திருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -2
சேஷ வாகன சேவை
சகல ஜீவராசிகளையும் தன் ஒளிக் கதிரால் வாழ்விப்பவன் சூரியன், அது போல சகல ஜீவராசிகளையும் காப்பவர் நாராயணன். எனவே சூரியனுக்கும் விஷ்ணுவுக்கும் வித்தியாசம் இல்லை. எனவே சூரிய பகவான் சூரிய நாராயணன் என்றும் அழைக்கப்படுகின்றார். இவ்வாறு அழைக்கபப்டுவதற்கு ஒரு காரணமும் உண்டு பெருமாளின் வாகனம் வேத சொரூபி கருடன். கருடன் சிறந்த அழகு பொருந்திய சிறகுகளை உடையவன் ஆதலால் கருத்மான் என்றும் அழைக்கப்படுகின்றான். கருடனுடைய இரு சிறகுகள் உத்திராயணம் மற்றும் தக்ஷிணாயனம் ஆகும். அவன் பறக்கும் போது பகலும் இரவும் மாறி மாறி உண்டாகிறது. இவ்வாறு கால புருஷனை நடத்துபவர் விஷ்ணு. இவர் கருட வாகனத்தில் வருவதால் சூரியன் சூரிய நாராயணன் என்றும் அழைக்கப்படுகின்றார். எனவே தான் விஷ்ணுவுக்குரிய சங்கும் சக்கரமும் ஏந்தி சூரியனும் அருள் பாலிக்கின்றார். சூரியனும் வேத சொரூபம் காலையில் ரிக் வேதமாகவும், நன்பகலில் யஜுர் வேதமாகவும், மாலையில் சாம வேதமாகவும் ஒளிர்கின்றார் சூரிய நாராயணர்.
இரத சப்தமியன்று அருணன் சாரதியாக இருந்து செலுத்தும் ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய நாராயணரின் இரதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம். சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நாள் என்பாரும் உண்டு. வெள்ளை ஒளியில் ஏழு நிறங்கள் அது போலவே சூரிய இரதத்தில் ஏழு குதிரைகள். எனவேதான் ஏழாம் நாள் என்பதால் சூரியனுக்கு உரிய நாளாக அமைத்தனரோ முன்னோர். இரத சப்தமி என்னும் இந்நாளில் சூரியனுக்கு விசேஷ ஓளி பிறப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
இரதத்தை எப்படி செழுமையாக செலுத்த வேண்டுமோ அது போல ஐம்புலன்களால் பல் வேறு திசைகளில் இழுக்கப்பட்டு தடுமாறும் மனத்தை இறைவனிடம் செழுத்தவேண்டும் என்பதை உணர்த்தும் நாள் இரத சப்தமி நாள்.
இந்த ரத சப்தமியன்று சூரியனுக்கு அருளும் விதமாக பெருமாள் ஏழு வாகனங்களில் மாட வீதி வலம் வந்து அருள்புரிகின்றார். இப்பதிவில் நாம் காண இருப்பது இரண்டாவது வாகன சேவையான சேஷ வாகன சேவை.
இரத சப்தமிக்கு சிறப்பு அலங்காரம்
யானை, குதிரை, எருதுகள் முன் செல்கின்றன
தாசர் கூட்டம் ஆடிக்கொண்டு செல்கின்றனர்
பெருமாளும் தாயாரும் போல வேடமிட்ட பக்தர்கள்
சென்றால் குடையாம் இருந்தால் சிம்மாசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் - என்றும்
புணையாம்மணிவிளக்காம் பூம்பட்டாம்புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு.
என்றபடி பெருமாளுக்கு எல்லா நிலைகளிலும்,எல்லா அவதாரத்திலும் சேவை செய்யும் ஆதி சேஷனில் பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
நாகத்தணைக்குடந்தை வெஃகாதிருவெவ்வுள்
நாகத்தணையரங்கம் பேரன்பில் - நாகத்
தணைப்பாற்கடல்கிடக்கும் ஆதிநெடுமால்
அணைப்பார் கருத்தனாவான்
என்று பெருமாள் பாம்பணையில் கிடந்த கோலமாக சேவை சாதிக்கும் திவ்யதேசங்களை திருமழிசையாழ்வார் மங்களாசாசனம் செய்கின்றார்.
பெருமாளின் அழகு திருக்கோலம்
மங்களாசாசனம்
ஸ்ரீ வேங்கடாத்ரி ச்ருங்காக்ர மங்களாபரணாங்க்ரயே
மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்.
திருவேங்கடமுடையான் திருவடிகள் திருமலையின் கொடுமுடிக்கே ஒரு அழகிய ஆபரணமாக விளங்குகின்றன. திருமலைக்கே ஒரு திவ்ய சக்தியை அளிக்கின்றன. அத்தகைய திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.
ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா ஸர்வசேதஸாம்
ஸதா ஸம்மோஹநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்.
திருவேங்கடவனின் திருவடி முதல் திருமுடி வரை திருமேனி முழுவதுமே அழகு செல்வத்தால் எல்லா உள்ளங்களையும் மோகிக்கச் செய்கின்றது. அவரது திருமெனியின் திருவழகைக் கண்டு மயங்காதவர் இல்லை. ஆண் பெண் வேற்றுமையின்றி அனைவரும் அவனழகில் மயங்கியவரே. கண்ணெச்சிலின்றி அக்கடவுளுக்கு எல்லா மங்கங்களும் உண்டாகட்டும்.
Labels: சூரிய நாராயணர், சேஷ வாகனம், ரத சப்தமி