Wednesday, April 29, 2009

ஸ்ரீ பெரும்புதூர்

Visit BlogAdda.com to discover Indian blogs

விசிஷ்டாத்வைதத்தை இப்பூவுலகில் பரப்பிய மகான் ஸ்ரீ இராமானுஜர் .


" கலியும்கெடும் கண்டு கொள்மின் " என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தை மெய்பிக்க வந்தவர் இவர். வைணவர்கள் இவரை மங்களாசாசனம் செய்யும் போது " தென்னரங்கர்செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே" என்று வாழ்த்துகின்றனர், இராமனுஜர் திருவரங்கம் சென்ற போது பெரிய பெருமாள் தமது திருப்பொலிந்த திருவடியை இவரது சென்னி மேல் பொறித்து " உபய விபூதிசெல்வத்தையும், உமக்கும் உம் உடையாருக்கும் தந்தோம் இனி நம்முடையதிருக்கோவிலை திருப்பணி செய்யக்கடவீர்" என்றதால் இவர் உடையவர் எனப்படுகின்றார்.

திருக்கோஷ்ட்டியூர் நம்பிகளிடம் அஷ்டாக்ஷ்ர உபதேசம் பெற்று அதை அனைவரூம் உய்ய வேண்டி தான் நரகம் சென்றாலும் சரி என்று அனைவருக்கும் அந்த அஷ்டாக்ஷர மந்திரத்தை திருக்கோஷ்டியூர் கோவில் மதிலின் மேல் ஏறி அனைவருக்கும் அருளியதால் எம்பெருமானார் (எல்லாருக்கும் தலைவர்) எனப்படுகிறார்.

துறவிகளின் அரசர் என்பதால் யதிராஜர் .

பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதியதால் பாஷ்யக்காரர்.

ஆண்டாள் நாச்சியாரின் ஆசைப்படி திருமாலிருஞ்சோலை பெருமாளுக்கு 100 தடா வெண்னையும்,அக்கார வடிசலும் சமர்பித்ததால், ஆண்டாள் இவரை அண்ணா என்று அழைத்ததார் எனவே இவர் கோவில் அண்ணன்.

திருப்பாவையை எப்போதும் சிந்தித்த்ருந்ததால் திருப்பாவை ஜீயர்

இத்தகைய பெருமைகளையுடைய ஸ்ரீ இராமனுஜர் அவதரித்த தலம் தான் தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பெரும்புதூர் ஆகும்.


"இதுவோ பெரும்புதூர்? இங்கே பிறந்தோ

எதிராஜர் எம் இடரைத் தீர்த்தார்? -இதுவோதான்

தேங்கும் பொருநல் திருநகரிக் கொப்பான

ஒங்கு புகழுடைய ஊர்"

என்று ஆசாரியர்கள் இத்தலத்தின் பெருமையை பற்றி கூறியுள்ளனர்.

இந்த பூவுலகில் தான் அவதரித்த நோக்கம் நிறைவேறிய பின்னர் ஸ்ரீ இராமானுஜர் எம்பெருமானுடைய திருவடிகளிலே சரணடைந்திருக்கலாம். ஆனால் அவர் செய்யாமல், இந்த கலியுகத்திலே நாம் எல்லோரும் உய்யும் பொருட்டு ஜீவ விக்கிரமாக, தான் உகந்த திருமேனியாய் கோவில் கொண்ட திருத்தலமும் ஸ்ரீ பெரும்புதூர் தான். இத்தலத்திலே பெருமாள் யதிராஜ நாத வல்லி சமேத ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாளாக சேவை சாதிக்கின்றார். இத்தலமே பரம பதமாகும் பெருமை பெற்றது. அனந்தாழ்வாரின் அவதாரமான இளைய பெருமாள் எழுந்தருளியுள்ள இத்தலம் காள சர்ப்ப தோஷ நிவாரண தலமுமாகும். இந்த திருத்தலத்தின் பெருமைகளை சிறிது பார்ப்போமா?

ஒரு சமயம் சிவபெருமான் திருக்கயிலாயத்தில் ஆனந்த தாண்டவமாடிக் கொண்டிருக்கும் போது அவரது ஆடை விலகியது அதைக்கண்ட அவரது பூத கணங்கள் நகைக்க அதனால் கோபமடைந்த சிவபெருமான் அவர்களை பூலோகத்தில் வந்து பிறக்க சாபம் கொடுத்தார். சாப விமோசனம் பெற அவர்கள் திருமாலை நாட அவரும், திருவேங்கடகிரிக்கும், சத்தியகிரிக்கும் இடையே உள்ள ஆரண்யத்தில் சென்று தவம் செய்யுங்கள் என்று பணிக்க அவர்களும் இத்தலம் வந்து கடுமையான தவம் செய்தனர். அவர்களது தவத்தினால் மகிழ்ந்த பெருமாள் அவர்களுக்கு ஆதி கேசவப் பெருமாளாக பிரத்யக்ஷ்யமாகி சாப விமோசனம் அளித்தார். அனந்தாழ்வரால் ஏற்படுத்தப்பட்ட அனந்த சரஸ் திருக்குளத்தில் நீராடி பூத கணங்களும் சாப விமோசனம் பெற்று மீண்டும் சிவபெருமானுக்கு சேவை செய்ய கயிலை சென்றனர் .பூத கணங்கள் அமைத்த பூத மண்டபம், பூத ஸ்தம்பங்களுடன் பெருமாள் சன்னதிக்கு முன் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஸ்தம்பமும் நான்கு குதிரை வீரர்களுடன் கம்பீரமாக, பிரும்மாண்டமானதாக் அமைந்துள்ளன. எனவே இத்தலம் பூதபுரி என்றும் வழங்கப்படுகின்றது. மேலும் ஆதித்ய மஹாராஜாவுக்கும் பெருமாள் இத்தலத்திலே பிரத்யஷமாகி சேவை சாதித்தார்.

இளையாழ்வாரான ஸ்ரீ இராமானுஜரும் இத்தலத்திலேதான் திரு அவதாரம் செய்தார். திருவல்லிக்கேணியிலே ஆஸுரி கேசவஸோமயாஜி, அவரது மனைவி காந்திமதி அம்மையுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த போது பெருமாள் நானே உங்களுக்கு மகனாக வந்து பிறப்பேன் என்று கொடுத்த வாக்கின்படி இராமானுஜராக 1017ம் ஆண்டு சித்திரைத் திங்கள் வளர் பிறை பஞ்சமி வியாழக் கிழமை திருவாதிரை நாளில் திருஅவதாரம் செய்தார்.

இராமானுஜரின் அவதார ஸ்தலம்


இத்திருத்தலத்திலேயே இவர்

பற்பமெனத் திகழ்பைங்கழலும் தண்பல்லவமே விரலும்

பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருவழகும்

முப்புரி நூலொடு முன்கையிலேந்திய முக்கோல் தன்னழகும்

முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்

கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்

காரிசுதன் கழல் சூடிய முடியும் கனநற்சிகைமுடியும்

கூடிய வடிவழகுடன் தானுகந்த திருமேனியராய் தெற்கு நோக்கி தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். மூலவருக்கு இளையாழ்வர் என்று திருநாமம்.


அநந்த: ப்ரதமம் ரூபம்

த்ரேதயாம் லக்ஷ்மணஸ்த்த

த்வாபரே ப்லபத்ரச்ச

கலௌ கச்சித் பவிஷ்யதி

என்ற படி திரேதா யுகத்தில் இராமாவரத்தில் இராமருக்கு இடை விடாது தொண்டு செய்த லக்ஷ்மணராகவும், துவாபர யுகத்தில் கிருஷ்ணாவதாரத்தின் போது கிருஷ்ணருக்கு மூத்தவரான பலராமராகவும் அவதாரம் செய்த ஆதி சேஷன் கலியுகத்தில் நாம் அனைவரும் உய்ய இராமானுஜராக அவதரித்தார். அவரே( இராம + அனுஜர் = இராமருக்கு இளையவர் ) என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் சேவை சாதிக்கின்றார்.

உற்சவரின் திருமேனியை இராமானுஜரின் காலத்திலேயே அவரது žடர்களான முதலியாண்டானும், கந்தாடை ஆண்டானும் பிரதிஷ்டை செய்தனர், அதனால் எம்பெருமானரின் ச்ன்னதியில் உள்ள சடாரி "திருமுதலியாண்டன்" என்று அழைக்கப்படுகின்றது. தன்னுடைய 120வது வயதில் எப்படி பாஷ்யக்காரர் இருந்தாரோ அதே போலே வடிவமைக்கப்பட்ட திருமேனி, இராமானுஜரே இந்த திருமேனியை தழுவி ஆசிர்வதித்ததால் இது "தானுகந்த திருமேனி" என்று அழைக்கபடுகின்றது ஒரு தைப்பூச நன்னாளில் வழிபாட்டுக்காக இந்த திருமேனி இத்திருகோவிலிலே அமைக்கப்பட்டது.

இனி இராமனுஜரின் மற்ற திருமேனிகள். கிருமி சோழனின் கோபத்திலிருந்து தப்பிக்க இராமானுஜர் சென்று தங்கியிருந்த மேல் கோட்டை திருநாராயணபுரத்தில் அவரது žடர்களால் அமைக்கபட்ட திருமேனி "தமருகந்த திருமேனி" யாகும். இராமானுஜர் திருநாட்டுக்கு ஏகிய திருவரஙகத்தில் , அவரது விமலசரம விக்கிரகமான பூதவுடலை அரங்கத்துப் பெரியோர்களும் அவர் žடர்களும் அரங்கன் கோவில் சுற்றிலேயே திருப்பள்ளிப்படுத்தி அவ்விடத்து திருமண்ணால் உருவச்சிலையமைத்து வழிப்படும் திருமேனி "தானான திருமேனி" யாகும்.

அனந்தனின் அம்சம் இவர் என்பதால் அனந்த சரஸ் புஷ்கரணியில் நீராடி இராமானுஜரை வழிபட்டால், ராகு, கேது தோஷங்களும், காள சர்ப்ப தோஷமும் விலகுகின்றது என்பது ஐதீகம். இராமானுஜரின் திருஅவதார நட்சத்திரமான திருவாதிரையன்று மதியம் ஒரு மணிக்கு பால் அபிஷேகம் நடைபெறுகின்றது, அந்த பால் பிரசாதம் சகல தோல் வியாதிகளையும் நீக்குகின்றது என்பது கண்கூடு. ஈர ஆடை தீர்த்தம் தீராத நோய் தீர்க்கும், கிரக பீடைகள் ஒழியும், அனைத்து மங்களங்களும் உண்டாகும்.

இக்கோவிலை நிர்மாணித்தவர் அம்பரீஷ மஹாராஜாவின் பேரன் ஹரீதரன் என்பர். இவன் ஒரு முறை சாபம் பெற நேரிட்டது. பெரும்புதூரில் உள்ள அனந்த சரஸ் திருக்குளத்தில் மூழ்கி எழுந்து சாபம் நீங்கப்பெற்றதால் அவன் இக்கோவிலை கட்டினான்.

ஸ்ரீபெரும்புதூர் இராஜகோபுரம்


பரமபதமாகும் இத்தலத்தின் கோவிலை சிறிது வலம் வரலாமா?. ஐந்து நிலை ராஜ கோபுரத்தில் நுழைந்தவுடன் பெரிய பலி பீடத்தையும், துவஜஸ்தம்பத்தையும் கருடன் சன்னதி விமானத்தையும் காணலாம். துவஜஸ்தம்பத்தின் அருகே நின்று பெருமாளை நினைத்து வணங்கிவிட்டு வலம் சென்று யாழி சிற்பங்கள் நிறந்த கவின் பெறும் படிகளில் ஏறி வடக்கு நோக்கி திரும்பினால் இளையாழ்வாரின் சன்னதி, சிற்பங்கள் நிறைந்த முன் மண்டபத்தில் நின்று அந்த அற்புத தானுகந்த திருமேனியை தரிசித்தால் நம் உடலும் உள்ளமும் சிலிர்க்கின்றது. என்னே ஒரு ஆகர்ஷணம் எம்பெருமானாரின் திருமேனியிலே. மாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை கோடைக்க்காலம் என்பதால் புஷ்ப ஆடை, சால்வை மலர்க்கிரீடத்தில் அருள் பாலிக்கின்றார் எம்பெருமானார். சித்திரையில் சந்தனக் காப்பு கண்டருளுகிறார். ஐப்பசி முதல் தை வரை குளிகாலம் என்பதால் வெந்நீர் திருமஞ்சனம் கண்டருளி மாலை நான்கு மணிக்கு மேல் கோட்டு கம்பளித் தொப்பியில் சேவை சாதிக்கின்றார். துவார பாலகர்களாக கூரத்தாழ்வானும், முதலியாண்டானுமே விளங்குகின்றனர்.

யாளித்தூண்களுடன் கூடிய நுழைவு வாயில்


யதிராஜரை தரிசித்து விட்டு வெளியே வந்தால் கிழக்கு நோக்கிய முக மண்டலத்துடன், ஸ்ரீ தேவி, பூதேவித் தாயார்களுடன் புவியாளும் பூமானை, பூமகள் காந்தனை, ஆயர் பாடிக் கண்ணனை, அனந்தன் மேல் துயில் கொண்ட கரு முகிலை, உலகளந்த உத்தமனை, பண்வாய் இடைச்சியர்க்கு வாய் தனில் புவியெல்லாம் காட்டருளிய தேவ தேவனை, நின்ற கோலத்தில் மேற்கரங்களில் சங்கும் சக்கரமும் தாங்கி, வலது கீழ் கரம் அபய ஹஸ்தமாகவும், இடது கரம் தொடையில் தாங்கும் தாங்கும் கோலத்தில் புண்டரீக வல்லி வாசம் செய்யும் திருமார்புடன் ஆதிகேசவப் பெருமாளாக தரிசனம் செய்யலாம். இடது கரம் தொடையில் வைத்திருப்பது இவரை தரிசனம் செய்பவர்களுக்கு தொடையளவுதான் சம்சார சாகரம் என்பது ஐதீகம்.மூலவரின் திருமார்பில் ஸ்ரீவத்ஸமும், ஸ்ரீ தேவியும், பூதேவியும் இலங்குகின்றனர். மற்றும் உற்சவர் கேசவ நந்தவர்த்தனரையும், நவநீத கிருஷ்ணரையும், செல்லப்பிள்ளையும் தரிசனம் செய்யலாம்.

எம்பெருமானின் திவ்ய தரிசனம் கண்டு வெளிவரும் போது ஆழ்வார்கள், ஆசார்யர்களின் திருமேனிகளையும் வழிபட்டு கர்ப்பகிரகத்தை வலம் வந்தால் எம்பெருமனாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அற்புதமான தஞ்சாவூர் ஓவியங்களை உள் பிரகாரமெங்கும் கண்டு மகிழலாம். பின் ராமானுஜரின் சன்னதியையும் வலம் வந்து கருடனை வணங்கி வெளியே வந்தால் இரானுஜர் சேவை சாதிக்க அமைக்கப்பட்ட தங்க குறட்டைக் காணலாம்.

அடுத்து யதிராஜநாதவல்லி தாயாரின் சன்னதிக்கு செகின்றோம். பெரிய பிராட்டி நான் உங்களைக் காப்பாற்றுகின்றேன் என்று மந்தகாசப் புன்னகையுடன் சேவை சாதிக்கின்றாள். தாயாரின் திருநாமம் இராமனூசரின் நாமத்துடன் விளங்குவது ஒரு சிறப்பு. தாயரை வணங்கிவிட்டு மேலும் வலம் வந்தால் வெளிப் பிரகாரத்தின் சுவர்களில் வரையப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களின் பெருமாள்களின் திவ்ய கோலங்கள் நம்மை மகிழ்விக்கின்றன. தாயாரின் சன்னிதியின் அருகிலேயே சக்கரத்தாழ்வாரின் சன்னதி. மேலும் ஆண்டாள் நாச்சியாருக்கும், இராமருக்கும் தனி சன்னதி உள்ளது.

இராமனுஜரின் பொன் விமானம்


ஆண்டாளை தரிசித்து தூண்கள் நிறைந்த வெளிப்பிரகாரத்தில் நின்று மேலே நோக்கினால் உடையவரின் தங்க கவசம் போர்த்தப்பட்ட விமானத்தை காணலாம், சூரிய ஒளியில் விமானம் மின்னும் அழகே ஒரு தனி அழகு. பகவானை விட பாகவனே உயர்ந்தவன் என்று சொல்லாமல் சொல்லுகின்றது தங்க விமானம் .

ஆலயத்தில் உள்ள சில ஓவியங்கள்


பிரகாரத்தின் கோடியில் இராமானுஜரது வாழ்க்கை வரலாற்றிலிருந்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன அவற்றை கண்டு களித்து திரும்பினால் நமக்கு வலப்பக்கத்திலே குதிரைக்கால் மண்டபத்தையும் கண்ணுறலாம். பிரம்மோற்சவ காலங்களில் பெருமாள் இந்த மண்டபத்தில் தான் அலங்கார சேவை தருகின்றார், எதிரே கண்ணாடி சேவை தர பெரிய கண்ணாடி, அருகே மடப்பள்ளி .


கோவிலை விட்டு வெளியே வந்தால் எதிரே இராமானுஜரின் அவதார திருத்தலத்தை காணலாம். அருகிலேயும் திருக்கோவிலைச் சுற்றியும் கூரத்ததாழ்வான், மணவாள மாமுனிகள், பிள்ளை லோகாச்சாரியர், மண்ணளந்த பெருமாள், மற்றும் விஜய ஆஞ்சனேயர் ஆகிய தனி கோவில்கள் உள்ளன. அனந்த சரஸ் திருக்குளம், நீராழி மண்டபத்துடன் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. இக்கோவிலே பூலோக வைகுண்டம் என்பதால் பரமபத வாசல் கிடையாது.

இனி இத்திருதலத்தில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றி பார்போமா? சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்தில் இராமானுஜரின் அவதாரத்திருவிழா ஐந்து நாட்கள், தேரோட்டத்துடனும் நடைபெறுகின்றது. சித்திரை திருவாதிரையன்று எம்பெருமானார்கோவிலை விட்டு வெளியே அவதார திருத்தலத்திற்கு எழுந்தருளி பால் அபிஷேகம் கண்டு தொட்டில் சேவை தந்துருளுகின்றார். ஆதிகேசவப் பெருமாளின் 10 நாள் பிரம்மோற்சவமும், நான்கு நாட்கள் தெப்போற்சவமும் இம்மாதத்திலேயே நடை பெறுகின்றன.

வைகாசி மாதத்தில் வசந்தோற்சவமும், திருவாதிரையன்று சதகலச ஜேஷ்டாபிஷேகமும் நடைபெறுகின்றது.

ஆனி மாதம் கோடை உற்சவமும், ஆடியில் பூரத்தையொட்டி கஜேந்திர மோக்ஷ உற்சவமும் நடைபெறுகின்றன.

ஆவணியில் பவித்ரோத்ஸவமும் ஸ்ரீ ஜெயந்தியும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

புரட்டாசியில் நவராத்திரி உற்சவம், ஐப்பசியில் மணவாள மாமுனிகள், பிள்ளை லோகாச்சாரியார் திருநட்சத்திரங்க்ளும், கார்த்திகையில் தீபமும் , மார்கழியில் அத்யயன உற்சவுமும், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

தை மாதம் உடையவர் பிரதிஷ்டை குரு புஷ்ய விழா 3 நாட்களும், மாசியில் மாசி மகம் ஐந்து நாட்களும் கொண்டாடப்படுகின்றது.

பங்குனியில் ஸ்ரீ ராம நவமி உற்சவமும், பங்குனி உத்திரத் திருவிழாவும், ஸ்ரீசம்பத் குமர உற்சவமும் நடைபெரூகின்றது. இவ்வாறு வருடம் முழுவதுமே திருவிழாக்களாக திகழ்கின்றது இத்தலத்தில்.

ஸ்ரீபெரும்புதூரில் யார் இறந்தாலும் மேளம் அடித்துக்கொண்டு வந்து சுவாமிக்கு சூட்டப்பட்ட மாலை, ஆளவந்தார் கஷாயம், பரிவட்டம், பெற்றுச்சென்று இறந்தவர் உடலில் சாற்றுவர்.

இத்தகைய பழம் பெருமையும், கவின் மிகு சிற்பங்களும், எழில் மிகுந்த ஓவியங்களும் நிறைந்த திருக்கோவிலுக்கு சென்று தங்களுடைய குறைகளும், தோஷங்களும் நீங்க அனந்த சரஸ் திருக்குளத்தில் நீராடி


தவந்தரும் செல்வமுகந்துதரும் சலியாப்பிறவிப்

பவந்தரும் தீவினைப் பாற்றித்தரும் பரந்தாமனென்னும்

திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னை சார்ந்தச்வருக்கு

என்று திருவரங்கத்தமுதனார் பாடிய எம்பெருமானரை வழிபட்டு அவரது அருளையும், ஆதி கேசவப் பெருமாளின் அருளையும் பெற்று சர்ம நோய்கள் தீர்ந்தோர்; திருமணம் நிச்சயமான கன்னியர்; சர்ப்ப தோஷம் நீங்கியோர்; வாடிய வியாபாரம் மீண்டும் தழைத்தோர் ஆயிரம் ஆயிரம்.

காரேர் கருணை இரமானுஜர் அருள் பாலிக்கும் தலமான ஸ்ரீ பெரும்புதூர் இப்போதே கிளம்பிவிட்டிர்களா?

ஸ்ரீ இராமானுஜர்

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீபெரும்புதூர் தானுந்த திருமேனி

தான் நரகத்தை அடைந்தாலும் சரி இந்த கலியுகத்திலே அனைவரும் உய்ய வேண்டும் என்ற பெரும் அவாவினால் தனது குருவினுடைய ஆணையையும் மீறி, எல்லா நலங்களையும் வழங்க வல்ல "ஓம் நமோ நாராயணாய" என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை திருக்கோஷ்ட்டியூர் கோவில் மதில் மேல் ஏறி நின்று பஞ்சமருக்கும் உபதேசித்த பேரருளாளர் தான் ஸ்ரீ இராமானுஜர். வைணவ சம்பிரதாயத்தின் விசிஷ்டாத்வைதக் கொளகையை பாரெங்கும் பரப்பியவர் இவர்.

திருக்கோவில்களின் நிர்வாகத்தை சீர்படுத்தி பகவத் கைங்கரியம் சிறப்பாக நடைபெற வழிகோலியவர் இவர். நமக்காகவே அவதரித்து, நமக்காகவே வாழ்ந்து, ஏழை, எளியவர், எந்த ஜாதி, எந்த குலத்தவர் என்று பாராது அனைவரையும் ஒன்றாகவே தனது வாழ் நாளில் பாவித்து, பின்னரும் தனது அளவற்ற கருணையினால் தனது அவதார முடிவில் பரம் பொருளான அந்த திருவரங்கத்து இன்னமுதனும் அழகிய மணவாளனுமான, வைகுண்டநாதனின் திருத்தாள்களில் சேர்ந்து முக்தி பெருநிலை அடையாமல், நம்முடனே இருந்து நம் துன்பங்களை தன் தவ வலிமையினால் போக்கி அருள் புரிவதற்காக ஸ்ரீ பெரும்புதூரில் ஜீவ விக்ரகமாக எழுந்தருளி , தம்மை அடைந்தவர் துயரினை உடனுக்குடன் போக்கி திருவருள் புரிந்து வரும் அவதார புருஷராவார் இராமானுஜர்.இளையபெருமாள், எம்பெருமானார், யதிராஜர், உடையவர், பாஷ்யக்காரர், கோவில் அண்ணன், திருப்பாவை ஜீயர் என்றும் பல்வேறு திருநாமங்களால் அறியப்படும் ஸ்ரீ இராமானுஜரின் வரலாற்றை சிறிது பார்ப்போமா?சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் - என்றும்

புணையாம் அணி விளக்காம் பூம்பட்டாம்

புல்கும்அணையாம் திருமாற்கு அரவு.


எல்லா யுகங்களிலும் பெருமாள் சேவைக்காக
அவதரித்தவர் இராமானுஜர்


என்றாற் போல பெருமாளுக்கு பாற்கடலிலே படுக்கையாகவும், நடந்தால் குடையாகவும், இருந்தால் ஆசனமாகவும், நின்றால் பாதுகையாகவும், விளங்கும் அனந்தாழ்வார், த்ரேதா யுகத்திலே இராமாவதாரத்தின் போது இலஷ்மணனாக அவதரித்து இராமருக்கு சேவை செய்தார், துவாபர யுகத்தி’லே அவரே பலராமராக அவதரித்தார். இந்த கலியுகத்திலே நாம் எல்லோரும் உய்யவும் விசிஷ்டாத்வைதம் உலமெங்கும் பரவவும், எம்பெருமானின் கருணையினால், ஆதித்ய மஹாராஜாவுக்கும், பூத கணங்களுக்கும் பெருமாள் பிரதக்ஷ்யமான பூதபுரி என்னும் ஸ்ரீபெரும்புதூரிலே இராமனுஜராக அவதரித்தார். திருவல்லிக்கேணியிலே ஆஸ”ரி கேசவஸோமயாஜி, அவரது மனைவி காந்திமதி அம்மையுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த போது பெருமாள் நானே உங்களுக்கு மகனாக வந்து பிறப்பேன் என்று கொடுத்த வாக்கின்படி இராமானுஜராக 1017ம் ஆண்டு சித்திரைத் திங்கள் வளர் பிறை பஞ்சமி வியாழக்கிழமை திருவாதிரை நாளில் திருஅவதாரம் செய்தார் .

ஆளவந்தாரின் žடரான திருமலை நம்பியின் மருகரான இவர் அந்தணர் குலத்திற்கேற்ற சடங்குகள் முடிக்கப்பெற்று மறைகள் சாத்திரங்கள் கற்றுத் தேர்ந்து பதினாறாம் பிராயத்தில் திருமணம் முடித்து காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள திருப்புட்குழியில் யாதவப்பிரகாசன் என்னும் அத்வைத பண்டிதரிடம் வேதாந்தம் கற்க சென்றார். ஒரு நாள் "கப்யாசம் புண்டரீகம்" என்ற எம்பெருமானின் கண்களை வர்ணிக்கின்ற சமஸ்கிருத பதத்திற்கு கபி+ஆஸம் என்று பிரித்து குரங்கின் ஆசன வாய் என்று குரு விளக்கம் கொடுத்த போது அவரை திருத்தி "கதிரவனால் புன்னகைக்கும் கவின் மிகுந்த செங்கமலம் போன்றது கரிய மால் விழி அழகு" என்ற சரியானப் பொருளைக்கூறி குருவின் கோபத்திற்கு ஆளானார். வடநாட்டு யாத்திரை (காசி ஷேத்திரம்) செல்லும் போது இவரை கொல்லத்திட்டமிட்ட குரு இவரை ஆரண்யத்திலே தனியே விட்டு அகல, பெரிய பிராட்டியாரும், பேரருளாளருமே வேட்டுவ தம்பதிகளாக வந்து இவரை பத்திரமாக காஞ்சி நகர் கொண்டு வந்து புண்ணிய கோடி விமானத்தைக் காட்டி மறைந்தனர். பின் திருமலை நம்பிகளின் ஆலோசனைப்படி பேரருளாளனுக்கு சாலை கிணற்றிலிருந்து திருமஞ்சனத்திற்கு நீர் சுமந்து வரும் சேவையில் ஈடுபட்டார்.
வடநாட்டு யாத்திரையிலிருந்து திரும்பிய யாதவப்பிரகாசரிடமே பின்னும் சீடரானர். சிறிது காலம் சென்ற பின் மேலும் தவறான பொருள் சொன்ன யாதவப்பிரகாசரை விட்டு விலகி திருக்கச்சி நம்பிகளிடம் அறிவுரை பெற்று வரலானார். இராமனுஜரின் புலமையைபற்றி அறிந்த ஆளவந்தார் அவரை அழைத்து வர பெரிய நம்பியை காஞ்சி அனுப்பினார். இராமானுஜர் திருவரங்கம் அடைந்த போது ஆளவந்தார் திருநாட்டுக்கு ஏகியிருந்தார். அவரது வலகரத்தில் மூன்று விரல்கள் மடங்கியிருந்தன, அதைக்கண்ட இளையாழ்வார், திருவரங்கத்து பெரியோர்களிடம் என்ன காரணம் என்று வினவ அவர்களும் ஆளவந்தாரின் வியாஸ, பராசர முனிவர்களிடம் கொண்ட நன்றியறிவும், நம்மாழ்வரிடம் பற்றும், பிரம்ம சூத்திரமென்ற நூலுக்கு விசிஷ்டாத்துவைததிற்கிணங்க பாஷ்யம் எழுத வேண்டும் என்ற மூன்று மனக்குறையுமே இவ்வாறு விளங்குகின்றன என்று கூற இக்குறைகளை இறையருளால் தீர்ப்பதாக எம்பெருமானார் உறுதி கூற மடங்கியிருந்த மூன்று விரலகளும் நீண்டன. ஆளவந்தாரை உயிருடன் காண முடியாத வருத்ததுடன் இவர் காஞ்சி திரும்பினார்.

காஞ்சி திரும்பி மறுபடியும் பேரருளாளனுக்கு திருமஞ்சனத்திற்கு நீர் கைங்கரியம் செய்து வரும் நாளில் திருக்கச்சி நம்பிகளை ஆச்சாரியராகப் பெற எண்ணினார். தான் அந்தணர் அல்லாததால் அவர் அதற்கு இசையவில்லை. ஒருநாள் நம்பிகளை தன்னுடைய வீட்டிற்கு அழைக்க, இசைந்த நம்பிகள், வேறு வழியாக அவர் இல்லம் சென்று தனக்கு பேரருளாளன் திருவாலவட்டப்பணிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் எனவே உடனடியாக உணவளிக்க வேண்டி இராமானுஜர் வருவதற்குள் உணவை முடித்து சென்றார். இராமானுஜர் வீடு திரும்புகையில் தம் மனைவி தஞ்சமாம்பாள் நம்பியுண்ட தளிகையை கோலால் தள்ளி, உணவருந்திய இடத்தை பசுஞ்சாணம் கொண்டு தூய்மையாக்கி நீராடி நிற்பதைக் கண்டு தனது எண்ணம் நிறைவேறாமல் செய்துவிட்ட நம்பிகளின் திறமையை வியந்த இராமானுஜர் தனது மனைவியின் செயலுக்காக வருந்தினார்.

இராமானுஜரும் பார்த்தசாரதிப்பெருமாளும்

திருக்கச்சி நம்பிகள் தனக்கு ஆச்சாரியாராக இசையாததால், அவரிடம் சில கேள்விகள் கொடுத்து அவற்றுக்கு பேரருளாளனிடமே பதில்கள் பெற்றுத் தருமாறு வேண்டி, அவர் மூலமாக பேரருளாளன் பணித்ததாக ஆறு வார்த்தைகள் பெற்றார் அவையாவன,

1. பரத்துவம் நாமே - நாமே சகலத்துக்கும் உயர்ந்த சத்தியமான மூலப்பொருள்.


2.. பேதமே தர்சனம். - ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் அவசியமான பேதம் உண்டு என்பதே உண்மையான தத்துவம்.

3. உபாயமும் பிரபத்தியே. - என்னை அடைய ஒரே நேரான வழி நம்மிடம் அடைக்கலம்.

4. அந்திஸ்மிருதியம் வேண்டா - இப்படி வாழ்பவன் உடல் உயிரை விட்டு பிரியும் காலத்தில் நம்மை துதி செய்ய அவசியம் இல்லை.


5. சரீர அவஸானத்திலே மோக்ஷம் - உடலிலிருந்து உயிர் பிரிந்ததும் அவன் என்னிடம் வந்து சேர்வான்.

6.பெரிய நம்பி திருவடிகளிலே ஆஸ்ரயி - பெரிய நம்பிகளை ஆச்சாரியராகக் கொள்

என்பவை இவ்வார்த்தைகள். பின் திருவரஙகம் பெரிய கோவிலில் உள்ள ஆளவந்தாரின் சீடர்களின் விருப்பத்தற்கிணங்க மதத்தலைவராக திருவரங்கம் செல்லும் வழியில் மதுராந்தகத்தில் ஏரி காத்த இராமர் திருக்கோவிலில் பெரிய நம்பியைக் சந்தித்தார். அந்த திருக்கோவிலிலேயே மகிழ மரத்தடியில் பெரிய நம்பி இராமானுஜருக்கு திருவிலச்சினை செய்து தன்னைவிட ஆளவந்தாரை ஆச்சாரியனாக கொண்டிருக்க வேண்டினார். பின் பெரிய நம்பியிடம் காஞ்சியில் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும், ஆளவந்தாரின் கருத்துகளையும் கேட்டறிந்து வந்தார். தனது மனைவியின் குணத்தினால் பெரிதும் துன்பமுற்ற இராமானுஜர், இல்லற வாழ்க்கையை விடுத்து திரிதண்ட சந்நியாசியாக தீட்சை பெற்றார். கூரத்தாழ்வானும், முதலியாண்டானும் இவரது பிரதம சீடர்களானார்கள். துறவிகளில் சிறந்தவராக விளங்கியதால் இவர் யதிராஜர் என்னும் திருநாமம் பெற்றார்.

சந்திரப்பிரபையில் ஸ்ரீஇராமானுஜர்

பின் திருவரங்கம் வந்து மதத்தலைவராக இராமானுஜர் பெரிய பெருமாளை வணங்கும் போது, "போங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் ஆள்கின்ற திருவரங்கன் தமது திருப்பொலிந்த திருவடியை இவரது சென்னி மேல் பொறித்து உபய விபூதி செல்வத்தையும், உமக்கும் உம் உடையாருக்கும் தந்தோம் இனி நம்முடைய திருக்கோவிலை திருப்பணி செய்யக்கடவீர்" (இராமானுஜா! கடல் சுழ்ந்த மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும், நாமே பாதுகாத்து வந்தோம். அந்த சுமையை, உபய விபூதி செல்வத்தையும் உமக்கும் உம்மை சேர்ந்தவர்களையும் தந்தோம் அதை நீ வரித்து நம்முடைய கைங்கரியத்தை நடத்தும் என்று அளித்தார். )என்றதால் இவர் உடையவர் எனப் பெயர் ஏற்படச் செய்தான். இராமானுஜரும் அரங்கன் திருக்கோவிலின் நடைமுறைகளை சீர்ப்படுத்தினார். இவர் வகுத்த நெறிகள் தான் இன்றும் திருவரங்கத்தில் நடைமுறையில் உள்ளது.திருவரங்கத்திலே வசித்து வரும் போது பெரிய நம்பிகளின் அறிவுரைப்படி ஆளவந்தாரின் சீடரான திருக்கோஷ்ட்டியூர் நம்பிகளிடம் பதினெட்டு முறை விடாது சென்று அவரை வேண்டி கடைசியாக கண்ணனருளிய கீதையின் முக்கிய கூற்றாகிய சரம சுலோகத்தின் சாரமான அவ்வெம்பெருமான்தானே நெறிவாசல் இரண்டுமாவான் என்ற ஆழ்வார்களின் கருத்தே மெய்ப்பொருள் என்று கற்றார். தான் கற்றதை அறிந்து அனைவரும் உய்ய வேண்டும் என்ற அளப்பெரும் கருணையினால் திருக்கோஷ்டியூர் கோவில் திருமதில் மேல் ஏறி நின்று பஞ்சமருக்கும் நலம் தரும் அந்த ஓம் நமோ நாராயண என்னும் சொல்லை உபதேசித்து அருளினார். இதையறிந்த திருக்கோஷ்டியூர் நம்பிகள் அவரை ஆனையை மீறியதேன் என்று வினவ, தானொருவன் நரகம் சென்றாலும் சரி மக்களனைவரும் வீடுபேறு பெற வேண்டும் என்பதால் குருவின் ஆனையை மீறியதாக உடையவர் கூறினார். பல்லுயிருக்கும் விண்ணின் தலை நின்று வீடளிக்கும் தன்மையைக் கொண்டாடி திருக்கோட்டியூர் நம்பிகள் இராமானுஜரை என்பெருமானாரே ( எல்லாருக்கும் தலைவர்) என்று ஆனந்தத்துடன் கட்டித்தழுவிக்கொண்டார். இராமானுஜருக்கு எம்பெருமானார் என்ற பெயர் இவ்வாறு ஏற்பட்டது.

சந்திரபிரபையில் ஸ்ரீ இராமானுஜர் பின்னழகு

எம்பெருமானார் வியாசரின் பிரம்ம சூத்திரத்துக்கு ஆழ்வார்கள், நாதமுனிகள், ஆளவந்தார் முதலிய முன்னோர்கள் கைக்கொண்ட விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை நன்கு பரப்பினார். இக்கொள்கைக்கு மாறான கொள்கைகளைப் படைத்த புத்தர், சமணர், அத்வைதிகள் பலரை வாதப்போரில் வென்று அவர்களை வைணவர்களாக்கி விசிஷ்டாத்வைதத்தை நன்கு நிலை பெற செய்தார். இவர் பாரத நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று வைணவ தலங்களை வணங்கி மதத்தை பரப்பினார்.தம் மதக் கொள்கைகளைப் பரப்ப எழுபத்து நான்கு ஸ’ம்ஹாஸனாதிபதிகளை நியமித்து பலதிக்குகளிலும் பரப்பினார். எம்பெருமானாகிற பெருங்கடலிலே , நம்மாழ்வாராகிய கருமேகம் படிந்து அப்பெருமானின் திருக்கல்யாண குணங்களாகிய நீரைப்பருகி, நாதமுனிகளாகிற மகாமேருமலையில் பொழிந்து உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி என்ற அருவிகள் மூலம் ஆளவந்தார் என்ற பேராற்றை சேர்ந்து, எம்பெருமானாராகிய வீரநாராயணபுரத்தேரி போன்ற ஏரியிலே வந்து தேங்கி, உடையவரின் žடர்களான வீரநாராயணபுரத்தேரியின் எழுபத்து நான்கு மதகுகள் போன்ற பெரியோர்களின் மூலம் உலகமாகிய கழனிக்குப் ஏறிப்பாய்கின்றது என்று இவ்வுண்மையை உருவகப்படுத்துவர் முன்னோர்.வைணவக்கோட்பாடுகள் வெறும் ஏட்டுச்சுரைக்காய்கள் அல்ல என்பதை தன் வாழ்வின் மூலம் நிருபித்தவர் இராமானுஜர். பஞ்சமருக்கும் அஷ்டாக்ஷ்ர மந்திரத்தை உபதேசித்த வள்ளல் மேலும் பிள்ளையுறங்காவில்லிதாசர் என்ற வேடžடரை அந்தணர்க்கான உடல் தூய்மையை உதறி காவிரியில் நீராடித் திரும்புகையில் கைகோர்த்து அழைத்து சென்றார். தொண்டனூர் அரிசனங்களை திருநாராயணப்புரத்துத் திருக்கோவிலில் வழிபட ஏற்பாடு செய்தவர். அவர்களை திருக்குலத்தார் என்று அழைத்து பெருமைப்படுத்தினார். தாழ்த்தப்பட்ட மக்களை மேல் நிலைக்கு உயர்த்தியவர் இரமானுஜர்.தனது வாழ்விலே இராமானுஜர் தான் செய்த புரட்சிகளினால் சந்தித்த எதிர்ப்புக்கள் ஏராளம். அவர் பிச்சை எடுத்து உண்ணும் கொள்கை கொண்டிருந்ததால் அவரை கொல்ல சதி செய்த சிலர் ஒரு பெண்ணிடம் அவருக்கு நஞ்சிட கட்டாயப்படுத்தினர் அப்பெண்மணியும் அவ்வாறே செய்து சடக்கென்று அவர் திருவடிகளில் விழுந்து உண்மையைக் குறிப்பாலுணர்த்தி தன் பிச்சையை விலக்கச் சொன்னாள்.இவரது சீடர்களில், கூரந்தாழ்வான், முதலியாண்டான் இருவரும் முக்கியமானவர்கள். இவர்களை தனது முக்கோல் மற்றும் பவித்திரம் என்று சிறப்பித்தார் இராமானுஜர். கிருமிகண்ட சோழன் என்ற சோழ மன்னன் சைவம் மங்கி வைணவம் தழைத்தோங்குவதை கண்டு, உடையவரை அழைத்து சிவனில் பெரியவரில்லை என்று எழுதி வாங்க எண்ணிய போது எம்பெருமானாரைக் காக்க கூரத்தாழ்வான் முக்கோல் பிடித்து அரசவைக்கு பெரிய நம்பியுடன் சென்று, நாராயணனே பரன் என்று பலபடியும் எடுத்துரைத்தான். மன்னன் இணங்காமல் சிவனே பரன் என்றெழுதிடச் சொன்னான். அவர் மரக்கால் பெரியது, குறுணி அதைவிடப்பெரியது என்ற பொருளில் "சிவாத் பரதரம் நாஸ்தி, த்ரோணமஸ்தி தத:பரம்" என்று எழுதித் தந்து மன்னனின் கோபத்துள்ளாகி தன் கண்களை இழந்தான். இவரது மற்ற žடர்கள் சைவத்துக்கு சென்று திரும்பிய இவரது சிற்றன்னை மகன் கோவிந்த பட்டர், இவர் துறவறம் பூண்ட போது இவருக்கு எம்பார் என்ற திருநாமத்தை எம்பெருமானர் அருளினார். யஞ்னமூர்த்தி என்ற அத்துவைதவாதி வாதப்போரில் தோற்று, அருளாளப்பெருமாளெம்பெருமானார் என்ற பெயரில் இராமானுஜருக்கு žடரானார். திருக்கோட்டியூர் நம்பிகளால் இராமானுஜருக்கு எதிரிகள் நஞ்சிடும் வாய்ப்பை தவிர்க்க உணவு சமைக்க வந்தவர் கிடம்பியாச்சான். மற்றும் திருக்குருக்கைப்பிரான்பிள்ளான் முதன் முதலாக திருவாய்மொழிக்கு இராமானுஜரின் ஆணையினால் உரையிட்டவர், அனந்தான்பிள்ளை, வடுகநம்பி முதலானோர் இவரது முக்கிய žடர்களாவர்.கிருமிசோழனின் கொடுமையிலிருந்து தப்பிக்க, žடர்களின் வேண்டுதலின்படி இராமானுஜர், வெள்ளையாடை உடுத்தி வெளியேறி பன்னிராண்டுகள் தற்கால கர்நாடக மாநிலத்திலுள்ள மேல் கோட்டை திருநாராயணபுரத்தில் வாழ்ந்தார். அத்தலத்தின் உற்சவமூர்த்தியான செல்வப்பிள்ளையை டெல்லிசென்று, துருக்க அரசனிடமிருந்து திரும்பப்பெற்று கோவிலை நன்றாக அமைத்து அங்கும் வைணவத்தை பரப்பினார்.டெல்லி சுல்தான் மகள் செல்லப்பிள்ளையுடனே பின் வர அவளை பீபீ நாச்சியாராக்கி இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் உதவியவர். கிருமிகண்டன் பெயருக்கேற்ப கழுத்தில் புழுத்து மாண்டபின் , எம்பெருமனார் திருவரங்கம் திரும்பி தன் தொண்டுகளைத் தொடர்ந்தார்.கூரத்தழ்வான் காச்மீரம் சென்ற போது ஸரஸ்வதீ பண்டாரம் என்ற நூலை பார்வையிட்டார், அந்த நூலை மனத்தில் நிறுத்தி பின்பு உடையவர் பணிக்க பணிக்க, நாமகளே ஸ்ரீ பாஷ்யம் என்று பெயரிட்ட உடையவரின் பிரும்ம சூத்திர உரைநூலை ஆழ்வான் தானும் ஆராய்ந்து ஓலைப்படுத்தினார். எனவே இவர் பாஷ்யக்காரர் என்று அழைக்கப்படலானார். இவ்வாறாக ஆளவந்தாரின் முக்குறைகளிலொன்றை உடையவர் தீர்த்தருளினார். ஆள்வானுக்கு இரண்டு ஆண் மகவுகள் பிறந்த போது அவர்களுக்கு பராசரன், வேதவியாஸன் என்று பெயரிட்டு இரண்டாம் குறையை நீக்கினார்.கோவிந்த பட்டருக்கு மகன் பிறந்த போது அவருக்கு பராங்குசன் என்ற பெயரிட்டு மூன்றாவது குறையைப் போக்கினார்.எம்பெருமானார் குளிரருவி திருவேங்கடத்தில் கோவில் கொண்டுள்ள பெருமாள், குறையொன்றுமில்லாத கோவிந்தனான, திருமாலே என்று நிரூபித்து தன் கைகளாலேயே அந்த அர்ச்சாவதார மூர்த்திக்கு சங்கும் சக்கரமும் சமர்பித்தார் திருமாலிருஞ்சோலை அழகருக்கு ஆண்டாள் நாச்சியார்நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலைநம்பிக்கு நான்
நூறுதடாவில் வெண்னை வாய் நேர்ந்துபராவி வைத்தேன்

நூறுதடாநிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்


ஏறுதிருவுடையான் இன்றுவந்திவைகொள்ளுங்கொலோ?


என்று விரும்பியபடி நூறு தடா அக்காரவடிசிலும், நூறு தடா வெண்னையும் அமுது செய்வித்து பின்னர் சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள் திருவாயாலேயே அண்ணா என்றழைக்கப்பட்டு கோவில் அண்ணன் ஆனார். ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாசுரங்களின் மீது இராமானுஜர் கொண்டிருந்த அபிமானம் அளப்பரியது, இவர் ஒரு சமயம் திருப்பாவை பாசுரங்களை சேவித்துக் கொண்டு பிச்சை கேட்டு வரும் போது உந்து மதற்களிற்றன் என்னும் பாசுரத்தை சேவித்துக் கொண்டே பெரிய நம்பிகளின் வீட்டின் கதவைத்தட்ட, žரார் வளையொளிப்ப திறந்தேலோரெம்பாவாய் என்ற படி பெரிய நம்பியின் செல்ல மகள் கதவைத் திறக்க ஆண்டாள் நாச்சியாரே வந்து கதவைத் திறப்பதாக எண்ணி மயங்கி விழுந்தார். பின் பெரிய நம்பிகள் வந்து ம்யக்கம் தெளிவித்து உண்மையை உணர்த்தி திருப்பாவை ஜீயர் என்றழைத்து சிறப்பித்தார். . இராமானுஜர் ஆழ்வார்களின் அருளிச்செயல்களான பிரபந்தத்தை இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் அறிந்த அரையர்களின் மூலம் நன்கு பரப்பினார்.இராமானுஜர் வட மொழியில் நித்ய க்ரந்தம், கீதாபாஷ்யம், ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த ஸாரம், வேதாந்த தீபம், வேதார்த்த ஸங்க்ரஹம், மற்றும் கத்யத்ரயம் என்ற மூன்று உரைநடை நூல்களான ஸ்ரீ வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம், சரணாகதி கத்யம் என்ற ஒன்பது நூல்களை செய்தருளினார். ஆழ்வார்கள், நாதமுனிகள், ஆளவந்தார் மூலம் இராமானுசருக்கு எட்டிய வைணவ சமயத்தை திருவரங்கரே எம்பெருமானார் தரிசனமென்று பெயரிட்டார் என்றும் திருக்குறுகூர் நம்பியே இராமானுசரிடம் žடராக ஆசைப்பட்டு திருவிலச்சிணை பெற்று வைணவ நம்பி என்ற திருநாமம் பெற்றார் என்று இராமானுஜரின் புகழ் பரப்பும் வரலாறுகள் செப்புகின்றன.

இவ்வாறு பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையிலும், விசிஷ்டாத்வைதத்தை நாடெங்கும் பரப்பிய புரட்சியாளரான இராமானுஜர் தனது நூற்றியிரண்டாம் ஆண்டில் தனது கடமையை முடித்து இந்நிலவுலகை விட்டு நீங்கும் தறுவாயில் இவரது žடரான முதலியாண்டான் வேண்டுகோளின்படி அவர் வடித்த உருவச்சிலையை தானே தழுவித்தந்து, இவரது பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரிலே நாம் எல்லாம் இந்த கலியிலே உய்ய, "தானுகந்த திருமேனியாய் கோவில் கொண்டார்." இவ்வாறு கோவில் கொண்ட ஒருவாரத்திலேயே இராமானுஜர் நோய்வாய்பட்டு திருநாட்டுக்கேகினார். இவரது விமலசரம விக்கிரகமான பூதவுடலை அரங்கத்து பெரியோர்களும் அவர் žடர்களும் அரங்கன் கோவில் சுற்றிலேயே திருப்பள்ளிப்படுத்தி அவ்விடத்து திருமண்ணால் உருவச்சிலை அமைத்து வழிபடலாயினர் இந்த திருமேனி "தானான திருமேனி" என்றழைக்கப்படுகின்றது. பின்பு திருநாராயணபுரத்து žடர்கள் வழிபடவமைத்த உருவம் "தமருகந்த திருமேனி "என்றழைக்கப்படுகின்றது.
சீராருமெதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற்சாற்றிய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முந்நூல் வாழி

இணைத்தோள்கள் வாழி


சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி

துணைமலர்க்கண்கள் வாழி
ஈராறு திருநாமமணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில்ஞான முத்திரை வாழியே.
என்று எம்பெருமானாரை வழிபட்டு நன்மையடைவோமாக.