Tuesday, November 11, 2008

நாச்சியார் கோவில் கல் கருட சேவை - 3

Visit BlogAdda.com to discover Indian blogs
கல் கருட சேவையின் போது ஒரு அற்புதம் நடைபெறுகின்றது. அதாவது கருடனின் கனம் (எடை) அதிகமாகிக்கொண்டே போவதுதான். சன்னதியிலிருந்து வெளியே வரும்போது கருடனை நான்கு பேரால் ஏழப்பண்ண முடியும் அதுவே பிரகாரத்தை சுற்றி வரும்போது எட்டு பேர் வேண்டும், அடுத்து பதினாறு பேர், பின்னர் வெளியே வரும் போது முப்பத்திரெண்டு பேர் வெளியே வந்தவுடன் அறுபத்து நான்கு என்று நான்கின் மடங்கில் அதிகமாகிகொண்டே போகும் அதிசயம் நடைபெறும், அதே பெருமாள் திரும்பி வரும் போது அதே விகிதத்தில் எடை குறைந்து கொண்டே வரும்.
முனையார் சீயமாகி அவுணன் முரண் மார்வம்
புனை வாளுகிரால் போழ்படஈர்ந்த புனிதனூர்
சினையார் தேமாஞ் செந்தளிர் கோதிக்குயில் கூவும்
நனையார் சூழ்ந்த அழகான நறையூரே.

இப்பாசுரம் திருநறையூர் நம்பியையே ஆச்சாரியனாக பெற்ற திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த 110 பாசுரங்களுள் ஒன்று.இவ்வாறு ஏன் நடைபெறுகின்றது. ஒரு விளக்கம் பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரம், தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் அன்னமோ நளினமான பறவை, பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். கருடன் பலம் மிகுந்த அதே சமயம் வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே கருடன் அன்னத்தின் பின்னே செல்ல வேண்டுமல்லாவா? எனவே கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்கின்றது. ஆகவே இப்போதும் தாயாருக்கு முதலிடம் .

இரண்டாவது விளக்கம். நாம் பெருமாளுடன் ஒன்றியிருக்கும் போது நம் விணைகளின் சுமை குறைவாக இருக்கும், அதுவே நாம் பெருமாளை விட்டு விலகி செல்லும் பொது அதுவே மிகப்பெரிய சுமையாகி விடுகின்றது என்பதை இது குறிப்பால் உணர்த்துகின்றது. அதாவது பூரண சரணாகதி ஒன்று தான் நாம் உய்ய ஒரே வழி என்பதைத்தான் இதுவும் உணர்த்துகின்றது.அது போலவே பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் அதிசயத்தையும் காணலாம். ( தகவலுக்கு நன்றி வல்லி சிம்ஹன் அம்மா)திருநறையூர் நம்பியின் பேரெழிலை திருமங்கை மன்னன் பெரிய திருமடலில் பாடியவாறு

மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்
பொன்னியலு மாடக் கவாடம் கடந்து புக்கு

என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் - நோக்குதலும்
மன்னன் திருமார்பும் வாயுமடியிணையும்

பன்னுகரதலமும் கண்களும் - பங்கயத்தின்
பொன்னியல் காடு ஓர் மணிவரை மேல் பூத்தது போல்

மின்னொளி படைப்ப வீழ்நானும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்

துன்னுவெயில் விரித்த சூளாமணியிமைப்ப
மன்று மரகதக்குன்றின் மருங்கே - ஓர்

இன்னிளவஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்
அன்னமாய் மானாய் அணி மயிலாய்......

பெருமாளின் ஓடும் புள்ளேறி ஊர்ந்து வரும் அழகைக் கண் களிப்ப நோக்கி களியுங்கள் அன்பர்களே.

பொங்கேறுநீள்சோதிப் பொன்னாழிததன்னோடும்
சங்கேறுகோலத் தடக்கைப்பெருமானை
கொங்கேறுசோலைக் குடந்தைகிடந்தானை
நங்கோனைநாடி நறையூரில் கண்டேனே.

என்று நம் கலியன் அனுபவித்த ஸ்ரீநிவாசப்பெருமாளின் கல் கருட சேவை படங்களை அளித்த அன்பர் தனுஷ்கோடிக்கு ஆயிரம் நன்றிகள்.

Labels: , , ,

Monday, November 10, 2008

நாச்சியார் கோவில் கல் கருட சேவை - 2

Visit BlogAdda.com to discover Indian blogs
நாச்சியார் கோவில் கல் கருடன்

எல்லா கருடனிலும் அஷ்ட நாகங்கள் ஆபரணமாக விளங்கும் ஆனால் இந்த கல் கருடனில் ஒன்பது நாகங்கள் ஆபரணமாக உள்ளன, ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.
பெரிய திருவடியாகிய கருடன் பெருமாளுக்கு எப்படி எப்படியெல்லாம் சேவை செய்கின்றார் பாருங்கள்.
பெருமாள் அசுரர்களை கொல்லும் போது மேலாப்பாய், குளிர்ந்த விசிறியாக

எம்பெருமானின் வெற்றிக் கொடியாக

காய்சினப்பறவையாய் பெருமாளின் பகைவர்களுக்கு தானே எதிரியாக

குதிரை பூட்டாத தேராய் பெருமாளுக்கு வாகனமாய் புறக்கணிக்க முடியாத அடியவராய் இவ்வாறு பல் வேறு நிலைகளிலும் பெருமாளுக்கு வேறு துணை வேண்டாத துணையாய் திகழ்பவன்தான் கருடன்.


சன்னதியிலிருந்து கருட சேவைக்காக கல் கருடனை
ஏழப்பண்ணிக்கொண்டு வரும் காட்சிகள்.கருடனில் வந்து யானையின் துயரம் திருநறையூர் நம்பி தீர்த்த அழகை அவரிடம் பஞ்ச சமஸ்காரம் பெற்ற திருமங்கையாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.

தூவாயபுள்ளுர்ந்துவந்து துறைவேழம்
மூவாமைநல்கி முதலை துணித்தானை
தேவாதிதேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயுளானை நறையூரில்கண்டேனே.


ஆடும் புள்ளேறி பக்தர் துயர் தீர்க்க ஓடி வரும் பெருமாள்
(கருடன் திருமுகம் மிக அருகில்)

இனி கல் கருடன் இத்தலத்திற்கு வந்த வரலாறு. அருகில் இருந்த ஒரு கிராமத்தில் ஒரு சிற்பி கல்லினால் கருடன் செதுக்கி சிறகுகளை அமைத்து பிராணப்பிரதிஷ்டை செய்த போது அந்த கல் கருடன் திடீரென்று பறக்க ஆரம்பித்து விட்டதாம், அதைக்கண்ட சிற்பி ஒரு கல்லை வீச அது கருடனின் அலகை தாக்க கருடன் திருநறையூரில் விழுந்ததாம். பெருமாள் கருடனை இங்கேயே இருக்க வரம் அளித்தார்.

கல் கருடன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இவரை 7 வியாழக்கிழமைகள் தொடர்ந்து வழி பட பிரார்த்தணைகள் நிறைவேறும். இவர் விநாயகர் போல மோதகப்பிரியர் இவருக்கு அமிர்த கலசம் என்னும் மோதகம் நைவேத்யம் செய்யப்படுகின்றது, இவ்வாறு மோதகம் படைத்து வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மற்றும் எல்லா செல்வங்களும் அருளுகின்றார் இவர்.

அடுத்த பதிவில் கல் கருடனில் பெருமாள் சேவை சாதிக்கும் போது நடக்கும் ஒரு அற்புதத்தையும் அதற்கான விளக்கத்தையும் காணலாம்.

Labels: , , ,