இராமானுஜர் ஜெயந்தி
இன்றுலகீர்! சித்திரையிலேய்ந்த திருவாதிரை நாள்
என்றையினு மின்றிதனுக்கேற்றமென்தான்? - என்றவர்க்குச்
சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர்தம் பிறப்பால்
நாற்றிசையும் கொண்டாடும் நாள்.
சித்திரை திருவாதிரையன்று ஸ்ரீபெரும்புதூரில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளின் கருணையினால் இளையாழ்வாராக, இராமானுஜர் அவதரித்தார். இவரது ஜெயந்தி விழா, ஸ்ரீபெரும்புதூரில் 10 நாள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தில் அருள் பாலிக்கின்றார் இராமானுஜர். அவரது 1001வது அவதார திருவிழாவின் போது தானுகந்த திருமேனியை ஒரு நாள் சென்று சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எம்பெருமானாரின் திருமுகமண்டலம்
யோநித்ய மச்யுத பதாம்புஜ யுக்மருக்ம
வ்யாமோஹ தஸ்ததி தராணி த்ருணாயமேநே |
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:
ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே.||
பின்னழகு
முனியார்துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார்மனம் கண்ணமங்கைநின்றானை கலைபரவும்
தனியானையைத்தண்தமிழ்செய்த நீலன்தனக்கு உலகில்
இனியானை எங்களிராமானுசனைவந்தெய்தினரே.
கோடைக்காலம் என்பதால் திருமேனியில் சந்தனம் சார்த்தியுள்ளதை கவனியுங்கள். மற்றும் திருமங்கையாழ்வார் (நீலன்) பதக்கத்தையும் படத்தைப் பெரிதாக்கிக் காணலாம்.
தங்கத்தொட்டியில் இராமானுஜர்
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்போர் நல்லோர் அவை தம்மொடும் வந்து
இருப்பிடம்மாயன் இராமானுசன் மனத்து இன்று அவன் வந்து
இருப்பிடம் என்தனிதயத்துள்ளே தனக்கின்புறவே.
பின்னழகு
காரேய் கருணை இராமானுசா! இக்கடலிடத்தில்
ஆரேயறிபவர் நின்னருளின் தன்மை? அல்லலுக்கு
நேரேயுறைவிடம் நான்வந்து நீயென்னையுத்தபின் உன்
சீரேயுயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே.
Labels: எம்பெருமானார், சித்திரை திருவாதிரை, தானுகந்த திருமேனி., ஸ்ரீபெரும்புதூர்