பெரிய பலி பீடத்தையும், துவஜஸ்தம்பத்தையும் கருடன் சன்னதி விமானத்தையும் காணலாம். துவஜஸ்தம்பத்தின் அருகே நின்று பெருமாளை நினைத்து வணங்கிவிட்டு வலம் சென்று யாழி சிற்பங்கள் நிறந்த கவின் பெறும் படிகளில் ஏறி வடக்கு நோக்கி திரும்பினால் இளையாழ்வாரின் சன்னதி, சிற்பங்கள் நிறைந்த முன் மண்டபத்தில் நின்று அந்த அற்புத தானுகந்த திருமேனியை தரிசித்தால் நம் உடலும் உள்ளமும் சிலிர்க்கின்றது. என்னே ஒரு ஆகர்ஷணம் எம்பெருமானாரின் திருமேனியிலே. மாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை கோடைக்க்காலம் என்பதால் புஷ்ப ஆடை, சால்வை மலர்க்கிரீடத்தில் அருள் பாலிக்கின்றார் எம்பெருமானார். சித்திரையில் சந்தனக் காப்பு கண்டருளுகிறார். ஐப்பசி முதல் தை வரை குளிகாலம் என்பதால் வெந்நீர் திருமஞ்சனம் கண்டருளி மாலை நான்கு மணிக்கு மேல் கோட்டு கம்பளித் தொப்பியில் சேவை சாதிக்கின்றார். துவார பாலகர்களாக கூரத்தாழ்வானும், முதலியாண்டானுமே விளங்குகின்றனர்.

யாளித்தூண்களுடன் கூடிய நுழைவு வாயில்


யதிராஜரை தரிசித்து விட்டு வெளியே வந்தால் கிழக்கு நோக்கிய முக மண்டலத்துடன், ஸ்ரீ தேவி, பூதேவித் தாயார்களுடன் புவியாளும் பூமானை, பூமகள் காந்தனை, ஆயர் பாடிக் கண்ணனை, அனந்தன் மேல் துயில் கொண்ட கரு முகிலை, உலகளந்த உத்தமனை, பண்வாய் இடைச்சியர்க்கு வாய் தனில் புவியெல்லாம் காட்டருளிய தேவ தேவனை, நின்ற கோலத்தில் மேற்கரங்களில் சங்கும் சக்கரமும் தாங்கி, வலது கீழ் கரம் அபய ஹஸ்தமாகவும், இடது கரம் தொடையில் தாங்கும் தாங்கும் கோலத்தில் புண்டரீக வல்லி வாசம் செய்யும் திருமார்புடன் ஆதிகேசவப் பெருமாளாக தரிசனம் செய்யலாம். இடது கரம் தொடையில் வைத்திருப்பது இவரை தரிசனம் செய்பவர்களுக்கு தொடையளவுதான் சம்சார சாகரம் என்பது ஐதீகம்.மூலவரின் திருமார்பில் ஸ்ரீவத்ஸமும், ஸ்ரீ தேவியும், பூதேவியும் இலங்குகின்றனர். மற்றும் உற்சவர் கேசவ நந்தவர்த்தனரையும், நவநீத கிருஷ்ணரையும், செல்லப்பிள்ளையும் தரிசனம் செய்யலாம்.

எம்பெருமானின் திவ்ய தரிசனம் கண்டு வெளிவரும் போது ஆழ்வார்கள், ஆசார்யர்களின் திருமேனிகளையும் வழிபட்டு கர்ப்பகிரகத்தை வலம் வந்தால் எம்பெருமனாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அற்புதமான தஞ்சாவூர் ஓவியங்களை உள் பிரகாரமெங்கும் கண்டு மகிழலாம். பின் ராமானுஜரின் சன்னதியையும் வலம் வந்து கருடனை வணங்கி வெளியே வந்தால் இரானுஜர் சேவை சாதிக்க அமைக்கப்பட்ட தங்க குறட்டைக் காணலாம்.

அடுத்து யதிராஜநாதவல்லி தாயாரின் சன்னதிக்கு செகின்றோம். பெரிய பிராட்டி நான் உங்களைக் காப்பாற்றுகின்றேன் என்று மந்தகாசப் புன்னகையுடன் சேவை சாதிக்கின்றாள். தாயாரின் திருநாமம் இராமனூசரின் நாமத்துடன் விளங்குவது ஒரு சிறப்பு. தாயரை வணங்கிவிட்டு மேலும் வலம் வந்தால் வெளிப் பிரகாரத்தின் சுவர்களில் வரையப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களின் பெருமாள்களின் திவ்ய கோலங்கள் நம்மை மகிழ்விக்கின்றன. தாயாரின் சன்னிதியின் அருகிலேயே சக்கரத்தாழ்வாரின் சன்னதி. மேலும் ஆண்டாள் நாச்சியாருக்கும், இராமருக்கும் தனி சன்னதி உள்ளது.

இராமனுஜரின் பொன் விமானம்


ஆண்டாளை தரிசித்து தூண்கள் நிறைந்த வெளிப்பிரகாரத்தில் நின்று மேலே நோக்கினால் உடையவரின் தங்க கவசம் போர்த்தப்பட்ட விமானத்தை காணலாம், சூரிய ஒளியில் விமானம் மின்னும் அழகே ஒரு தனி அழகு. பகவானை விட பாகவனே உயர்ந்தவன் என்று சொல்லாமல் சொல்லுகின்றது தங்க விமானம் .

ஆலயத்தில் உள்ள சில ஓவியங்கள்


பிரகாரத்தின் கோடியில் இராமானுஜரது வாழ்க்கை வரலாற்றிலிருந்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன அவற்றை கண்டு களித்து திரும்பினால் நமக்கு வலப்பக்கத்திலே குதிரைக்கால் மண்டபத்தையும் கண்ணுறலாம். பிரம்மோற்சவ காலங்களில் பெருமாள் இந்த மண்டபத்தில் தான் அலங்கார சேவை தருகின்றார், எதிரே கண்ணாடி சேவை தர பெரிய கண்ணாடி, அருகே மடப்பள்ளி .


கோவிலை விட்டு வெளியே வந்தால் எதிரே இராமானுஜரின் அவதார திருத்தலத்தை காணலாம். அருகிலேயும் திருக்கோவிலைச் சுற்றியும் கூரத்ததாழ்வான், மணவாள மாமுனிகள், பிள்ளை லோகாச்சாரியர், மண்ணளந்த பெருமாள், மற்றும் விஜய ஆஞ்சனேயர் ஆகிய தனி கோவில்கள் உள்ளன. அனந்த சரஸ் திருக்குளம், நீராழி மண்டபத்துடன் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. இக்கோவிலே பூலோக வைகுண்டம் என்பதால் பரமபத வாசல் கிடையாது.

இனி இத்திருதலத்தில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றி பார்போமா? சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்தில் இராமானுஜரின் அவதாரத்திருவிழா ஐந்து நாட்கள், தேரோட்டத்துடனும் நடைபெறுகின்றது. சித்திரை திருவாதிரையன்று எம்பெருமானார்கோவிலை விட்டு வெளியே அவதார திருத்தலத்திற்கு எழுந்தருளி பால் அபிஷேகம் கண்டு தொட்டில் சேவை தந்துருளுகின்றார். ஆதிகேசவப் பெருமாளின் 10 நாள் பிரம்மோற்சவமும், நான்கு நாட்கள் தெப்போற்சவமும் இம்மாதத்திலேயே நடை பெறுகின்றன.

வைகாசி மாதத்தில் வசந்தோற்சவமும், திருவாதிரையன்று சதகலச ஜேஷ்டாபிஷேகமும் நடைபெறுகின்றது.

ஆனி மாதம் கோடை உற்சவமும், ஆடியில் பூரத்தையொட்டி கஜேந்திர மோக்ஷ உற்சவமும் நடைபெறுகின்றன.

ஆவணியில் பவித்ரோத்ஸவமும் ஸ்ரீ ஜெயந்தியும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

புரட்டாசியில் நவராத்திரி உற்சவம், ஐப்பசியில் மணவாள மாமுனிகள், பிள்ளை லோகாச்சாரியார் திருநட்சத்திரங்க்ளும், கார்த்திகையில் தீபமும் , மார்கழியில் அத்யயன உற்சவுமும், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

தை மாதம் உடையவர் பிரதிஷ்டை குரு புஷ்ய விழா 3 நாட்களும், மாசியில் மாசி மகம் ஐந்து நாட்களும் கொண்டாடப்படுகின்றது.

பங்குனியில் ஸ்ரீ ராம நவமி உற்சவமும், பங்குனி உத்திரத் திருவிழாவும், ஸ்ரீசம்பத் குமர உற்சவமும் நடைபெரூகின்றது. இவ்வாறு வருடம் முழுவதுமே திருவிழாக்களாக திகழ்கின்றது இத்தலத்தில்.

ஸ்ரீபெரும்புதூரில் யார் இறந்தாலும் மேளம் அடித்துக்கொண்டு வந்து சுவாமிக்கு சூட்டப்பட்ட மாலை, ஆளவந்தார் கஷாயம், பரிவட்டம், பெற்றுச்சென்று இறந்தவர் உடலில் சாற்றுவர்.

இத்தகைய பழம் பெருமையும், கவின் மிகு சிற்பங்களும், எழில் மிகுந்த ஓவியங்களும் நிறைந்த திருக்கோவிலுக்கு சென்று தங்களுடைய குறைகளும், தோஷங்களும் நீங்க அனந்த சரஸ் திருக்குளத்தில் நீராடி


தவந்தரும் செல்வமுகந்துதரும் சலியாப்பிறவிப்

பவந்தரும் தீவினைப் பாற்றித்தரும் பரந்தாமனென்னும்

திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னை சார்ந்தச்வருக்கு

என்று திருவரங்கத்தமுதனார் பாடிய எம்பெருமானரை வழிபட்டு அவரது அருளையும், ஆதி கேசவப் பெருமாளின் அருளையும் பெற்று சர்ம நோய்கள் தீர்ந்தோர்; திருமணம் நிச்சயமான கன்னியர்; சர்ப்ப தோஷம் நீங்கியோர்; வாடிய வியாபாரம் மீண்டும் தழைத்தோர் ஆயிரம் ஆயிரம்.

காரேர் கருணை இரமானுஜர் அருள் பாலிக்கும் தலமான ஸ்ரீ பெரும்புதூர் இப்போதே கிளம்பிவிட்டிர்களா?