கோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -4
ஆண்டாள் விமான கலசம்
ரங்கநாயகித்தாயார் விமானம்
இனி இக்கோவிலின் அமைப்பைப் பார்போமா? கோவிலுக்குள் நுழையும் போது மொட்டை கோபுரம் தான் நம்மை வரவேற்கின்றது முகப்பில் பட்டாபிஷேக இராமர் திருக்கோல சுதை சிற்பம். உள்ளே நுழைந்தவுடன் அனுமன் சன்னதியின் பின் பகுதி, தன் இதயத்தை பிளந்து ஸ்ரீராமரை காட்டும் கோலமும், கருட பகவானும் நம்மை வரவேற்கின்றனர். சன்னிதியில் சிறிய திருவடியாம் மாருதி, சஞ்சீவி மலையை து‘க்கிய நிலையில் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். உற்சவ மூர்த்தி அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்றார், அவரது அழகே அழகு, அஞ்சனா தேவியின் அற்புத புத்திரனின் சன்னிதியின் முன் அழகான மண்டபம், மண்டபத்தின் சுவற்றில் இராமாயண கதை மிகவும் அழகாக சித்திரக்களாக தீட்டப்பட்டுள்ளன. (முந்தைய பதிவில் கண்ட சித்திரங்கள்) பலி பீடத்தில் உப்பும், மிளகும் கொட்டப்பட்டுள்ளன, அம்மன் கோவில்களில் நாம் பார்க்கும் காட்சி இங்கே அனுமன் சந்நிதியிலும் பார்க்கக் கிடைக்கின்றது.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மையளித்து காப்பான்.
(ஐம்பூதங்களில் ஒன்றான வாயுவின் குமாரன் அனுமன், மற்றொரு ஐம்பூதமான ஆகாயத்திலே தாவி, மற்றொரு ஐம்பூதமா ஆழ் கடலை ஸ்ரீ ராமாருக்காக தாவி, இலங்கையிலே பூமி பிராட்டியின் திருமகளார் žதாபிராட்டியைக் கண்டு , கண்டனன் கற்பினுக்கணியை என்று ஆனந்தக்கூத்தாடி, இலங்கையை ஐம்பூதங்களின் ஒன்றான அக்னிக்கு இரையாக்கினான் அந்த சுந்தரன் நம்மை காப்பான்.) என்று சொல்லின் செல்வனை மனதார வணங்கி விட்டு உள்ளே சென்றால் வல பக்கம் ஹனுமந்த தீர்த்தம் என்னும் குளம் உள்ளது. அதன் கரையில் உள்ள கல் வெட்டில் தும்பல பெண்ட நாராயண செட்டியார் நினைவாக அவரது பாரியாள் காமாக்ஷ'யம்மாள் அவர்களால் கீலக வருடம் ஸ்ரீ ஸ்ரீ கோதண்டராமருக்கு ஹனுமந்த தீர்த்தம் என்னும் குளமும், இலக்ஷ்மி தீர்த்தம் என்னும் மடப்பள்ளி கிணறும் அர்ப்பணிக்கப்பட்டது என்பதை தமிழிலும், சுந்தரத் தெலுங்கிலும் இயம்புகின்றது. குளக்கரையில் முன் மண்டபத்துடன் கூடிய ரங்கநாயகித் தாயார் சன்னதியில் ஜகன் மாதாவை வணங்கி தாயார் சன்னதியை வலம் வந்தால், ஊஞ்சல் மண்டபம் காணலாம். வெளி மண்டபத்தின் மேலே கோதண்ட ராமர் சுதை சிற்பம். தீபஸ்தம்பம், பலி பீடம், துவஜஸ்தம்பம் மற்றும் கருடன் சன்னதி இம்மண்டபத்தில் உள்ளன. கருடன் சன்னதியிலும் தெலுங்கில் கல்வெட்டு உள்ளன. கருடனின் அனுமதி பெற்று இராமர் சன்னதியை வலம் வரும் போது விஷ்வசேனர் கோஷ்டத்தில், தானாகவே தோப்புக்கரணம் போட்டு பின் உள்ளே நுழையும் போது இரு புறமும் யானை சிலைகளை கண்டு களிக்கலாம். முன் மண்டபம் இப்போது சன்னதிகள் ஆகியுள்ளன. வலப்புரம் ரங்கனாதர் சன்னதி, இரு புறமும், தாயார்கள் இருவரும் அமர்ந்திருக்க நாபியிலிருந்து பிரம்ம தேவர் எழுந்தருளிய நிலையில், சிறு புலியூர் போல் பால சயனத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.
ஆந்சநேயர் விமானம்
ஆண்டாள் விமானம்
தாயார் விமானம்
பச்சைமா மலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
என்று பாடி வணங்கி விட்டை பின் கர்ப்ப கிரகத்தை நோக்கி உள்ளே சென்றால் நின்ற கோலத்தில் கோதண்ட ராமராக ஸ்ரீ ராமரும், žதா பிராட்டியும், இலக்குவனும் கிழக்கு முக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றனர். கீழே ஆதி மூலவரான பட்டாபிஷேக ராமர் சேவை சாதிக்கின்றார். பட்டாபிஷேக ராமர் அருகே ஸ்னான மூர்த்தி, சக்கரத்தாழ்வார். அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் சேவை சாதிக்கின்றனர் எம்பெருமானின் திருமேனி அழகே அழகு. வெள்ளி கவசம் போர்த்தப்பெற்று எழிலாக வலக்கையில் அம்பும், இடக்கையில் வில்லும் ஏந்தி சேவை சாதிக்கின்றனர்.
ராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே !
ரகுநாதாய நாதாய žதாய: பதயே நம: !! என்றும்
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே !
சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம் வராணனே !!
என்று ஈஸ்வரரே திருவாய் மலர்ந்தருளிய சகஸ்ர நாமத்தின் சாரமான ராம நாமத்தை மனமுருக ஜபித்து நின்றால் மனது அப்படியே லேசாகி விடுகின்றது, ஸ்ரீ ராமரை வணங்கி வெளியே வந்தால் இடப்புறம் யோக நரசிம்மர் சன்னதி. அவரை
ஆடியாடி அகங்கரைந்து இசை
பாடிபாடிக் கண்ணிர் மல்கி எங்கும்
நாடிநாடி நரசிங்கா! என்று
வேண்டி இச்சன்னதியிலே உற்சவ மூர்த்த்தியாக எழுந்தருளியுள்ள நவநீத கிருஷ்ணரையும் வணங்கி மற்ற சன்னதிகளுக்கு செல்வோம்.
இராமாயண சுருக்கம், இராகவனே தாலேலோ என்று தாலாட்டு என்று இராமரை பற்றி அதிகம் பாசுரம் பாடியதாலோ என்னவோ குலசேகராழ்வாருக்கு தனி சன்னதி. அடுத்தது கருடன், சேனை முதலியார், நம்மாழ்வார், மற்றும் கலியன் சன்னதி . அடுத்த சன்னதி ஆச்சாரியர்கள் சன்னதி, உடையவரும், சலிக்கிராம மாலையுடன் , அனந்தழ்வார் குடைப்பிடிக்க மணவாள மாமுனிகளும் சேவை சாதிக்கின்றனர்.
மூலவர் விமானம்
கும்பாபிஷேகம்
மூலவர் விமான கும்பாபிஷேகம்
கொடிமர கும்பாபிஷேகம்
கற்பூர ஆரத்தி
புனித நீர் தெளிக்கின்றார்கள்
கும்பாபிஷேகத்திற்க்குப்பின்
ஆண்டாள் விமான கலசம்
குடமுழுக்கைக் சேவிக்க வந்த
பக்தர் கூட்டம்
கோதண்டராமர் குடமுழுக்குப்பதிவுகள் நிறைவு பெற்றன. வந்து சேவித்த அனைவருக்கும் நன்றி.
Labels: கும்பாபிஷேகம்., தக்ஷிண பத்ராசலம், நஞ்சை அமுதாக்கிய பெருமாள்