நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -17
மாலோலர் லக்ஷ்மித்தாயாருடன் ( மூலவர்)
அடுத்து நாங்கள் தரிசிக்கச் சென்றது அஹோபில மடத்தின் திருவாதாரன பெருமாளாக விளங்கும் மாலோல நரசிம்மரைத்தான். ஒன்பது நரசிம்மர்களுள் யாரை மடத்தின் உற்சவ மூர்த்தியாக ஏற்றுக் கொள்வது என்ற ஐயம் எழுந்த போது கனவில் வந்து அனைவரின் ஐயத்தையும் போக்கியவர் இவர். பாவன நரசிம்மர் போல மஹா லக்ஷ்மித் தாயாருடன் சேர்ந்து சேவை சாதிக்கும் பெருமாள். அதனால்தான் இவர் கோவில் கூட பெரிதாக சுற்றி மதில் சுவருடன் முன்னர் நந்தவனத்துடன், முன் மண்டபத்துடனும் எழிலாக விளங்குகின்றது மாலோல நரசிம்மர் ஆலயம். முழு ஆலயத்தையும் பிரித்து பின் கட்டி சம்ப்ரோஷணம் நடந்திருக்கின்றது ஏனென்றாக் கோவிலில் கற்களில் எண்கள் காணப்பட்டன. மஞ்சள் வண்ணப்பூச்சில் புதுப்பொலிவுடன் விளங்கும் திருக்கோவிலை வலம் வந்தோம். உள்ளே நுழைந்து பெரிய துவார பாலாகர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு பூவின் மிசை நங்கைக்கு இனியவன் தன்னை சேவிக்க உள்ளே சென்றோம். பட்டர் ஒருவர் இக்கோவிலில் இருந்தார் அவர் பெருமாளின் திருவடிகள், தாயாரின் திருவடிகளை அற்புதமாக சேவை பண்ணி வைத்து, தீர்த்தம், சடாரி, துளசி தந்தார்.
வேதமலையின் உன்னதமான தலை பாகத்தில் தெற்கு முகமாக ஸ்ரீ மாலோல ந்ருஸிம்ஹர் கோவில் கொண்டுள்ளார். இந்த ஆலயத்தின் ஈசான்ய பாகத்தில் கனக நதி என்ற தடாகம் உள்ளது. அதிலிருந்து எப்பொழுதுமே தாரை பிரவஹித்துக் கொண்டே உள்ளது. வற்றாமல் நீர் பெருகுகிறது. (ஸ்ரீமத் அழகிய சிங்கர்கள் அஹோபிலத்துக்கு எழுந்தருளும் சமயங்களில் அந்த கனக நதியில் நீராடி ஜபம் முதலிய அநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு ஸ்ரீமாலோலனை மங்களா சாசனம் செய்வது வழக்கம்). அங்கு மஹாலக்ஷ்மிக்கு ஏற்றத்தைக் கொடுத்திருக்கிறார் பகவான். ஆகையால் லக்ஷ்மி ஸ்தானம் என்று அதை உலகம் கூறுகிறது. 'லக்ஷ்மிகுடி', 'அம்மவாருகுடி' என்று அங்கு இப்பொழுதும் பிரசித்தி உண்டு.
தாயாரையும் பெருமாளையும் முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணனே, நான்கு வேதப்பயனே, நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனே, மைய கண்ணாள் மலர் மேலுறைவாள் உறை மார்பினனே, என் திருமகள் சேர் மார்வனே,நின் திருவெயிற்டாலிடந்து நீ கொண்ட நில மகள் கேள்வனே, அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே, அல்லியந்துழாய் முடி அப்பனே, அரியாகி இரணியன் ஆகம் கீண்டினவனே, கோலமலர்ப்பாவைக்கு அன்பனே, எல்லையிலாத பெருந்தவத்தால் பல செய்மிரை அல்லலமரரைச் செய்யும் இரணியனாகத்தை மல்லலரியுருவாயச் செய்த மாயனே, அமலனே, ஆதிபிரானே. புரியொடுகை பற்றி ஓர் பொன்னாழி ஏந்தி அரியுருவமளுருவமாகி, எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த மாலே, மாமலராள் நாதனே, பந்திருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள் வந்திருக்கும் மார்வனே, ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருகவெனா மாவலியை சிறையில் வைத்த தாடாளனே, திருவுக்கும் திருவாகிய செல்வனே, அன்னமாய் முனிவரோட அமரரேத்த அருமறையை வெளிப்படுத்த அம்மானே, வடியுகிரால் இரணியனதாகம் ஈர்ந்தவனே, கோளரி மாதவன் கோவிந்தனே, அரிமுகன் அச்சுதனே, வேரிமாறாப் பூமேலிருப்பவளுடன் கூடிக் களித்திடும் பொன்னுருவ மாலோலனே என்று திவ்ய தம்பதிகளை மனமார துதித்தோம். அருமையான தரிசனம் தந்த ஆதி தம்பதிகளை வணங்கி வெளி மண்டபத்தில் வந்து சிறிது நேரம் அமர்ந்து மூலிகைக் காற்றை உட்கொண்டு இயற்கையை இரசித்தோம்.
திருமலை சுவாமிகள் வாருங்கள் பள்ளிக்கூடம் போகலாம் என்று அழைத்தார். எங்களுடன் வந்த சிறுவர்கள் இருவரும், பள்ளிக்கூடமா நாங்கள் வரவில்லை என்றார்கள். சுவாமிகள் உங்கள் பள்ளிக்கூடம் இல்லை பிரஹாலாதன் படித்த பள்ளிக்கூடம் செல்லலாம் என்று அழைக்க அனைவரும் மெல்ல எழுந்து நடந்தோம்.
பிரஹலாதன் பள்ளி செல்வதற்கு முன் மங்கையர்தன் தலைவன் கலிகன்றி மானவேற் கலியனின் ஒன்பதாவது பாசுரத்தை சேவிப்போமா?
நல்லைநெஞ்சே ! நாம் தொழுதும் நம்முடை நம்பெருமான்
அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரம் தோளனிடம்
நெல்லிமல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர்வாய்
சில்லு சில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே (9)
(பொருள்) : நமக்கு சுவாமியாய் தாமரைப் பூவை இருப்பிடமாகக் கொண்ட பெரிய பிராட்டியார் கட்டிக்கொள்ளும்படியாக எழுந்தருளியிருக்கும் ஆயிரம் திருத்தோள்களையுடைய சர்வேஸ்வரனுடைய இடமாவது, நெல்லி மரங்கள் நிறைந்து அதில் இருந்து விழும் கனிகள் கற்களை உடைக்க, பனையோலைகள் ஒசைப்படியாகவும், வழியிலே சில்வீடு என்னும் பறவைகள் சில் சில் என்று ஒலி எழுப்பும் சிங்கவேள் குன்றத்தை பாங்கான என் நெஞ்சே தொழுது உய்வோமாக.
Labels: அஹோபில மடம், மாலோல நரசிம்மர், வேத மலை