Sunday, March 29, 2009

ஸ்ரீராமரின் அருட்கோலங்கள்

Visit BlogAdda.com to discover Indian blogs
வரும் 3-4-2009 அன்று இராம நவமி அதையொட்டி இன்னும் சில இராம பிரானை தரிசிக்கலாமா அன்பர்களே. இராமர் என்றது நினைவுக்கு வருவது வடுவூர் தான் இதோ சில வடுவூர் இராமர் அருட்கோலங்கள்.


மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறுவாய்த்தவனே!


தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்


கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியே

என்னுடையவின்னமுதே! இராகவனே! தாலேலோ.
ஸ்ரீராம நாம மகிமை

மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே

இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்

செம்மை சேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்


இனி வரும் படங்கள் எல்லாம் சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீசத்ய நாராயணர் கோவில் கோதண்ட ராமரின் அருட்கோலங்கள். இத்திருக்கோவிலில் இராம நவமி உற்சவம் பத்து நாள் நிகழ்ச்சியாக சிறப்பாக நடைபெறுகின்றது. காலை தினமும் சிறப்பு திருமஞ்சனம் இப்போது பார்க்கும் இரண்டு படங்களும் காலை திருமஞ்சனத்திற்கு பின் எடுக்கப்பட்ட படங்கள்.திருமஞ்சனம் கண்டருளிய சீதாராமர் சிறிய திருவடியுடன்

இராஜா ராமர், சதுர்புஜ இராமர், ஹர தனுர் பங்கம், சீதா கல்யாணம், முத்தங்கி சேவை, அனுமன் வாகனம், சுக்ரீவ சகாயர், நாச்சியார் திருக்கோலம், வைகுந்த நாதன், இராம நவமியன்று இராம பட்டாபிஷேகம்- வீதி புறப்பாடு, பின் விடையாற்றி கண்ணாடியறை சேவை என்று பல் வேறு கோலங்களில் மாலை நேரங்களில் சேவை சாதிக்கின்றார் ஸ்ரீராமர் அவற்றுள் சில கோலங்கள் இங்கே.

கோதண்ட ராமர் முத்தங்கி சேவை

என்ன அழகு என் இராமன், காணக் காண் கோடி வேண்டும், பிறவி எடுத்ததன் பலன் இவரை தரிசித்தால் கிடைத்து விட்டதே.

சிறிய திருவடியில் கோதண்டராமர்

மலையதனாலனைகட்டி மதிலிலங்கையழித்தவனே!

அலைகடலைக்கடைந்து அமரர்க்கமுதருளிச்செய்தவனே!

கலைவலவர்தாம்வாழும் கணபுரத்தென்கருமணியே!

சிலைவலவா! கேசவனே! சீராமா! தாலேலோ.
இராம நவமியன்று இராம பட்டாபிஷேகக் கோலம்வைதேஹி-ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹா-மண்டபே


மத்த்யே புஷ்பக-மாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திகம்


அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன-ஸுதே தத்வம் முனிப்ப்ய்: பரம்


வ்யாக்க்யாந்தம் ப்ரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்கற்பக விருக்ஷத்தின் அடியில் அமைந்த ஸ்வர்ண மண்டபத்தின் நடுவில் மமயமான ஆஸனத்தில் வீராஸனமிட்டு சீதாதேவியுடன் அழகாக வீற்றிருப்பவரும், முன்னிருந்து ஆஞ்சனேயர் கேட்கத் தத்துவத்தை முனிவர்களுக்கு விளக்கிக் கூறுபவரும், பரதன் முதலியவர்களால் சூழப்பெற்றவரும், சியாமளவர்ணரும் ஆன ஸ்ரீராமசந்திர மூர்த்தியை "ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம" என்று போற்றி நன்மை அடைவோமாக.

ஸ்ரீ சத்யநாராயணர் இராம பட்டாபிஷேக கோலம்

************

திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீராமர்.
பெருமாள் ஒய்யாரமாக தலையை சாய்த்துக் கொண்டிருக்கும் அழகை பாருங்கள்

***********

திருவல்லிக்கேணி ஸ்ரீராமர்

தேவரையுமசுரரையும் தி்சைகளையும் படைத்தவனே!

யாவரும்வந்தடிவணங்க அரங்கநகர் துயின்றவனே!

காவிரிநல்நதிபாயும் கணபுரத்தென்கருமணியே

ஏவரிவெஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ.


*************


திருவிண்ணகர் ஸ்ரீராமர்

********

மதுராந்தகம் ஏரி காத்த ராமர்

துவயம் விளைந்த இந்த ஷேத்திரத்தில் இலக்குவனின் பின் புறம் அம்புறாத்தூணி உள்ளதையும் அதே சமயம் கருணா முர்த்தி இராமபிரானின் பின் புறம் அம்புறாத்தூணி இல்லாததை கவனித்தீர்களா? அன்பர்களே.

(படங்களின் மேல் கிளிக்கினால் படத்தை பெரிதாக காணலாம்)


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்

ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
* * * * * * * * *

Thursday, March 26, 2009

வேடு பறி உற்சவம்

Visit BlogAdda.com to discover Indian blogs

பௌர்ணமி தினம் என்றாலே அது ஒரு பண்டிகை நாள் தானே. அதுவும் கோடை காலத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. பங்குனி மாதம் வரும் பௌர்ணமி உத்திர நட்சத்திரத்துடன் இனைந்து வரும். இந்த பங்குனி உத்திரம் கல்யாண விரத நாள். ஆண்டாள்-ரங்க மன்னார், சீதா-இராமர் ஆகியோர் திருக்கல்யாணங்களும் பங்குனி உத்திரத்தன்று நடைபெற்றது. எனவே ,அன்று அனேகமாக எல்லா பெருமாள் கோவில்களிலும் திருக்கல்யாணம் அல்லது சேர்த்தி சேவை பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகின்றது.


மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களுள் சோழ மண்டலத்தில் உள்ள திருவாலி- திருநகரி திவ்ய தேசத்தில் நடைபெறும் திருக்கல்யாணம் மிகவும் தனித்தனமை பெற்றது, இங்கு பெருமாள் கள்வனாக இருக்கும் தன்னுடைய கலியனை ஆட்கொள்ள, திருமந்திர உபதேசம் கொடுக்க இங்கு மணக்கோலம் கொள்கின்றார் இவ்விழா திருவாலி-திருநகரியில் 10 நாள் உற்ச்வமாக வேடுபறி உற்சவம் என்று ஆயிரம் தீவட்டிக்கள் ஒளிர நடைபெறுகின்றது இவ்விழாவின் தாத்பரியத்தையும் மேன்மையும் காண தங்களை கைகூப்பி அழைக்கின்றேன் வாருங்கள் என்னுடன்.


சௌரிராஜர் திருக்கோலத்தில் ஆழ்வார்

வேதத்தின் சாரத்தை பகதர்கள் அனைவருக்கும் புரியும் படி அமுதத் தமிழில் அளிப்பீர் என்ற, அஞ்சன வண்ணன், ஆயர் பெருமான், அடியவர்க்கு மெய்யன், அமரற்கரிய ஆதி பிரான், உம்பர் கோன், எம்பெருமானின் ஆனைப்படி, நீளாதேவி, பஞ்சாயுதங்கள், ஸ்ரீவத்ஸம், கௌஸ்துபம், வனமாலி, அனந்தன், கருடன், மற்றும் விஷ்வசேனர் பன்னிருவரும், கலியுகத்தில் பூமியில் தோன்றி பரந்தாமனின் கல்யாண குண வைபவம் என்னும் கடலை மேகங்களாக்கி அந்த அருள் மேகத்தை பக்தி மழையாக நமக்கு பொழிந்து நமது நெஞ்சங்களிலெல்லாம் பேரானந்தம் பொங்க செய்தார்கள். எம்பெருமானின் பக்தியில் ஆழ்ந்து இருந்ததால் இவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்.

ஜீ
வன் பக்தியால் பரமாத்மாவை நெருங்கி, பக்தி பெருக்கினால் தன்னிலும் மேலான பகவானை வாழ்த்துகின்றான் இதுவே மங்களாசாசனம், இவ்வாறு மயர்வற மதி நலம் அருளிய தேவாதி தேவனை மங்களாசாசனம் செய்தவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் வேதாந்த தத்துவத்தையும், பகவத் கீதையின் உபதேச மொழிகளையும் திவ்ய பிரபந்தங்களின் மூலம் தேனினும் இனிய தமிழ் மொழியில் போதித்த பரமனடியார்கள். இவர்களில் கடைக்குட்டியான திருமங்கை ஆழ்வாருக்கு மற்ற ஆழ்வார்கள் எல்லாருக்கும் இல்லாத ஒரு சிறப்பு உண்டு அதுதான் எம்பெருமானிடமே திருமந்திர உபதேசம் பெற்றது. இந்தவைபவம் தான் வேடுபறி உற்சவமாக திருவாலி-திருநகரியில் பங்குனிஉத்திரத்தின் போது கொண்டாடப்படுகின்றது.


முதலில் இத்திவ்ய தேசத்தின் மாண்பைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். திருவாலி - திருநகரி இரண்டும் 5 கி.மீ இடைவெளியில் உள்ள திருத்தலங்கள், திருநகரியில் சேவை சாதிக்கும் வயலாளி மணவாளனை "திருவாலி நகராளா" என்று திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளதால் இரு தலங்களும் ஒரே திவ்ய தேசமாக கொள்ளப்படுகின்றது. திருமங்கை நாடு, ஆலி நாடு என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திவ்ய தேசத்தை 41 பாசுரங்களினால் மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கை ஆழ்வார். தேரோடும் நெடுவீதி திருவாலி நகர், சீராரும் வளர் பொழில் சூழ் திருவாலி, எங்கும் ஆலைப்புகை கமழும் அணியாலி , என்று குறிப்பிடுகின்றார் ஆழ்வார் இத்திருத்தலத்தை, தன் பாசுரங்களில். வயலாலி மணவாளனை, அணியாலியம்மான், திருவாலியம்மான் - மண்ணளந்த தாளாளா! தண் குடந்தைகுடமாடீ! வரையெடுத்த தோளாளா! பாரளந்த பண்பாளா! மரமெய்த திரளாளா! என்று மங்களாசாசனம் செய்துள்ளார். தம்முடைய கண்ணபுர பாசுரத்தில் ஆலிநகருக்கு அதிபதி என்று சௌரி ராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார் குலசேகர ஆழ்வார்.

வயலாளி மணவாளன்

திருவாலியில்

மூலவர்: இலஷ்மி நரசிம்மர், வயலாளி மணவாளன்,

உற்சவர்: திருவாலி நகராளன்.

தாயார் : அம்ருத கடவல்லி.

மூலவர் வலப்பக்கத்தில் மஹாலஷ்மித் தாயாரை அணைத்த நிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஹிரண்யனை கொன்ற பின்னும் கோபம் அடங்காமல் பெருமான் இருந்த போது தேவர்களும் முனிவர்களும் வேண்டிட பெரிய பிராட்டியார் வந்து பெருமாளின் வலது தொடையில் அமர, அவரை அனைத்து சாந்தமடைந்ததாக ஐதீகம். ஆலிங்கன கோலத்தில் சேவை சாதிப்பதால் இத்தலம்திருவாலி ஆயிற்று. தாயார் அனேகமாக எல்லாத் தலங்களிலும் பெருமாளின் இடது தொடையில் அமர்ந்தவாறு தான் சேவை சாதிப்பது வழக்கம் ஆனால் இத்தலத்தில் வலப்பக்கம் இருப்பது ஒரு தனி சிறப்பு. பூர்ண முனிவரின் மகளாக லஷ்மி பிறந்து வளர்ந்து வரும் போது பெருமாள் அவரை திருவாலியில் மணந்து திருநகரி செல்லும் போது தான் திருமணங்கொல்லையில் கலியன் வாளால் வெருட்டி திருமந்திர உபதேசம் பெற்றதாக ஐதீகம். இத்தலம் பில்வாரண்யம் என்று அறியப்படுகின்றது.

இத்தலம் பஞ்ச நரசிம்ம ஷேத்திரமும் ஆகும். திருமங்கையாழ்வாரின் அவதார ஸ்தலமான திருக்குறையலூரில் ஸ்ரீ உக்ர நரசிம்மர், ஆழ்வார் ஒரு வருடம் முழுவதும் 1008 வைணவர்களுக்கு ததியாராதனம் நடத்திய திருமங்கைமடத்தில் ஸ்ரீ வீர நரசிம்மர், திருநகரியில் ஆழ்வார் ஆராதித்த ஸ்ரீயோக நரசிம்மர், மற்றும் ஸ்ரீ ஹிரண்ய நரசிம்மர் என்று ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார். சிவபெருமான் அசுரர்களுக்கு பல் வேறு வரங்களை அளித்ததால் அவர்கள் செய்த பாவங்கள் சிவபெருமானை பற்றிக் கொள்கின்றன, அவை தீர சிவபெருமான் தனது ஐந்து முகங்களால் ஸ்ரீநரசிம்மரை துதிக்க பெருமாளும் ஐந்து கோலத்தில் சேவை சாதித்து சிவபெருமானின் பாவங்களை அழித்ததாக ஐதீகம்.

திருநகரி தலம் ஸ்ரீபுரி, லஷ்மிபுரம், ஆலிங்கனபுரம், விக்னேஸ்வரநல்லுர் என்றும்வழங்கப்படுகின்றது. இத்தலத்தைப்பற்றிய குறிப்புகள் கருட புராணத்தில் உள்ளன.

மூலவர் ஸ்ரீ தேவி, பூமா தேவி சமேத வேதராஜன்,

உற்சவர் கல்யாண ரங்கனாதர்.

தாயார் : அம்ருத வல்லி.

மூலவர் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கி சேவை சாதிக்கின்றார். வயலாளி மணவாளன் என்றும் அழைக்கப்படுகின்றார். திருமால் திருமகளை மூவுலகமும் தேடி காணாமல் இறுதியாக இத்தலத்தில் புஷ்கரணியில் தாமரை மலரில் தாயாரைக்கண்டு ஆனந்தம் அடைந்து ஆலிங்கனம் செய்ததால் இத்தலம் ஆலிங்கனபுரம் ஆயிற்று. திருமகள் வந்து தங்கியதால் ஸ்ரீ - மஹா லஷ்மி, புரி - நகர் என்று தமிழில் திருநகரி ஆயிற்று.


திருமங்கையாழ்வாரின் சந்நிதி இத்தலத்தில்தான் உள்ளது. வேலனைத்த மார்பும் விளங்கு திருவெட்டெழுத்தைமாலுரைக்க தாழ்த்த வலசெவியும்,தாளினைத் தண்டையும் விளங்க, குமுதவல்லி நாச்சியாருடனும், ஆழ்வார் ஆராதித்த சிந்தனைக்கினியானுடனும் கள்ளர் கோலத்தில் சேவை சாதிக்கின்றார் 60 மேற்பட்ட திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்த, மாலிடமே மந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார். திருமங்கையாழ்வாரின் வடிவழகிலீடுபட்டு மணவாளமாமுனிகள் அருளிய வடிவழகு சூர்ணிகை இவ்வாறு வர்ணிக்கின்றது


அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும்,

ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,

பரந்த விழியும், பதித்த நெற்றியும், நெறித்த புருவமும்

சுருண்ட குழலும், வடிந்த காதும் அசைந்த காது காப்பும்,

தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும்,

திரண்ட தோளும் நெளித்த முதுகும், குவிந்த இடையும்,

அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும்

தொங்கலும் தனி மாலையும், தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும்

சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும்,

தஞ்சமான தாளினையும், குந்தியிட்ட கனைக்காலும்,

குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும்,

வயலாளி மணவாளனும், வாடினேன் வாடி (என்று)

வாழ்வித்தருளிய , நீலிக்கலிகன்றி, மருவலர்தம் உடல் துணிய

வாள் வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே.


திருவாலி - திருநகரி திவ்ய தேசத்தின் மாண்புகளுக்குப்பின் திருமங்கையாழ்வாரின் வைபவம் சிறிது காண்போமா? திருமாலின் வில்லான சார்ங்கத்தின் அம்சமாக சோழ வள நாட்டில் திருமங்கையென்னும் பகுதியில் திருவாலி திருப்பதியினருகே திருக்குறையலுரில் கள்ளக்குடியில் பூர்ணிமை வியாழக்கிழமை, கிருத்திகை இவைகள் பொருந்திய நாளில் கார்த்திகை திங்களில் சோழ அரசனின் சேனை தலைவர் இல்லத்தில் அவதரித்தார். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் நீலன். குடிப்பிறப்பிற்கேற்ப்ப போர்த்தேர்ச்சி பெற்று அரசனுக்காக பல போர்களில் வென்று திருமங்கை நாட்டின் மன்னனாக பகைவர்களை வெல்லுவதில் வல்லவரானதால் பரகாலன் என்ற திருநாமத்துடன் முடி சூடப்பட்டார். சிற்றரசன் என்ற முறையில் சோழவரசனுக்கு கப்பம் செலுத்தி வந்தார்.

பூலோக மாயையில் உழன்று கொண்டிருக்கும் தன் அன்பனை திருத்திப் பணிகொள்ள விரும்பிய பெருமாள் தேவலோகத்திலிருந்து பூவுலகில் கண்ணார் கடல் போல் திருமேனிக்கரிய அண்ணனாய் எம்பெருமான் சேவை சாதிக்கும் திருவெள்ளைக்குளத்தில் நீராடவந்தப் பெண்னை மானிட உருக்கொண்டு இங்கேயே தங்க வைத்தார். குமுத மலர் பறித்து நின்ற அப்பெண்னை அவ்வழி வந்த ஒரு வைணவ மருத்துவன் கண்டு குமுதவல்லி என்னும் பெயரிட்டு வளர்த்து வந்தான். ஒற்றர்கள் மூலம் குமுதவல்லியின் அழகைப்பற்றி அறிந்த மங்கை மன்னன் வைத்தியனிடம் சென்று குமுதவல்லியை தனக்கு மணம் முடித்துத் தருமாறு வேண்டினார்.

குமுதவல்லியோ திருமணத்திற்க்கு நிபந்தனை விதித்தாள். சங்கு சக்கர இலச்சினை பொறித்தல், திருமண்காப்பு தரித்தல், தாஸ்ய நாமம் பெறுதல், திருவாராதனை செய்தல், திருமந்திரம் பெறுதல், என்னும் ஐவகை சிறப்புடைய வைணவருக்கேயன்றி வேறொருவருக்கு துணையாகேன் என்று மறுத்து விட்டாள். பரகாலனும் திருநறையூர் சென்று அவ்வூரில் கோவில் கொண்டுள்ள நம்பியிடமிருந்து திருவாழி திருச்சங்கிலச்சினை பெற்றும், திருகண்ணபுரத்தம்மானிடம் திருமந்திரோபதேசம் பெற்றும் பன்னிரு திருமண்காப்புகளணிந்து குமுதவல்லியிடம் மீண்டும் சென்று மணம் புரிய வேண்டினார்.
பன்னிரு திருமண்காப்புகளுடன் திருமங்கை ஆழ்வார்

அப்போது ஆயிரத்தெட்டு திருவைட்டணவர்களுக்கு நாடோறும் ஓராண்டு காலம் அமுது செய்வித்து அவர்கள் போனகம் செய்த சேடத்தையும், அவர்கள் திருவடிகளை விளக்கிய நீரையுமுட்கொண்டால் தான் மங்கை மன்னனை மணம் புரிய இசைவதாக குமுதவல்லி பணித்தாள். மங்கையாசையினால் ஆலி நாடனும் அதற்கிசைந்து வாக்களிக்க திருமணம் நிறைவேறியது. மங்கை மடத்தில் ததியாராதனையைதொடங்கினார் மங்கை மன்னர். இதற்காக மிகவும் பொருள் வேண்டியிருந்தமையால் அரசனுக்கு சரியாக கப்பம் கட்டமுடியாமல் போயிற்று, அரசனிடமிருந்து வந்த ஏவலாலர்களை ஆழ்வார் விரட்டியடிக்க அவரை சிறைப்பிடிக்க, அரசனின் சேனைத் தலைவன் வந்தான், "ஆடல்மா" என்ற தன்னுடைய பஞ்ச கல்யாணிக்குதிரையின் மீதேறி பொருது அவனை புறமுதுகிட்டு ஓடச்செய்தபின், அரசனே போருக்கு வந்தான். வஞ்சத்தினால் அரசன் ஆலி நாடனை அருகிலழைத்து அமைச்சனிடம் ஒப்புவித்து கப்பப் பணம் தந்தால் விடுவிப்பதா கூறிச் சென்றான். திருக்கச்சியம்பதி பேரருளானன் மங்கை மன்னன் கனவில் தோன்றி வேகவதி ஆற்றங்கரையில் பொருள் கிட்டும் என்று கூற, இவரும் அமைச்சனிடம் கூறி அவனுடன் காஞ்சி சென்று இறையருளால் வேகவதியாற்றங்கரையில் புதையுண்ட நிதி காட்டப்பட்டு நிதியையெடுத்து அரசனுக்கு கப்பமாக செலுத்தினார். அரசனும் உண்மையறிந்து கப்பப் பணத்தை திருப்பியளித்து அடியார்களின் பூசனைக்கு உதவினான்.


வெண்ணெய்த் தாழி கிருஷ்ணர் திருக்கோலத்தில் ஆழ்வார்

மேலும் பொருள் வேண்டியிருந்ததால் தன் தோழர்களான நீர் மேல் நடப்பான், நிழலிலொதுங்குவான், தாளூதுவான், தோலாவழக்கன் என்ற நால்வரின் துணையோடு வழிப்பறி செய்து அடியார்களுக்கு ததியாராதனம் செய்ய முற்பட்டார். இவரை ஆட்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டதால் எம்பெருமான் பிரசன்ன வதனத்துடன், கமல நயனங்களுடன், பவழம் போன்ற சிவந்த செவ்வாயில் குமிண் சிரிப்புடன், வலம்புரி சங்கு போல் மிளிரும் கண்டத்துடன், நிர்மலமான பீதாம்பரங்களுடன், திவ்ய மங்கள ஆபரணங்களை பூண்டு பெரிய பிராட்டியாருடன் தன் தாமரைப் பாதங்களில் வீரக்கழல்களுடன் புது மணக் கோலத்தில் நடந்து வந்தார். அப்போது "திருமணங்கொல்லை" என்னும் இடத்தில் நாட்டியம் ஆட வல்லதான தனது " ஆடல்மா " என்னும் பஞ்சகல்யாணிக் குதிரையிலே வந்த மங்கை மன்னன் அவரை வாள் கொண்டு வெருட்டி நகைகளையெல்லாம் கழற்ற சொன்னார்.

நம் கலியன்

பெருமாளும் பயந்தவர் போல் தனது நகைகள் மற்றும் தாயாரின் ந்கைகளையும் கழற்றிக் கொடுக்க அதை ஒரு மூட்டையாக கட்டுகிறார் நீலன். மணமகனின் காலில் இன்னும் மெட்டி இருப்பதைக் கண்டு அதை கழற்ற முடியாததால் பல்லால் கடித்து கழற்ற முயன்ற போது மண்மகன் நீ கலியன் என்றார். பின்னர் பரகாலன் நகை மூட்டையை தூக்க முயல அதை அவரால் தூக்க முடியவில்லை மிகவும் வெகுண்டு வாள் வீசி ஏய் என்ன மந்திரம் போட்டாய்? என்று வெருட்டஎம்பெருமானும் மந்தகாச புன் சிரிப்புடன் மந்திரம் தரத்தானே நான் வந்தேன் என்று

"ஓம் நமோ நாராயணா"

என்ற திருமந்திரத்தை, உண்மைப் பொருளை அவருக்கு உபதேசித்து அவரின் பூலோகக் கடைமையை உணர்த்தி மன்னனை திருத்தி ஆழ்வாராக்கினார். மந்திரத்தின் சக்தியாலும் எம்பெருமானின் பாதங்களில் அவர் முகம் பட்டதாலும், எம்பெருமானின் தரிசனம் பெற்றதாலும் மெய்ப்பொருளுணர்ந்த பரகாலர்

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்

பெருந்துயரிடும்பையில் பிறந்து

கூடினேன் கூடி இளையவர் தம்மோடு

அவர்தரும் கலவியே கருதி

ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்

உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து

நாடினேன் நாடிக் கண்டு கொண்டேன்

நாராயணாவென்னும் நாமம்

என்று பாசுரங்கள் பாடத் தொடங்கி வடமொழி வேதங்கள் நான்குக்கொப்பான நம்மாழ்வாரின் அருளிச் செயல்களுக்கு ஆறு அங்கங்கள் போன்று பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம், திடுநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறு திவ்விய நூல்களை அருளி திருமங்கையாழ்வார் என்ற திருநாமம் பெற்றார்.


இவற்றுள் பெரியதிருமொழியைப் பாடும் போது எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருப்பதிகளுக்கு தானே சென்று நேரில் வணங்கி திருப்பிருதி முதலாக திருக்கோட்டியூரீறாக அறுபது திருப்பதிகளை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்று நான்கு கவிகளிலும் வல்லவராக விளங்கியதால் "நாலு கவிப் பெருமாள்" என்ற பட்டம் பெற்றார். சிறிய திருமடலிலே நாராண நாமத்தையும், பெரிய திருமடலில் கண்ணன் என்ற நாமத்தையும் எதுகை பயில்கிறார் ஆழ்வார், எம்பெருமானின் திவ்ய தேசங்களையும் பட்டியலிடுகிறார். இனி அஷ்டாக்ஷரம் என்னும் திருவெட்டெழுத்தின் பெருமை " ஓம் நமோ நாராயணா" என்னும் இத்திருமந்திரத்தின் பெருமையை இவ்வாறு பெரிய திருமொழியிலே குறிப்பிடுகின்றார்

குலம்தரும் செல்வம் தந்திடும்

அடியார் படுதுயராயினவெல்லாம்

நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்

அருளொடு பெருநிலமளிக்கும்

வலந்தரும் மற்றுந்தந்திடும்

பெற்ற தாயினும் ஆயின செய்யும்

நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்

நாராயணாவென்னும் நாமம்.

இறைவனுக்கு அடிமை நிலை (சேஷத்துவம்) என்ற ஞானமாகிய குலத்தையும், தொண்டு (கைங்கர்யம்) ஆகிய செல்வம் தரும் தொண்டர்களின் துன்பங்களையெல்லாம் தரை மட்டமாக்கும், பரமபதமளிக்கும், பேரானந்தத்தில் திளைக்க வைக்கும், தன் முனைப்பு நீங்கும் வலிமை தரும் பிற நன்மைகளையும் தரும் அந்த திருமந்திரம் என்று நாம் எல்லோரும் உய்ய பாடியருளியுள்ளார் திருமங்கையாழ்வார்.


இந்த திருமந்திர உபதேச உற்சவமே பங்குனி உற்சவ பத்து நாள் பிரம்மோற்சவமாக திருநகரியிலே கொண்டாடப்படுகின்றது. பத்து நாளும் வெவ்வேறு கோலங்களில் சேவை சாதிக்கின்றார் ஆழ்வார். அவற்றுள் சௌரிராஜர் திருக்கோலத்தையும், வெண்ணைத் தாழி கிருஷ்ணர் திருக்கோலத்தையும் நீங்கள் இங்கு காண்கின்றீர்கள். இந்த உற்சவத்தில் ஐந்தாவது உற்சவ நாளன்று, வயலாளி மணவாளனுடன் திருவாலிக்கு தனித் தனி பல்லக்குகளில் செல்கிறார் ஆழ்வார். மன்னன் என்ற முறையில் இவர் முன்னிலையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது. பின் ஆழ்வாருடன் திருநகரிக்கு திரும்புகிறார் பெருமாள்.

எட்டாம் உற்சவ நாள் அதாவது பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள்

இதுவோ! திருவரசு? இதிவோ! திருமணங்கொல்லை

இதுவோ! எழிலாலி என்னுமூர்

இதுவோ தான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை

எட்டெழுத்தும் பறித்தவிடம்.

ஆடல்மாவிலே மங்கை மன்னர் முன்னழகு

என்னும் திருமணங்கொல்லையிலே காலையிலே சர்வாபரண பூஷதராக கல்யாண ரங்கனாதர் சென்று திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. இரவு ஏழு மணி அளவில் ஆலி நாடன், அருள்மாரி, அரட்டமுக்கி, அடையார்சீயம், கொங்குமலர்க் குழலியர்வேள், மங்கை வேந்தன், கொற்றவேல் பரகாலன், கலியன், ஆடல்மாவலவன், கலிகன்றி, குமுதவல்லி மணாளன் என்றெல்லாம் அழைக்கப்படும் திருமங்கையாழ்வார் தனது ஆடல்மா என்னும் தங்கக் குதிரை வாகனத்திலே ஈட்டி கையில் ஏந்தி ஆழ்வார் ஆயிரக்கணக்கான வைணவர்கள் தீவட்டி ஏந்தி வர புறப்படுகின்றார். எதிரே திவ்ய அலங்காரத்தில் உடல் முழுவதும் நகைகளுடன் எம்பெருமான் திருக்கல்யாணக் கோலத்தில் எம்பெருமான் வருகிறார்.

வேதராஜபுரம் அருகே வரும் போது நள்ளிரவு தன் தூதுவர் மூலம் செய்தியறிந்த மங்கை மன்னன் வாள் வலியால் எம்பெருமானை வெருட்ட மணமகனும் பயந்தது போல் தனது மற்றும் புது மனைவியின் நகைகளையெல்லாம் கழற்றிக் கொடுக்க அவர் அதை ஒரு மூட்டையாக கட்டி கீழே வைத்து விட்டு நிமிரும் போது மணமகனின் காலில் உள்ள மெட்டி கண்ணில் பட்டது, அதையும் கழற்றிக் கொடு என்று வெருட்ட மணமகனும் கழற்ற முடியவில்லை நீயே கழற்றிக் கொள் என்று கூற கையினால் கழற்ற முடியாமல் தனது பல்லினால் கழற்ற முயன்றார் என்வே மணமகனான பெருமான் இவரை கலியன் என்று பெயரிட்டார். பின் நகைகள் கட்டிய மூட்டையை தூக்க முயன்ற போது அவரால் அதை அசைக்கக் கூட முடியவில்லை. கோபம் கொண்ட அவர் ஏய்! என்ன மந்திரம் போட்டாய் ? என்று வாளை வீசி வெருட்ட எம்பெருமானும் குனிந்து அவர் காதில் நாம் எல்லாம் உய்ய அஷ்டாக்ஷர மந்திரத்தை அவருக்கு அருள அதை மடியொடுக்கி, மனமடக்கி வாய் புதைத்து ஏற்றார். மன்னராக இருந்து ஆழ்வாராக மாறினார். இந்த மந்திர உபதேச நிகழ்ச்சி ஆயிரம் தீவட்டி வெளிச்சத்தில் நடைபெறுவது கண்ணுக்கு விருந்தாக அமைகின்றது. அதை சொற்களால் வர்ணிக்க அந்த ஆயிரம் நாவுகள் கொண்ட அனந்தனுக்கே முடியும். திருமந்திர உபதேசம் பெற்றவுடன் வைணவர்கள் அனைவரும் வாடினேன் வாடி வருந்தினேன் என்ற பாசுரம் தொடங்கி ஆழ்வாரின் அனைத்து பாசுரங்களையும் பாடிக்கொண்டே வருகின்றனர், திருநகரி வந்தடையும் போது அதிகாலையாகிவிடும். இது வேடுபறி உற்சவம். மற்ற திருத்தலங்களில் பெருமாள் குதிரை வாகனத்தில் சேவை சாதிக்கும் போது வேடுபறி உற்சவம் நடைபெறும் இங்கோ ஆழ்வார் குதிரை வாகனத்திலே வருகின்றார்.

ஆடல்மாவிலே மங்கை மன்னர் பின்னழகு

பங்குனி உத்திரத்தன்று ( 9- நாள் உற்சவத்தன்று ) ஆழ்வாரும் வயலாளி மணவாளனும் இரண்டு தனித்தனித் தேர்களில் வீதி புறப்பாடு கண்டருளுகின்றனர். பிறகு தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் சிறப்பாக முடிவடைகின்றது.


என்ன கிளம்பிவிட்டீர்களா? திருநகரிக்கு எம்பெருமானும் பெரிய பிராட்டியும் நடந்து வந்த புண்ணிய பூமியில் ஆயிரம் தீவட்டி ஒளியில் ஆழ்வார் திருமந்திரோபதேசம் பெறும் அழகைக் காண? சென்று வந்து எம்பெருமானின் அருளுக்கு பாத்திரமடைவீர்களாக.

* * * * * * *