Monday, March 24, 2014

திருக்கண் மலரும் கரி வரதராஜப்பெருமாள்

Visit BlogAdda.com to discover Indian blogs


எங்காவது சுவாமி விக்கிரகம் கண் திறந்து பார்க்கின்றது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? என்ன காதில் பூ சுற்றுகிறீர்களா? என்று தானே கேட்பீர்கள். வாருங்களேன் சென்னை நெற்குன்றம் கரிவரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு, பெருமாளை சேவித்த பின் தாங்களும் நான்கு பேரிடம் இது போல அதிசயமான ஒரு கோயில் உள்ளது என்று நிச்சயம் சொல்வீர்கள். இனி இக்கோவிலைப் பற்றிய விவரங்கள்.
யானைக்கும் முதலைக்கும் அருள் புரிந்த கரிவரதராஜப்பெருமாள் இவர், நின்ற கோலத்தில் உபய நாச்சியார்களுடன்  சேவை சாதிக்கின்றார். இக்கோவிலின் அதிசயம் என்னவென்றால். இருட்டில் பெருமாளின் திருக்கண்களுக்கு அருகில் நெய் தீபம் காட்டும் போது அப்படியே பெருமாள் திருக்கண் விழித்துப் பார்த்து அருள்வது போல் உள்ளது. நேரில் சேவிக்கும் போது அப்படியே உடல் சிலிர்க்கின்றது. நெய் விளக்கை கண்களுக்கருகில் காண்பிக்கும் போது விழிகள் அப்படியே நகர்வது போல் உள்ளது. அவசியம் அனைவரும் சென்று சேவிக்க வேண்டிய பெருமாள் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை.
  
இத்தலத்தின் ஐதீகம் என்னவென்றால் நாம் அனைவரும் அறிந்த கஜேந்திர மோக்ஷக் கதைதான். இந்திரத்துய்ம்னன் என்ற அரசன் ஒரு  சிறந்த விஷ்ணு பக்தன், அகஸ்திய முனிவரின் சாபத்தால் யானையாக மாறி விடுகின்றான். சாப விமோசனம் வேண்ட மஹா விஷ்ணுவினால் உனக்கு மோட்சம் உண்டாகும் என்று அருளுகிறார் அகத்தியர். ஹூஹூ என்ற கந்தர்வனும் முனிவரின் சாபத்தினால் முதலையாக மாறி அந்த யானை மலர் பறித்து பெருமாளுக்கு சமர்ப்பணம் செய்யும்  புஷ்கரணிக்கு தனது சாப விமோசனம் செய்ய வந்து சேருகின்றது.

ஒரு நாள் அந்த முதலை யானையின் பாதத்தைப் பற்றி தண்ணீருக்குள் இழுக்க, தன் தும்பிக்கையில் உள்ள மலர் வாடுகின்றதே என்று, யானை “ ஆதி மூலமே” என்று அலறுகின்றது. இங்கு தான் ஒரு  சிறு மாற்றம் பெருமாள் கருடன் மேல் விரைந்து வந்து சுதர்சனாழ்வாரை அனுப்பி யானை முதலை இரண்டையும் தூக்கி தரையில் போடுமாறு அனுப்புகின்றார். சக்கரத்தாழ்வாரும்  வேகமாக சுழன்று தண்ணீரில் பாய்ந்து தன்ணீரை வற்றச்  செய்ய  யானைக்கு பலம் கூடி முதலைக்கு பலம் குறைந்து விட்டதால் யானை காலை விடுவித்துக்கொண்டு தன் துதிக்கையில் இருந்த மலரை அந்த ஆதிமூலத்தின் பாத கமலங்களில் சமர்ப்பணம் செய்ய பெருமாள் யானை, முதலை இருவருக்கும் வைகுண்டப்பேறு அளித்த பக்த வத்சலனாக,  பரம காருண்ய மூர்த்தியாக ,குறைகள் தீர்க்கும் கோவிந்தனாக  எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

யானை, முதலை இரண்டிற்கும் அருளிய பெருமாள் என்பதால் தன்னிடம் வந்து சரணடையும் பக்தர்களின் குறைகள் அனைத்தும் தீர்த்து அருளுகின்றார் பெருமாள்.  இவரிடம் வேண்டிக் கொண்டு திருமணம் முடித்தவர்கள்,  குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் அநேகர். இவரிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் எல்லாம் நிச்சயமாக நிறைவேறுகின்றன. தங்களின் கோரிக்கை நிறைவேற அன்பர்கள் தங்களது ஜாதகத்தை 27 ரூபாய் செலுத்தி( ஒரு நட்சத்திரதிற்கு ஒரு ரூபாய் வீதம்) பெருமாளின் திருவடிகளில் வைத்து  ஆரத்தி காட்டும் போது  யானைக்கும் முதலைக்கும் அருளிய அருளானன் தன் திருக்கண்கள் மலர்ந்து அருள்வதால்  இருக்கின்ற தோஷங்கள் எல்லாம் விலகி அனைத்து நன்மைகளும் நினைக்க முடியாத வேகத்தில் நடந்து முடிகின்றது.

இக்கோவிலின் பட்டரிடம் பேசிக்கொண்டிருந்த போது கிடைத்த சில சுவையான தகவல்கள். சுமார் 400 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம், சாலிவாகன சகாப்தத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்தவர் இந்தப் பெருமாள், அதனால் இவருக்கு சாம்பிராணி தைலம் மட்டுமே  அதுவும், மிகச் சிறிய அளவில் சார்த்தப்படுகின்றது. 1976ம் ஆண்டு இரு சமூகங்களுக்கிடையே இந்த பெருமாள் கோவில் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சினை ஏற்பட்டு விஷயம் நீதிமன்றம் சென்றது. நீதி மன்றம் அப்போது கிராம அதிகாரியாக இருந்த தற்போதைய பட்டரை தக்காராக நியமித்து கோவிலை நிர்வாகம் செய்ய உத்தரவிட்டது. அவரும் அப்போதைய ஒரு முஸ்லீம் காவல் ஆய்வாளரின் உதவியுடன் பெருமாளை இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்தாராம். இவருடைய தகப்பனார் பெருமாளுக்கு கைங்கரியம் செய்து வந்தாரம், அவர் திருநாட்டுக்கு ஏகிய பிறகு,  அரசு பணியிலிருந்து விலகி  இவர் இப்போது பெருமாளுக்கு கைங்கரியம் செய்து வருகின்றாராம். 20.4.2000 அன்று தான் பெருமாளின் நேத்ர தரிசனம் முதன் முதலில் கிட்டியதாம். மாலை நேரம் திருமஞ்சனம் முடித்து ஆரத்தி காட்டிய போது பெருமாள் தனது அதிசயத்தை காட்டி அருளினாராம். அதன் பிறகு இன்று வரை அந்த அதிசயம் நடந்து வருகின்றது. முழு வெளிச்சத்தில் பெருமாளின் திருக்கண்கள் அன்றலர்ந்த தாமரை போல்தான் காட்சி அளிக்கிறது.  பகல் நேரத்திலும் சந்நிதி கதவை மூடி நேத்ர தரிசனம் செய்து வைக்கின்றனர். அத்திருக்கோவிலின்
மூலவர்:  ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாள்
உற்சவர்: சத்திய நாராயணப் பெருமாள்
தாயார் : பெருந்தேவித்தாயார். தாயாருக்கும், ஆண்டாளுக்கும் தனி சந்நிதி    தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
மற்ற சந்நிதிகள்: பெரிய திருவடி, சிறிய திருவடி, இராமானுஜர் மற்றும் சேனை முதலியார்.

பௌர்ணமியன்று "சத்ய நாராயண பூஜை" சிறப்பாக  நடைபெறுகின்றது. ஆனி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி 3 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. முதல் நாள் திருமஞ்சனம், இரண்டாம் நாள் கருட சேவை, மூன்றாம் நாள் திருக்கல்யாணம் இரவு சேஷ வாகன சேவை.

இத்திருக்கோவில் தற்போது பல திருப்பணிகள் நடந்து வருகின்றது. விருப்பம் உள்ள அன்பர்கள் திருப்பணியில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் குறைகள் எல்லாம் பெருமாளின் அருளினால் நிச்சயம் நிறைவாகும் என்பதில் எந்த வித ஐயமும் தேவையில்லை. இதற்கு சான்று இன்றும் தினமும் பெருமாளுக்கும் தாயார்கள் இருவருக்கும் மாலைகள் உபயமாக அளித்துக்கொண்டிருக்கும் அன்பர். இவரது சங்கடங்கள் தீர்ந்து வணிகமும் பெருகியாதால் இவர் இந்த கைங்கர்யத்தை தனது உபயமாக செய்து வருகின்றார். பெருமாளுக்கு நெல்லிகாய் நிவேதனம் மிகவும் விசேஷம். 


கோயம்பேடு தாண்டி பூந்தமல்லி நோக்கி செல்லும் போது நெற்குன்றத்தில் வெங்காய மண்டி பேருந்து நிலையத்தில் இறங்கி பின் இடப்புறம் செல்ல திருக்கோவிலை அடையலாம்.
மேலும் விவரங்களுக்கு,
சுகேந்திர பட்டாச்சார்யார்,
பரம்பரை அறங்காவலர்,

99625 59123, 99628 11792

Labels: , ,