Thursday, July 15, 2010

வைர முடி(கருட) சேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
மேல் கோட்டை திருநாராயணன்

இப்பதிவில் நாம் காணப்போகும் கருடசேவை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு கருட சேவை. ஆம் இந்த கருட சேவையின் போது பெருமாள் கருடனே கொண்டு வந்து பெருமாளுக்கு சமர்பித்த வைரமுடி அணிந்து கொண்டு வேத சொரூபனாம் கருடனில் ஆரோகணித்து அனைவருக்கும் அருள் பாலிக்கின்றார் செல்லப்பிள்ளை. இந்த வைரமுடி சேவை நடைபெறும் தலம் கர்நாடகாவில் உள்ள மேல் கோட்டை என்னும் திருநாராயணபுரம் வடக்கில் உள்ள பத்ரிகாஸ்ரமம் போல இத்தலம் தெற்கில் உள்ள பத்ரிகாஸ்ரமம். காரேய் கருணை இராமானுஜருடன் நெருங்கிய தொடர்புடையது இத்தலம். செல்வோமா மேல்கோட்டையின் சிறப்புகளையும் இத்தலத்தில் இராமானுஜரின் கைங்கர்யங்களையும் இறுதியாக வைரமுடி மற்றும் இராஜகுடி சேவையையும் காண வாருங்கள் கைகூப்பி அழைக்கின்றேன்.


வைரமுடி சேவைக்கு முன் எழுந்தருளுகிறார் உடையவர்

தேவேந்திரன் ஒரு சமயம் ஒரு விமானத்தையும் வைர முடியையும் அளித்து இவற்றை எந்தெந்த பெருமாளுக்கு உகந்ததோ அங்கு சம்ர்பித்து விடு என்று பணித்தான். கருடனும் வைர முடியை கர்நாடக மாநிலத்தில் மைசூர் அருகில் உள்ள திருநாராயண புரத்தில் செல்லபிள்ளை சம்பத்குமாரரருக்கும் விமானத்தை தேரழுந்தூரில் ஆமருவியப்பனுக்கும் சமர்பித்தான் இக்கதையை இப்பதிவில் படியுங்கள்

கருடன் கொண்டு வந்த விமானம்.


வைரமுடி மாண்டியா கருவூலத்திலிருந்து பல்லக்கில் வரும் காட்சி

அந்த கருடன் கொண்டு வந்த வைரமுடியில் கருடனில் பெருமாள் பங்குனி மாதம் புஸ்ய நட்சத்திரத்தன்று சேவை சாதிப்பதே மேல்கோட்டை வைர முடி சேவை என்று சிறப்பித்து கூறப்படுகின்றது. இனி இந்த திருநாராயணபுரத்தின் சிறப்புகளை முதலில் காண்போமா?

புராணங்களில் மேல் கோட்டை 1. பத்மகூடா, 2. புஷ்கரா, 3. புத்மசேகரா ,4.அனந்தமாயா , 5. யாதவகிரி, 6. நாராயணாத்ரி, 7. வேதாத்ரி ,8. வித்யா (ஞான) மண்டல், 9. தக்ஷிணபத்ரி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் தென் இந்தியாவில் கர்னாடக ராஜ்யம், மாண்ட்யா மாவட்டம், பெங்களுரிலிருந்து சுமார் 140 கி.மீ, மைசூரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. பெங்களூர் மைசூர் ரயில் பாதையில் பாண்டவபூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 20 கி.மீ. உள்ளது. யதுகிரி பர்வதத்தில் அமைந்துள்ள இத்தலம் ஒரு மலை வாசஸ்தலம். சமுத்திர மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்தில்அமைந்துள்ள இத்தலத்தில் இரண்டு முக்கிய கோயில்கள்., பல மடங்கள், புனித தீர்த்தங்கள், மற்றும் பல தர்ம சாலைகளும் உள்ளன.

பெருமாள் தம் கருணையினால் அர்ச்சா ரூபமாக எழுந்தருளி அருள் பாலிக்கும் நான்கு திருத்தலங்கள் தென்னிந்தியாவில் நாற்கோணமாக அமைந்துள்ளன அவையாவன:

1. தெற்கு திசை ஸ்ரீரங்கம் - கருணா நிவாசன் (தமிழ்நாடு) ஸ்ரீ ரங்கநாதன்.

2. கிழக்கு திசை - காஞ்சீபுரம், (தமிழ்நாடு) ஸ்ரீ வரதராஜன்.

3. வடதிசை - திருமலை / திருப்பதி (ஆந்திரா) திருவேங்கடவவன்.

4. மேற்கு திசை - மேல் கோட்டை (கர்னாடகம்) யதுசைல ரூபம் - திருநாராயணபுரம்.

வைரமுடியும் இராஜ முடியும்

இவ்வளவு சிறப்புப் பெற்ற இந்த திவ்யஸ்தலம் திருநாராயணபுரம் நான்கு யுகங்களும் ப்ரஸித்தி பெற்றது. க்ருத யுகத்தில் ஸநத்குமாரரால் நாராணாத்ரி என்றும், த்ரேதா யுகத்தில் தத்தாத்ரேயரால் வேதாத்ரி என்றும் த்வாபர யுகத்தில் ஸ்ரீ பலராமன் கிருஷ்ணரால் யாதவாத்ரி என்றும் வழங்கப்பட்டது. இக்கலியுகத்தில் யதிராஜரால் யதிஸ்தலமென்றும் வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ரீரங்கத்தை - போக மண்டபமென்றும்,

திருமலையை புஷ்பமண்டபமென்றும்

பெருமாள் கோயிலை - தியாக மண்டபமென்றும்

திருநாராயணபுரத்தை - ஞான மண்டபமென்றும் பெரியோர்கள் கூறுவர்.


மேலும் "நடை அழகு" ஸ்ரீரங்கம் எம்பெருமானுக்கு ப்ரஸித்தம்.

திருவேங்கடமுடையான் அமுது செய்யும் ப்ரஸாதங்களில் வடை ப்ரஸித்தம்.

பெருமாள் கோயிலில் பேரருளாளனுக்கு ஸமர்ப்பிக்கப்படும் " குடை" மிகப் பெரியது.

திருநாராயணனுக்கே முடி (கிரீடம்) உரிய அழகுப் பொருத்தமாக விளங்குகிறது.

செல்லப்பிள்ளை
இராமப்பிரியன்
யதிராஜ சம்பத்குமரன்

இந்த ராமாநுஜரின் அபிமான ஸ்தலத்தில் இரண்டு திருக்கோவில்கள் மலை மேல், கோட்டையில் அமைந்துள்ளன அவையாவன நரசிம்மர் ஆலயம், இரண்டாவது நாராயணர் ஆலயம். நாராயணர் ஆலயத்தில்

மூலவர் :- திருநாராயணன் / திருநாரணன் சங்க சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம், சரணங்களில் பீபீ நாச்சியார் (வெள்ளி கவசத்துடன்) சரணங்களில் வணங்கிய முடி.

உத்ஸவர் :- ஸம்பத்குமாரர், இதரபெயர்கள் - ராம ப்ரியர், செல்வ பிள்ளை, செல்வ நாராயணன்.

தாயார் :- யதுகிரி நாச்சியார், மேலும் பூமி தேவி, வரநந்தினி நாச்சியார்.

தீர்த்தம் :- கல்யாணி தீர்த்தம், வேத புஷ்கரிணி, தனுஷ் கோடி தீர்த்தம், முதலிய 8 தீர்த்தங்கள்.

விமானம் :- ஆனந்தமய விமானம்

ப்ரத்யக்ஷம் :- கருட பகவான்

இத்த்லத்தில் எழுந்தருளியிருக்கும் இதர மூர்த்திகள் :

வண்புகழ் நாரணன் :- ஸ்நபனபேரர், (நாராயண பகவான் பக்கத்தில்) நித்ய திருமஞ்ஜனம் கண்டருளிகிறார்.

வாழ் புகழ் நாரணன், பலி செல்வர், செல்வப் பிள்ளை ஸந்நிதியில் ஸேவை ஸாதிக்கிறார்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் செல்வ நாரணன், திருநாரணன். வண்புகழ்நாரணன், வாழ்புகழ்நாரணன் என்று நான்கு திருநாமங்களையும் அனுபவிக்கலாம்.


இராமானுஜர்

கிருமி கண்ட சோழன் என்ற அரசன் சைவ மதப்பற்றினால் ஸ்ரீவைஷ்ணவ துவேஷியானான். அதனால் ஸ்ரீரங்கத்தில் இருந்த வைணவத்தின் வளர்ப்புத்தாயாம் ராமானுஜருக்கு பல தொல்லைகள் கொடுத்தான். இதனால் கூரத்தழ்வாரின் ஆலோசனைப்படி இராமானுஜர் வெள்ளை சாத்தி, தமிழ்நாட்டைவிட்டு கர்நாடக தேசத்துக்கு சத்தியமங்கலம் வழியாக தொண்டனூர் வந்தார். அப்போது ஜைன மதத்தை ஆதரித்து வந்த விட்டல தேவராயன் என்ற மன்னன் இந்த இடத்தை ஆண்டு வந்தான். அவனது மகளுக்கு சித்தபிரம்மை பிடித்திருந்தது. அதனை நீக்க ஜைனத் துறவிகளால் முடியாமல் போக, ராமானுஜர் உதவியால் அது நீங்கியது. இதைக் கண்ட பிட்டிதேவன் ஜைன மதத்தைத் துறந்து, ஸ்ரீவைஷ்ணவன் ஆனான். ராமானுஜர் அவனுக்கு விஷ்ணுவர்தனன் என்ற பெயரைச் சூட்டினார். இந்த மன்னன் மேல்கோட்டை கோயிலுக்குப் பல உதவிகள் செய்துள்ளான். உதயகிரி மலையில் திருக்கோவிலைக் கட்டியவன் இவனே.

வைரமுடி ஸேவை

வைரமுடி சேவை முன்னழகு

மேல்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் தொண்டனூர் ஏரி ராமானுஜர் ஏற்படுத்தியது. அவர் தொண்டனூரில் வசித்து வந்த போது அவரது நெற்றியில் அணியும் திருமண் தீர்ந்துவிட, அன்று இரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி, திருநாராயணபுரத்துக்கு செல்லும் வழியைச் சொல்லி அங்கு ஒரு புற்றில் இருக்கிறேன் என்றும் தன்னை வெளியே கொண்டு வரவேண்டும் என்று கூறினார். ராமானுஜர் பெருமாள் சொன்ன வழியாக திருநாராயணபுரத்துக்கு அங்கு வேதபுஷ்கரணியில் குளித்துவிட்டு திருமண் அணிந்துக்கொண்டு, கல்யாணி குளத்துக்கு பக்கத்தில் இருந்த எரும்புப் புற்றை, ஊர் மக்கள் உதவியுடன் பால், மற்றும் தீர்த்தத்தைக் கொண்டு கரைத்தார். திருநாராயணர் திவ்ய மங்கள விக்ரஹத்தை ராமானுஜர் பிரதிஷ்டை செய்தார். ராமானுஜருக்கு இங்கே திருமண் கிடைத்தால் இன்றும் மேல்கோட்டையில் திருமண் விஷேசமாக விற்கப்படுகிறது.

பக்கவாட்டுத்தோற்றம்
(வைரமுடியைத் தெளிவாகக் காணலாம்)

முன்பொரு காலத்தில் முகம்மதிய படையெடுப்பின் போது டில்லி சுல்தான் கோயிலை இடித்து விக்ரகங்களையும், பொன் பொருள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துச் சென்றான் என்றும், திருநாராயணனின் உற்சவமூர்த்தியும் சுல்தானிடம் தான் இருக்கிறதென்றும் அவ்வூர் மக்கள் மூலம் அறிந்தார் இராமானுஜர். மன்னன் உதவியுடன் சில சீடர்களை உடன் அழைத்துக் கொண்டு டில்லி சுல்தானை நேரில் கண்டு உற்சவ மூர்த்தியைத் திரும்பத் தருமாறு கேட்டுக் கொண்டார். சுல்தானுக்கு இராமானுஜரைக் கண்டு வியப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அவரைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தான். தன் மகள் ஆசைப்பட்டாள் என்பதற்காக அந்த விக்ரகத்தை அவளுக்கு விளையாடக் கொடுத்திருந்தான். அதைத் திரும்பப் பெறுவதென்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் ஒரு நிபந்தனையுடன் அதை எடுத்துச் செல்லலாம் என்றான். நிபந்தனை இதுதான். இராமானுஜர் உற்சவமூர்த்தியை அழைக்க வேண்டும. விக்ரகம் தானாகவே அவரிடம் வந்து சேரவேண்டும் என்றான். உடனே இராமானுஜர் ஒரு குழந்தையை அழைப்பதுபோல் ''என் செல்லப் பிள்ளாய் வருக'' என்று குழைவாக அழைத்தார். என்ன ஆச்சரியம்! சிலைவடிவில் இருந்த இராமப்பிரியன் விக்ரகம் மாறி ஒரு குழந்தை வடிவில் சலங்கை சல் சல் என்று ஒலிக்க அனைவரும் வியந்து நோக்க நடந்து வந்து அவர் மடியில் அமர்ந்து கொண்டு மீண்டும் சிலையாயிற்று. சுல்தான் மலைத்துப் போனான். நிபந்தனைப்படியே உற்சவ மூர்த்தியை எடுத்துப்போக அனுமதித்து அத்துடன் பொன்னும் பொருளும் தந்து அனுப்பி வைத்தான். எனவே மேல்கோட்டை உற்சவமூர்த்தி 'செல்லப்பிள்ளை' என்றும் "யதிராஜ சம்பத்குமாரன் " என்றும் அழைக்கப்படுகின்றார். செல்வப்பிள்ளை திருநாராயணபுரம் வந்த நாளான மாசி கேட்டை டில்லி உத்சவம் என்று இன்றும் கொண்டாடப்படுகிறது


வைரமுடி கருட சேவை



சுல்தானின் மகள் சிலையைப் பிரிந்திருக்க முடியாமல் மேல்கோட்டையைத் தேடி ஓடி வந்து உற்சவமூர்த்தியை ஆரத்தழுவிக் கொண்டாள். அடுத்த நிமிடம் அந்த சிலையுடன் ஐக்கியமாகி விட்டாள். அவள் அன்பைப் பாராட்டி அவளைப் போலவே ஒரு சிலை செய்து 'பீபீ நாச்சியார்'' என்ற பெயரில் நாராயணனுக்கருகில் அமர்த்தி விட்டார் இராமானுஜர்.


இது மட்டுமா? டில்லி சுல்தானிடமிருந்து சிலையைக் கொண்டு வரும் வழியில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் அவரை எதிர்த்து சிலையையும், சுல்தான் கொடுத்த பொன் பொருள் ஆகியவற்றையும் கவர்ந்து கொள்ள முயன்ற போது உடன் வந்தவர்கள் அலற, இராமானுஜர் ''அவனைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்குத் தெரியும்'' என்று சொல்லி அமைதிப்படுத்தினார். அருகிலிருந்த சேரிமக்கள் இவர்கள் அலறல் கேட்டு திரளாக ஓடிவந்து கொள்ளைக்காரர்களை விரட்டி, இராமானுஜரையும் மற்றவர்களையும் ஊரின் எல்லை வரைக்கும் கொண்டுவந்து சேர்த்தனர். கோயிலுக்குள் நுழைய தங்களுக்கு அனுமதியில்லை என்று சொல்லி விடை பெற்றுக்கொள்ள முயன்ற போது, இராமானுஜர் இறைவனைக் காப்பாற்றிய அவர்களுக்குத்தான் உண்மையிலேயே அதிக உரிமை உண்டு என்று சொல்லி அவர்களையும் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சேரி மக்கள் என்று தாழ்த்தப்பட்ட நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களை ஆலயப் பிரவேசம் செய்து இராமானுர் அக்காலத்திலேயே ஒரு புரட்சியை செய்துள்ளார்.



ராமானுஜர் மேல்கோட்டையில் 12 வருஷம் இருந்துவிட்டுத் திரும்ப ஸ்ரீரங்கம் புறப்பட்டபோது, அங்கிருந்த அவரது சீடர்கள் துயரமாக இருப்பதைக்கண்டு அவரை மாதிரியே ஒரு விக்ரஹம் செய்து அதை அவர்களுக்குத் தன் நினைவாகக் கொடுத்துவிட்டுச் சென்றார். இது இன்றும் தமர் உகந்த திருமேனி என்று போற்றப்படுகிறது. ஊர் மக்கள், அவரைப் பார்த்தால் உங்களிடம் பேசுவது போல இருப்பதால், இந்த விக்ரஹத்தைப்பேசும் ராமானுஜர்என்று அழைக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது "தானுகந்த திருமேன”, திருவரங்கத்தில் உள்ளது "தானான திருமேனி".


மேல்கோட்டை நாராயணபுரத்தில் பங்குனி மாதத்தில் நடைபெறும் கருடன் கொண்டு வந்த 'வைரமுடி சேவை' விழா தனிச்சிறப்புடையது. இராமானுஜர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவ மூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து விழா கொண்டாடுகின்றனர். இராமன் முடிசூட்டு விழாவைக் காண தசரதருக்குக் கிடைக்காத பேறு இராமானுஜருக்கு கிடைத்தது. வைர முடி சேவை பங்குனி மாதம் புஷ்ய நக்ஷத்ரத்தில் மிக விமர்சையாக அனுஷ்டிக்கப்படுகிறது. பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகின்றனர். இதைத் தவிர ராஜமுடி, (க்ருஷ்ண ராஜமுடி) சேவையும் கொண்டாடப்படுகிறது.


ஸ்ரீதேவி மற்றும் பூதேவித்தாயார்களுடன்

கருடனில் பெருமாள் வைரமுடியுடன்


(படத்தை பெரிதாக்கினால் கருடனை தெளிவாகக் காணலாம்)


பங்குனி புஷ்ய நாளில் அரை வட்ட வடிவ இரட்டை யாளி முகம் கொண்ட பிரபையின் நடுவில் உபய நாச்சியார்களுடன் வேத ஸ்வரூபனான கருடனில், அவன் கொண்டு வந்த வைர முடியுடன் பெருமாள் பவனி வரும் அழகை என்ன என்று சொல்ல .


வைரமுடி கருட சேவை

முதலில் கருடாழ்வார் கோயிலைச் சுற்றி வலம் வருகின்றார். பிறகு வைரமுடி என்று அழைக்கப்படும் கிரீடம் பல்லக்கில் ஏற்றப்பட்டு கோயிலைச் சுற்றி வருகின்றது. இந்த வைரமுடி என்ற வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை மாண்டயா கஜானாவிலிருந்து சகல மரியாதையுடன் கலெக்டர் கொண்டு வருவார். வருடத்துக்கு ஒரு முறை இந்த விலை உயர்ந்த கிரீடம் சில மணி நேரம் மட்டுமே பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

வைரமுடி திரும்பச்செல்கின்றது

மாலை சுமார் 7:30 மணிக்கு பெருமாள் கருடன் கொண்டு வந்த அற்புத வைரமுடியை அணிந்து கொண்டு பல்லக்கில் வெளியே வருகிறார் உபய நாச்சியார்களுடன் சம்பத் குமாரர். தாயார்களுடன் பெருமாளின் கருட சேவை சாதிப்பது இங்கு ஒரு தனி சிறப்பு. எல்லாத் திசைகளிலும் பெருமாளை அழைத்து செல்லுகிறார்கள். யாராவது நான் பெருமாளைச் சேவிக்கவில்லை என்று சொன்னால் அவர் நிச்சயம் பொய் சொல்கிறார் என்று சொல்லிவிடலாம். பிறகு விடியற்காலை கிட்டதட்ட 2 மணிக்கு திரும்பவும் பெருமாள் கோயிலுக்கு எதிரில் உள்ள மண்டபத்துக்குச் செல்கிறார் அங்கே வைரமுடி கழட்டப்பட்டு பெட்டியில் சீல் செய்கிறார்கள். பிறகு ராஜ முடி அணிந்துசேவை சாதிக்கின்றார் செல்லப்பிள்ளை.

இராஜமுடி(கிருஷ்ணராஜ முடி) சேவை

மைசூர் அரச பரம்பரையில் வந்த மன்னர்களில் கிருஷ்ணராஜ உடையார் வைரமுடியைப் போலவே மற்றொரு கிரீடத்தை அளித்தார். இதை கிருஷ்ணராஜ முடி என்று புத்தகங்கள் சொன்னாலும், கூட்டம் ராஜ முடி என்று அழைக்கிறது. ராஜ முடி அணிந்துக்கொண்டு நிஜமாகவே அவர் இளவரசன் போல நடந்து செல்கிறார் டெல்லியிலிருந்து இராமானுர் கூப்பிடக்குரலுக்காக ஒடி வந்த இராமப்பிரியர் . நம்மாழ்வார் சொன்னகிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்” என்றபடி இளமையிலேயே வைர முடி, ராஜமுடி நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று.

வைர முடி சேவையைத் தவிர குழந்தை இல்லாதவர்களுக்கு அருளும் விதமாக ஐப்பசி மாத சுக்லபட்ச தசமி திதியன்று அஷ்டதீர்த்த உற்சவத்தை நடத்துகின்றனர் இத்தலத்தில். குழந்தையில்லாதவர்கள் விரதம் மேற்கொண்டு குளக்கரையில் ஒரு பழுத்த சுமங்கலியின் கையால் மஞ்சள், குங்குமம் இட்டுக் கொண்டு, ஒரு தேங்காய், ஒன்பது வாழைப் பழங்கள், இரண்டு கர்ஜீர்காய், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை சுமங்கலி கையால் பெற்றுக் கொண்டு, அதைத் தங்கள் புடவைத் தலைப்பில் இறுக முடிந்து கொண்டு சடாரி தீர்த்தமாடிய பின் கல்யாணி புஷ்கரணியில் நீராடுகின்றனர். பின்பு கல்யாணி புஷ்கரணிக்கு மஞ்சள், குங்குமமிட்டு, கற்கண்டு, தேங்காய், வாழைப்பழம் ஆகிய வற்றை நைவேத்யம் செய்து, அங்குள்ள இரண்டு சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, பழத்துடன் தருகிறார்கள். விரதமிருக்கும் பெண்கள் - அதாவது, பிள்ளை வரம் வேண்டும் என்று வேண்டிக் கொண்டு விரதமிருப்பவர்கள் ஒவ்வொரு தீர்த்தத்திலும் தங்கள் மடியில் கட்டியுள்ளவற்றுடன் நீராடியபின் மஞ்சள், குங்குமமிட்டு கற்கண்டு நைவேத்யம் செய்து இரு சுமங்கலிகளுக்குக் கொடுக்க வேண்டும்.




இப்படி அஷ்ட தீர்த்தங்களில் சடாரி நீராட்டம் முடிந்தபின், தொட்டில் மடுவிற்கு சடாரியை எழுந்தருளச் செய்து திரு ஆராதனம் செய்தபின், பெருமாள் பிரசாதமாக கதம்பமும் தயிர்சாதமும் பக்தர்களுக்குத் தருவார்கள். விரதப் பெண்கள் மட்டும் இதனைக் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. பிரசாதம் வழங்கியபின் சடாரியுடன் அனைவரும் இரண்டரை மணி நேரத்தில் திருநாராயணமலையை வலம் வருவார்கள். பின் சடாரியை கோவிலுக்கு எழுந்தருளப் பண்ணுவார்கள். விரதப் பெண்கள் நேரே மலைமீதுள்ள யோக நரசிம்மர் சந்நிதிக்குச் சென்று தன் மடியில் உள்ளவற்றைத் தட்டில் வைத்து அர்ச்சகர் மூலம் மூலவரிடம் சேர்ப்பித்து, பின் எம்பெருமாளைச் சேவித்து விட்டு பிரதட்சிணம் செய்துவிட்டு வரவேண்டும். அப்போது சந்நிதியில் இவர்களுக்கு வெண் பொங்கல், நான்கு வாழைப்பழங்கள் தருவார்கள்.


வைரமுடி சேவை பின்னழகு


இதனை விரதப் பெண்கள் வீணாக்காமல், கீழே போடாமல், யாருக்கும் தராமல் எல்லாவற்றையும் அவர்களே சாப்பிட வேண்டும். பின் விரதம் முடித்து வீடு திரும்ப வேண்டும். வீட்டிற்குச் சென்று அன்று வேறு எதுவும் சாப்பிடக் கூடாது. இப்படி முறைப்படி விரதம் மேற்கொள்ளும் பெண்கள் அனைவரும் தகுந்த பலன் பெற்றுள்ளனர். நம்பிக்கையை மனதில் இருத்தி விரதத்தை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு எம்பெருமாள் கட்டாயம் பலன் தருவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

இவ்வளவு சிறப்புகள் உள்ள வைரமுடி கருடசேவையைக் காண இப்போதே முடிவு செய்துவிட்டீர்களா? தவறாமல் அடுத்த தடவை சென்று சேவியுங்கள். புகைப்பட உதவிக்கு நன்றி திரு. தனுஷ்கோடி அவர்களே.

Labels: , , , ,