திருக்கச்சி நம்பிகள்
( நம்பியின் பதக்கத்தில் அரங்கனும் திருவேங்கடவனும் உள்ளதை படத்தை பெரிது படுத்திப்பார்க்கவும்)
மூன்று கருட சேவை
தருமமிகு சென்னையின் மிக அருகில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலம். ஸ்ரீ ராமானுஜருக்கு குருவாகிய விளங்கியவரும் கச்சி வரதருக்கு புஷ்ப கைங்கர்யம் மற்றும் ஆலவட்ட கைங்கர்யம் செய்தவருமான அருள் நிறை ஸ்ரீ திருகச்சி நம்பிகளின் திருஅவதார ஸ்தலம். பெருமாள் இவருக்காக சூரிய மண்டலத்துடன் காஞ்சி வரதராஜராகவும், மேலும் அரங்கநாதராகவும், திருவேங்கடவனுமாக சேவை சாதிக்கும் தலம்.
தர்மமே வெல்லும் என்ற நியதியின்படி பாரதப் போரில் வெற்றிவாகை சூடிய தருமன், இத்தலத்தில் தவம் செய்து மன அமைதி பெற்றதால் தருமபுரி என்று அழைக்கப்படும் தலம். இத்தலத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீபுஷ்பவல்லித்தாயார் மல்லிகைப் பூவிலிருந்து தோன்றியதால் பூவிருந்தவல்லி என்றழைக்கப்படும் தலம். திருகச்சி நம்பிகள் இங்கு நந்தவனம் அமைத்து மலர்த்தொண்டு செய்து வந்ததால் புஷ்ப மங்கலம் என்றும் புஷ்பபுரி என்றும் அறியப்படும் தலம். முதற்பராந்தக சோழன் காலத்து பழைய கல்வெட்டில் தொண்டை நாட்டின் புலியூர் கோட்டத்துப் பூந்தண்மலி என்று குறிப்பிடப்படும் தலம். தற்போது பேச்சு வழக்கில் பூந்தமல்லி என்றும் ஆங்கிலத்தில் பூணமல்லி என்றழைக்கப்படும் தலம்.
மூன்று கருட சேவை கோபுர வாசல் தரிசனம்
இச்சிறப்புகள் பெற்ற பூவிருந்தவல்லியில் அவதரித்த திருக்கச்சி நம்பிகளின் பெருமையை பார்ப்போமா? நகரேஷூ காஞ்சி என்னும் கச்சியம்பதியில் சேவை சாதிக்கும் தேவராஜப் பெருமாளுக்கு புஷ்ப கைங்கரியமும், ஆலவட்ட (விசிறி வீசுதல்) கைங்கர்யமும் செய்து வந்தவர் திருக்கச்சி நம்பிகள். அர்ச்சா திருமேனியரான அத்திகிரி வரதனுடன் அனுதினமும் நேரில் பேசும் பெரும்பேறு பெற்றவர். ஸ்ரீ இராமானுஜருக்காக ஆறு வாக்கியங்களை வரதராஜரிடம் பெற்று அனைவரும் உய்ய வழங்கியவர். இவரது முதுமைக் காலத்தில் கச்சி செல்ல முடியாத நிலையிலும் கால்கள் தேய செல்ல முயன்ற போது பேரருளானனே சூரிய மண்டலத்தில் இவருக்கு சேவை சாதித்து இவருக்காக இத்தலத்திலேயே கோவில் கொண்டார். இவருடன் திருவரங்கத்து அமுதனும், திருவேங்கடவனும் இங்கு திருக்கோவில் கொண்டனர். தன் தந்தையைத் தொடர்ந்து திருமழிசையாழ்வாருக்கு சேவை செய்து வந்ததால் பார்க்கவப்பிரியர் என்னும் நாமமும் பெற்றார். திருமழிசையாழ்வாரின் திருச்சந்த விருத்தத்திற்கு தனியன்கள் இவர் இயற்றியவை. காஞ்சி வரதருக்கு புஷ்ப கைங்கரியமும், ஆலவட்ட கைங்கரியமும் செய்து வந்து அவருடன் உரையாடும் பாக்கியமும் பெற்றதால் காஞ்சி பூரணர் என்னும் திருநாமமும் இவருக்கு உண்டு. இவ்வளவு சிறப்புகள் பெற்ற இத்தலத்தில் பரம பாகவதர் திருக்கச்சி நம்பிகளுக்காக பங்குனி மாதம் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் மூன்று கருட சேவையை இப்பதிவில் காணலாம் அன்பர்களே.
வரதராஜப்பெருமாள் கருட சேவை
திருக்கச்சி நம்பிகள் வரலாறு: இன்றைக்கு ஆயிரத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் சாலி வாஹன சகாப்தம், ஆங்கில 1009ம் ஆண்டு, சௌம்ய வருடம் மாசி மாதம் மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் ஸ்ரீவீரராகவ செட்டியாருக்கும் ஸ்ரீமதி கமலையாருக்கும் நான்காவது திருக்குமாரனாக திரு அவதாரம் செய்தார். இவரது இயற்பெயர் கஜேந்திரதாசன் ஆகும். சிறு வயது முதலே இவர் திருமால்மீது பக்தி கொண்டவராய் வளர்ந்தார். இவரது தந்தையார் தமது முதுமைக் காலத்தில் தனது சொத்துக்களையெல்லாம் தனது நான்கு மகன்களுக்கும் சமமாக பிரித்துக் கொடுத்து, வைசியர்கள் என்பதால் வணிகம் செய்து இந்த செல்வத்தை இன்னும் பெருக்கிக் கொண்டு வளமாக வாழுங்கள் என்ற அறிவுரை கூறினார். மற்ற மூவரும் அவ்வாறே செய்ய , கஜேந்திரதாசர் மட்டும் செல்வத்தை பற்றி எண்ணாமல் திருமாலுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே காலத்தை கழித்தார். தந்தை அளித்த செல்வத்தில் பூவிருந்தவல்லியில் நிலம் வாங்கி நந்தவனம் அமைத்து, பல் வேறு மலர்ச் செடிகளை பேணி வளர்த்து, மலர் மாலை கட்டி காஞ்சி பேரருளானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார். பின்னர் ஆலவட்ட கைங்கரியமும் செய்யும் பேறு பெற்றார். இவரது சேவைக்கு மகிழ்ந்த தேவராஜப் பெருமாள் இவருடன் தினமும் உரையாடினார்.
அரங்கநாதர் விமானம்
ஆலவட்ட கைங்கர்யம்: ஒரு சமயம் இவர் திருவரங்கத்தில் தங்கியிருந்து திருவரங்கனை கண்டு கண் குளிர சேவித்து, அரங்கனுக்கு திரு ஆலவட்ட கைங்கரியத்தை செய்யத் திருவுள்ளம் கொண்டு தம்மை அருளும்படி திருவரங்கனிடம் விண்ணப்பித்தார். அதற்கு அரங்கனும் அன்புடன் அவரை நோக்கி தாம் கங்கையினும் புனிதமான காவிரியின் நடுவு பாட்டு, சோலைகளின் தென்றலினால் குளிர்ச்சியாக பள்ளி கொண்டிருப்பதால் தனக்கு ஆலவட்ட சேவை தேவையில்லை, நீ திருமலை சென்று திருவேங்கடவனுக்கு சேவை செய் என்று அருளினார். ஆகவே இவரும் அரங்கனது ஆணையைச் சிரமேற் கொண்டு, திருமலை சென்று திருமலையப்பனை கண்ணார சேவித்து தம் விருப்பத்தை விண்ணப்பிக்க, வேங்கடவாணரும் குளிரருவி பாயும் மலையில் தான் சேவை சாதிப்பதால் அந்த மேகங்கள் சூழப் பெற்று மெல்லிய தென்றல் காற்றே சுகமாக உள்ளது. எனவே காஞ்சிபுரம் செல், பிரம்மா நடத்திய யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவராஜப்பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வா என்று அருளினார். நம்பிகளும் அவ்வாறே பூந்தமல்லி வந்து காஞ்சி பேரருளாருக்கு மலர் மாலை சாற்றியும், விசிறி வீசியும் சேவை செய்து வந்தார். காஞ்சியில் நம்பிகள் வசித்து வந்த இடத்தில் இன்றும் இவர் சன்னதி உள்ளது.
பொதுவாக ஆலயங்களில் பட்டர்கள் பெருமாளின் வலது புறம் நின்று பூசை செய்வார்கள். ஆனால் தேவராஜப் பெருமாள்க்கு இடதுபுறம் நின்றே பூசை செய்கின்றனர் ஏனென்றால் வலப்புறத்தில் திருக்கச்சி நம்பிகள் இன்றும் நின்று ஆலவட்ட கைங்கர்யம் செய்கின்றார் என்பது ஐதீகம்.
வரதராஜப் பெருமாள் பின்னழகு
நம்பிகளுக்கு காட்சி கொடுத்து அருளியது: காலம் கழிந்தது இவ்வாறு நம்பியும் முதுமை எய்தினார். ஆயினும் தான் செய்து வந்த திருத்தொண்டை விட மனமில்லாமல் தினமும் பூந்தமல்லியிலிருந்து காஞ்சி சென்று வந்து கொண்டிருந்தார். ஒரு நாள் அதிகாலையில் தள்ளாத வயதில், உடல் தளர்ச்சியால், நடக்க முடியாமல் அவர் முழங்கால் தேய வரதா! வரதா! இவ்வாறு ஆகிவிட்டதே உனக்கு கைங்கர்யம் செய்ய முடியாமல் போய் விடும் போல உள்ளதே, ஓ! யானைக்காக உடனே ஓடி வந்த ஆதி மூலமே சரணம், பாண்டவகளுக்காக தூது சென்ற பரமனே சரணம், ப்ரகலாதனுக்காக தூணில் தோன்றிய வள்ளலே சரணம் என்று பலவாறும் போற்றிக்கொண்டே, கண்ணில் நீர் சொரிய, தவழ்ந்து செல்ல முயன்ற போது காஞ்சி வரதர் சூரிய உதய வேளையில் கோடி சூரிய பிரகாசனாக சூரிய மண்டலத்தில் தோன்றி இவருக்கு சேவை சாதித்தருளினார். உடன் திருவரங்கனும், திருவேங்கடவனும் சேவை சாதித்தனர். இனி மேல் தாங்கள் காஞ்சி வர வேண்டாம் நாங்கள் மூவரும் உங்களுக்காக இங்கேயே சேவை சாதிக்கின்றோம் என்று மூவரும் பூவிருந்தவல்லியில் நிரந்தரமாக கோவில் கொண்டனர். வரதராஜப் பெருமாள் சூரிய மண்டலத்துடன் சேவை சாதிப்பது இத்தலத்தின் ஒரு தனி சிறப்பாகும்.
திருவேங்கடவன் கருட சேவை
இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் வருடத்தில் ஒரு நாள் பங்குனி மாதம் ஞாயிற்றுக்கிழமை மூன்று கருட சேவை சிறப்பாக இத்தலத்தில் நடைபெறுகின்றது. வாருங்கள் மூன்று பெருமாள்களும் திருக்கச்சி நம்பிகளுக்கு சேவை சாதிக்கும் அழகை இப்பதிவில் சேவிக்கின்றீர்கள்.
அரங்கநாதர் கருட சேவை
வாருங்கள் திருக்கச்சி நம்பிகளுக்காக பெருமாள் மூன்று கோலங்களில் கோவில் கொண்ட இத்தலத்தை சுற்றி வருவோம். சென்னையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள பூந்தமல்லியில், பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது ஈடில்லாத தெய்வீகச் சிறப்புகள் நிறைந்த இத்தலம். முதலில் மேற்கு நோக்கிய , 7 நிலை கோபுரம் நம்மை வாருங்கள், வாருங்கள் பரம பாகவதரான திருகச்சி நம்பிகளையும் அவருக்காக கோவில் கொண்ட பெருமாளையும் சேவிக்க வாருங்கள் என்று அழைக்கின்றது. இராஜ கோபுரத்தின் உற்சுவற்றில் இக்கோவிலைப் பற்றிய சிறப்புகளை கல்வெட்டாக பதித்து வைத்துள்ளனர்.
இராஜ கோபுரம் உட்பக்கம், தீபஸ்தம்பம் வேங்கடவர் சன்னதி
பெருமாள்:: அருள்மிகு வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன்
நின்ற கோலத்தில் சூரிய மண்டலத்துடன் மேற்கு
நோக்கி அருள் பாலிக்கின்றார்.
உற்சவர்:: அருள்மிகு தேவராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூ தேவியுடன்
தாயார்:: அருள்மிகு புஷ்பவல்லித் தாயார்(பூவிருந்தவல்லித் தாயார்)
விமானம்:: கோபுராஹர விமானம்
தீர்த்தம்:: ஸ்வேதராஜ புஷ்கரணி( வெண் தாமரைக் குளம்)
தல விருக்ஷம்:: மல்லி (வனம்)
ஆகமம்:: வைகாநஸம்
எதிரில் விமானங்கள் அற்புதமாக வர்ணம் பூசப்பட்டு அருட்காட்சி தருகின்றன. மிக விலாசமான பிரகாரம். பிரகாரத்தை வலம் வரும் போது நாம் முதலில் சேவிப்பது அரங்கநாதர் விமானம் அதை அடுத்து ஸ்ரீ கிருஷ்ணர் விமானம், பிரகாரத்தின் வடக்கில் பெரிய அரசமரம் அரசமரத்தின் அருகில் நின்று திருக்கச்சி நம்பிகளின் விமானத்தை தரிசனம் செய்கின்றோம். கிழக்கு பிரகாரத்தில் நந்தவனம் இங்கிருந்து வரதராஜப் பெருமாளின் விமானத்தை தரிசனம் செய்கின்றோம். தெற்கு பிரகாரத்தில் ஒய்யாளி மண்டபம். சன்னதிக்குள் நுழைந்தவுடன் முதலில் பாம்பணையில் பள்ளி கொண்ட அரங்கநாதரை சேவிக்கின்றோம். அடுத்து கிருஷ்ணரை சேவிக்கின்றோம்.இருவரும் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றனர். பின்னர் தெற்கு நோக்கிய திருக்கச்சி நம்பிகள் சன்னதி. அருகிலேயே இவர் கச்சி வரதரிடம் பேசி இராமானுஜருக்காக பெற்ற ஆறு வார்த்தைகளின் கல்வெட்டு. அது என்னவென்று பார்க்கலாமா?
திருக்கச்சி நம்பிகள் விமானம்
அற்புதங்கள் ஆறு – அருளாளன் வாக்கு:
இளையாழ்வாருக்கு(இராமானுஜருக்கு) ஏற்பட்ட சந்தேகத்தை திருக்கச்சி நம்பிகளிடம் கூற அவரும் அதை தேவப்பெருமாளிடம் எடுத்துரைக்க, பேரருளானும் மனமுவந்து ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தார்.
1. 1. “அஹமேவ பரம் தத்துவம்”
நாமே உயர்ந்த தத்துவம், நாராயணனே பரம் பொருள்.
2. 2. “தர்சநம் பேத ஏவச”
சித்தாந்தம் ஆத்ம பரமாத்ம பேதத்தையுடையது.
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.
3. 3. “உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்”
மோட்சத்திற்கு ப்ரபத்தியே சிறந்த உபாயம்.
சரணாகதியே மோட்சத்திற்கு வழி.
சரணாகதியே கடைத்தேறுவதற்கு உகந்த வழி.
4. 4. ”அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்”
அந்திம காலத்தில் ஸ்ம்ருதி வேண்டியதில்லை. இவ்வாறு சரணமடைந்தவன் ஆக்கை முடிவில் நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.
5. 5. “தேஹாவஸாகே முக்கிஸ் யாத்”
சரீர முடிவில் மோட்சமுண்டு – பிறவியின் முடிவில் மோட்சமுண்டு, மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும்.
6. 6. “பூர்ணாசார்ய ஸ்மாச்ரய”
பெரிய நம்பிகளையே நாட வேண்டியது. அவரைக் குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.
இந்த "ஆறு வார்த்தைகளை" தாமே ஆசிரியர் போல இருந்து விளக்கினார் திருக்கச்சி நம்பிகள். நம்பிகள் மூலம் காஞ்சி தேவப்பெருமாளிடம் பெற்ற இந்த ஆறு வார்த்தைகள் தான் ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கைப் போக்கை தீர்மானித்தது. இவ்வாறு இராமானுஜர் என்ற மகானை உருவாக்கிக் கொடுத்ததில் எல்லாமாக இருந்தவர் திருக்கச்சி நம்பிகள்.
திருக்கச்சிநம்பிகள் அஞ்சலி ஹஸ்த்துடன் கையில் வரதனுக்கு வீசிய ஆலவட்டத்துடன்(விசிறி)நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மாசியில் மிருகசீரிஷ நட்சத்திரத்தன்று காஞ்சி வரதராஜர் கோவிலிலிருந்து இவருக்காக மாலை பரிவட்டம், பட்டு இங்கு வரும். அன்று காலை வரதராஜப் பெருமாள் மூலவர் சன்னிதிக்கு எழுந்தருளி சேவை சாதிப்பார். அப்போது அன்பர்கள் திருக்கச்சி நம்பிகள் பாடிய தேவராஜ அஷ்டகம் சேவிக்க வருடத்தின் ஒரு நாள் மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறும். ஸ்ரீபெரும்புதூரில் சித்திரை திருவாதிரை உற்சவத்தின் போது இங்கிருந்து மாலை, பரிவட்டம் பட்டு ஸ்ரீபெரும்புதூர் செல்லும். ஆனி மிருகசீரிஷத்தன்று 108 கலச பூஜை செய்து வரதராஜர், புஷ்பவல்லித்தாயார்,ஆண்டாள், திருக்கச்சி நம்பிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். ஆடியில் திருக்கச்சி நம்பிகளின் ஆச்சார்யன் ஆளவந்தாருக்கு திருவிழா நடைபெறுகின்றது. திருக்கச்சி நம்பிகளை
மருவாரும் திருமல்லி வாழ வந்தோன் வாழியே
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
ஆறு மொழி பூதூரர்க்கு அளித்த பிரான் வாழியே
திரு ஆலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே
என்று வாழ்த்தி இனி வரதராஜர் சன்னதிக்கு செல்லாம்.
கருட சேவை தொடரும்............