Wednesday, January 22, 2020

பழைய சீவரம் பரிவேட்டை உற்சவம்

Visit BlogAdda.com to discover Indian blogs
காஞ்சி வரதர் கனு உற்சவம் 

சென்ற வருடம் அத்தி வரதரை அனைவரும் தரிசித்து மகிழ்ந்தோம். புஷ்கரிணியில் பள்ளி கொண்டிருந்த அத்தி வரதர் ஒரு மண்டல காலம் வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு  பள்ளி கொண்ட கோலத்திலும்,  நின்ற கோலத்திலும்,  சேவை சாதித்தார். அத்திகிரியில் ஆதி  காலத்தில் இவரே மூல மூர்த்தியாக  இருந்துள்ளார். எக்காரணத்தாலோ இவரை  புஷ்கரிணியில் எழுந்தருளச் செய்தபோது புது மூலவரை பழைய சீவரம் மலையிலிருந்து எடுத்து சென்றார்களாம், எனவே வருடத்தில் ஒரு முறை உற்சவர் வரதராஜப்பெருமாள் பழைய சீவரம் எழுந்தருளுகிறார்.  இந்த உற்சவம் கனு மாட்டுப்பொங்கலன்று நடைபெறுகின்றது. பழைய சீவரம் பரிவேட்டையென்று அழைக்கப்படுகின்றது.  சென்ற வருட பரிவேட்டையின்  காட்சிகள் இப்பதிவில் இடம்பெறுகின்றன.


ஆதி அத்தி வரதர்


பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு இம்மூன்றும் சங்கமிக்கும் இடத்தின் வடகரையில் மலைக்கோயில் அமைந்துள்ள கிராமம் பழையசீவரம்.  செங்கல்பட்டிலிருந்து காஞ்சீபுரம் செல்லும் சாலையில் பழைய சீவரம்  பேருந்து நிறுத்தத்திற்கு  அருகில் உள்ள சிறிய மலைமேல் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. 

தைத்திங்கள் இரண்டாம் நாள் இவ்வுற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.  பொங்கலன்று இரவு காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 70 கி.மீ தூரம் பயணம் செய்து பழைய சீவரத்தை அடைகின்றார் காஞ்சி வரதர்.

பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம் 

(பாலாற்றின் ஒரு கரையில் அமைந்துள்ளது)


ஸ்ரீபுரி, ஸ்ரீபுரம், சீயபுரம், சீவரம், ஜீயர்புரம், விண்ணபுரம், பழைய சீவரம் மற்றும் திரிபுவன வீர சதுர்வேதி மங்கலம் என்று பலவாறு அழைக்கப்பட்ட திருத்தலம் பழைய சீவரம்.  ஊர் பெயரிலேயே பழைய என்ற சொல் உள்ளது. பல்லவர் காலம் தொட்டு பழைமை மிக்க ஊராக பழைய சீவரம் திகழ்ந்துள்ளது. முதலாம் பராந்தக சோழன் காலம் (கி.பி.907-957) இவ்வூர் முற்கால சோழரது ஆட்சியில் இருந்துள்ளது. கோப்பரகேசரி முதலாம் பராந்தகனின் 15வது ஆட்சி கல்வெட்டு (கி.பி.922) இவ்வூரில் கிடைத்துள்ளது. 

இவ்வூர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. 1080-1) சீயபுரம் என வழங்கப்பட்டது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சீயபுரம் என்ற ஊர் திரிபுவன வீர சதுர்வேதி மங்கலம்  என்று மாற்றப்பட்டுள்ளது. திரிபுவன வீரன் என்பது மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய விருது பெயராகும். இடைச்சோழர் காலத்தில் ராஜேந்திர சோழன் பெயரில் ராஜேந்திர சோழ விண்ணகர் என்று அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் இறைவன் ராஜேந்திர சோழ விண்ணகர ஆழ்வார், திருமாலிருஞ்சோலை ஆழ்வார் என்று சோழர் காலத்தில் அழைக்கப்பட்டுள்ளார். கி.பி.1729-ல் ஜீயபுர லக்ஷ்மி நரசிம்மர் என இறைவன் வழங்கப்பட்டுள்ளார். சோழர்கள் முதல் தனி நபர்கள் வரை பலர் இக்கோயிலுக்கு தானம் தந்துள்ளனர்.


மூலவர் பற்றிய செவி வழிச் செய்தி ஒன்று குறிப்பிடத்தக்கது. தற்போது காஞ்சிபுரத்தில் இருக்கும்ஸ்ரீவரதராஜப் பெருமாளின் மூலவர் பழைய சீவரத்தில் உள்ள மேல் மலையிலிருந்து எடுத்துச் சென்றதாக செவி வழிச் செய்தி கூறுகிறது. 



அடுத்து சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் வட இந்தியர்கள் யாத்திரை வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி இருந்திருக்கிறது. இங்கு வரும்போது இறைவன் கனவில் தோன்றி, இவ்விடத்தில் ஒரு மண்டலம் தங்கினால் நோய் குணமாகும் என்று கூறியுள்ளார். அதன்படியே இங்குள்ள பிப்பிலி மரத்தினடியில் தங்கி, ஆற்றில் நீராடி ஒரு மண்டலம் வழிபட்டிருக்கிறார். நோயும் நீங்கி இருக்கிறது. அதன் பிறகு கோயிலின் ஒரு முக்கிய பிரமுகராக அவர் இருந்திருக்கிறார்.

பழைய சீவரம் மலைக்கோயில் போன்று திகழ்கிறது. மூலஸ்தானத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மேற்கு திருமுகமாக வீற்றருள்கிறார். இக்கோயில் மூலஸ்தானம், விமானம், அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், கொடிமரம், பலிபீடம், திருச்சுற்று பிராகாரம், கருடாழ்வார் சந்நதி, யாகசாலை, கண்ணாடி அறை, மடப்பள்ளி, ராஜகோபுரம், நான்குகால் மண்டபம், வாகன மண்டபம், ஆகிய பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது. இக்கோயில் மூலஸ்தானம் செவ்வக வடிவுடையது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் லட்சுமி நரசிம்மர் இடக்காலை மடித்து வலக்காலை தொங்கவிட்டு பத்மபீடத்தில் ஊன்றிய நிலையில் சதுர்புஜங்களுடன் ஸ்ரீலட்சுமி தேவியை இடது தொடையின் மீது அமர்த்தி ஆலிங்கனம் செய்த வண்ணம் மேற்கு திசையை நோக்கி அருட்பாலிக்கிறார். நரசிம்மரின் மேல் வலக்கரம் கத்தரி முத்திரையில் சக்கராயுதத்தைப் பற்றியுள்ளது. அவ்வாறு மேல் இடக்கரம் கத்தரி முத்திரையில் சங்கினை ஏந்தியுள்ளது.


கீழ் வலக்கரம் அபயஹஸ்தம் காட்டுகிறது. கீழ் இடக்கரம் இடது தொடையில் வீற்றிருக்கும் திருமகளை ஆலிங்கனம் செய்த வண்ணம் அமைந்துள்ளது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரஹரி இவர். நரசிம்மரின் திருமுக மண்டலம் சிம்ம முகமாக அமைந்துள்ளது. சிங்கபிரானின் தலையை கிரீடமகுடம் அலங்கரிக்கிறது. திருமார்பில் மகரகண்டிகையும், கௌஸ்துபமும் அலங்கரிக்கிறது. புஜங்களில் கேயூரமும், பாஜிபந்தமும், முன்கரங்களில் வளைகளும், நாபியின் மேல் உதரபந்தமும், இடையிலிருந்து முழங்கால் வரை வஸ்திர அலங்காரமும் பாதங்களில் பாதசரமும் அணிந்து வனப்போடு காட்சியளிக்கிறார்.



ஸ்ரீலட்சுமியாகிய திருமகள் சிங்கபிரானின் இடது தொடைமீது இரு கரங்களுடன் அமர்ந்துள்ளாள். அவளது இடக்கரம் கடக ஹஸ்தத்தில் தாமரை மலரைப் பற்றியுள்ளது. வலக்கரம் அழகிய சிங்கபிரானை அணைத்து ஆலிங்கனம் செய்த வண்ணம் காட்சியளிக்கிறது. திருமகளின் தலையை கரண்ட மகுடம் அலங்கரிக்கிறது. காதிலும், கழுத்திலும், மார்பிலும், இடையிலும், திரு பாதத்திலுமாக குண்டலங்கள், கண்டாபரணம், முத்துவடம், மணிவடம், ஒட்டியாணம், மேகலை, வஸ்திர கட்டு, கொலுசு, சதங்கையாவும் அணி செய்ய எழிலுருவாய் காட்சியளிக்கிறாள். ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் திருவுருவம் சுமார் 6 அடி உயரத்தில் வீற்றிருந்த நிலையில் எழுந்தருளியுள்ளது.



மூல விக்கிரகத்திற்கு முன்பு பிரகலாதவரதன் எனும் பெயரில் அழைக்கப்படும் திருமால், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில்  தலையை கிரீடமகுடம் அலங்கரிக்க, மேற்கரங்களில் சங்கு சக்கரம் தரித்து, கீழ்வலக்கரத்தில் அபயஹஸ்தம் காட்டி அருட்பாலிக்கிறார். இடக்கரம் கட்யவலம்பித ஹஸ்தத்தில் அமைந்துள்ளது. வலப்புறம் ஸ்ரீதேவி நாச்சியார் வலது கரத்தை லோல ஹஸ்தமாகக் கொண்டு இடக் கரத்தில் தாமரை மலரை கடக ஹஸ்தத்தில் கொண்டுள்ளாள். இடப்புறம் உள்ள ஸ்ரீதேவி நாச்சியார் வலக்கரம் நீலோற்பலம் பற்றியும், இடக்கரம் லம்ப ஹஸ்தமாக கொண்டு திரிபங்கியாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள்.



இங்கு தனிக்கோயில் நாச்சியார்  அகோபிலவல்லித் தாயார் என்ற பெயரில் பத்மா சனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். உற்சவராகிய இவரது மேற்கரங்கள் இரண்டும் தாமரை மலரை தாங்கிய வண்ணம் காட்சியளிக்கிறது. கீழ்கரங்கள் இரண்டும் அபய ஹஸ்தத்திலும், வரத ஹஸ்தத்திலும் அமைந்துள்ளது. பெருமாளுக்கு இடப்புறம் உள்ள ஆண்டாள் திரிபங்கியாக நின்ற கோலத்தில் தரிசனம் அளிக்கிறார். இவளது வலக்கரம் நீலோற்பலமலரைப் பற்றியுள்ளது. இடக்கரம் லம்ப கரமாக நீண்டுள்ளது. தலையில் வசீகரிக்கும் ஆண்டாள் கொண்டையும், காதுகளில் குண்டலங்களும், கழுத்திலும், மார்பிலும் ஆபரணங்களும், இடையில் கச்சையும் அணிந்து திரிபங்கியாக ஆண்டாள் அற்புத வடிவில் அருட்கோலம் கொண்டு காட்சியளிக்கிறாள்.



பழைய சீவரம் மலையின் மேல் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சனம் கண்டருளுகின்றார். பின் அம்மண்டபத்தில் பூரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தருளுகின்றார்.  ஆங்கிலேயன் ராபர்ட் கிளைவ் அளித்த மகர கண்டியுடன் எழிலாக பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளுகின்றார். மண்டபத்தில் பெருமாளுக்கு மிக அருகில் நின்று நாம் திவ்யமாக இங்கு சேவிக்கலாம் என்பதால் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பரிவேட்டை உற்சவத்தன்று பழைய சீவரம் வருகின்றனர். 






 பேரருளான்   மண்டப  சேவை   2018



பிரம்மாவின் யாகத்தில் இருந்து தோன்றியவர் என்பதால்  பேரருளாரரின் திருமுகத்தில் வடுக்கள் நிறைந்திருக்கின்றன. அதுவே அவருக்கு அழகு.



பெருமாளின் பின்னழகு









 தேவப் பெருமாள்  மண்டப  சேவை  2019








பின்னழகு



அந்தி சாயும் நேரம்,  புது அலங்காரத்துடன் மலையிலிருந்து கீழே இறங்கி முதலில் பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்கு எழுந்தருளுகிறார் வரதர்.  அவரை லக்ஷ்மி நரசிம்மர் எதிர் கொண்டு அழைக்கிறார். இவ்வாலயத்தில் சிறிது நேரம் இருந்த பின் இரு பெருமாள்களும். பாலாற்றின் அக்கரையில் அமைந்துள்ள திருமுக்கூடல் ஸ்ரீநிவாசப்பெருமாள் ஆலயத்திற்கு எழுந்தருளுகின்றனர்.  பகதர் அனைவரும் கோவிந்தா! கோவிந்தா! என்ற முழக்கத்துடன், ஆனந்த பரவசத்துடன் உடன் செல்கின்றனர்.



அந்தி சாயும்  வேளை வரதர் மலையில் இருந்து இறங்குகின்றார்


மலை மேல் இருந்து பாலாற்றின் காட்சி



காஞ்சி வரதர் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்கு எழுந்தருளுகிறார்





எதிர் சேவை தந்தருளும் லக்ஷ்மி நரசிம்மர் 


சிறிது நேரம் பழைய சீவரம் ஆலயத்தில் சேவை சாதிக்கின்றார் வரதர், பின்னர் இரு பெருமாள்களுமாக திருமுக்கூடல் அப்பன் ஆலயத்திற்கு எழுந்தருளுகின்றனர். சாலை வழியாக செல்லாமல் ஆற்றைக் கடந்தே இருவரும் வருகின்றனர். அப்போது வாண வேடிக்கைகள் சிறப்பாக நடைபெறுகின்றன

அப்பன் வெங்கடேசன் விமானம்


தொண்டை மண்டலத்திற்கே உரிய தூங்கானை மாடவடிவில் காணப்படும் கருவறையில் பெருமாள் வடக்கு நோக்கி திருமுகம் காட்டி நின்ற கோலத்தில் ஆஜானுபாவனாய் காட்சி தரும் அற்புதக் கோலம். திருமுக்கூடலில் எழுந்தருளும் வெங்கடேசப்பெருமாள் மூம்மூர்த்தி ரூபமாக சேவை சாதிக்கின்றார். திருக்கரங்களில் சங்கமும், சக்கரமும் ஏந்தியுள்ளதால் விஷ்ணு ரூபமாகவும், தலையில் ஜடாமுடியும், நெற்றிக்கண்ணும் உள்ளதால் சிவரூபமாகவும்,  திருக்கரங்களிலும், திருவடியிலும் தாமரை மலர் இருப்பதால் பிரம்ம ரூபமாகவும் அருள் பாலிக்கின்றார் வேங்கடேசப் பெருமாள். பெருமாளின் திருவடியில் பூமாதேவியும் மார்க்கண்டேயரும் அமா்ந்து வழிபடுகின்றனா். பெருமாளின் திருமார்பில் அலர்மேல் மங்கைத் தாயார் ஒருபுறமும், பத்மாவதித் தாயார் மறுபுறமும் உறைகின்றனர். உற்சவர் திருநாமம்  ஸ்ரீநிவாசப்பெருமாள்.   திருவேங்கட மலையில் இருக்கும் வேங்கடவனின் தரிசனத்தைக் கண்ட மன நிறைவு இங்கும் ஏற்படுகின்றது. 

தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டைமான் சக்கரவர்த்தி என்ற  அரசர்  , திருவேங்கடமலையில் அருளும் எம்பெருமானிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். அந்தப் பக்தியின் வெளிப்பாடாக திருமலை தெய்வத்துக்கு ஏராளமான திருப்பணிகளை மனமுவந்து செய்துவந்தார்.

ஒருமுறை திருமலையில் நடைபெறும்  திருப்பணிகளைப் பார்வையிடச் சென்றார் மன்னர். இந்தச் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி, தொண்டை நாட்டின் மீது படையெடுத்து வந்த பகை மன்னன், நாட்டை முற்றுகையிட்டுவிட்டான். மன்னர் நாட்டில் இல்லாத நிலையில், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றனர் அமைச்சர்கள்.  ஒற்றர்கள் மூலம் மன்னருக்குத் தகவல் சென்றது. ஆனாலும், பகையரசன் முற்றுகையிட்டுவிட்ட நிலையில், மன்னர் மட்டும் என்னதான் செய்யமுடியும்?

பெருமாளிடம் பேரன்பும், மாசற்ற பக்தியும் கொண்டிருந்த தொண்டைமான், வேங்கடவனிடமே சரணடைந்தார். மனமுருகப் பிரார்த்தித்தார். பக்தர்களிடம் வாத்சல்யம் கொண்டிருப்பதால், பக்தவத்சலன் என்று போற்றப் பெறும் வேங்கடவன், தன் பக்தனைக் காப்பாற்றத் திருவுள்ளம் கொண்டுவிட்டார். தன் திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கினையும், சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வாரையும் களம் காணச் செய்து பகைவர்களை விரட்டி, மன்னரையும் நாட்டையும் காப்பாற்றினார்.

திருமுக்கூடல் திரும்பிய பல்லவ மன்னர், தனது நித்ய ஆராதனை மூா்த்தியான முக்கூடல் அழகனைத் தரிசிக்க திருக்கோயிலுக்கு வந்தார். திருமலையில் வேங்கடவனின் திருக்கரங்களை அலங்கரிக்கும் சங்கும் சக்கரமும் திருமுக்கூடலில் இருப்பதைக் கண்டு வியப்படைந்து, தன் வேண்டுதலுக்கு இரங்கி, திருவேங்கடமுடையானே பகையரசனை விரட்டிய அற்புதத்தை குறிப்பால் உணர்ந்தார்.

திருமலை தெய்வத்தின் பெருங்கருணையை எண்ணி வியந்த மன்னர் மெய்சிலிர்த்து, ‘என் அப்பனே!’ என்று பெருங்குரலில் இறைவனை அழைத்து, எம்பெருமானின் திருவடிகளில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். அன்று முதல் சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டின் மக்களும் மன்னரது வழியைப் பின்பற்றி, திருமுக்கூடல் வெங்கடேசப் பெருமாளை ‘அப்பன் வெங்கடேசப் பெருமான்’ எனப் போற்றி வணங்குகின்றனா்.

பல்லவா், சோழா், விஜயநகர மற்றும் நாயக்க மன்னா்களின் காலத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இந்தத் தலத்தின் புராதனத்தை எடுத்துக் கூறுகின்றன. இந்தக் கல்வெட்டுகளிலிருந்து இத்தலத்தின் எம்பெருமான், ‘விஷ்ணு படாரா்’, ‘திருமுக்கூடல் ஆழ்வார்’, ‘திருவேங்கடமுடையான்’ மற்றும் ‘ஸ்ரீவெங்க டேசுவர ஸ்வாமி’ எனப் பல திருநாமங்களில் வணங்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.

ஸ்ரீதேவிக்கும், பூமாதேவிக்கும் தனிச்சன்னதிகள் உள்ளன. மேலும் தாயார் அலர்மேல் மங்கை, ஆண்டாள் நாச்சியார், சக்கரத்தாழ்வார், கருமாணிக்க வரதர் மற்றும் கர்ண குண்டல அனுமார் சன்னதியும் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஸ்ரீஅனுமன் ‘கா்ணகுண்டலம்’ அணிந்து வித்தியாசமாகக் காட்சி தருகின்றார்.

பக்தா்கள், தங்கள் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட, திருமுக் கூடல் பெருமாளையும், இங்கு தனிச் சந்நிதியில் அருளும் கர்ண குண்டல  ஸ்ரீஅனுமனையும் பக்தியோடு வழிபடுகின்றனா்.   இங்கு இவருக்கு  ‘வடை மாலை’க்கு பதில் தேன்குழல் மாலை சாத்தப்படுகிறது.

முற்காலத்தில் திருக்கோயில்கள் போர், வெள்ளம், வறட்சிக் காலங்களில் பாதுகாப்பான காவல் அரணாகவும், மக்களைக் காப்பாற்றும் மையங்களாகவும் திகழ்ந்தன. மேலும், மக்கள் நலன் சார்ந்த மருத்துவமனைகளாகவும் கலைகளை வளர்க்கும் மன்றங்களாகவும் அக்கால ஆலயங்கள் அமைந்திருந்தன. குறிப்பாக ஆலயங்களில் மருத்துவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டி ருந்தது. ஆலயங்களிலிருந்த மருத்துவமனைகள், ‘ஆதுலர் சாலை’ என்ற பெயரில் அழைக்கப்பட்டன.



சோழர் காலத்திய மூலிகை வைத்தியம்



இவ்வாறு  மருத்துவமனையையும் தன்னகத்தே கொண்டு திகழ்ந்த ஆலயங்களில் ஒன்றுதான், திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்!. தற்போது இந்தக் கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் மிகச்சிறப்புடன் பராமரிக்கப்படுகிறது. திருப்பதி சென்று வேங்கடவனை மனம் குளிர தரிசிக்க இயலாத அன்பா்கள், திருமலை தெய்வத்தை தம் மனக்கண் முன் நிறுத்தி திருமுக்கூடல் அப்பன் வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்யலாம். 



தொன்மையான சிங்கத்தூண்



 பெருமாள்கள் எழுந்தருளும் மண்டபங்கள்

(  பந்தல் ,வாழை மரம், மாவிலை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன)




கருட வாகனம்


திருமுக்கூடலில் உள்ள அலங்கரிக்கப்பட்ட மண்டபங்களில்  சாலவாக்கம் சீனிவாசப் பெருமாள் மற்றும் காவாந்தண்டலம் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆகியோருடன் திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாளும் 
எழுந்தருளி, காஞ்சி வரதரும், பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மரும் வருவதற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.  

பாலாற்றைக் கடந்து              வரும் இரு பெருமாள்களையும் எதிர் கொண்டழைக்கிறார்        திருமுக்கூடல் வெங்கடேசப்பெருமாள், பின்னர் திருமுக்கூடல் ஆலயத்தின் உள்ளே உள்ள மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் வரதர்.  ஐந்து பெருமாள்களையும் சேவித்து மகிழ்கின்றனர் பக்தர்கள். 





திருமுக்கூடல் ஸ்ரீநிவாசப்பெருமாள்








சாலவாக்கம் சீனிவாசப் பெருமாள் 





காவாந்தண்டலம் லக்ஷ்மி நாராயணப் பெருமாள்




தேவராஜன்  திருமுக மண்டல  சேவை



 திருமுக்கூடலில்  பக்தர்களுக்கு  சேவை சாதித்த பின்னர் காஞ்சி வரதர்  சாலவாக்கம் எழுந்தருளுகிறார். பின்னர் அங்கிருந்து  இரவு முழுவதும் பயணம் செய்து திருக்கச்சி அடைகின்றார். இவ்வாறு மாட்டுப் பொங்கலன்று பழைய சீவரம் பரிவேட்டை உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.




Labels: , , ,

Friday, April 20, 2018

இராமானுஜர் ஜெயந்தி

Visit BlogAdda.com to discover Indian blogs
இன்றுலகீர்! சித்திரையிலேய்ந்த  திருவாதிரை நாள்
என்றையினு மின்றிதனுக்கேற்றமென்தான்? - என்றவர்க்குச்
சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர்தம் பிறப்பால்
நாற்றிசையும் கொண்டாடும் நாள். 

சித்திரை திருவாதிரையன்று ஸ்ரீபெரும்புதூரில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளின் கருணையினால்  இளையாழ்வாராக, இராமானுஜர் அவதரித்தார்.  இவரது  ஜெயந்தி விழா,  ஸ்ரீபெரும்புதூரில் 10  நாள்  சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தில் அருள் பாலிக்கின்றார்  இராமானுஜர். அவரது  1001வது  அவதார திருவிழாவின்  போது  தானுகந்த திருமேனியை ஒரு நாள் சென்று  சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 




எம்பெருமானாரின் திருமுகமண்டலம் 


யோநித்ய மச்யுத பதாம்புஜ யுக்மருக்ம
வ்யாமோஹ தஸ்ததி தராணி த்ருணாயமேநே |
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:
ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே.||



பின்னழகு

முனியார்துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார்மனம் கண்ணமங்கைநின்றானை கலைபரவும்
தனியானையைத்தண்தமிழ்செய்த நீலன்தனக்கு உலகில்
இனியானை எங்களிராமானுசனைவந்தெய்தினரே.


கோடைக்காலம் என்பதால் திருமேனியில் சந்தனம் சார்த்தியுள்ளதை கவனியுங்கள்.  மற்றும் திருமங்கையாழ்வார் (நீலன்) பதக்கத்தையும்  படத்தைப் பெரிதாக்கிக் காணலாம்.






தங்கத்தொட்டியில் இராமானுஜர் 




இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்போர் நல்லோர் அவை தம்மொடும் வந்து
இருப்பிடம்மாயன் இராமானுசன் மனத்து இன்று அவன் வந்து
இருப்பிடம் என்தனிதயத்துள்ளே தனக்கின்புறவே.

பின்னழகு 

காரேய் கருணை இராமானுசா! இக்கடலிடத்தில்
ஆரேயறிபவர் நின்னருளின் தன்மை? அல்லலுக்கு
நேரேயுறைவிடம் நான்வந்து நீயென்னையுத்தபின் உன்
சீரேயுயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே. 

Labels: , , ,

Wednesday, July 26, 2017

கோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
கருட பஞ்சமி 

இன்றைய தினம் கருடனின் ஜன்ம தினமான ஆடி மாத கருட பஞ்சமி நேற்று நாக சதுர்த்தி எனவே கோயம்பேடு வைகுந்தவாசப்பெருமாளின் கருட சேவையும், நிகமாந்த தேசிகர் அருளிய கருட தண்டகத்தையும் பதிவிடுகின்றேன். இன்றைய தினம் கருட  மற்றும் நாக வழிபாடு அனைத்து நன்மைகளையும் அளிக்கும் கருடனை வணங்குங்கிள் அனைத்து நலங்களையும் பெறுங்கள் அன்பர்களே. 

இந்த வருடம்  சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் 

இன்றோ திருவாடிப்பூரம்* 
எமக்காகவன்றோ இங்காண்டாளவதரித்தாள்* 
குன்றாதவாழ்வான வைகுந்தவான்போகந்த(ன்)னையிகழ்ந்து*
ஆழ்வார் திருமகளாராய்.
நமக்காகவே ஆண்டாள் அவதரித்த திருநாள் இன்று. திருமாலுடன் கூடிவாழும் என்றுமே குறையாத பெரும் செல்வமாகிய வைகுந்தமாகிற வான்போகத்தை வேண்டாமென உதறித் தள்ளிவிட்டு, பூவுலக மாந்தர்களை உய்விக்க பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாய் பூமிதேவி இந்தப் புவியில் அவதரித்த திருநாள் இன்று. என்கிறார் மணவாள மாமுனிகள் தமது உபதேசரத்தின மாலையில்.பாடிய திருவாடிப்பூரமும் இணைந்து வருகின்றது எனவே இரட்டிப்பு பலன். வாருங்கள் கருட சேவையை கண்டு களிக்கலாம். 

கோயம்பேடு என்றவுடன் அனைவருக்கும் காய்கறி சந்தையும். மத்திய பேருந்து நிலையமும் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் இத்தலம் இராமாயணத்துடன் தொடர்புடையது என்று பலருக்கு தெரியாது. 

இராம குமாரர்களான இலவகுசர்கள் கோ எனப்படும் அரசனாகிய இராமபிரானின் அஸ்வமேத யாகக் குதிரையை  அயம் என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலம் என்பதால் இத்தலம் கோயம்பேடு ஆனது. கோசை என்று அருணகிரி நாதர் இத்தலத்தை தமது திருப்புகழில் பாடியுள்ளார். 

தந்தையின் ஆணையைக் காப்பாற்ற 14 வருடங்கள் வனவாசம் செய்து, தச க்ரீவனாம்  இராவணனை வதம்  செய்த பின்  இராம பட்டாபிஷேகம் நடந்தது. பல ஆயிரம் வருடம் இராமராஜ்ஜியம் சிறப்பாக நடந்தது.   ஒரு சமயம் நகர் வலம் வரும் போது சில குடி மக்கள் சீதையின் கற்பைப் பற்றி களங்கமாகப் பேசியதால், சீதையின் கற்பை நிரூபிக்க  கர்ப்பிணியாக இருந்த சீதையை கொண்டு போய் காட்டில் விட்டு விட்டு வருமாறு இலட்சுமணனிடம்  கூற அவரும் சீதையை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் விட்டு  விட்டு சென்றான். 

வைகுந்தவாசர்

அக்காலத்தின்  வால்மீகி முனிவரின்  ஆசிரமே இன்றைய கோயம்பேடு என்பது இத்தலத்தின் ஐதீகம். சீதை லவன், குசன் என்று இரு புதல்வர்களைப் பெற்றது இவ்வால்மீகி ஆசிரமத்தில்தான்.  எனவே இத்தலத்தில் கர்ப்பிணியாக அமர்ந்த கோலத்தில் உள்ள சீதையின் மூலவர் சிலையும், வால்மீகி முனிவர் மற்றும் லவ குசர்களின்  ஒரு கற்சிலையையும் சேவிக்கலாம். 


லவ குசர்கள் வால்மீகி முனிவரிடம் சகல கலைகளையும் கற்று நாளொரு மேனியும்  பொழுதொரு வண்ணமுமாக  வளர்ந்து வரும் காலையில் இராமபிரான் அஸ்வமேத யாகம் செய்ய தீர்மானித்து யாக குதிரையை தேசமெங்கும் அனுப்புகின்றார். அக்குதிரை இங்கு வந்த போது அதனுடன் வந்த சத்ருக்கனனை தோற்கடித்து யாக குதிரை இங்கு கட்டி வைத்து விட்டனர். 

டுத்து லக்ஷ்மணன் குதிரையை விடுவிக்க வர அவரையும் லவகுசர்கள் தோற்கடிக்கின்றனர் .நிறைவாக இராமபிரானே வர சிறுவர்களும் தந்தை என்று அறியாமல் போரிடத் தயாராக, வால்மீகி முனிவர் குறுக்கிட்டு உண்மையை உணர்த்த இருவரும் இராமபிரானிடம் மன்னிப்பு கேட்கின்றனர்.  அப்பாவம் தீர அவர்கள் வைகுந்த வாசப்பெருமாளை வழிபட்டதாக ஐதீகம்.

இவ்வாறு லவகுசர்கள் கோ எனப்படும் அரசனாகிய  இராமபிரானின் அஸ்வமேத யாகக் குதிரையை  அயம் என்னும் இரும்பு  வேலியால் கட்டி வைத்த தலம் என்பதால் இத்தலம் கோயம்பேடு ஆனது. பேடு என்றால் வேலி என்றும் ஒரு பொருள் உண்டு. 


கனகவல்லி நாயிகா சமேத வைகுண்டவாசப் பெருமாளாக இத்தலத்தில் சேவை சாதிக்கின்றார். மூலவர் உபயநாச்சியார்களுடன் மேற்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் நின்ற கோலத்தில் எழிலாக சேவை சாதிக்கின்றார்.

கனகவல்லித்தாயாருக்கும், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளுக்கும் தனி சன்னதிகள் அமைந்துள்ளன .இருவரது சுற்றுப்பிரகாரத்திலும் வண்ண ஓவியங்களைக் கண்டு களிக்கலாம். தாயாரின் பிரகாரத்தில் அஷ்டலக்ஷ்மிகளையும், ஆண்டாளின் பிரகாரத்தில் திருப்பாவைப் பாடல்கள் முப்பதிற்குமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

ஆனிமாத பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாள் இரவு கருடசேவையின் காட்சிகளை இப்பதிவில் சேவிக்கின்றீர்கள். இத்தலத்தில் பல சிறப்புகள் உள்ளன அவை என்னவென்று பார்க்கலாம்.



கருட சேவை 

மூலவர் சீதை கர்ப்பிணியாகவும், வால்மீகி முனிவர் லவகுசர்களுடன் சேவை சாதிப்பதும் இத்தலத்தின் ஒரு சிறப்பு. இலக்குவனும், அனுமனும் இல்லாமல் இராமரும் சீதை மட்டுமே உற்சவ மூர்த்திகளாக சேவை சாதிக்கின்றனர். தனி சன்னதியில் இராமர் அரசனாக இல்லாமல் மரவுரி தரித்தும் சீதை கோடாலிக்  கொண்டையுடனும் சேவை சாதிப்பதை சேவிப்பதே ஒரு பரவசம்.

உற்சவர் வைகுண்ட வாசப்பெருமாள் மற்றும் உபய நாச்சியார்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மூவருமே வாருங்கள் வைகுண்டம் தருகின்றேன் என்கிற ஆஹ்வாகன (அழைக்கும்) முத்திரையுடன் சேவை சாதிப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.  

இவ்வாலயத்தில் பரமபதவாசல் கிடையாது. பெருமாளே வைகுந்தவாசன் என்பதால் சேவிக்கும் அன்பர்களுக்கு அவரே வைகுந்தம் வழங்குகின்றார் என்பது ஐதீகம்.
இத்தலத்தின் தலமரத்தில் வேம்பும் வில்வமும் ஒன்றாக இணைந்துள்ளது .இது சுயம்வர பார்வதி என்றழைக்கப்படுகின்றது. இம்மரத்தை சுற்றி வந்து வழிபட குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் .

ஆலயத்தின் முன்மண்டபத்தில் தசாவதார சுதை சிற்பங்களையும், பக்கங்களில் லவகுசர்கள், அஸ்வமேத குதிரையை கட்டி வைப்பதும், சத்ருக்னன் மற்றும் இலக்குவனுடன் போர் புரியும் சுதை சிற்பங்களையும் கண்டு களிக்கலாம்.

இக்கோவிலுக்கு அருகிலேயே குறுங்காலீஸ்வரர் சிவாலயமும் அமைந்துள்ளது. இரு ஆலயங்களுக்கும் ஒரே திருக்குளம்தான். லவகுசதீர்த்தம் என்று இத்திருக்குளம் அழைக்கப்படுகின்றது. இவ்வாறு இவ்வாலயம் சைவ-வைணவ ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.


இத்தலத்தில் மூலவருக்கு அலங்காரம் சிறப்பாகச் செய்யப்படுகின்றது. பல தடவை நெடியோனான வேங்கடவனாக இவரை சேவித்திருக்கின்றேன். வரதர், பாண்டுரங்கர் என்று வெவ்வேறு கோலங்களில் அலங்காரம் செய்வது இவ்வாலயத்தின் சிறப்பு.



பின்னழகு 

ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ  |
வேதாந்தார்சார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி  ||

முதல் ஸ்லோகம் 32 எழுத்துக்களைக் கொண்ட  அநுஷ்டுப் சந்தஸ்ஸில் அமைந்துள்ளதுஇறுதி ஸ்லோகமும் இதே சந்தஸ்ஸில் அமைந்துள்ளது

முதல் ஸ்லோகம்:
நம: பந்நக நத்தாய வைகுண்ட வஶ வர்த்திநே |
ஶ்ருதி ஸிந்து ஸுதோத்பாத மந்த்ராய கருத்மதே ||

அழகிய சிறகுகளை கொண்ட கருடபகவானுக்கு நமஸ்காரம்தங்களுடையத் திருமேனியை தாங்கள் வென்ற நாகங்கள் அழகு செய்கின்றனஅவை தேவரீருக்கு ஆபரணமாக விளங்குகின்றனதாங்கள் ஸ்ரீவைகுந்தத்தில்  பெருமாளுக்கு அந்தரங்க தாசனாக இருந்து அவருக்கு கைங்கர்யம் செய்கின்றீர்கள்வேதங்களாகிய பாற்கடலை கடைந்து பிரம்ம வித்யா என்னும் அமிர்தத்தை அடைவது போல தங்களை வணங்கி இந்தப் பிரம்ம வித்யையை அடையலாம்கருத்மானாகிய தங்களுக்கு நமஸ்காரம்

பாதம் 1
கருடமகில வேத நீடாதிரூம் த்வித் பீடநோத் ண்டிதாகுண்ட
வைகுண்ட பீடிக்ருதஸ்கந்தமீடே ஸ்வநீடாகதி ப்ரீத ருத்ரா ஸுகீர்த்தி
ஸ்தநாபோக காடோ கூட ஸ்புரத்கண்டகவ்ராத வேத வ்யதா வேபமா
த்விஜிஹ்வாதி பாகல்ப விஷ்பார்யமாண ஸ்படாவாடிகா ரத் ரோசிஶ் டா நீராஜிதம் காந்தி கல்லோலி நீராஜிதம். 1.

கருட பகவானே  தாங்களே வேத ஸ்வரூபிவேதங்கள் தங்களின் புகழைப் பாடுகின்றனஸ்ரீமந் நாராயணன் அசுரர்களை அழிக்க செல்லும் போது தங்களின் தோளில் அமர்ந்து செல்கின்றார்அவ்வாறு தாங்கள் சேவைச் செய்ய செல்லும்  போது தங்களது இரு மனைவியரான ருத்ரையும்ஸுகீர்த்தியும் தங்களை பிரிந்திருக்கின்றனர்பெருமாள் அசுரர்களை வென்று வந்த பின்,  தங்களை அவர்கள் ஆரத்தழுவிக் கொள்கின்றனர்அந்த புளகாங்கிதத்தில் தங்கள் திருமேனியில் உள்ள சிறகுகள் சிலிர்த்தெழுகின்றனஅவை தமது திருமேனியில் அணிந்துள்ள நாகங்களை கூர்பார்க்கின்றனஆகவே அவை பயந்து தங்களின் படங்களை விரிக்கின்றனஅப்போது அவற்றின் மாணிக்க கற்கள் மிளிர்கின்றனஅவ்வொளி தேவரீருக்கு கற்பூர ஆரத்தி போல உள்ளது.

கருடன் வேதஸ்வரூபனாக விளங்குவதையும்அவரை வேதங்கள் போற்றுவதையும் அவர் பெருமாளுக்கு வாகனமாகவும்கொடியாகவும் திகழ்வதையும்அவருக்கு ருத்ரைஸுகீர்த்தி இன்று இரு மனைவியர்மஹா நாகங்கள் அவரின் ஆபரணமாக விளங்குகின்றன என்பதை இந்த ஸ்லோகத்தில் நிகமாந்த மஹா தேசிகர் அற்புதமாக கூறியுள்ளார்.

பாதம் : 2
ஜய கருட ஸுபர்ண தார்வீகராஹா தேவாதிபாஹார ஹாரிந் திவௌ கஸ்பதி க்ஷிப்த தம்போளி தாரா கிணாகல்ப கல்பாந்த வாதூல கல்போ தயால்ப வீராயிதோத்யச்சமத்கார தைத்யாரி ஜைத்ர த்வஜாரோஹ நிர்த்தாரிதோத்கர்ஷ சங்கர்ஷணாத்மந் கருத்மந் மருத்பஞ்சகாதீஶ்
சத்யாதி மூர்த்தே  க்ஶ்சித் ஸமஸ்தே நமஸ்தே புநஸ்தே நம: ||  2.

கருடாழ்வாரேஅழகிய சிறகுகளை உடைய சுபர்ணரேமஹா நாகங்கள் தங்களுடைய உணவாகின்றனதாயை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க தேவலோகம் சென்று தேவர்களை வென்று அமிர்தம் கொணர்ந்தீர்அப்போது இந்திரன் கோபம் கொண்டு வஜ்ராயுதத்தை தங்கள் மேல் ஏவினான்அதன் கூரிய முனை தங்கள் சிறகுகளிலும் திருமேனியிலும் ஏற்படுத்திய  வீரத்தழும்புகள் தற்போது தங்களுக்கு ஆபரணமாகி தாங்கள் இந்திரனை வென்றதை அறிவிக்கின்றனதங்களது வீரச்செயல்கள்  பிரளய காலத்தின் மஹா வாயுவைப்போல உள்ளனதாங்கள் பெருமாளின் கொடியில் அமர்ந்து அவரது வெற்றிக்கு அறிகுறியாக விளங்குகின்றீர்கள்அதுவே தங்களது பெருமையும் பறை சாற்றுகின்றதுதாங்களே பெருமாளின் வியூக மூர்த்தமான சங்கர்ஷணரின் அம்சமாக அவதாரம் செய்தீர்கள்தாங்களே சத்யர்சுபர்ணர்கருடர்தார்க்ஷ்யர்விஹாஹேஸ்வரர் என்ற ஐந்து வடிவாகி ப்ராணன்அபாநன்சமாநன்உதாநன்வ்யாநன் என்ற ஐந்து வாயுவாகி தேவனாக ஒளிர்கின்றீர்அழகிய பொன்னிற சிறகுகளை உடையவரேதங்களுக்கு நமஸ்காரம் மீண்டும் ஒரு  முறை நமஸ்காரம்

தேவர்களை வென்று அமிர்தம் கொணர்ந்து தாயின் அடிமைத் தளையை நீக்கிய வீரச்செயலையும்போர்க்களத்தில் பெருமாளுக்கு முன்னரே சென்று காய்சினப் பறவையாகி அசுரர்களை அழிக்கும் வீரத்தையும்பாற்கடலில் பரவாஸுதேவரின் வியூக மூர்த்திகளில் ஒருவரான சங்கர்ஷணரின் அம்சமாக திகழ்வதையும்ஐந்து வாயுக்களின் வடிவமாக திகழ்வதையும் இந்த ஸ்லோகத்தில் தூப்புல் வேதாந்த தேசிகர் பாடியுள்ளார்.   
  
பாதம் : 3
நமத மஜஹத் பர்யாய பர்யாய நிர்யாத பக்ஷாநிலாஸ் பாலநோத் வேல பாதோதி வீசீ சபேடாஹதாகாத பாதாள பாங்கார ங்க்ருத்த நாகேந்த்ரபீடாஸ்ருணீ பாவ பாஸ்வந்நக ஶ்ரேணயே சண்டதுண்டாய ந்ருத்யத் புஜங்கப்ருவே வஜ்ரிணே தம்ஷ்ட்ரயா துப்யம் அத்யாத்மவித்யா விதேயா விதேயா பவத்தாஸ்யமாபாதயேதா யேதாஶ் மே ||

கருட பகவானேஞானிகள் இடைவிடாமல் தங்களை தியானிக்கின்றனர்தாங்கள் பறக்கும் போது தங்களின் இறகுகள் உண்டாக்கும் காற்று பெரிய கடல் அலைகளை உண்டாக்குகின்றனஅதன் சப்தம் பாதாள உலகத்தையும் எட்டுகின்றதுஅந்த ஓசை அங்குள்ளவர்களை அறைவது போல அவர்களுக்கு தோன்றுகின்றது.  பயங்கரமான “பாம்” என்ற சப்தம் அப்போது உருவாகின்றதுஅஷ்ட திக் கஜங்களும் அந்த சப்தத்தைக் கேட்டு அதிர்ந்து தங்களை தாக்க வருகின்றனதங்களது கூரிய நகங்கள் அந்த யானைகளை அடக்கும் அங்குசமாகின்றனதங்களது கூரிய அலகு தங்களது எதிரிகளின் மனதில் பய பீதியை உண்டாக்குகின்றதுதாங்கள் புருவத்தை நெரிக்கும் போது அது நாகம் படமெடுப்பது போல உள்ளதுதங்களது கோரைப்பற்கள் இந்திரனின் வஜ்ராயுதம் போல தங்கள் எதிரிகளின் மனதில் அச்சத்தை உண்டாக்குகின்றனதங்களுக்கு அந்த அளவில்லா புகழுக்கு  நமஸ்காரம்தாங்கள் அடியேனுக்கு பிரம்ம வித்யையை அருள்வீர்களாககருணை கூர்ந்து தங்களுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தையும் அருள்வீர்களாக.

ஆச்சார்யனாக இருந்து பிரம்ம வித்தையை வழங்கும் பான்மையையும்ஞானிகள் சதா சர்வ காலம் கருடபகவானை துதிப்பதையும் இந்த ஸ்லோகத்தில் ஆச்சார்யர் தேசிகர் கூறியுள்ளார்.

பாதம் : 4
மநுரநுகத பக்ஷி வக்த்ர ஸ்புரத்தாரகஸ்தா கஸ்சித்ரபாநுப்ரியாஸேகர ஸ்த்ராதாம் நஸ்த்ரி வர்க்காபவர்க் ப்ரஸூதிபரவ்யோம தாமந்
வலத்வேஷி தர்ப்பஜ்வலத் வாலகில்ய ப்ரதிக்ஞா வதீர்ண ஸ்திராம்தத்த்
புத்திம் பராம் பக்திதேநும் ஜகந்மூல ந்தே முகுந்தே மஹாநந்ததோ க்த்த்ரீம் தீதா முதாகாமஹீநாம் அஹீநாமஹீநாந்தக

கருடாழ்வாரேவைகுந்தத்தில் உறைபவரேதங்களுடைய மந்திரம் அதை உபாசிப்பவர்களுக்கு நான்கு பேறுகளையும் (அறம்பொருள்இன்பம்வீடுவழங்குகின்றதுஅந்த மந்திரம் ஐந்து எழுத்துக்களைக் கொண்டதுஓம் என்னும் பிரணவம் அதன் முதல் எழுத்துஅதன் நிறை எழுத்து அக்னியின் மனைவியைக் குறிக்கின்றதுஅந்த மந்திரம் எங்களைக் காக்கட்டும்.

ஒரு சமயம் இந்திரன் ஆணவம் கொண்டு  வாலகில்ய முனிவர்களை அவமதித்தான்அதனால் அவர்கள் எதிர்காலத்தில் சங்கர்ஷணரின் அம்சமாக பிறப்பவன் உன்னுடைய ஆணவத்தை அழிப்பான் என்று சாபமளித்தனர்தாங்கள் வாலகில்ய முனிவர்களின் வாக்கை காப்பாற்றி இந்திரனின் ஆணவத்தை அழித்தீர்கள்தங்களை பகைத்த நாகங்களுக்கு தாங்கள் யமனாக விளங்குகின்றீர்கள்உண்மையான ஞானத்தை அடியேனுக்கு வழங்குவீர்களாகதங்களின் தலைவன் முகுந்தன் ஜகத்காரணர்அவருக்கு உண்மையான அன்பு பூண்டுநிலையற்ற இவ்வுலக மாயையில் அழுந்தாமல்திட மனதுடன்   அவருக்கு பக்தி செய்யும் உண்மையான ஞானத்தை அடியேனுக்கு வழங்குவீராக.

கருடாழ்வார் மந்திர மூர்த்தியாக விளங்குவதையும்நான்கு புருஷார்த்தங்களையும் வழங்குவதையும்வாலகில்ய முனிவர்களின் தவத்தின் பயனால் கருடன் அவதாரம் நிகழ்ந்ததையும்பிரம்ம வித்தையை அளிக்கும் ஆச்சார்யனாக கருடபகவான் விளங்குவதையும் நிகமாந்த தேசிகர் இந்த  ஸ்லோகத்தில் கூறியுள்ளார்.  

ஷட்த்ரிம் ஶத்கண சரணோ நர பரிபாடீ நவீ கும்பகண: |
விஷ்ணுர தண்டகோயம் விகடயது விபக்ஷ வாஹிநீ வ்யூஹம் || 6

இந்த கருட தண்டகமானது ஒரே ஸ்லோகம்இதில் நான்கு பாதங்கள் உள்ளனஒவ்வொரு பாதத்திலும் 36 கணங்கள்ஒரு கணத்தில் மூன்று எழுத்துக்கள் (மொத்தம் 108 எழுத்துக்கள்) . இந்த கருட தண்டகம் தண்டக யாப்பில் சரியாக இயற்றப்பட்டுள்ளது.  நாகணங்களும்ராகணங்களும் கொண்டு இயற்றப்பட்டுள்ளதுஇந்த கருட தண்டகத்தை ஜபிப்பவர்களின் எதிரிகளின் வியூகம்  காற்றில் அழிந்து போகும்.

இந்த ஸ்லோகம் தண்டகத்தின் யாப்பை விளக்குகின்றதுஇது ஆர்யா ஸந்தஸ்ஸில் அமைந்துள்ளது.

விசித்ர ஸித்தித: ஸோயம் வேங்கடே விபஶ்சிதா
கருடத்வஜ தோஷா கீதோ கருட தண்டக:  ||  7

கருடக்கொடியையுடைய எம்பெருமானை  மகிழ்விக்க   அடியேன் வேங்கடேசன்இயற்றிய இந்த கருட தண்டகத்தை ஜபிப்பவர்கள் அவர் அருளால்  சகல மனோபீஷ்டங்களையும்  அடைவர்.

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணஶாலினே |
ஸ்ரீமதே வேங்கடேஶா வேதாந்த குரவே நம: ||
(நன்றி : ஒப்பிலியப்பன் கோயில் வரதாச்சாரி சடகோபன்)


இந்த கருட தண்டகத்தை பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் தொல்லை ஒழிந்து போகும். நோய் நொடிகள் அண்டாது. விஷ ஜந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது என்று பெரியோர் கூறுவர் எனவே கருட பஞ்சமியான இன்று கருடனை நினைத்து வழிபட்டு நன்மையடைய பிரார்த்திக்கின்றேன்.

Labels: , , , , ,