Saturday, December 28, 2013

திருப்பாவை # 27 ( கூடார வல்லி)

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:



கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.   (27)


பொருள்: உன்னை கூடி மகிழாத ஒதுங்கியிருப்பவர்களையும் அன்பால் வென்று அடிமைப்படுத்தும் குணக்குன்றே கோவிந்தா!

இந்த பாவை நோன்பை நோற்பதால் நாங்கள் பெறும் பரிசு மிகச்சிறந்தது. உன் கருணையினால் அவனி மக்கள் போற்றும் பரிசுகள் அனைத்தும் அடைந்திடுவோம்.

நோன்பிற்காக ஒதுக்கிய அலங்காரங்கள் அனைத்தும் மேற்கொள்வோம். தலையில் சூடாமணி சூடுவோம், தோள் வளையங்கள் அணிவோம், தோடணிவோம்,கைகளில் வளையல்கள் அணிவோம், செவிப்பூவால் சிறப்போம், கால்களில் பாடகம் அணிவோம் இப்படி பல ஆபரணங்களை அணிவோம். மலர் சூடுவோம், புது பட்டாடையணிவோம்.

இவையெல்லாம் எதற்காக தெரியுமா? எம்பெருமானே! பால் சோறு பொங்கி அதில் பசு நெய் கலந்து முழங்கை வழிய வழிய "குறையொன்றும் இல்லாத கோவிந்தன்" உன்னுடன் கூடி உண்ணவே. மனம் குளிர்ந்து நீ எங்களுக்கு அந்த பாக்கியத்தை அருள்வாயாக!

கோவிந்தன்:

மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் பிறந்தவன் கண்ணன் என்பதை "பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ" (பா. 29 ) என்னும் வரிகளில் உணர்த்துகின்றார் ஆண்டாள். ஆரைகள் ஆயர்களின் செல்வமாக விளங்குபவை; அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் என்பதை "கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா" என்னும் இப்பாசுரத்தின் வரிகளாலும் மாற்றாரை மாற்றழிக்க வல்லானை (பா.15 ) என்னும் இரண்டு பாசுரங்களில் உணர்த்தியுள்ளார் ஆண்டாள்.



 "கூடார வல்லி" தன்னை கோபிகையாக பாவித்து கண்ணனை வேண்டி மற்ற கோபிகையர்களுடன் மாதம் முழுவதும் நோன்பிருந்த ஆண்டாள் அந்த குறை ஒன்றும் இல்லாத  கோவிந்தனுடன் கூடிய நாள்.

Labels: , ,

Friday, December 27, 2013

திருப்பாவை # 26

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:



மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்............(26)


பொருள்: மாலவனே! கருமை நிறக் கண்ணா! மார்கழி நோன்பு நோற்று நீராட வந்த பாவையர்களுக்கு என்ன வேண்டுமென்று எடுத்துரைக்கிறோம். கேள்.

படைப்போர்புக்கு முழங்கும் உன் இடக்கையில் விளங்கும் பாஞ்சசன்னியத்தை போல் முழங்கும் சங்கம் வேண்டும். பெரும் முரசுகள் வேண்டும். உன்னைப் போற்றிப் பல்லாண்டு பாடும் கலைஞர்கள் வேண்டும். அழகிய மங்கள தீபங்கள் வேண்டும்.ஆடிப்பறக்கும் கொடிகள் வேண்டும்.பனி படாமல் எங்களைக் காக்க எங்கள் தலை மேல் கூரையும் வேண்டும்.பாலனாக ஆலிலையில் பள்ளிகொண்ட பரந்தாமா! இவற்றை எங்களுக்கு நீ அருள்வாயாக.

ஆலினிலையாய்: பிரளய காலத்தில் சகல அண்டங்களையும் தனது வயிற்றில் அடக்கி சிறு குழந்தையைப் போல ஆலிலையில் பள்ளி கொள்ளும் மாயன்

Labels: , , ,