கோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை
கருட பஞ்சமி
இன்றைய தினம் கருடனின் ஜன்ம தினமான ஆடி மாத கருட பஞ்சமி நேற்று நாக சதுர்த்தி எனவே கோயம்பேடு வைகுந்தவாசப்பெருமாளின் கருட சேவையும், நிகமாந்த தேசிகர் அருளிய கருட தண்டகத்தையும் பதிவிடுகின்றேன். இன்றைய தினம் கருட மற்றும் நாக வழிபாடு அனைத்து நன்மைகளையும் அளிக்கும் கருடனை வணங்குங்கிள் அனைத்து நலங்களையும் பெறுங்கள் அன்பர்களே.
இந்த வருடம் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின்
இன்றோ திருவாடிப்பூரம்*
எமக்காகவன்றோ இங்காண்டாளவதரித்தாள்*
குன்றாதவாழ்வான வைகுந்தவான்போகந்த(ன்)னையிகழ்ந்து*
ஆழ்வார் திருமகளாராய்.
நமக்காகவே ஆண்டாள் அவதரித்த திருநாள் இன்று. திருமாலுடன் கூடிவாழும் என்றுமே குறையாத பெரும் செல்வமாகிய வைகுந்தமாகிற வான்போகத்தை வேண்டாமென உதறித் தள்ளிவிட்டு, பூவுலக மாந்தர்களை உய்விக்க பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாய் பூமிதேவி இந்தப் புவியில் அவதரித்த திருநாள் இன்று. என்கிறார் மணவாள மாமுனிகள் தமது உபதேசரத்தின மாலையில்.பாடிய திருவாடிப்பூரமும் இணைந்து வருகின்றது எனவே இரட்டிப்பு பலன். வாருங்கள் கருட சேவையை கண்டு களிக்கலாம்.
கோயம்பேடு என்றவுடன் அனைவருக்கும் காய்கறி சந்தையும். மத்திய பேருந்து நிலையமும் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் இத்தலம் இராமாயணத்துடன் தொடர்புடையது என்று பலருக்கு தெரியாது.
இராம குமாரர்களான இலவகுசர்கள் கோ எனப்படும் அரசனாகிய இராமபிரானின் அஸ்வமேத யாகக் குதிரையை அயம் என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலம் என்பதால் இத்தலம் கோயம்பேடு ஆனது. கோசை என்று அருணகிரி நாதர் இத்தலத்தை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
தந்தையின் ஆணையைக் காப்பாற்ற 14 வருடங்கள் வனவாசம் செய்து, தச க்ரீவனாம் இராவணனை வதம் செய்த பின் இராம பட்டாபிஷேகம் நடந்தது. பல ஆயிரம் வருடம் இராமராஜ்ஜியம் சிறப்பாக நடந்தது. ஒரு சமயம் நகர் வலம் வரும் போது சில குடி மக்கள் சீதையின் கற்பைப் பற்றி களங்கமாகப் பேசியதால், சீதையின் கற்பை நிரூபிக்க கர்ப்பிணியாக இருந்த சீதையை கொண்டு போய் காட்டில் விட்டு விட்டு வருமாறு இலட்சுமணனிடம் கூற அவரும் சீதையை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் விட்டு விட்டு சென்றான்.
வைகுந்தவாசர்
அக்காலத்தின் வால்மீகி முனிவரின் ஆசிரமே இன்றைய கோயம்பேடு என்பது இத்தலத்தின் ஐதீகம். சீதை லவன், குசன் என்று இரு புதல்வர்களைப் பெற்றது இவ்வால்மீகி ஆசிரமத்தில்தான். எனவே இத்தலத்தில் கர்ப்பிணியாக அமர்ந்த கோலத்தில் உள்ள சீதையின் மூலவர் சிலையும், வால்மீகி முனிவர் மற்றும் லவ குசர்களின் ஒரு கற்சிலையையும் சேவிக்கலாம்.
லவ குசர்கள் வால்மீகி முனிவரிடம் சகல கலைகளையும் கற்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் காலையில் இராமபிரான் அஸ்வமேத யாகம் செய்ய தீர்மானித்து யாக குதிரையை தேசமெங்கும் அனுப்புகின்றார். அக்குதிரை இங்கு வந்த போது அதனுடன் வந்த சத்ருக்கனனை தோற்கடித்து யாக குதிரை இங்கு கட்டி வைத்து விட்டனர்.
அடுத்து லக்ஷ்மணன் குதிரையை விடுவிக்க வர அவரையும் லவகுசர்கள் தோற்கடிக்கின்றனர் .நிறைவாக இராமபிரானே வர சிறுவர்களும் தந்தை என்று அறியாமல் போரிடத் தயாராக, வால்மீகி முனிவர் குறுக்கிட்டு உண்மையை உணர்த்த இருவரும் இராமபிரானிடம் மன்னிப்பு கேட்கின்றனர். அப்பாவம் தீர அவர்கள் வைகுந்த வாசப்பெருமாளை வழிபட்டதாக ஐதீகம்.
இவ்வாறு லவகுசர்கள் கோ எனப்படும் அரசனாகிய இராமபிரானின் அஸ்வமேத யாகக் குதிரையை அயம் என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலம் என்பதால் இத்தலம் கோயம்பேடு ஆனது. பேடு என்றால் வேலி என்றும் ஒரு பொருள் உண்டு.
கனகவல்லி நாயிகா சமேத வைகுண்டவாசப் பெருமாளாக இத்தலத்தில் சேவை சாதிக்கின்றார். மூலவர் உபயநாச்சியார்களுடன் மேற்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் நின்ற கோலத்தில் எழிலாக சேவை சாதிக்கின்றார்.
கனகவல்லித்தாயாருக்கும், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளுக்கும் தனி சன்னதிகள் அமைந்துள்ளன .இருவரது சுற்றுப்பிரகாரத்திலும் வண்ண ஓவியங்களைக் கண்டு களிக்கலாம். தாயாரின் பிரகாரத்தில் அஷ்டலக்ஷ்மிகளையும், ஆண்டாளின் பிரகாரத்தில் திருப்பாவைப் பாடல்கள் முப்பதிற்குமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
ஆனிமாத பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாள் இரவு கருடசேவையின் காட்சிகளை இப்பதிவில் சேவிக்கின்றீர்கள். இத்தலத்தில் பல சிறப்புகள் உள்ளன அவை என்னவென்று பார்க்கலாம்.
கருட சேவை
மூலவர் சீதை கர்ப்பிணியாகவும், வால்மீகி முனிவர் லவகுசர்களுடன் சேவை சாதிப்பதும் இத்தலத்தின் ஒரு சிறப்பு. இலக்குவனும், அனுமனும் இல்லாமல் இராமரும் சீதை மட்டுமே உற்சவ மூர்த்திகளாக சேவை சாதிக்கின்றனர். தனி சன்னதியில் இராமர் அரசனாக இல்லாமல் மரவுரி தரித்தும் சீதை கோடாலிக் கொண்டையுடனும் சேவை சாதிப்பதை சேவிப்பதே ஒரு பரவசம்.
உற்சவர் வைகுண்ட வாசப்பெருமாள் மற்றும் உபய நாச்சியார்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மூவருமே வாருங்கள் வைகுண்டம் தருகின்றேன் என்கிற ஆஹ்வாகன (அழைக்கும்) முத்திரையுடன் சேவை சாதிப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
உற்சவர் வைகுண்ட வாசப்பெருமாள் மற்றும் உபய நாச்சியார்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மூவருமே வாருங்கள் வைகுண்டம் தருகின்றேன் என்கிற ஆஹ்வாகன (அழைக்கும்) முத்திரையுடன் சேவை சாதிப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
இவ்வாலயத்தில் பரமபதவாசல் கிடையாது. பெருமாளே வைகுந்தவாசன் என்பதால் சேவிக்கும் அன்பர்களுக்கு அவரே வைகுந்தம் வழங்குகின்றார் என்பது ஐதீகம்.
இத்தலத்தின் தலமரத்தில் வேம்பும் வில்வமும் ஒன்றாக இணைந்துள்ளது .இது சுயம்வர பார்வதி என்றழைக்கப்படுகின்றது. இம்மரத்தை சுற்றி வந்து வழிபட குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் .
ஆலயத்தின் முன்மண்டபத்தில் தசாவதார சுதை சிற்பங்களையும், பக்கங்களில் லவகுசர்கள், அஸ்வமேத குதிரையை கட்டி வைப்பதும், சத்ருக்னன் மற்றும் இலக்குவனுடன் போர் புரியும் சுதை சிற்பங்களையும் கண்டு களிக்கலாம்.
இக்கோவிலுக்கு அருகிலேயே குறுங்காலீஸ்வரர் சிவாலயமும் அமைந்துள்ளது. இரு ஆலயங்களுக்கும் ஒரே திருக்குளம்தான். லவகுசதீர்த்தம் என்று இத்திருக்குளம் அழைக்கப்படுகின்றது. இவ்வாறு இவ்வாலயம் சைவ-வைணவ ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
இத்தலத்தில் மூலவருக்கு அலங்காரம் சிறப்பாகச் செய்யப்படுகின்றது. பல தடவை நெடியோனான வேங்கடவனாக இவரை சேவித்திருக்கின்றேன். வரதர், பாண்டுரங்கர் என்று வெவ்வேறு கோலங்களில் அலங்காரம் செய்வது இவ்வாலயத்தின் சிறப்பு.
பின்னழகு
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தார்சார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
முதல் ஸ்லோகம் 32 எழுத்துக்களைக் கொண்ட அநுஷ்டுப் சந்தஸ்ஸில் அமைந்துள்ளது. இறுதி ஸ்லோகமும் இதே சந்தஸ்ஸில் அமைந்துள்ளது
முதல் ஸ்லோகம்:
நம: பந்நக நத்தாய வைகுண்ட வஶ வர்த்திநே |
ஶ்ருதி ஸிந்து ஸுதோத்பாத மந்த்ராய கருத்மதே ||
அழகிய சிறகுகளை கொண்ட கருடபகவானுக்கு நமஸ்காரம். தங்களுடையத் திருமேனியை தாங்கள் வென்ற நாகங்கள் அழகு செய்கின்றன, அவை தேவரீருக்கு ஆபரணமாக விளங்குகின்றன. தாங்கள் ஸ்ரீவைகுந்தத்தில் பெருமாளுக்கு அந்தரங்க தாசனாக இருந்து அவருக்கு கைங்கர்யம் செய்கின்றீர்கள். வேதங்களாகிய பாற்கடலை கடைந்து பிரம்ம வித்யா என்னும் அமிர்தத்தை அடைவது போல தங்களை வணங்கி இந்தப் பிரம்ம வித்யையை அடையலாம். கருத்மானாகிய தங்களுக்கு நமஸ்காரம்.
பாதம் 1
கருடமகில வேத நீடாதிரூடம் த்விஷத் பீடநோத் கண்டிதாகுண்ட
வைகுண்ட பீடிக்ருதஸ்கந்தமீடே ஸ்வநீடாகதி ப்ரீத ருத்ரா ஸுகீர்த்தி
ஸ்தநாபோக காடோப கூட ஸ்புரத்கண்டகவ்ராத வேத வ்யதா வேபமாந
த்விஜிஹ்வாதி பாகல்ப விஷ்பார்யமாண ஸ்படாவாடிகா ரத்ந ரோசிஶ் சடா நீராஜிதம் காந்தி கல்லோலி நீராஜிதம். 1.
கருட பகவானே தாங்களே வேத ஸ்வரூபி, வேதங்கள் தங்களின் புகழைப் பாடுகின்றன. ஸ்ரீமந் நாராயணன் அசுரர்களை அழிக்க செல்லும் போது தங்களின் தோளில் அமர்ந்து செல்கின்றார். அவ்வாறு தாங்கள் சேவைச் செய்ய செல்லும் போது தங்களது இரு மனைவியரான ருத்ரையும், ஸுகீர்த்தியும் தங்களை பிரிந்திருக்கின்றனர். பெருமாள் அசுரர்களை வென்று வந்த பின், தங்களை அவர்கள் ஆரத்தழுவிக் கொள்கின்றனர். அந்த புளகாங்கிதத்தில் தங்கள் திருமேனியில் உள்ள சிறகுகள் சிலிர்த்தெழுகின்றன. அவை தமது திருமேனியில் அணிந்துள்ள நாகங்களை கூர்பார்க்கின்றன. ஆகவே அவை பயந்து தங்களின் படங்களை விரிக்கின்றன. அப்போது அவற்றின் மாணிக்க கற்கள் மிளிர்கின்றன. அவ்வொளி தேவரீருக்கு கற்பூர ஆரத்தி போல உள்ளது.
கருடன் வேதஸ்வரூபனாக விளங்குவதையும், அவரை வேதங்கள் போற்றுவதையும் அவர் பெருமாளுக்கு வாகனமாகவும், கொடியாகவும் திகழ்வதையும், அவருக்கு ருத்ரை, ஸுகீர்த்தி இன்று இரு மனைவியர், மஹா நாகங்கள் அவரின் ஆபரணமாக விளங்குகின்றன என்பதை இந்த ஸ்லோகத்தில் நிகமாந்த மஹா தேசிகர் அற்புதமாக கூறியுள்ளார்.
பாதம் : 2
ஜய கருட ஸுபர்ண தார்வீகராஹார தேவாதிபாஹார ஹாரிந் திவௌ கஸ்பதி க்ஷிப்த தம்போளி தாரா கிணாகல்ப கல்பாந்த வாதூல கல்போ தயாநல்ப வீராயிதோத்யச்சமத்கார தைத்யாரி ஜைத்ர த்வஜாரோஹ நிர்த்தாரிதோத்கர்ஷ சங்கர்ஷணாத்மந் கருத்மந் மருத்பஞ்சகாதீஶ்
சத்யாதி மூர்த்தே ந க்ஶ்சித் ஸமஸ்தே நமஸ்தே புநஸ்தே நம: || 2.
கருடாழ்வாரே! அழகிய சிறகுகளை உடைய சுபர்ணரே! மஹா நாகங்கள் தங்களுடைய உணவாகின்றன. தாயை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க தேவலோகம் சென்று தேவர்களை வென்று அமிர்தம் கொணர்ந்தீர்! அப்போது இந்திரன் கோபம் கொண்டு வஜ்ராயுதத்தை தங்கள் மேல் ஏவினான். அதன் கூரிய முனை தங்கள் சிறகுகளிலும் திருமேனியிலும் ஏற்படுத்திய வீரத்தழும்புகள் தற்போது தங்களுக்கு ஆபரணமாகி தாங்கள் இந்திரனை வென்றதை அறிவிக்கின்றன. தங்களது வீரச்செயல்கள் பிரளய காலத்தின் மஹா வாயுவைப்போல உள்ளன. தாங்கள் பெருமாளின் கொடியில் அமர்ந்து அவரது வெற்றிக்கு அறிகுறியாக விளங்குகின்றீர்கள். அதுவே தங்களது பெருமையும் பறை சாற்றுகின்றது. தாங்களே பெருமாளின் வியூக மூர்த்தமான சங்கர்ஷணரின் அம்சமாக அவதாரம் செய்தீர்கள். தாங்களே சத்யர், சுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர், விஹாஹேஸ்வரர் என்ற ஐந்து வடிவாகி ப்ராணன், அபாநன், சமாநன், உதாநன், வ்யாநன் என்ற ஐந்து வாயுவாகி தேவனாக ஒளிர்கின்றீர். அழகிய பொன்னிற சிறகுகளை உடையவரே! தங்களுக்கு நமஸ்காரம் மீண்டும் ஒரு முறை நமஸ்காரம்.
தேவர்களை வென்று அமிர்தம் கொணர்ந்து தாயின் அடிமைத் தளையை நீக்கிய வீரச்செயலையும், போர்க்களத்தில் பெருமாளுக்கு முன்னரே சென்று காய்சினப் பறவையாகி அசுரர்களை அழிக்கும் வீரத்தையும், பாற்கடலில் பரவாஸுதேவரின் வியூக மூர்த்திகளில் ஒருவரான சங்கர்ஷணரின் அம்சமாக திகழ்வதையும், ஐந்து வாயுக்களின் வடிவமாக திகழ்வதையும் இந்த ஸ்லோகத்தில் தூப்புல் வேதாந்த தேசிகர் பாடியுள்ளார்.
பாதம் : 3
நம: இத மஜஹத் ஸபர்யாய பர்யாய நிர்யாத பக்ஷாநிலாஸ் பாலநோத் வேல பாதோதி வீசீ சபேடாஹதாகாத பாதாள பாங்கார ஸங்க்ருத்த நாகேந்த்ரபீடாஸ்ருணீ பாவ பாஸ்வந்நக ஶ்ரேணயே சண்டதுண்டாய ந்ருத்யத் புஜங்கப்ருவே வஜ்ரிணே தம்ஷ்ட்ரயா துப்யம் அத்யாத்மவித்யா விதேயா விதேயா பவத்தாஸ்யமாபாதயேதா தயேதாஶ்ச மே ||
கருட பகவானே! ஞானிகள் இடைவிடாமல் தங்களை தியானிக்கின்றனர், தாங்கள் பறக்கும் போது தங்களின் இறகுகள் உண்டாக்கும் காற்று பெரிய கடல் அலைகளை உண்டாக்குகின்றன. அதன் சப்தம் பாதாள உலகத்தையும் எட்டுகின்றது. அந்த ஓசை அங்குள்ளவர்களை அறைவது போல அவர்களுக்கு தோன்றுகின்றது. பயங்கரமான “பாம்” என்ற சப்தம் அப்போது உருவாகின்றது. அஷ்ட திக் கஜங்களும் அந்த சப்தத்தைக் கேட்டு அதிர்ந்து தங்களை தாக்க வருகின்றன. தங்களது கூரிய நகங்கள் அந்த யானைகளை அடக்கும் அங்குசமாகின்றன. தங்களது கூரிய அலகு தங்களது எதிரிகளின் மனதில் பய பீதியை உண்டாக்குகின்றது. தாங்கள் புருவத்தை நெரிக்கும் போது அது நாகம் படமெடுப்பது போல உள்ளது. தங்களது கோரைப்பற்கள் இந்திரனின் வஜ்ராயுதம் போல தங்கள் எதிரிகளின் மனதில் அச்சத்தை உண்டாக்குகின்றன. தங்களுக்கு அந்த அளவில்லா புகழுக்கு நமஸ்காரம், தாங்கள் அடியேனுக்கு பிரம்ம வித்யையை அருள்வீர்களாக. கருணை கூர்ந்து தங்களுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தையும் அருள்வீர்களாக.
ஆச்சார்யனாக இருந்து பிரம்ம வித்தையை வழங்கும் பான்மையையும், ஞானிகள் சதா சர்வ காலம் கருடபகவானை துதிப்பதையும் இந்த ஸ்லோகத்தில் ஆச்சார்யர் தேசிகர் கூறியுள்ளார்.
பாதம் : 4
மநுரநுகத பக்ஷி வக்த்ர ஸ்புரத்தாரகஸ்தா வகஸ்சித்ரபாநுப்ரியாஸேகர ஸ்த்ராயதாம் நஸ்த்ரி வர்க்காபவர்க்க ப்ரஸூதி: பரவ்யோம தாமந்
வலத்வேஷி தர்ப்பஜ்வலத் வாலகில்ய ப்ரதிக்ஞா வதீர்ண ஸ்திராம்தத்த்வ
புத்திம் பராம் பக்திதேநும் ஜகந்மூல கந்தே முகுந்தே மஹாநந்ததோ க்த்த்ரீம் ததீதா முதாகாமஹீநாம் அஹீநாமஹீநாந்தக
கருடாழ்வாரே! வைகுந்தத்தில் உறைபவரே! தங்களுடைய மந்திரம் அதை உபாசிப்பவர்களுக்கு நான்கு பேறுகளையும் (அறம், பொருள், இன்பம், வீடு) வழங்குகின்றது. அந்த மந்திரம் ஐந்து எழுத்துக்களைக் கொண்டது. ஓம் என்னும் பிரணவம் அதன் முதல் எழுத்து. அதன் நிறை எழுத்து அக்னியின் மனைவியைக் குறிக்கின்றது. அந்த மந்திரம் எங்களைக் காக்கட்டும்.
ஒரு சமயம் இந்திரன் ஆணவம் கொண்டு வாலகில்ய முனிவர்களை அவமதித்தான். அதனால் அவர்கள் எதிர்காலத்தில் சங்கர்ஷணரின் அம்சமாக பிறப்பவன் உன்னுடைய ஆணவத்தை அழிப்பான் என்று சாபமளித்தனர். தாங்கள் வாலகில்ய முனிவர்களின் வாக்கை காப்பாற்றி இந்திரனின் ஆணவத்தை அழித்தீர்கள். தங்களை பகைத்த நாகங்களுக்கு தாங்கள் யமனாக விளங்குகின்றீர்கள். உண்மையான ஞானத்தை அடியேனுக்கு வழங்குவீர்களாக. தங்களின் தலைவன் முகுந்தன் ஜகத்காரணர். அவருக்கு உண்மையான அன்பு பூண்டு, நிலையற்ற இவ்வுலக மாயையில் அழுந்தாமல், திட மனதுடன் அவருக்கு பக்தி செய்யும் உண்மையான ஞானத்தை அடியேனுக்கு வழங்குவீராக.
கருடாழ்வார் மந்திர மூர்த்தியாக விளங்குவதையும், நான்கு புருஷார்த்தங்களையும் வழங்குவதையும், வாலகில்ய முனிவர்களின் தவத்தின் பயனால் கருடன் அவதாரம் நிகழ்ந்ததையும், பிரம்ம வித்தையை அளிக்கும் ஆச்சார்யனாக கருடபகவான் விளங்குவதையும் நிகமாந்த தேசிகர் இந்த ஸ்லோகத்தில் கூறியுள்ளார்.
ஷட்த்ரிம் ஶத்கண சரணோ நர பரிபாடீ நவீந கும்பகண: |
விஷ்ணுரத தண்டகோயம் விகடயது விபக்ஷ வாஹிநீ வ்யூஹம் || 6
இந்த கருட தண்டகமானது ஒரே ஸ்லோகம். இதில் நான்கு பாதங்கள் உள்ளன. ஒவ்வொரு பாதத்திலும் 36 கணங்கள், ஒரு கணத்தில் மூன்று எழுத்துக்கள் (மொத்தம் 108 எழுத்துக்கள்) . இந்த கருட தண்டகம் தண்டக யாப்பில் சரியாக இயற்றப்பட்டுள்ளது. நாகணங்களும், ராகணங்களும் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. இந்த கருட தண்டகத்தை ஜபிப்பவர்களின் எதிரிகளின் வியூகம் காற்றில் அழிந்து போகும்.
இந்த ஸ்லோகம் தண்டகத்தின் யாப்பை விளக்குகின்றது. இது ஆர்யா ஸந்தஸ்ஸில் அமைந்துள்ளது.
விசித்ர ஸித்தித: ஸோயம் வேங்கடேஶ விபஶ்சிதா
கருடத்வஜ தோஷாய கீதோ கருட தண்டக: || 7
கருடக்கொடியையுடைய எம்பெருமானை மகிழ்விக்க அடியேன் வேங்கடேசன், இயற்றிய இந்த கருட தண்டகத்தை ஜபிப்பவர்கள் அவர் அருளால் சகல மனோபீஷ்டங்களையும் அடைவர்.
கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணஶாலினே |
ஸ்ரீமதே வேங்கடேஶாய வேதாந்த குரவே நம: ||
(நன்றி : ஒப்பிலியப்பன் கோயில் வரதாச்சாரி சடகோபன்)
இந்த கருட தண்டகத்தை பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் தொல்லை ஒழிந்து போகும். நோய் நொடிகள் அண்டாது. விஷ ஜந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது என்று பெரியோர் கூறுவர் எனவே கருட பஞ்சமியான இன்று கருடனை நினைத்து வழிபட்டு நன்மையடைய பிரார்த்திக்கின்றேன்.
Labels: கருடசேவை, கர்ப்பிணி சீதை, கோசை, கோயம்பேடு, லவகுசர்கள், வால்மீகி