திருத்தொலைவில்லி மங்கலம் தேவர் பிரான் கருடசேவை
ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -10
ஸ்ரீஅரவிந்தலோசனர் மகிமை: தேவபிரான் சந்நிதியில் யாகம் சிறப்பாக முடித்து சுப்பிரபர் தினந்தோறும் வடக்குப் பகக்த்தில் இருந்த ஒரு தடாகத்திற்கு சென்று தாமரை மலர்களை பறித்து மாலைகளாக கட்டி தேவர் பிரானுக்கு அணியச் செய்து மகிழ்வித்து வந்தார். இதனால் திருவுள்ளம் மகிழ்ந்த தேவர்பிரான் சுப்பிரபர் எங்கிருந்து பறித்து வருகிறார் என்று பார்க்க பெருமாள் இவரைப் பின் தொடர்ந்தார். பொய்கையின் பொலிவில் களிப்புற்ற தேவர்பிரான், “ முனி சிரேஷ்டரே! இவ்விடம் குளிர்ச்சி மிகுந்ததாயும், மலர்கள் நிரம்பியதாகவும், இளம் தென்றல் தவழும் இடமாகவும் உள்ளது. இந்த பத்மாகர பொய்கையின் கரையில் நான் அரவிந்த லோசனனாகவும் இன்று முதல்சேவை சாதிக்கின்றேன். எனக்கும் தேவபிரானோடு சேர்த்து அபிஷேகம், தாமரை மலரால் அர்ச்சனை செய்யுமாறு கூறினார். தனக்கு தாமரை மலரால் அர்ச்சனை செய்பவர்களின் சகல பாவங்களையும் நீக்கி அருளுவேன் என்றும் கூறினார். சுப்பிரரும் பெருமாளின் விருப்பபடி இரு கோவில்களிலும் பூஜை செய்து நற்கதியடைந்தார்.
தேவர் பிரான் கருட சேவை
தர்ம தராசின் இரு தட்டுகள் எவ்வாறு இரு பக்கமும் சமமாக நிற்கின்றதோ அது போல அரவிந்தலோசனப் பெருமாளும் கருந்தடங்கண்ணி தாயாரும் சமமாக பக்தர்களுக்கு அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றனர்.
அரவிந்தலோசனர் அஸ்வினி தேவர்களுக்கு அருளியது: அஸ்வினி தேவர்கள் இருவரும் பிரம்மதேவரிடம் சென்று மற்ற தேவர்களைப் போல் தங்களுக்கும் ஹவிர்பாகம் கிடைக்கும்படி அருள்புரிய வேண்டும் என்றனர். அதற்கு பிரம்மன் “ஜனங்களுக்கு வைத்தியம் புரிபவர்கள் தர்மத்திலிருந்து வழுவியவர்கள் என்று முனிவர்கள் மொழிவதால், யாகத்தில் ஹவிர்பாகம் பெற விருப்பமுடைய நீங்கள் இருவரும் பூவுலகுக்கு சென்று துலைவில்லி மங்கலம் என்ற திருப்பதியில் உள்ள தேவர்பிரான், அரவிந்தலோசனர் ஆகிய இரு மூர்த்திகளையும் வணங்கி தவம் செய்ய்யுங்கள் என்று அறிவுரை கூறினார்.
பின்னை கொல்?நிலமாமகள் கொல்? திருமகள் கொல்? பிறந்திட்டாள்
என்னமாயங்கொலோ? இவள் நெடுமா லென்றே நின்று கூவுமால்
முன்னிவந்தவன் நின்றிருந்துறையும் தொலைவில்லி மங்கலம்
சென்னியால்வணங்கும் அவ்வூர் திருநாமம் கேட்பது சிந்தையே.
தொலைவில்லி மங்கலத்தில் நெடுமால் நின்றும் (ஸ்ரீநிவாசன்) இருந்தும் ( அரவிந்த லோசனர்)
அருள் பாலிக்கும் அழகை, எளிமையை நம்மாழ்வார் பாடுகின்றார்.
அஸ்வினி தேவர்களும் துலைவில்லி மங்கலம் வந்து பொய்கையில் புனித நீராடி தேவர்பிரான், மற்றும் அரவிந்த லோசனரின் திருவடி தொழுது அரும் தவமியற்றினர். அடியவர்க்கு மெய்யன் அவர்களுக்கு காட்சியளித்து அவர்கள் கேட்ட வரத்தை அளித்தார். அஸ்வினி தேவர்களும் ஹவிர் பாகம் பெற்றனர். அவர்கள் நீராடிய புண்ணிய தீர்த்தம், அஸ்வினி தீர்த்தம் என்று வழங்கப்பெறும் என்றும் அருளினார்.
அஸ்வினி தீர்த்த மகிமை: இமயமலையின் தெற்கில் உள்ள கங்கா நதிக் கரையில் அகளங்கம் என்ற ஊரில் சத்யசீலர் என்பாவ்ருக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர், அவர்கள் வன்னிசாரன், விபீதகன், சுவர்ணகேது ஆவர். இதில் விபீதகன் குஷ்ட நோய்வாய்ப்பட்டிருந்தான். நாரதர் முற்பிறப்பில் இவன் தனது குருவின் பசுவை திருடியதால் , அவரின் சாபத்தால் இவ்வாறு கஷ்டப்படுகின்றான், சாப விமோசனம் பெற தாமிரபரணிக் கரையில் உள்ள துலைவில்லி மங்களம் சென்று அஸ்வினி தீர்த்தத்தில் நீராடினால் குஷ்டநோய் நீங்கும் என்று அருளினார். சகோதரர்கள் மூவரும் துலைவில்லி மங்கலம் வந்து அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப் பெற்று தேவர்பிரானுக்கும், அரவிந்த லோசனருக்கும் சேவை புரிந்து முகுந்தனருளால் முக்தியும் பெற்றனர்.
செந்தாமரைக் கண்ணரை அடுத்து தொலைவில்லி மங்கலம் தேவர் பிரான் நம்மாழ்வாருக்கு கருட சேவை தந்தருளுகின்றார். அப்புகைப்படங்களை இப்பதிவில் காணுகின்றிர்கள். அடுத்த பதிவில் திருக்குளந்தை மாயகூத்தர் கருட சேவையைக் காணலாம் அன்பர்களே.
செந்தாமரைக் கண்ணரை அடுத்து தொலைவில்லி மங்கலம் தேவர் பிரான் நம்மாழ்வாருக்கு கருட சேவை தந்தருளுகின்றார். அப்புகைப்படங்களை இப்பதிவில் காணுகின்றிர்கள். அடுத்த பதிவில் திருக்குளந்தை மாயகூத்தர் கருட சேவையைக் காணலாம் அன்பர்களே.
Labels: ஆழ்வார் திருநகரி, துலைவில்லி மங்கலம், தேவர் பிரான், நவ கருட சேவை