ஒரு பொன் தரிசனம்
திருக்கடிகை என்னும் சோளிங்கர்
என் நண்பர் தனுஷ்கோடியிடமிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு , சார் நாளைக்கு சோளிங்கர் போறேன் வர்றேங்களா? என்று கேட்டார். அப்போதுதான் வெளியூர் சென்று விட்டு வந்திருந்தேன், உடனே செல்ல வேண்டுமா? என்று மனதில் ஒரு குரல் , அதே சமயம் வீட்டுக்கார அம்மாவும் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு அப்புறம் போங்க என்று கூறினார். ஆகவே என் நண்பரிடம் யோசித்து விட்டு சொல்கிறேன் என்று சொன்னேன். அவர் விடாமல் வண்டி எல்லாம் பேசி முடித்து விட்டோன் இப்போது சம்ப்ரோக்ஷணம் முடிந்து மண்டலாபிஷேகம் நடந்து கொண்டிருக்கின்றது அதற்குள் சென்று வந்து விடலாம் என்று கூறினார்.
பொன் விமானம்
எக்காலத்தெந்தையாய் என்னுள் மன்னில் மற்
றெக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேதமலர் விழுங்கும் என்
அக்காரக்கனியே! உன்னையானே - நம்மாழ்வார்
என்ன செய்வது என்று புரியவில்லை அப்போதுதான் தோன்றியது அடடா பாலாலயத்தின் போது சென்றிருந்தோமே, ஆனால் சம்ப்ரோக்ஷணம் ஸேவிக்கக் கொடுத்துவிக்கவில்லை என்றுதான் பெருமாள் இவ்விதம் அழைக்கின்றாரோ என்னவோ என்று எண்ணி அரை மனதுடன் சரி சார் , நாளை வருகிறேன் என்று கூறினேன்.

அப்போது நினைக்கவில்லை இவ்வளவு அருமையான தரிசனம் கிடைக்குமென்று. பெருமாளும் தாயாரும் அளித்த அற்புத தரிசனத்தின் ஒருசில காட்சிகள்தான் இப்பதிவு. முதலில் ஏகாந்தமாக பெருமாளின் மண்டலாபிஷேகம் சேவிக்கும் பொன்னான வாய்ப்புக்கிட்டியது. அதற்கடுத்து பெருமாள் மற்றும் தாயாரின் பொன் விமான தரிசனம். மற்றும் மாலை தாயாரின் தங்கத்தேர் பவனி என்று அன்று நாள் முழுவதும் பொன்னான தரிசனம் கிட்டியது அவனருளால்.

முதலில் கூவம் நதியின் கரையில் பேரம்பாக்கம் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள நரஸிங்கபுரன் சென்று அங்கு கோவில் கொண்டு அருள் பாலிக்கும் லக்ஷ்மி நரசிம்மரை சேவித்தோம்( இத்தலத்தைப்பற்றி இன்னொரு பதிவில் காணலாம்). பின்னர் சோளிங்கர் சென்று பெரிய மலையில் பெருமாள் திருமஞ்சனம், பொன் விமான தரிசனம் மற்றும் சிறப்பு பூஜை சேவித்தோம். பின்னர் சிறிய மலையில் யோக ஆஞ்சனேயரை சேவித்தோம் அங்குதான் கூறினார்கள் ஊர்க்கோவிலில் இன்று தாயாரின் தங்கரத பவனி என்று.
பொன் விமானம்
காரார் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏரார் பொழில்சூழ் இடவெந்தை நீர்மலை
காரார் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏரார் பொழில்சூழ் இடவெந்தை நீர்மலை

ஆகவே ஊர்க்கோவில்வந்து பக்தோசிதனையும் தாயாரின் பொன் இரத ஸேவையையும், ஆதி கேசவனையும் சேவித்து மிக்க திருப்தியாக இல்லம் திரும்பினோம்.



மிக்கானைத் மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர்பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக்கனியை அடைந்துய்ந்து போனேனே -திருமங்கையாழ்வார்


இந்த இனிய தீப ஒளித் திருநாளில் அன்பர்களாகிய தங்களுடன் அந்த பொன்னான நினவுகளை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் லக்ஷ்மி கடாக்ஷம் கிட்ட அமிர்தபலவல்லித் தாயரிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
Labels: அக்காரக்கனி, அமிர்தபலவல்லி, சோளிங்கர், திருக்கடிகை, தீபாவளி