Sunday, January 31, 2010

நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -6

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ நரசிம்ம அவதாரம் -2


ப்ரஹ்லாதன்- ஸூக்ஷ்மம் அறிந்தவனும், எங்கும் பரவியவனும், ஒருவராலும் அறியப்படாதவனும், தன்னையே தரும் கற்பகம் போன்றவனும் சொற்களால் சொல்லப்படாதவனும் உலகங்கள் எல்லாவற்றிலும் பரந்து இருப்பவனுமான பகவானே மகாவிஷ்ணு. அவன் தான் ஈச்வரன். கோபம் கொண்டு குருவை மிரட்டிய ஹிரண்யன் மீண்டும் குருகுலம் சென்று சரியாக கற்று தருமாறு அனுப்பினான். .

வெகு காலம் சென்றது. ஹிரண்யன் தன் புதல்வனை அழைத்து வரச் சொன்னான். புத்திரனைக் கண்டதும் "ஓர்அழகிய ச்லோகத்தைச் சொல்" என்று கேட்டான்.

ப்ரஹ்லாதன் சொல்லத் தொடங்கினான் எவனிடமிருந்து பிரகிருதி, ஜீவாத்மா, பிரபஞ்சம் உண்டாயிற்றோ, அந்த தேவன் எல்லாவற்றுக்கும் காரணப் பொருள். அவன் அருள்புரிய வேண்டும்.

இதைக் கேட்ட ஹிரண்யன் கடுஞ்சினம் கொண்டு "இவனை கொல்லுங்கள்! இவனது பிழைப்பு வீண். தன் குலத்தையே அழிக்கக் கூடியவன் இவன்" என்றான்.

இதைக் கேட்டதும் அசுரர்கள் ஆயிரக் கணக்கில் ஒன்று சேர்ந்து, நெருப்பை உமிழ்கின்ற பல அம்புகளை வீசினர். ஆனால் எல்லவற்றிலும் அந்தர்யாமியாக விஷ்ணு இருப்பதால் அவையெல்லாம் ப்ரஹாலாதனை ஒன்றும் செய்ய முடியவில்லை.

மேலும் கோபம் கொண்ட ஹிரண்யன் கொடிய விஷம் நிறைந்த நாகங்களை விட்டு ப்ரஹலாதனை கொத்தச் செய்தான்.. வேதாத்மாவான கருடன் மேல் அமர்ந்துள்ள மகாவிஷ்ணுவை ப்ரஹ்லாதன் தியானித்தான். பாம்புகளால் ஏற்பட்ட பயங்கரமான வேதனையயும் அவன் அறியவில்லை.ஸர்ப்பங்கள் ஹிரண்யனை பார்த்து, "எங்களுடைய ஹ்ருதயத்தில் தாபம் உண்டாயிற்று. பற்கள் சிதறி விழுந்தன. உன் புதல்வனில் உடம்பில் நாங்கள் கடித்த அடையாளமே தெரியவில்லையே! என்றன.

பிறகு தேவ விரோதியான ஹிரண்யன் அனுப்பிய மதயானைகள் மலைகளில் உச்சிகளிலிருந்து ப்ரஹ்லாதனைப் பூமியில் தள்ளின. பயங்கரமான தந்தங்களை கொண்டு அந்த சிறுவனை குத்தின. கோவிந்தனிடத்தில் மனத்தை செலுத்திய ப்ரஹ்லாதன் இதனால் சிறு கஷ்டத்தையும் அடையவில்லை. யானையின் தந்தங்கள் உடைந்தன. தந்தை ஹிரண்யனை பார்த்து ப்ரஹ்லாதன் "எல்லோருக்கும் ஆத்மாவான பகவானின் ப்ரபாவத்தால் இவையெல்லாம் ஏற்பட்டன. வஜ்ராயுதம்போல் மிகக் கூர்மையான யானைத் தந்தங்கள் உடைந்து விழுந்தன. இதற்கு நான் காரணமன்று" என்றான்.

பின் ஹிரண்யன். ப்ரஹலாதனை நெருப்பில் இட்டான். . அதில் தள்ளப்பட்ட குழந்தை, தகப்பனை பார்த்து, "இந்த நெருப்பு என்னை கொளுத்தவில்லை, தாமரை மலர்கள் பரப்பின படுக்கையில் நான் அமர்ந்திருக்கிறேன்" என்றான்.

இதனால் . அசுரன் கோபத்தால் சிவந்த கண்ணினனாய் சமையற்காரர்களை அழைத்து, "ஹாலஹால விஷத்தோடு சேர்த்து அவனுக்கு அன்னத்தைக் கொடுங்கள். யமலோகம் சென்று விடுவான்" என்றான்.அப்படி அவர்கள் கொடுத்த அன்னத்தை ப்ரஹ்லாதன் பகவானை மனத்தில் நினைத்துக் கொண்டு சாப்பிட்டான். அதுவும் அவனை ஒன்றும் செய்ய,முடியவில்லை..

இதைக் கேட்ட அசுரன் புரோகிதர்களைப் பார்த்து "பெரும் பூதத்தை உண்டுபண்ணி இவனை அழியச் செய்யுங்கள்" என்றான். புரோகிதர்கள், மிக்க அடக்கம் கொண்ட ப்ரஹ்லாதனிடம் "நீ உயர்ந்த குலத்தில் பிறந்துள்ளாய். உன் தகப்பனோ எல்லோருக்கும் அரசர். அற்பமான பலத்தையுடைய தேவர்களோ, மகாவிஷ்ணுவோ, பரமசிவனோ இந்த அரசரிடத்தில் என்ன செய்ய முடியும்? ஆகவே விரோதியான விஷ்ணுவைத் துதிக்காதே" என்றனர்.

ப்ரஹ்லாதன், "நீங்கள் சொல்லுவது உண்மையல்ல. மகாவிஷ்ணு என்ன செய்ய முடியும் என்று நீங்கள் கூறியது உண்மையாகாது. நம் அனைவருக்கும் நன்மையையோ, தீமையையோ அவன் ஒருவன்தானே உண்டு பண்ணுகிறான்? அறம், பொருள், இன்பம், வீடு என்ற பலன்களை அனைவர்க்கும் அளித்து காப்பாற்றுகிறவன் அனந்தன் ஒருவனே. என்றான்.



இதைக் கேட்டு கோபமடைந்த புரோகிதர்கள் நான்கு பக்கங்களிலும் நெருப்பைக் கக்கும் பெரும் பூதத்தை உண்டு பண்ணினார்கள். பயங்கரமான அந்த பூதம் மூன்று உலகத்தையும் அழிக்கும் தன்மையில் கிளம்பி கூரிய சூலத்தால் ப்ரஹ்லாதனை அடித்தது. ப்ரஹ்லாதனது சரீரத்தில் நுழைந்த சூலமும் பயனற்றதாகி விட்டது. சூலமும் உடைந்தது.

ஹிரண்யனும் ஆச்சரியமடைந்து "ப்ரஹ்லாதனே! நீ மிக பிரபாவசாலியாக இருக்கிறாய். இது எப்படி உனக்கு உண்டாயிற்று?" என்று கேட்டான்.

ப்ரஹ்லாதன் தந்தையின் காலில் விழுந்து வணங்கி "எனக்கு இது இயற்கையாக உண்டானதுமல்ல; மந்திரத்தால் ஏற்பட்டதுமல்ல. எல்லோருக்கும் இது பொதுவாக உண்டாகக் கூடியதே. எவனுடைய ஹ்ருதயத்தில் கேசவன் வாஸம் செய்கிறானோ அவனுக்கு இது உண்டாகக் கூடியது.

எந்த உயிரினிடத்திலும் நாம் பாவச் செயலை நினைக்கக் கூடாது. அப்படி உள்ளவனுக்கு பாவமே ஏற்படாது. நான் பிறர் குற்றங்களையும் பிறரிடத்தில் தீமையையும் நினைப்பதில்லை. எல்லா இடத்திலும் உள்ள பகவான் ஒருவனையே த்யானம் செய்கிறேன். அவன் எல்லோருக்கும் ஈச்வரன். அவன் எல்லாப் பூதங்களிலும் வாஸம் செய்கிறான். பண்டிதர்கள் அவனிடத்தில் பக்தி செய்ய வேண்டும்" என்றான்.

இதைக் கேட்டு, மாடியின் மேல் உள்ள ஹிரண்யன், கண்களால் இரத்தத்தைக் கக்கிக் கொண்டு, "நூறு யோஜனைக்கு மேல் உள்ள இந்த மாடியினின்றும் இவனைக் கீழே தள்ளுங்கள்" என்றான்.அப்படியே கிங்கரர்கள் செய்தனர். ஹ்ருதயத்திலே வாஸம் செய்கிற பகவானை கைகளால் பிடித்துக் கொண்டு ப்ரஹ்லாதன் கீழே விழுந்தான். பூமி தேவி அவனுக்கு ஒரு வித தீங்கும் ஏற்படாதபடி தாங்கிக் கொண்டாள்.


புதல்வனுக்கு ஓரிடத்திலும் அடிபடாமல் அபாயமில்லாமல் இருப்பதை அறிந்த அசுரன், சாம்பரன், என்ற அசுரனை ஏவினான்: "நீ பெரிய சக்தியுள்ளவன். ஆயிரக்கணக்கான மாயைகளை உண்டு பண்ணுகிறவன். என் புதல்வனையோ ஒருவனும் ஜெயிக்க முடியாது. இவன் திறத்தில் உன் வலிமையைக் காட்ட வேண்டும்" என்றான்.

இதைக் கேட்ட சம்பரன், "என் மாயாபலத்தைப் பார். ஒன்று ஆயிரம் கோடி என்ற கணக்கில் மாயைகளை படைத்து இவனை யமலோகம் அனுப்புகிறேன்" என்று சொல்லி பலமாயைகளை ஸ்ருஷ்டித்தான்.


இதைக் கண்ட ப்ரஹ்லாதன் தன்னை நலிய வந்த அசுரனிடத்திலும் கோபம் கொள்ளாமல் பரிசுத்தமான மனத்துடன் பகவானைத் தியானம் செய்தான். பகவான் ஆயிரம் சூரியர்களின் ஒளியைப் பெற்றதும், ஆயிரம் முகங்களையுடையதும், ஹாரம் கேயூரம் முதலிய ஆபரணங்களைப் பெற்றதும், ராக்ஷஸர்களை அழிப்பதும், பெரும் ஓசை கொண்டதும், துஷ்டர்களைத் தீய கண்களால் பார்ப்பதும், வணங்கினவர்களின் கஷ்டத்தை போக்கடிப்பதும், சிவந்த மாலைகளையும் வஸ்திரங்களையும் அணிந்ததும், ஸுகந்த சந்தனத்தால் பூசப் பட்டதும், சிவந்த கண்களையுடையதுமான ஸ்ரீஸுதர்சனத்தை அனுப்பினான். சம்பரனுடைய எல்லா மாயைகளையும் சக்கரத்தாழ்வான் அறுத்துத் தள்ளினான்.

மாயையுடன் சம்பரன் அழிந்ததும், ஹிரண்யகசிபு சோஷக வாயுவை ப்ரஹ்லாதனிடத்தில் அனுப்பினான். அந்த காற்றுக்கும் சோஷகமான பகவானை ப்ரஹ்லாதன் நினைத்தான். அதுவும் அழிந்தது.


இதைக் கேட்ட ஹிரண்யன், "இந்த சிறுவன் நம் குலத்தையே அழிப்பவன். நல்ல சுபாவமற்றவன். இவனை நாக பாசங்களால் நன்றாகக் கட்டிப் பயங்கரமான நடு சமுத்திரத்தில் தள்ளிவிடுங்கள்" என்றான். கிங்கரர்கள் சிறுவன் எப்படியும் கரையேறி வர முடியாதபடி சமுத்திரத்தில் தள்ளிவிட்டார்கள். பெரிய மரங்களையும் மலைகளையும் சமுத்திரத்தில் விழுந்த அவன் மேல் தள்ளினார்கள். ப்ரஹ்லாதன் பரிசுத்த மனத்துடன், பகவானை நினைத்தான். ஒரே கணத்தில் கரையை அடைந்து விட்டான். எந்த விதமான கஷ்டத்தையும் அடையவில்லை.

ப்ரஹ்லாதன் பரிசுத்தமான மனத்துடன் சமுத்திரக் கரையிலிருந்து மிகவும் சந்தோஷத்துடன் ஹிரண்யகசிபுவின் வீட்டை வந்தடைந்தான். தந்தையான அந்த அஸுரனின் பாதங்களை மிக்க கெளரவத்துடன் பிடித்து வணங்கினான். ஹிரண்யகசிபு புதல்வனை எழுப்பி உட்காரவைத்துப் பரிவுடன் அனைத்து உச்சி மோந்து கோபத்தை அடக்கிக் கொண்டு "ப்ரஹ்லாதனே! நீ அடிக்கடி பகவானை புகழந்து பேசுகிறாயே அவன் எங்கு இருக்கிறான்?" என்று கேட்டான்.



ப்ரஹ்லாதன் "அந்த பகவான் உன்னிடத்தில் இருக்கிறான். என்னிடத்திலும் இருக்கிறான். எல்லா ஜந்துக்களிடத்திலும் இருக்கிறான். இப்படி எங்கும் இந்த நாராயணன் உள்ளானபடியால் பிரம்மா முதலிய எல்லா தேவர்களும், மனிதர்களும், பசுக்களும், ஸ்தாவரம், ஜங்கமம் முதலிய எல்லாமும் நாராயண ஸ்வரூபம் என்பதில் சந்தேகமில்லை. அந்த கடவுள் பூமியிலும், நீரிலும், சந்திரனிடத்திலும், சூரியனிடத்திலும், நெருப்பிலும், திசைகளிலும், உபதிசைகளிலும், காற்றிலும், ஆகாயத்திலும், திரியக்குகளிலும் மற்றுமுள்ள பொருள்களிலும், சத்தியத்திலும், ஸார, அஸார பொருள்களிலும், உள்ளும், வெளியும் இருக்கிறான். எங்கும் இருக்கிறான். எப்பொழுதும் இருக்கிறான். இதில் அதிகம் கூற வேண்டியதில்லை. உன்னிலும் உளன், என்னிலும் உளன்." என்றான்.
இதைக் கேட்டதும் அஸுர அரசன் பரபரப்புடன் ப்ரஹ்லாதனை பார்த்து "நீ சொல்லுகிறபடி மகாவிஷ்ணு எல்லா இடங்களிலும் இருப்பது உண்மையானால் இந்த ஸ்தம்பத்தில் குழந்தாய், எனக்கு அவனை அவசியம் காட்ட வேண்டும்" என்று கூறி, அந்த கம்பத்தை அடித்தான்.

ஓங்கி கம்பத்தை அடித்தவுடன் கும் கும் என்ற சப்தம் பிரம்மாண்டத்தை பிளந்துகொண்டு உலகங்களுக்கு உள்ளும் புறமும் அச்சத்தை கொடுக்கக் கூடியதாய், பெரியதாய் உண்டாயிற்று. அந்த கம்பத்தின் நடுவில், எல்லோராலும் பூஜிக்க பெற்ற மகாவிஷ்ணு நரசிம்ஹ ஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டவராயும் பிடரி மயிருடன் கூடியவராய், பயங்கரமான தொனியை உண்டு பண்ணுகிறவராயும், கோரப்பற்களால் பயங்கரமான காட்சி அளிப்பவராயும், பார்த்தமாத்திரத்திலேயே ஹிரண்யகசிபுவுக்கு பீதியை உண்டு பண்ணுகிறவராயும், வஜ்ராயுதம் போன்ற கூர்மையான நகங்களோடு விளங்கிய திருமேனி உடையவராயும், எல்லா இடங்களிலும் பரந்த கைகளையுடையவராயும், முள் போன்ற அஸுரர்களை அழிப்பவராயும், பதினாயிரம் வஜ்ராயுதம் மேலே விழுந்தால் ஏற்படும் அட்டகாசத்தைவிட உக்கிரமான அட்டகாசத்தை செய்துகொண்டு வெளிக் கிளம்பினார். ஹிரண்யகசிபுவை பிளப்பதற்கு வெளியே வந்தார்.
அப்பொழுது அசுர கூட்டத்தினர் பயந்தனர். ரிஷிகளும் திகைத்தனர். இப்பொழுதே உண்மையில் பிரளயகாலம் வந்துவிட்டது. இதில் சிறிதளவும் சந்தேகமில்லை. நாம் எங்கே செல்வோம்? இந்த சமயம் நம்மை யார் காப்பாற்றுவார்? என்றெல்லாம் நடுங்கிய மனத்துடன் தேவர்கள் பல இடங்களுக்கு ஓடினார்.



பிறகு, கூர்மை பொருந்திய கைகளால் அந்த மகாவிஷ்ணு அசுரனை பிடித்துக் கொண்டார். அசுரனும் பகவானை தன் கைகளால் பிடித்துக் கொண்டான். இருவருக்கும் அப்பொழுது யுத்தம் ஏற்பட்டது. சங்கம், சக்கரம், கதை முதலிய ஆயுதங்கள் பகவானுடையவை. இவை தவிர மற்ற ஆயுதங்கள் அவனுடையவை. கத்திக்குக் கத்தியும், பாசத்திற்கு பாசமும், என்று இப்படைகளில் எல்லா ஆயுதங்களும் ஒன்றுடன் ஒன்று மோதின. பகவான் விட்ட ஆயுதங்களைவிட அசுரராஜன் எய்த அம்புகள் அதிகமாகவே இருந்தன. ஆயினும் அவை பயனற்றவையாகிக் கீழே விழுந்தன. எங்கெங்கே அசுரன் ஓடினானோ அங்கங்கே அவன் மேல் விழுந்து நரசிம்ம பகவான் ஓடினார்.

ஹிரண்யகசிபுவின் அவஸ்தையை பார்த்து பகவான் ஓய்வடையவில்லை. ஹிரண்யகசிபுவின் இரத்தத்தில் ஒவ்வொரு திவலையும் எங்கெங்கு விழுந்ததோ அங்கங்கே நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் இந்த அசுரனுக்கும் மேற்பட்ட வலிமையுள்ள அசுரர்கள் தோன்றினர். ஒவ்வொர் அசுரனையும் வெல்வதற்கு நூற்றுக்கணக்கான உருவங்களை பகவான் எடுத்துக் கொண்டார். அசுரர்களின் இரத்தம் பூமியில் விழுந்த இடங்களில் நூறு நூறு அசுரர்கள் உண்டாயினர். பல ந்ருசிம்மர்களும் தோன்றினர். பகவானும், அசுரராஜனும் கைகளாலும் கால்களாலும் மார்புகளாலும் போர் செய்தனர். ஒருவருடைய பலத்தையும் அறிய முடியவில்லை.




"
தேவனே, ஜகந்நாதனே, உலகத்தை காப்பவனே நீ நன்றாக விளங்க வேண்டும், இந்த சத்ருவை வெல்வாயாக. ஏன் நீ இந்த விஷயத்தில் தாமதிக்கிறாய்? புருஷோத்தமனே, உன் நினைவு மாத்திரத்தில் இந்த உலகம் படைக்கப்படுகிறது. உன்னிடத்திலேயே லயத்தையும் அடைகிறது. நீதான் உலகத்துக்கு தந்தை. தேவமானத்தால் ஆயிரம் வருஷங்கள் சென்றன. தேவகாரியத்தை தாமதமின்றி செய்வாயாக." இப்படி தாழ்மையுடன் தேவர்கள் துதித்த வார்த்தைகளை பகவான் கேட்டு பெரிய அட்டகாசம் கொண்டு அண்டத்தையே பிளக்கிறவராக ஹிரண்யகசிபுவை பிடித்து மடியில் வைத்து அவன் முகத்தை நோக்கி தம் வஜ்ர நகங்களாலேயே பிளந்தார். சில வார்த்தைகளை சொல்லி கொண்டு ஹா ஹா என்ற சப்தத்தை அடிக்கடி செய்தார். கோபத்தால் சிவந்த கண்களுடன் நெருப்பை கக்கிக் கொண்டு எல்லா உலகத்தையும் இருள் சூழ செய்தார். ஒரு முகூர்த்தம் எல்லா உலகமும் சமுத்திரத்தில் மூழ்கிவிட்டது போல் இருந்தது.

பிறகு தேவர்களும், கந்தர்வர்களும் பகவானை துதித்தனர். "செந்தாமரைக்கண்ணா உனக்கு நமஸ்காரம். உலகத்தை படைப்பவனே நம: இந்திரியங்களை அடக்குபவனே, மகாபுருஷனே, முதலில் தோன்றியவனே, உலக ஸ்வரூபியே, கூர்மை பொருந்திய உயர்ந்த ஆயுதம் பெற்றவனே, பிராமணர்களுக்கு தேவனே, உலகத்துக்கு நன்மை கொடுப்பவனே, கிருஷ்ணனாகவும், கோவிந்தனாகவும் இருக்கும் பெருமானே, உனக்கு நமஸ்காரம். நீ இம்மாதிரி ரூபத்தை எடுக்காவிட்டால் உலகம் இருளடைந்துவிடும். உயர்ந்த செயலை செய்தாய். அசுரன் இறந்தான். அவரவர்களுடைய ஸ்தானங்கள் நிலைநின்றன. கோபத்தை அடக்கிக் கொள். பக்தர்களை காக்கவும். அசுரர்களை அழிக்கவும், இத்தகைய ரூபத்தை எடுத்துக் கொண்டாய்." - கை கூப்பிய வண்ணம் எல்லாத் தேவர்களும் முனிவர்களும் ஸாரமான வேதமயமான இந்த வாக்குகளைக் கொண்டு புருஷோத்தமனை இவ்வாறு துதித்தனர்.

பிறகு தெளிவடைந்த பகவான், தமது ஸ்வரூபத்தை வெளிப்படுத்தியவராய் பிரம்மா, ருத்திரன், முதலிய தேவர்களை பார்த்து பேச தொடங்கினார்: "எல்லா தேவர்களும் பலம் பொருந்திய மகரிஷிகளும் அறிவில்லா பாவியான ஹிரண்யனால் பிடிக்கப்பட்டார்கள். இப்பொழுது பகைவன் இறந்தான். நமது நோக்கம் கைகூடி விட்டது. அவரவர் ஸ்தானத்தை அடைந்து மனக்கவலையின்றி சந்தோஷத்துடன் இருப்பீர்களாக" என்று சொல்லி பகவான் எல்லோரையும் அனுப்பிவிட்டார்.

நேரிலுள்ள ப்ரஹ்லாதனை பார்த்து பகவான் "உன்னுடைய அசஞ்சலமான பக்தியைப் பார்த்து தெளிவடைந்தேன். உன் இஷ்டப்படி என்னிடம் வரத்தைப் கேட்பாயாக என்றார். ப்ரஹ்லாதன் "நான் எந்த எந்த பிறவியில் பிறக்கிறேனோ அந்த அந்த பிறவிகளில் உம்மிடத்தில் எனக்கு எப்பொழுதும் பக்தி இருக்க வேண்டும்" என்றான்.

பகவான் "பரமேச்வரருக்கு என்னிடத்தில் எவ்வாறு பக்தி உள்ளதோ அப்படியே உனக்கும் உள்ளது. உன்னைப் பார்த்து மகிழ்வுற்றேன். சந்தேகமில்லை. முள் போன்ற உன் தகப்பன் இறந்தான். தகப்பனுடைய ராஜ்யத்தை நீ பெற்று ஆட்சி புரிவாயாக. உனக்கும் யாரும் விரோதி இங்கு இல்லை. சந்திர சூரியர்கள் உள்ள வரையிலும், பூமி உள்ள வரையிலும் தேவர்கள் இந்திரனுடன் உன்னைப் புகழ்வார்கள். ஸம்ருத்தமான இந்த ராஜ்யத்தை அநுபவிப்பாயாக. புதல்வன், மனைவி, பேரன்மார், பந்துக்கள், சிநேகிதர் எல்லோருக்கும் நன்மையை செய்து வாழ்வாயாக. எதிலும் பற்றுதல் அற்று தர்மங்களை செய். நான் செய்கிறேன் என்ற அகங்காரத்தை விடு. நியாயமான வழியில் பணத்தை சம்பாதிப்பாயாக. தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் பூஜை செய். சாஸ்திரம் இசைந்த வழியில் சுகங்களை பெறுவாயாக. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் என்னிடத்தில் பக்தி உள்ளவன் அடைவான். அவன் கஷ்டப்படமாட்டான். கடைசியில் இவற்றிலுள்ள தோஷங்களை அறிந்து வைராக்கியம் பெற்று என்னுடைய ஸ்தானத்தை அடைவாயாக.


"
இந்த அஹோபில க்ஷேத்திரம் நான் தோற்றமளித்ததையே காரணமாகக் கொண்டு மகா புண்ணியமுடையதாக ஆயிற்று. இது முதற்கொண்டே உலகத்தினர். 'அஹோபிலம்' என்று கூறுவர். எனது ஒப்பற்ற வலிமையை அறிந்த தேவர்கள் இம்மாதிரி சொன்னார்கள்


அஹோ வீர்யம், அஹோ செளர்யம், அஹோ பாஹுபராக்ரம : |
நாரஸிம்ஹ : பரம் தைவம், அஹோ பலம் அஹோ பலம் ||



"ஆகையால் அஹோபில க்ஷேத்திரம் இது என்று ஆயிற்று. நான் இங்கே கஜகுண்டத்தின் சமீபத்தில் வசிக்கிறேன். பவநாசினியில் கரையில் நான் இருக்கிறேன். எனக்கு எதிரில் நீ இருப்பாயாக. நீ இங்கு வசித்துக் கொண்டு எல்லா செல்வமும் பொருந்திய ராஜ்யத்தை அநுபவிப்பாயாக. ரிஷிகள், பித்ருக்கள், தேவர்கள் அனைவரும் என்னை இங்கே துதிப்பார்கள்."

பகவான் இம்மாதிரி நரம் கலந்த சிங்க உருவை எடுத்துக் கொண்டு எல்லா உலகத்துக்கும் முள் போன்றிருந்த அசுரராஜனை கூரிய நகங்களினால் பிளந்து அவனுடைய புதல்வனான ப்ரஹ்லாதனை உயர்ந்த விசாலமான ராஜ்யத்தில் அபிஷேகம் செய்வித்தார். பவநாசினி என்ற நதியின் கரையில் எல்லாரும் வழிபட லக்ஷ்மீநரசிம்மராகவும் இன்னும் பல கோலங்கலிலும் இக்கலியுகத்தில் சேவை சாதிக்கிறார்.


Labels: , ,