நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -20
ஜ்வாலா நரசிம்மர் குகைக்கு எதிரே உள்ள குன்றின் உச்சியில் தான் உக்ரஸ்தம்பம் உள்ளது. ஆனால் மலைக்கு மேலே ஏறி செல்ல பாதை எதுவுமில்லை. ஜவ்வாது, கற்பூரம், தேக்கு மரங்கள் நிறைந்திருக்கின்றன இம்மலையில். அனைவரும் மலை ஏறவில்லை. முடிந்தவர்கள் மட்டும் ஏறினோம், பாதிபேர் திரும்பி சென்று விட்டனர் அவர்களை, வேன் ஓட்டுனர் திரு. சூரி அவர்கள் கூட்டிக்கொண்டு மடத்துக்கு சென்று விட்டார்.
அடியேனை அழைத்துச் சென்ற கயிலை தனுஷ்கோடி
எங்களுடன் சில பெண்களும் உக்ரஸ்தம்பம் ஏறினர். அம்புஜம்மாள் என்ற ஒரு மூதாட்டியும் எங்களுடன் கஷ்டப்பட்டு ஏறினார். அவர் தெலுங்கில் “நா தன்றி நின்னை சூசுகோசரம் பைக ஒஸ்துன்னானு நீவு தரிசனம் இய்யி, அதாவது “என் ஐயனே உன்னைக் காண நான் மேலேறி வருகின்றேன் உனது தரிசனம் தா” என்று வேண்டிக்கொண்டே ஏறினார். அவர் படும் கஷ்டத்தைக் கண்டு அந்த பெண்கள் மேலே ஒன்றும் இல்லை நீங்கள் ஏன் கஷ்டப்படுகின்றீர்கள். இங்கேயே இருந்து விடுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அந்த அம்மாள் கூறிய பதில் ஒன்றுமில்லை என்று சொல்லவேண்டும் எல்லா இடத்திலும் பெருமாள் இருக்கின்றார் என்று அவர்களை அதட்டி சொன்னார். இது அன்று பிரஹலாதன் கூறிய பெருமாள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதுதானே. அப்படியே மேலே சென்று சேர்ந்து விட்டோம்.
முடியாமல் அந்த வயதான அம்மாள் மலையேறும் காட்சி ( மனோகரன்)
மேலிருந்து பார்த்தால் கருட மலை அப்படியே கருடன் போல் இரு இறகுகள் நடுவில் அஞ்சலி ஹஸ்தத்துடன் நிற்கின்ற கோலத்தில் அப்படியே தத்ரூபமாக காட்சி தந்தார். உச்சியின் உக்ரஸ்தம்பத்தின் கீழே பெருமாளின் பாதம் உள்ளது. சுவாமிகள் அருகில் செல்ல வேண்டாம் காற்று அதிகமாக உள்ளது என்று கூற அங்கிருந்தே பெருமாளை சேவித்தோம்.
செங்கணாளி இட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றுடைய
எங்களீசனெம்பிரான் இருந்தமிழ் நூற்புலவன்
மங்கையாளன் மன்னுதொல் சீர் வண்டறைத்தார்க்கலியன்
செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர் தீதிலரே (10)
என்னும் திருமங்கையாழ்வாரின் கடைக்காப்பு பாசுரத்தை சேவித்தோம்.
பொருள் : சிவந்தகண்களையுடைய சிம்மங்கள் மற்ற மிருகங்களை அழியச்செய்து அவ்ற்றை எம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து தொழுது நிற்கும் சிங்கவேள் குன்றத்தில் உறைகின்ற, நம்மைப் போன்ற சம்சாரிகளுக்கு ஸ்வாமியும் எனக்கு உபகாரனுமான ஸர்வேஸ்வரன் விஷயமாக தமிழில் வல்ல வண்டுகள் மொய்க்கும் மலர் மாலை அணிந்த திருமங்கை மன்னன் தடக்கையன் அருளிச்செய்த செவ்விய மாலையை கற்க வல்லவர்கள் பொல்லாங்கு இல்லாதவர்கள் ஆவர்.
இப்பகுதியிலேயே இது உயரமான இடம் என்பதால் செல் ஃபோன் இங்கு வேலை செய்தது. இந்த மேல் அஹோபிலத்தில் பாவன நரசிம்மரை சேவிக்க சென்ற போது ஓரிடத்தில் சிறிது நேரத்திற்கு வேலை செய்தது, பின் இங்குதான் வேலை செய்தது. அங்கிருந்தே வீட்டை அழைத்து அற்புத தரிசனம் செய்த தகவலை பகிர்ந்து கொண்டோம். பின் மெள்ள இறங்கினோம். என்ன ஆச்சரியம் அந்த பெருமாளை பூரணமாக நம்பி மேலே வந்த மூதாட்டி அந்த பெண்களுக்கு முன்பாக கீழே இறங்கி வந்து விட்டார். எல்லாரும் மடத்திற்கு கிளம்பினர் அடியேன் மட்டும் இன்னொரு தடவை ஜ்வாலா நரசிம்மரை சேவித்து விடலாம் என்று ஒடினேன். அவ்வாறு சென்ற போது ஐயனுக்கு வேத கோஷங்கள் முழங்க அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. வெளியே நின்று அவர் கொடுத்த அந்த அற்புத தரிசனத்தை கண்டு களித்து பின் அவசர அவசரமாக ஓடி வந்து மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு மடத்தை வந்து சேர்ந்தோம். ஒன்று கூட தவறவில்லை எல்லா தரிசனமும் திவ்யமாக கிடைத்தது அவரின் அருளினால். அதற்காக அஹோபில நரசிம்மரின் கோவிலின் முன் நின்று அவருக்கு கன்ணீருடன் நன்றி கூறினோம்.
இந்த யாத்திரையை நடத்தி திவ்யமாக சேவை செய்து வைத்த
இராமானுஜ தாசர் திருமலை சுவாமிகள்
மதிய உணவுக்குப்பின் கிளம்பி கீழ் அஹோபிலம் வந்தோம் . அங்கு அஹோபில புத்தகம், சி.டிகள் மற்றும் நினைவுப்பொருட்கள் வாங்கினோம். பின்னர் சென்னைக்காக கிளம்பினோம், வரும் வழியில் போத்தூர் வீர பிரம்மேந்திரர் ஜீவ சமாதி ஆலயம், மற்றும் தாலப்பாக்கம் அன்னமாச்சாரியார் பிறந்த இடம் சேவித்தோம். அன்னமாச்சாரியாரின் நினைவு மண்டபம், மற்றும் அங்கு கோவில் கொண்டுள்ள கேசவப் பெருமாளையும் தரிசித்தோம். உற்சவ மூர்த்திகளின் அழகே அழகு. இரவு சுமார் 1 மணி அளவில் சென்னை சேர்ந்தோம்.
இதுவரை யாத்திரையில் உடன் வந்தவர்கள் யாரையும் பற்றி எதுவும் சொல்லவில்லை. சென்னை நங்கநல்லூரை சார்ந்த திருமலை சுவாமிகள் இந்த யாத்திரையை நடத்திக் கொடுத்தார். வேன் ஓட்டுனர் சூரி, அடியேனை அழைத்து சென்று எல்லா துன்பங்களையும் ஏற்றுக் கொண்டவர் திரு. தனுஷ்கோடி அவர்கள். அவருடன் பணி புரியும் மனோகர், கந்தன், கோபால், தேவேந்திரன் ஆகியோர்களும் அவருடன் சேர்ந்து அடியேனுக்காக எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டனர். மேலும் இராஜ சேகரர் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இவர்கள் இரண்டாவது தடவை இந்த யாத்திரைக்கு வந்தனர் என்பதால் அவர்களின் அனுபவமும் எங்களுக்கு உபயோகமாக இருந்தது. இவர்கள் அனைவருக்கும் அடியேனது நன்றிகள் உரித்தாகுக.
திரு இராஜ சேகர் மற்றும் திருமலை சுவாமிகள்
இயற்கையுடன் இயைந்து, ஆற்றில், அருவியில் குளித்து, ஆண்டவனை தரிசித்து, மலையேறி எந்த வித கவலையுமில்லாமல் ( செல் ஃபோன் கூட தொந்தரவு செய்யக் கூடாதென்றால் ) நிச்சயம் நீங்கள் அஹோபில யாத்திரையை மேற்கொள்ளலாம் ஒரு தெய்வீக உணர்வையும் பெறுங்கள்.
Labels: அஹோபிலம், உக்ர ஸ்தம்பம், ஜ்வாலா நரசிம்மர்